இதழ்கள் இளைஞர் முழக்கம்

வாய்மையே வெல்லும் – செல்வராஜ்

680488455ak2

ஊரில் அதிகமாக கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தமுடியாமல் கஷ்டபடும் காந்தி (விஜய் சேதுபதி). வெளிநாட்டிற்கு சென்று கடனை அடைத்துவிடலாம் என முடிவு செய்கிறான். எப்படி போக வேண்டும் என விசாரிப்பதற்காக தனது ஊரிலிருந்து வெளிநாட்டிற்கு சென்றுவந்தவரை பார்க்கின்றனர் காந்தி மற்றும் அவனுடை நண்பன் பாண்டி (யோகி பாபு). முறைப்படி பாஸ்போர்ட், வீசா வாங்கி போவனும்னா ரொம்ப நாள் ஆகும், அதனால சென்னையில் உள்ள ஒரு ஏஜெண்டை பார்க்க சொல்கிறார். மதுரையில் இருந்து கனவோடு சென்னைக்கு வரும் காந்தி மற்றும் பாண்டி, வெளிநாட்டுக்கு சென்றார்களா?, இல்லையா? என்பதுதான் கதை. இந்த கதையை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

காந்தி என்ற பெயருக்கு ஏற்றவகையில் உண்மை மட்டும் பேசுனா போதாது, பொய் சொன்னாதான் வேலை சீக்கிரமாக முடியும் என பொய் சொல்ல ஆரம்பிக்கும் காந்தி பின்னர் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். பின்னர் பொய்யையே உண்மையாக மாற்றி கொள்கிறார்.

இந்த படத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே வெளிநாடு செல்ல ஏஜெண்டிடம் பணம் கட்டி ஏமாறும் இளைஞர்கள் பற்றி இயக்குனர் சேரன் எடுத்த வெற்றிகொடிகட்டு படம் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஆண்டவன் கட்டளை சொல்லவரும் செய்தி அந்த படத்திலிருந்து மாறுபட்டது.

காந்தியாக நடித்துள்ள விஜய் சேதுபதி தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தன்னுடைய இடத்தை இன்னும் ஆழமாக பதிக்கிறார். அலட்டிக் கொள்ளாத நடிப்பு, இந்த கதாபாத்திரத்தில்தான் நான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் தனக்கு பிடித்த கதையில் தைரியமாக நடிப்பது போன்ற அம்சங்கள் அவரை உண்மையிலயே மக்கள் செல்வனாக உணரவைக்கிறது.

இறுதிசுற்று படத்துக்கு பின்பு மீண்டும் ஒரு நல்ல கதை அம்சம் உள்ள படத்தில் தனது நடிப்பை முடிந்த அளவிற்கு சிறப்பாக கொடுத்துள்ளார். தைரியமான ரிப்போர்ட்டராக வலம் வரும் கார்மேகக்குழலி (ரித்திகா சிங்) பெண்களின் ஆடைகளை பற்றி கருத்து சொல்லும் அரசியல்வாதியிடம் அவருடைய மகளின் படத்தை காட்டி கலாட்டா செய்வது ரசிக்கும்படி உள்ளது. ஒரு பக்குவமான கதாபாத்திரத்தை ரித்திகா சிங்கை வைத்து அழகாக கையாண்டு உள்ளார் இயக்குனர்.

யோகி பாபு படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு படம் முழுக்க நம்மை சிரிக்க வைக்கிறார். அவர் இல்லாத இடத்தில் இலங்கை தமிழராக வருகிறார் நேசன். தமிழ்நாட்டில் தொலைந்து போன தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை தேடி அலையும் கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை அருமையாக வெளிபடித்தி உள்ளார். நாடகக் குழுவை நடத்திவரும் நாசர், அந்த குழுவில் நடிக்கும் பெண்ணாக பூஜா தேவாரியா, சிங்கம்புலி, வழக்கறிஞர்களாக வரும் ஜார்ஜ், நந்தினி, மற்றும் ரித்திகா சிங்கின் அம்மா என அனைத்து கதாபாத்திரங்களும் நம் மனதில் பதிந்துவிடுகின்றனர்.

படத்திற்கு தேவையான இசையை கொடுத்துள்ளார் கே. பாடல்கள் படம் முழுவதும் அலைகளை போல வந்து மனதுக்கு இதமான உணர்வை தருகின்றன. சென்னையை அப்படியே கண்முன்னே காண்பித்துள்ளனர் ஒளிபதிவாளர் சண்முகசுந்தரம் மற்றும் கலை இயக்குனர் மூர்த்தி. சுவாரஸ்யம் குறையாமல் படத்தை கொடுத்த திரைப்பட தொகுப்பாளர் அனுசரண், நல்ல படத்தை தயாரிக்க முன்வந்த அன்பு செழியன் ஆகியோர் பாராட்டதக்கவர்கள்.
தமிழ் திரைபடங்கள் என்றால் ஐந்து பாடல்கள், சண்டை காட்சி, காதல், சென்டிமென்ட் என உள்ளடக்கத்தை உடையதாக இருக்க வேண்டும் என்ற பார்முலாவை சமீபத்தில் வருகின்ற இயக்குனர்கள் நிறைய பேர் உடைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் மக்களின் எதார்த்தமான வாழ்கையை சொல்லும் வகையில் தன்னுடைய படங்களை எடுத்து வருகிறார் இயக்குனர் மணிகண்டன்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை என வரிசையாக தனது படங்களில் உலகமய கலாச்சாரம் எப்படி மனிதர்களின் வாழ்கைமுறையை வேகமாக மாற்றி வருகிறது என்பற்கான உதாரணங்களாக இந்த படங்கள் அமைகின்றன. அரசு சட்டத்தை பயன்படுத்தியே அரசை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை காட்சிக்கு காட்சி நம்மை அந்த வழியாக படம் முழுக்க கூட்டி செல்கிறார்.

சென்னையில் வாடகைக்கு வீடு பார்க்கும் காட்சிகள், பாஸ்போர்ட், வீசா வாங்க சொல்லும் பொய்கள், பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயரை நீக்க விவாகரத்து வாங்க நீதிமன்றத்திற்கு செல்லும் காட்சிகள், விவாகரத்துக்காக நீண்ட வரிசையில் நிற்கும் இளம் ஜோடிகள், இலங்கை தமிழர் என்றாலே போராளி என்ற முத்திரையை குத்துவது என அனைத்தும் புதுமைபித்தன் கதைகளை போல உண்மையான சூழலை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது ஆண்டவன் கட்டளை.

படத்தின் வேகம் ஆங்காங்கே குறைகின்றது, ஒரே மாதிரியான காட்சிகள் மீண்டும், மீண்டும் வருவது போல தோன்றுகின்றது என சின்ன சின்ன குறைபாடுகள் இருந்தாலும். கதை சொல்லும் விதம் மற்றும் கூற்மையான அரசியல் வசனங்களுக்கு மத்தியில் அவை பெரிதாக தெரியவில்லை.

படத்தின் ஆரம்பத்திலேயே தன் மூக்கை சொறிவதற்கு அடுத்தவன் கையை எதிர்பார்த்து கொண்டிருக்ககூடாது என்ற வரிகள் படம் சொல்லவரும் செய்தி என்ன என உணர்த்துகிறது.

அந்த வரிகள் மனதில் இரண்டு பாடல்களை ஓட செய்கிறது

1. சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா… என்ற பாடலும்

2. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்…

பாடல்களின் வரிகளை போல இயக்குனர் படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவதில் வெற்றி பெற்றுள்ளார். ஆண்டவன் கட்டளை சமூகத்தின் மீதான அக்கறை.

Related Posts