இதழ்கள் இளைஞர் முழக்கம்

வாசிப்பின் அரசியல் – கமலாலயன்

 

“வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத்தான் ராகம் பிடிபடுகிறது…

நேசிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் என் நெஞ்சம் புரிகிறது…

உனக்கெங்கே புரியப்போகிறது”

மு. மேத்தாவின் கவிதை இது. காதல் கவிதை என்று சொல்ல வேண்டியதில்லை. ராகம் பிடிபட வேண்டுமென்றால் வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது இசைக்கலையின் பாலபாடம். நேசிப்பவர்களுடைய நெஞ்சம் புரிய வேண்டுமென்றால் அவர்களுடைய நெஞ்சத்தை நாம் வாசித்தறிவதற்கான வாய்ப்புக் கிடைக்க வேண்டும். இதை ஓர் அடிப்படையான சூத்திரமாக நாம் வைத்துக் கொண்டால், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திற்கும் இதைப் பொருத்திப் பார்க்க முடியும்.

“ஞானத்தைப் பெறுவதை எந்தக் காலத்திலும் யாராலும் தடுக்க முடியாது. சமதர்மம் ஒன்றால்தான் உலகம் உய்யும், நீங்கள் கற்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். தைரியத்துடன் புத்தகங்களை வாசியுங்கள்”என்றார் நமது சிங்காரவேலர். வாசிப்பு என்ற மனித அறிவுசார் செயற்பாட்டின் மூன்று முக்கிய அம்சங்களை இம்மூன்று வாக்கியங்களும் நமக்குச் சொல்லுகின்றன.

ஒன்று -– மனிதன் மெய்யறிவை, அதாவது ஞானத்தைப் பெறுவதை எந்தக் காலத்திலும், யாராலும் தடுத்துவிட முடியாது.

இரண்டு – சமதர்மம் ஒன்றால்தான் இந்த உலகம் மேன்மைடையும்.

மூன்று  -– தைரியத்துடன் புத்தகங்களை வாசியுங்கள்.

மூன்றாவது வாக்கியத்தைப் படித்ததும், நம்முன் ஒரு கேள்வி எழும். Òபுத்தகங்களைப் படிப்பதற்குத் “தைரியம்” வேண்டுமா? என்ன?

ஆம், சில புத்தகங்களை வாசிக்க வேண்டுமெனில் நீங்கள் மனதில் துணிவுடன்தான் அதைச் செய்ய முடியும். புத்தகங்களை விடுங்கள். ஒரே ஒரு கடிதத்தில் சில வரிகளை மட்டுமே வாசிப்பதற்குக் கூட எல்லையற்ற மனத்துணிவும், தெளிவும், பற்றுறுதியும் தேவைப்படுகின்றன. மிக சமீபத்திய எடுத்துக்காட்டு ஒன்றை இங்கு மேற்கோள் காட்ட முற்படுகிறேன். கீழே தரப்படும் வரிகளை முதலில் வாசித்து விடுங்கள்.

“ஒரு மனிதனின் மதிப்பு அவனது பிறப்பின் அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. சில நேரங்களில் ஒரு வாக்களானாக, சில நேரங்களில் வெறும் எண்ணிக்கையாக, சில நேரங்களில் ஒரு பொருளாகக் கூட குறைந்து போகிறான். என் ஆன்மாவுக்கும், உடலுக்குமிடையே பெருகிவரும் இடைவெளியை நான் உணர்கிறேன். அதனால் உருக்குலைந்தவனாய் மாறி விட்டேன். எழுத்தாளராக வேண்டுமென்றே எப்பொழுதும் விரும்பியிருக்கிறேன். கார்ல் ஸாகன் போல அறிவியலை எழுத வேண்டுமென்பதே என் விழைவு. ஆனால் இறுதியில் இக்கடிதம் மட்டுமே எனக்கு எழுதக் கிடைத்திருக்கிறது.

ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலா, தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதிய கடிதம் ஒன்றின் சில வரிகள் இவை. பாழாய்ப் போன இந்த சாதிய சமூக அமைப்பின் கொடூரக் கரங்களால் கழுத்து நெறிபட்டுப் போவதற்குன முன்,  தானே இதைச் செய்வதாகச் சொல்லியிருக்கிறார் ரோஹித். தன் பிறப்பே மரணத்தையொத்ததொரு விபத்துதான். தன் பால்ய கால தனிமையிலிருந்து ஒரு போதும் தன்னால் மீள இயலவில்லை என்று கையறு நிலையில் இதய அடுப்பிலிருந்து நெருப்புத் துண்டங்ளை வாரி இறைத்திருக்கிறார் அவர்.

இந்தக் கடிதம் இந்தியாவெங்கும், ஏன் உலகெங்கும் உள்ள வாசகர்களால் படிக்கப்படுகிறது. சிந்தனையாளர்களை அரசியல் விற்பன்னர்களை, எழுத்தாளர்ககளை, கலைஞர்களை இதன் வரிகள் உலுக்கி எடுக்கின்றன. அவ்வாறு உலுக்கப்பட்டவர்களுள் ஒருவர் – கோபால் கிருஷ்ண காந்தி. மேற்கு வங்கத்தில் ஆளுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சுதந்திரப் பத்திரிகையாளராக பல்வேறு இதழ்களில் எழுதிக் கொண்டிருப்பவர். ரோஹித் வெமூலாவின் கடிதத்தைப் படித்ததும் தனக்கேற்பட்ட மனக்கொந்தளிப்பைப் பற்றி “ட்ரிப்யூன்” பத்திரிகையில் 26.01.2016 அன்று கட்டுரையான்றை எழுதியுள்ளார். அதன் சில பகுதிகளை தமிழில் பிரபா ஸ்ரீ தேவன் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். அம்மொழியாக்கப் பகுதிகள் மார்ச் -26 ‘காலச்சுவடு” இதழில் வெளியாகியுள்ளன.

ரோஹித் வெமூலா கடைசியாக எழுதிய கடிதத்தை இதுவரை நாம் படிக்கவில்லை என்றால், இணையதளத்துக்குச் சென்று முதலில் அதைப்படிக்குமாறு கேட்கிறார் கோபால்கிருஷ்ண காந்தி. தன்னைக் குதறுவது போல் சுயபரிசீலனை செய்து இறுதியில் “ஜெய்பீம்” என்று வலிமையான உறுதியுடன் வெமூலா முழங்குவதாகக் குறிப்பிடும் அவர், “ரோஹித்தின் சொற்களைப் போல உள்ளத்தை அறுக்கும் சத்திய வலிமை பொருந்திய ஒன்றை நான் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டன” என்கிறார். இறுதியில் ஒரு வேண்டுகோளையும் நம் முன் வைக்கிறார். “அன்பார்ந்த வாசகரே, படியுங்கள் ரோஹித்தின் கடிதத்தை, புத்தரின் கடைசி உபதேசத்தையும், சாக்ரடீஸின் இறுதிச் சொற்களையும் போல இதையும் படியுங்கள். புத்தரும் சாக்ரடீசும் தங்களை மாய்த்துக் கொள்ளவில்லை. அதுதான் ஒரே வேற்றுமை. ஆனால் ஹைதராபத் நகரில் எங்கோ ஓர் அறையில் தன்னந்தனியாக ரோஹித் இக்கடித்தை எழுதினார் என்று நினைக்கும் போது, இதன் சத்தியம் ஒரு கூர்வளாய் மாறுகிறது.

ஆம், உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும், என்று மகாகவி பாரதி சொன்னதும் இம்மாதிரி ஆன்மபலம் நிறைந்த எழுத்து உரிமை பற்றியே.

துற்கொலைக்குத் தன்னை யாரும் தூண்டவோ, வற்புறுத்தவோ இல்லை என்றும், இது தன் முடிவு, தான் மட்டுமே இதற்குக் காரணம் என்றும் வெமூலா தனது கடிதத்தில் சொல்கிறார். அது அவரது பெருந்தன்மையின் உச்சம். ஆனால், அவரே தன் சாவுக்கு யாரும் காரணமல்ல என்று சொல்லியிருக்கிறாரே என்று ஸ்மிருதி இரானி போன்ற அமைச்சர்கள் தனது குற்றங்களை மறைக்க முற்படுகிறார்கள். இதையும், தனது அமைச்சரவை சகாக்கள் வெமூலாவின் உயிருடன் விளையாடியதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாத நரேந்திர மோடி, அனுதாப ( நீலி)க்கண்ணீர் வடிப்பதையும் நாம் சேர்த்துத்தான் “வாசிக்க” வேண்டும்.

“பாபாஜி அம்பேத்கர் முன்னால் நாம் எந்த மூலைக்கு?” என்று மோடி உருகுகிறார். உலக சூஃபி ஞானியர் மாநாட்டிலோ, கபீரின் சர்வமத சமரசக் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி சமூக நல்லிணக்கத்திற்கு இந்தியச்சிந்தனைகளே வழிகாட்டி என முழக்கமிடுகிறார். நாளொரு வேடமும், பொழுதொரு நடிப்புமாக “பிரதமர்”மோடி வெளிப்படுத்தும் கருத்துக்களுக்குப் பின்னால், மறைந்து கிடக்கும் மதவாத அரசியலை வாசித்துப் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு துணிவு தேவைப்படுகிறது?

வாசிப்பது என்பதே அடிப்படையில் ஓர் அரசியல் செயல்பாடுதான் என்று அறுதியிட்டுச் சொல்லுகிற பிரேஸில் கல்வியாளர் பாவ்லோஃப்ரையிரே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்விமுறை நூலில் இக்கருத்தின் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து தன் களப்பணி அனுபவங்களையும் குழைத்துத் தருகிறார்.

இன்றையச் சூழலில், உலக ஒழுங்கமைவு மாறி விட்டது. சோஷலிஸ உலகு என்ற ஒன்று, பூமிப்பரப்பின் மூன்றிலொரு பங்கு வகித்த நாடுகளில் ஆட்சி செலுத்தியது என்பதெல்லாம் பழங்கதையாகி விட்ட காலம் இது. வாசிப்பு என்பது பலருக்குப் பொழுது போக்கு. மனது நோகாமல், மூளைக்குக் கொஞ்சமும் வேலை கொடுக்காமல், ஒரு போதை மருந்தைப் போல் “சுகானுபவம்” தருவதுதான் அவர்களுக்கான வாசிப்பு. ஆனால், அப்படி “சுகானுபவத்தை” வழங்கும் வாசிப்பின் பின்னால், முக மூடியணிந்து வருவது எந்த அரசியல், அதன் விளைவுகள் பெரும்பான்மை மக்களுக்கு எத்தகைய துயரங்களை வாரி வழங்கப் போகின்றன என்று ஒரு புரிதல் தேவைப்படுகிறது.

வலதுசாரி – பிற்போக்கு சக்திகள், மத்திய அரசின் அதிகார நிறுவனங்கள் அனைத்திலும் வேரூன்றிக் கொண்டு வெமூலாக்களை வேட்டையாடத் தொடங்கி இருப்பதைப் பார்க்கிறோம். பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சகல நாடகங்களிலும் ஒரே ஒரு கதாபாத்திரம் – மோடி மட்டுமே –மேடைகள் முழுவதையும் அங்கிங்கெனாதபடி ஆக்கிரமித்துக் கொண்டு வேடங்கள் கட்டி ஆடுவதைக் காண்கிறோம். தேன் தடவிய வார்த்தைகளைக் கோர்த்துக் கோர்த்து மேடைகள் தோறும் முழங்கி மக்களின் காதுகளில் பூச்சுற்றிக் கொண்டிருக்கிறார் அவர். ட்விட்டர், ஃபேஸ்புக் – என்னென்ன நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உண்டோ அனைத்தின் மூலமும் மோடி என்ற தனி மனிதர் “கடவுள் அனுப்பி வைத்த” மீட்பராக முன்னிறுத்தப்படுகிறார்.

இவையெல்லாம் அன்றாடச் செய்திகள். நமது கண்களில் படாமலிருப்பதில்லை. பார்க்கிறோம், படிக்கிறோமா? வரிகளுக்கும், வார்த்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளிகளில்தான் நிஜமான நோக்கங்கள், ஏமாற்று வேலைகள், ஏன் சில சமயங்களில் வெமூலாவின் கடித வரிகளைப் போல் சத்திய ஆவேச மிக்க சிந்தனைகளும் கூட மறைந்திருக்கின்றன. சமூகம் மாற வேண்டும் என்ற எளிய விருப்பத்துடன் நம்மால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற சுய திருப்தியுடன் நாட்களைக் கழிக்கிறோம்.

விவசாயமே இந்தியாவின் முக்கியமான தொழில். இன்றைக்கு 80 சதவீதம் உழைப்பாளிகள் வாழ்க்கைக்கான ஆதாரம் – உழவுத் தொழில்தான். நிலங்களை நம்பியே வாழும் நிரந்தரக் கூலிகள். நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் கைகோர்த்துக்கொண்டு நாட்டை, நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் கூறுகளாகக் கட்டி விற்றுத் தீர்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த மண்ணுக்கே உரிய வர்ணாசிரம (அ)தர்மமும், சாதிய ஆதிக்க சக்திகளின் கோரத் தாக்குதல்களும், உழைப்புச் சுரண்டலும் தாங்க முடியாத துயரச் சுமைகளை மக்களின் முதுகுகளில் ஏற்றிக் கொண்டே போகின்றன. அந்த வளைந்த முதுகுகளை, அம்பெய்தும் விற்களாக வடித்தெடுக்கப்போவது எப்படி?

பெண்கள், உலகின் செம்பாதி. பெண்கள் விடுதலை பெறுவதென்பது நாம் விடுதலை பெறுவதற்கான முதற்படி. உழைப்பின் வளர்ச்சிப்பாதையில் பெண்ணுக்கான இடம்தான் என்ன? மனித குல விடுதலைக்கே முன் நிபந்தனையாக, முதற்படியாக அமையப் போகும் பெண் விடுதலையைச் சாதிக்கப் போவது எப்படி? எப்போது? பெண்ணியச் சிந்தனைகளை வாசித்து உள் வாங்கிக் கொள்ளாமல், மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என வீர முழக்கமிட்டால் போதுமா?

நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளான புதிய புதிய மின்னணுக் கருவிகள், இன்றைய சமூக மனிதனின் உழைப்புச் சுமையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, கழுத்தை ஒடிக்குமளவுக்குச் சுமத்தப்பட்டு நுகர்வு மனப்பான்மையை மேலும் மேலும் ஆழமாக்கத்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த எதிர் – உற்பத்திச் சுமையிலிருந்து மக்களை, நம்மை நாமே மீட்பது எப்படி?

பாவ்லோ ஃப்ரையிரே தனது களப்பணிகளின் அனுபவச் செழுமையுடன் ஓர் அனுபவத்தைப் பேசுகிறார். “நீங்கள் சட்டப் பூர்வமான அம்சத்திலிருந்து தொடங்க வேண்டும். எடுத்துக் காட்டாக, தண்ணீரைப் பெறுவதற்கான கேள்வி. அது சாத்தியம் தான் என்று சட்டம் நிறுவியிருக்கிறது. நடைமுறையில் தண்ணீரைப் பெறுவதற்கு மக்கள் அனுமதிக்கப்படாமல் தான் இருக்கிறார்கள். இங்கு முன்னெழுகிற கேள்வி, நிலத்தின் உரிமையாளருக்கு எதிராக (தண்ணீரை எடுக்க வேண்டுமென்கிற) கோரிக்கையை எழுப்புவதற்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்தே. ஒடுக்கப்படுகிற மக்கள், ஒடுக்கவோரும் (ஒரு வகையில்) பலவீனமானவர்களே என்பதைப் பார்க்காவிட்டால், தெரிந்து கொள்ளாவிட்டால், அவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைப்பதென்பதே கடினமாகி விடும். அவர்கள் ஏதேனும் கொஞ்சம் பெற்றுத் தீர வேண்டும். அவர்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைத் தந்திரம் என்னவெனில் தொடக்கத்திலேயே மிகக்கடினமான ஒரு கோரிக்கையை அவர்கள் எழுப்பக்கூடாது என்பதே…”

கலை – இலக்கியம் – அறிவியல் – குழந்தைகளின் உலகம் – தொழிற் சங்க இயக்கம் – தகவல் தொடர்பு சாதனங்கள் – கல்வி – பணிக் கலாச்சாரம் – பண்பாட்டு அம்சங்கள் – சாதியம் – மூட நம்பிக்கை எதிர்ப்பு –தலித்தியம் – பெண்ணியம் – இப்படி இன்றைய நவீன சமூகத்தின் முன் குவிந்து கிடக்கிற கருப் பொருட்கள் பல்லாயிரம்… இவற்றையெல்லாம் வாசிப்பதால் மட்டுமே புரிந்து கொள்ள முடியாது. வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், சக மனிதர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பதன் மூலம் வாழ்ந்து பார்த்து அனுபவங்களைப் பெறுவதன் மூலமும் தான் புரிந்து கொள்ள முடியும்.

எதை, ஏன், எப்படி வாசிப்பது? வாசிப்பதற்கு எங்கே நேரம்? படிக்கத்தானே செய்கிறோம், புரியவில்லை? எங்கிருந்து தொடங்குவது? கேள்விகள் அலைமோதுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதில் மட்டுமே வாசிக்கத் தொடங்குவோம். எளிய, இனிய கதைகளில், கவிதைகளிலிருந்து தொடங்கலாம். புகைப்படம் ஒன்று, ஓர் ஆயிரம் பக்கமாக விரியும் நாவல் ஒன்றின் உள்ளடக்கத்தைக் கொண்டதாக அமைந்து நம்மை உலுக்கலாம்.

“ஒரு நொடிப் பொழுதே வாழ்ந்தாலும் மின்னல் போல்..” என்று கவித்துவமிக்க அறைகூவலின் மூலம் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை நம்மை அழைக்கிறது. அடர்த்தியாய்க் கவிந்து அச்சுறுத்துகிற இன்றைய உலகமயமாக்கல் இருட்டில், நம் கைகளில் ஒரு சின்னச்சிறு மெழுகுவர்த்தி மட்டுமே இருக்கக்கூடும்.ஆனால் உலகின் எவ்வளவு அடர்ந்த மாபெரும் இருட்டினாலும் ஒரு சின்னஞ்சிறு மெழுகுவர்த்தியின் ஒளிக்கீற்றை அணைத்துவிட முடிந்ததில்லை என்பதே மனித குல வரலாற்றின் செய்தி. வாருங்கள். இருள் சூழ்ந்திருக்கும் இடங்களில் எல்லாம் வாசிப்பு மெழுகுவர்த்திகளை ஏற்றிக்கொண்டு நடப்போம்!

–              9952944097

Related Posts