பிற

வெறுப்பை ஆழமாக விதைக்கிறதா ”வாகா” திரைப்படம் . . . . . . . !

வாகா-திரைப்படத்திற்கு-தடை-கேட்டு-சிட்டி-சிவில்-நீதிமன்றத்தில்-வழக்கு

ஹரிதாஸ் படத்தை இயக்கிய இயக்குநரின் படம் என்பதால் “வாகா” படத்தில் ஏதாவது கண்டிப்பாக இருக்கும் என்பதே, வாகா படத்திற்கான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்.

இந்திய இராணுவ வீரர்கள்…. பாகிஸ்தான் இராணுவ வீரர்களால்… எப்படியோ பிடிக்கப்பட்டு எல்லையில் தலை துண்டிக்கப்பட்டு வீசப்படுகிறார்கள்… அப்படி பாகிஸ்தான் இராணுவத்திடம் மாட்டிக்கொள்ளும் இந்திய இராணுவ வீரர்களை சித்ரவதை முகாம்களில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள்… என்று கதையின் ஆரம்பம் மிக மிக கனமாக ஒரு படபடப்போடு தொடர்கிறது… பாவம் அதற்கு பின் அந்த கதை ஒரு காஷ்மீர் பெண்ணோடு இரு இந்திய இராணுவ வீரன் கொண்ட காதலோடு தற்கொலை செய்துகொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், இராணுவ வீரன்…. இப்படி யோசித்தவரை ஏதோ இருக்கிறது…. என்ற நம்பிக்கை சரியாகவே இருந்தது. அதற்குள் இந்த சினிமாக்காதல் வந்தபோதுதான் சிக்கல் ஆரம்பம் ஆனது.

அமலா பாலையும் ஹன்சிகா மோத்வானியையும் கலந்து செய்த கலவையாக இருக்கிற.. அந்த புது அழகி ரன்யா ராவை காதலிப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் அதற்கு காஷ்மீர் பிரச்சினையா கிடைத்தது?
படத்தில் ஹீரோ ஒரு வசனம் பேசுகிறார்…

“நான் பாகிஸ்தான் பொண்ணை காதலிக்கல… நான் காதலிச்ச பொண்ணு பாகிஸ்தானி…”

“ஒரு ருபாய்க்கு ரெண்டு பழம்… இல்லை ரெண்டு பழம் ஒரு ருபாய்…”

இந்த வசனம் தான் ஞாபகம் வந்து தொலைக்குது.

இந்த படத்தின் விமர்சனம் என்பதைத்தாண்டி இந்த படத்தின் இயக்குநரின் கவனத்திற்கு சில விசயங்கள்…

உலகம் என்கிற இந்த பூமிக்கோளத்தில் நிறைய தேசங்கள் இருக்கின்றன. எல்லா தேச குடிமக்களும் அவர்கள் தேசத்தின் மீது தேசப்பற்றோடு தான் இருப்பார்கள். இருக்க வேண்டும். தேசப்பற்று என்பது இந்தியர்களுக்கு மட்டும் தான் என்பது மிக மிக குறுகிய மனநிலை.

புராணம் தான் என்றாலும்… பொய்யாக இருந்தாலும்… ஆயுதம் இல்லாமல் எதிரில் நின்ற எதிரியை பார்த்து,

“இன்று போய் நாளை வா”

என்று சொல்லி அனுப்பி வைத்த கதைகள் கேட்டு வளர்ந்த நாடு இது. கொஞ்சமேனும் நியாயம் வேண்டும்.

பாகிஸ்தான் பக்கத்து நாடு, எதிரி நாடாகவே இருந்து விட்டு போகட்டும்… ஆனால் பாகிஸ்தான் இராணும் மற்றும் இராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் இந்திய வீரர்களை தலை துண்டிப்பதிலும், சித்ரவதை செய்வதிலுமே குறியாக இருப்பது போல நீங்கள் சித்தரித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. ஒரே ஒரு நல்லவர் பாகிஸ்தான் இராணுவத்தில்… அவர் குழந்தைக்கு இந்தியாவில் ஆபரேஷன் நடந்ததாம்… அந்த ஒரே ஒரு காரணத்திற்காக அவர் நல்லவராம்… அங்கு கூட அவரை மனிதனாக காட்ட, நல்லவராக காட்ட உங்களுக்கு இந்தியா தேவைப்படுகிறது.

சென்னையில் இருந்து ஊருக்கு போக இரயிலில் ஏறி அமர்ந்தால்… பக்கத்தில் இருப்பவன் இதற்கு முன்னால் அறிமுகமே இல்லாதவன் என்றாலும் அவன் பக்கத்து ஊர்க்காரன் என்றாலே அவன் மீது ஒரு பாசம் வந்துவிடும்… நாம் செய்யும் வேலையைத்தான் அவனும் செய்கிறான் என்றால் அவன்மீது இரட்டிப்பு பாசமே வந்துவிடும்… தொழில் பாசம்.

ஒரு இராணுவ வீரனுக்கு…. தன்னைப்போலத்தான் இன்னொரு நாட்டின் இராணுவ வீரனின் நிலை என்பது அப்பட்டமாகவே தெரியும். கண்டிப்பாக எதிரி என்கிற வன்மத்தைத்தாண்டி தன்னைப்போன்ற ஒருவன் என்ற நேசம் இருந்தே தீரும். போகட்டும். விடுவோம்.

தவிரவும் காஷ்மீர் பிரச்சினை என்பது என்ன என்று தெரியாமல் அதை இஷ்டத்திற்கு வெகுஜன ஊடகமான சினிமாவில் பயன்படுத்துவது… உங்கள் தொழிலுக்கும் வரலாற்றுக்கும் செய்கிற துரோகம் தான்.

இந்தியாவிற்கு பாகிஸ்தானியர்கள் வந்து போகிறார்கள்… உறவினர்களாக…. மருத்துவத்திற்காக… வேறு வேலைகளுக்காக… சாலை போக்குவரத்து… இரயில் போக்குவரத்து கூட இருக்கிறது. எல்லை தாண்டும்போது கெடுபிடிகள்… பாஸ்போர்ட் மற்றும் என்ன காரணத்திற்காக இந்த நாட்டிற்குள் வருகிறீர்கள் என்பதற்கு முறையான ஆவணம் வேண்டும். “பஜ்ரங்கி பாய்ஜான்” படம் பார்த்தாலே போதும். மிக தெளிவாக இது தெரிந்துவிடும். இன்னொன்று பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நிறையவே கலை உறவு உண்டு.

இந்தியக்கொடியும் பாகிஸ்தான்கொடியும் சுமந்து செல்கிற ஒரு பஸ்ஸை இந்தியர்களே கொளுத்துகிறார்கள்…. இதுதான் நீங்கள் இந்தியர்களை சித்தரிக்கிற விதம்…. சரி காதலியோட பாஸ்போர்ட்டை எரிச்சிட்டாங்க… இந்த போன்… மொபைல் போன்… டூப்ளிகேட் பாஸ்போர்ட்…எதுவுமே இல்லையா?

ஒரு இராணுவ வீரன்… அதுவும் எல்லைப்படையில் வேலை செய்கிறவர்… எல்லை தாண்டி போகிறதைப்பற்றி0115 அவருக்கு எதுவுமே தெரியாதா? அப்டியே திருட்டுத்தனமாக போய்த்தான் ஆகணும்னா அதுக்கு முன்னாடி தன்னுடைய நண்பர்கள் கிட்ட, மேலதிகாரிகள் கிட்ட ஐடியா கேட்கமாட்டாரா? இவர் இஷ்டத்துக்கு எல்லை தாண்டி போவாரா? அவரை இந்த இந்திய இராணுவம் தேடாதா? அதுக்கு அவருக்கு தண்டனை கிடையாதா?

ஆட்டுக்குட்டி போயிருச்சாம்… பாகிஸ்தான் ஆர்மிக்காரன் சுட்டுட்டானாம். பூங்கொத்துலயே பாம் வைக்க பழகி பல வருசம் ஆச்சு… ஆட்டுக்குட்டில வைக்க மாட்டாங்களா… ஒரு சந்தேகம்னு வந்துட்டா பாதுகாப்புக்காக சுடுறதுதானே இராணுவ வீரனுக்கு அழகு… பக்கத்துல வந்து வெடிக்கிறது வரை… மனிதநேயராக இருந்து செத்துப்போவதா இராணுவ வீரனுக்கு அழகு?. இதை சின்ன பசங்க கூட ஏத்துக்மாட்டாங்க.. டைரக்டர் சார்.

கள்ளத்தனமாக பாகிஸ்தானுக்குள் தன் காதலியை விட சென்ற ஹீரோவை… காதலியோட அப்பாவும் அம்மாவும் வரவேற்று உட்கார வச்சி உபசரிப்பார்களாம்… அப்போ அவங்களுக்கு பாகிஸ்தான் இந்தியா பிரச்சினை தெரியாதா? பார்டர்னா என்னன்னு தெரியாதா? இவர் திருட்டுத்தனமாக பாகிஸ்தானுக்குள்ள வந்தது பற்றி அவங்களுக்கு பயமே இல்லையா?

பாகிஸ்தான் இராணுவம்… அவங்க நாட்டு மக்களை… சின்னக்குழந்தைகள்னு கூட பார்க்காம… அவங்க நாட்டு மக்கள் முன்னாலயே… நடுத்தெருவுல சுட்டுத்தள்ளுவாங்களாம்… அங்க இந்திய ஹீரோ போய் ஹீரோயினை மட்டும்(???) காப்பாத்துவாராம்…

சார்… தேசப்பற்று ரொம்ப ரொம்ப முக்கியம். இந்தியர்களுக்கு மட்டும் அல்ல. எல்லா நாட்டியர்களுக்கும் தான். அதை வெறியா மாத்தி தூண்டி விட்டு அதுல சுகம் காண ஆசைப்படுறது… காசு பார்க்க ஆசைப்படுறது சத்தியமா மனிதநேயத்திற்கு எதிரானது.

இப்போ தான்…. தேசப்பற்றை எதெதுக்கோ பயன்படுத்துறாங்களே… நீங்களும் அதை வச்சி ஒரு படம் எடுத்து….

இந்தியனாக எனக்கு என் தேசத்தின் மீது பற்று இருக்கிறது, அளவிட முடியாத பாசம் இருக்கிறது. ஆனால்… என் தேசப்பற்று என்பது இன்னொரு நாட்டுக்காரனை கேவலமாக சித்தரிப்பது அல்ல என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

என்ன தான் இந்திய தணிக்கைத்துறை என்றாலும்… பிற நாடுகளை… பிற நாட்டு கொடியை, பிற நாட்டு இராணுவத்தை, பிற நாட்டு இராணுவ வீரர்களின் சீருடையை… தங்கள் நாட்டு படங்களில்… செய்திகளில்… கதைகளில்… மோசமாக… கேவலமாக…. உண்மைக்கு புறம்பாக மட்டுமே சித்தரிக்கும்போது அதை தடை செய்யவேண்டும். சுட்டிக்காட்ட வேண்டும்.

ஒற்றுமையின் தேவை என்பது இந்தியர்களுக்கு இடையே மட்டும் அல்ல… உலக மக்களுக்கு இடையேயும் தேவை தான்.

இந்த “வந்தே மாதரம்” இவங்க கிட்ட சிக்கி என்னா பாடு படுதுன்னு பாருங்க தணிக்கைத்துறையே. விஜயகாந்த் தேசத்தை ஒத்தை ஆளா காப்பாத்துனது போயி… இப்போ விக்ரம் பிரபு வந்திருக்காக.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது… இந்த “வாகா” வை… பாகிஸ்தானியர்கள் மிக சுலபமாக இணையத்தில் இருந்து டவுண்லோட் பண்ணி பார்க்க முடியும்… வாய்ப்பே இல்லை என்று கற்பூரச்சத்தியம் செய்யமுடியாது.

அப்படி ஒரு பாகிஸ்தானிய குடிமகன் இந்த வாகாவை பார்க்க நேரிட்டால்… அவன் மனநிலை என்னவாக இருக்கும்?

அந்த ஒரே ஒரு புரிதலில் தான் இந்தக்கட்டுரை எழுதத்தோன்றியது.

அவனும் இதே மாதிரி.. அல்லது இதைவிட மோசமாக… நீங்கள் செய்திருக்கும் அத்தனை சேட்டைகளையும் அப்படியே இந்தியாவாக, இந்திய இராணுவமாக மாற்றி உல்டா பண்ணி சித்தரிக்க முடியும் என்பதை உணருங்கள்… மரியாதைக்குரிய இயக்குநரே.

ஒரு சமகாலப்பிரச்சினை, அல்லது ஒரு வரலாற்று நிகழ்வை ஒரு கதையாக, நாவலாக, திரைப்படமாக… உருவாக்கும்போது அந்தப்பிரச்சினையின் உண்மையான காரண காரியங்களை ஓரளவுக்கேனும் நடுநிலையாக சித்தரிக்க முயற்சிக்க வேண்டும்.

அப்படி முடியவில்லை எனில்… அந்த முயற்சியையே கைவிட வேண்டும். ஒரு சார்பாக மட்டுமே… பதிவு செய்வதும்… சித்தரிப்பதும் உண்மைக்கு எதிரானது என்பதையும் தாண்டி… ஒற்றுமைக்கும் மனித நேயத்திற்கும் எதிரானது என்பதையே மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

தயவுசெய்து இதே மாதிரியான திரிபுகளை… தவறுகளை… பிழைகளை உங்கள் அடுத்த படத்தில் செய்யாதிருங்கள்.

மலையாளப்படங்களில் தமிழர்களை “பாண்டி” என்று சித்தரிப்பதையும்… தமிழ் படங்களில் கேரள வெள்ளை சேலை கட்டிய ஆன்டிகளை ஐட்டமாக சித்தரிப்பதையும் நிறையவே குறைத்திருக்கிறோம்… தவிர்த்து வருகிறோம் என்பது உங்கள் கவனத்திற்கும் புரிதலுக்கும்…

– முருகன் மந்திரம்

Related Posts