இதழ்கள்

வாத்து ராஜா – சிறுவர்நூல்

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “வாத்து ராஜா” என்கிற சிறுவர் நூலை சமீபத்தில் எனது சிறுமகளுக்கு வாசித்துக்காட்டினேன். தலைப்பைப் பார்த்ததுமே, “ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரா..” என்று துவங்கி ஏதோ ஒரு கற்பனை ராஜாவின் வாக்கையையும் வரலாற்றையும் சொல்லப்போகும் சராசரி ராஜாகாலத்துக் கதைதானோ என்று நினைத்திருந்த எனக்கு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு நாள் இரவும் உறங்குமுன், சில பக்கங்களை வாசித்துக் காண்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இக்கதையினை வாசித்துக்காட்டிய நாட்களில், “இரவு எப்பப்பா வரும்?” என்று ஆவலோடு அவ்வப்போது பகல் பொழுதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிற அளவுக்கு சுவாரசியம் நிறைந்ததாக இருந்தது இப்புத்தகம்.

 

பொதுவாகவே குழந்தைகளுக்குக் கதைகள் மீது அலாதி இன்பமுண்டு. இக்கதையில் வரும் சிறுமி அமுதாவும் விதிவிலக்கல்ல. ஒருநாள் தன்னுடைய பாட்டியிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கும்போது, பாதியிலேயே உறங்கிவிடுகிறாள். அவள் கேட்டவரை, அணில் உள்பட தன்னுடைய  நண்பர்களுக்கு அடுத்த நாள் சொல்கிறாள். அவர்களுக்கு மீதி கதையினையும்கேட்டுவிட வேண்டுமென்று ஆர்வமாக இருந்தது. ஆனால், அதற்குள் அமுதாவின் பாட்டி ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் அவளது நண்பர்களும், அக்கதை  யாருக்கேனும் தெரிந்திருக்குமோ என்று விசாரித்துப்பார்க்கிறார்கள். மீதிக்கதையினை தெரிந்துகொள்ள அவர்கள் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

பாட்டி சொல்லியதாக இக்கதையில் வரும் கதையும் மிக அழகான கதையாக இருக்கிறது. ராஜாவைப் பற்றிய கதையென்றாலும், அதில் அவருடைய ராஜ வாழ்க்கையினைப் பேசுகிற கதையாக இல்லாமல், அவருடைய ஆட்சியின்போது வாழ்ந்த எளிமையான மனிதர்களின் கதையாக இருக்கிறது. அதுவும், ஊருக்கு வெளியே கூடாரங்களில் தங்களது நிச்சயமற்ற வாழ்க்கையினை வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கதை. எந்த முடிவுகளையும் முட்டாள்தனமாகவே எடுக்கிற அந்த ராஜாவுக்கு, “வாத்து ராஜா” என்று பட்டபெயர் வைக்கிறார்கள் அவரின் பணியாட்களும் மக்களும். வாத்து என்கிற ஒன்று தன்னுடைய நாட்டில் இல்லாமாலேயே போனால், தன்னை யாரும் “வாத்து ராஜா” என்று அழைக்கமாட்டார்கள் என்று எண்ணி, பணியாட்களை அனுப்பி எல்லா வாத்துகளையும் கொல்லச்சொல்கிறான் வாத்து ராஜா. ஊருக்கு வெளியே கூடாரமொன்றில் வாழும் சுந்தரி என்கிற சிறுமி, தன்னிடமிருக்கும் இரண்டு வாத்துகளை எப்படியாவது காப்பாற்ற தன்னுடைய தோழியுடன் சேர்ந்து முயற்சி செய்கிறாள்.

வாத்து ராஜாவிடமிருந்து சுந்தரி, தன்னுடைய வாத்துகளை காப்பாற்றினாளா இல்லையா? ஆம் என்றால் எப்படி? என்பதையும், பாட்டியால் பாதிவரை சொல்லப்பட்ட அக்கதையின் முடிவினை, அமுதாவும் அவளது நண்பர்களும் அறிந்துகொண்டார்களா இல்லையா? ஆம் எனில் எப்படி, யாரிடம்? என்பதையும் மிகவும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன்.

“அந்த காலத்துல எங்க பாட்டி எனக்கு நிறைய கதை சொல்வாங்க”

என்று பல பெற்றோர் சொல்லக்கேட்க முடிகிறது. ஆனால் அக்கதைகள் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லையோ என்கிற அச்சவுணர்வு மேலெழுகிறது. செவிவழிக்கதைகள் சொல்லப்படாமலேயே அழிந்துபோவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இப்புத்தகத்தில் சொல்லப்படுகிற கதைக்குள்ளிருக்கும் கதையின் முடிவினை அறிந்துகொள்ள கதையின் நாயகிகள் எவ்வாறெல்லாம் முயற்சி செய்கிறார்கள் என்று வாசித்தபோது, கதைச்சொல்லலின் வழக்கம் குறைந்துவருவதையே சுட்டிக்காட்டுவதாகத் தோன்றியது. முன்பெல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருந்த கதைகள் கூட, இப்போதெல்லாம் பலருக்கும் தெரியாமல் போனதற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்கமுடியும்.

தங்குடையின்றி வாசிக்க உதவிய எளிமையான மொழி, கதையின் அடுத்த பகுதியை எதிர்நோக்கவைத்த கதைசொல்லும் உத்தி, கதைக்குள் மற்றொரு கதை இருந்தாலும் தெளிவான கதையாள்கை ஆகியவை இப்புத்தகத்தின் கூடுதல் பலம்.

அழகான கதையையும் சொல்லி, அதனூடே கதைச்சொல்லலின் அவசியத்தையும் உணர்த்துகிற “வாத்து ராஜா”வை வாசிப்போம். நம்முடைய குழந்தைகளுக்கு நிறைய கதைகளையும் சொல்லி மகிழ்வோம்.

விலை: ரூபாய் 50

வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன்

பாரதி புத்தகாலயம்

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை- 600018

தொலைபேசி:- 044- 24332424

http://thamizhbooks.com/vaathuraja.html

 

Related Posts