அரசியல்

நீதிபதிகளின் எல்லையற்ற அதிகாரங்களும், வழக்கறிஞர்களின் போராட்டங்களும் …

Bold-Justice

மக்களின் இறுதிகட்ட நம்பிக்கையாய் என்றுமே நீதிமன்றம் திகழ்வதால்தான் நீதிபதிகள் கடவுளாக கருதப்பட்டும் வருகின்றனர். ஆனால், ஊழல் பெருக்கெடுத்து ஓடும் இச்சமூகத்தில், நீதிபதிகளை மட்டும் உத்தமர்கள் என்று சொல்ல வேண்டும். ஊழல்வாதிகளாய் இருக்கும் நீதிபதிகளை, ”ஊழல்வாதிகள்” என்று குறிப்பிட்டால் உங்கள் மீது “நீதிமன்ற அவமதிப்பு” வழக்கு தொடரப்பட்டும் விசித்திரம் நம் நாட்டில் உண்டு. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஜனநாயக ஆட்சியில் ஒவ்வொரு மக்கள் ஊழியரும் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். நாட்டின் குடியரசு தலைவர் முதற்கொண்டு பிரதமர் வரை மக்கள் விமர்ச்சிக்கலாம். ஆனால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு சகலவசதிகளுடன் வாழும் நீதிபதிகளை மக்கள் என்றுமே விமர்சிக்க இயலாது என்பது தான் நிதர்சனம். ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் செலவிடப்படும் மருத்துவதொகையை அறிந்துகொள்ள தொடரப்பட்ட வழக்கில், அவை நீதிபதிகளின் அந்தரங்க வாழ்க்கை என சொல்லி அவ்வழக்கு முடித்துவைக்கப்பட்டது. நமது வரிப்பணம் நீதிபதிகளுக்கு எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கூட நம்மால் அறிந்துகொள்ள முடியாது இங்கே. அந்த அளவிற்கு நீதித்துறை கட்டற்ற சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

மற்ற எல்லா மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டில் எப்பொழுதும் மக்கள் போராட்டங்கள் ஒப்பீட்டளவில் அதிகம். இங்கே ஒவ்வொரு முறையும் மக்களுக்கான போராட்டங்களுக்காக வழக்கறிஞர்கள் முன் நின்றிருக்கின்றனர். ஈழப் பிரச்சினை தொடங்கி ஹெல்மெட் பிரச்சினை வரையிலும் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். நீதிமன்ற புறக்கணிப்பில் இருந்து, நீதிமன்ற வளாகத்தில் முழக்கமிடுதல் வரை தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு எப்பொழுதும் தீராத தலைவலியாக தான் இருக்கின்றனர். இதுவரை என்றும் இல்லாமல், மதுரையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதாக வழக்கறிஞர்கள் பதினான்கு பேரை, முன் விசாரணை இன்றி பணி இடைநீக்கம் செய்தது இந்திய பார் கவுன்சில். மேலும், மத்திய தொழில் பாதுகாப்பு படையுடன்(CISF) ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது வழக்கறிஞர்களும், உயர்நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியதற்காக ஏழு வழக்கறிஞர்களும், வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க கோரி, வாயில் கருப்பு துணி கட்டி அமைதியாக தலைமை நீதிமன்ற நீதிபதின் வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதற்காக பத்து வழக்கறிஞர்களுமாய் மொத்தமாக 40 வழக்கறிஞர்கள் அகில இந்திய பார் கவுன்சிலால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்பு சிலர் மீதான பணி இடை நீக்கம் மட்டும் நீக்கப்பட்டு, இன்னமும் 10 வழக்கறிஞர்கள் மீது பணி இடை நீக்கம் தொடரப்பட்டு வருகின்றது.

இதில், தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி, பணி இடைநீக்கம் செய்யப்பட்டு சிறை சென்ற வழக்கறிஞர்களைத் தொடர்ந்து ஒரு அசாதரணமான சூழல் உருவாகியது. அதன் பின், கிடப்பில் கிடந்த துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையை (CISF) நீதிமன்ற பாதுகாப்பு என சொல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமுலுக்குகொண்டுவந்தார். அதன்படி, வழக்கறிஞர்கள் யாரும் அடையாள அட்டையில்லாமல் உயர்நீதிமன்ற வளாகத்தினுள் காலடி வைக்க முடியாது. பொதுமக்கள் யாரும் நீதிமன்றத்தினுள் செல்லமுடியாது. வழக்கு இருக்கும் நபர்கள், கீழமை நீதிமன்றத்தில் செல்வதற்கான விண்ணப்பம் வாங்கி நிரப்பி, அடையாள அட்டை பெற்றுக்கொண்டு, பிறகு, உயர்நீதிமன்றத்திற்கான விண்ணப்ப படிவம் வாங்கி, வரிசையில் நின்று அனுமதி வாங்கி உள்ளே செல்வதற்குள் அவர்கள் வழக்கு அன்று முடிந்துவிடாமல் இருந்தால் ஆச்சர்யம் தான்.

இந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டதிற்கு பின் ஒரு பெரும் அரசியல் காரணம் இருக்கின்றது. 17.02.2009ல் சுப்ரமணியசுவாமியை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முட்டை வீசி தாக்கிய பின்பு, 19.02.2009ல் வழக்கறிஞர்களின் மீதான காவல்துறையின் தாக்குதல்களினைத் தொடர்ந்து, மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படையினை கொண்டு வருவதென உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு முடிவெடுத்தது. இத்தனை வருடங்கள் கிடப்பில் கிடந்த இம்முடிவு, தூசி தட்டப்பட்டு மீண்டும் வெடித்துள்ளது. தமிழ்நாட்டினைப் பொறுத்த வரை, இந்திய அளவிலேயே அசைக்க முடியாத அளவிற்கு மக்களிடம் எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு உள்ளது. மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டை கையாள முடியாத ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கூட்டணி தங்களால் முடிந்த அளவிற்கு தமிழ்நாட்டிற்குள் தங்கள் அதிகாரத்தினை நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள். நீதிபதி ராமசுப்பிரமணியன் மதுரை உயர்நீதிமன்றத்தில் இருந்தபொழுது, ஆர்.எஸ்.எஸ் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மேலும், நீதிபதி ராமசுப்பிரமணியன் ஆந்திர உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுதலாகிச் செல்வதைக் குறித்து தினமணியில் வைத்தியநாதன் அவர்கள் எழுதும்பொழுது, நீதிபதி ராமசுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒழுங்கமைவைக் கொண்டு வந்தவர்களில் ஒருவர் எனப் புகழ்கிறார்.

போராடும் சில வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து, மத்திய பாதுகாப்பு படையினை கொண்டு வந்து நிறுத்திவிட்டால் போதுமா?  பின்னாளில் எப்பொழுதுமே வழக்கறிஞர்கள் போராட கூடாது அல்லவா? அதற்கு தான் வழக்குரைஞர் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தனர் நீதிபதிகள். 25.05.2016 அன்று அரசிதழ் மூலமாக தான் திருத்தப்பட்ட விதிகளை வழக்கறிஞர்கள் அறிய முடிந்தது. வழக்கறிஞர் சட்டப்பிரிவு 34-ன் கீழான விதிகளில், தமிழக வழக்குரைஞர்களுக்கான திருத்தப்பட்ட விதிகள் இதோ:

                (VIII). ஒரு வழக்கறிஞர் நீதிமன்ற ஆவணத்தையோ (அ) உத்திரவையோ முறைகேடாக கையாண்டிருந்தாலும் (அல்லது)

                (IX). ஒரு வழக்கறிஞர் நீதிபதியை பயமுறுத்தும் விதமாக (BROW BEAT), அல்லது வசவு வார்த்தைகள் பயன்படுத்தியிருந்தாலோ,

                (X). ஒரு வழக்கறிஞர் நீதிபதியின் மீது ஆதரமற்ற மற்றும் நிரூபிக்க முடியாத குற்றசாட்டுகளையோ, மனுக்களையோ மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பியிருந்தாலோ அல்லது பரப்பி இருந்தாலோ (அல்லது),

                (XI). ஒரு வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலத்தில் பங்கு பெற்றாலோ அல்லது நீதிமன்ற அறைக்குள் முற்றுகை செய்தாலோ, நீதிமன்ற அறைக்குள் தட்டிகளை பிடித்திருந்தாலோ (அல்லது)

                (XII). ஒரு வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்திற்குள் மதுவின் ஆளுகைக்கு உட்பட்டவராக தெரிந்தாலோ,

மேற்படி, வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தாலோ, மாவட்ட நீதிமன்றத்தாலோ நிரந்திரமாகவோ அல்லது நீதிபதிகள் நினைக்கும் காலகட்டத்திற்கோ பணி நீக்கம் செய்யப்படலாம்.

மேற்படி விதிகள், குடிபோதையில் கார் ஏற்றி சாலையோரத்தில் தூங்கியவர்களை கொன்று, பின் தப்பித்து சென்ற வழக்கில், சாட்சியங்களை கலைத்ததிற்காகவும், நீதிமன்ற ஆவணங்களை மாற்றி அமைத்ததற்காக மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த்(R.K.Anand vs Registrar, Delhi High Court) வழக்கில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், இங்கே நீதிபதிகளின் திருத்தியமைக்கப்பட்ட விதிகள் அனைத்தும் ஆர்.கே.ஆனந்த் வழக்கில் குறிப்பிடப்பட்டவை கிடையாது. மேலும், வழக்கறிஞர்களை பணி இடை நீக்கம் செய்வதற்கான அதிகாரம் குறித்தும், வழக்கறிஞர் நிரந்திர பணி நீக்கம் குறித்தும் ஆர்.கே.ஆனந்த் வழக்கில் விவாதிக்கபடவேயில்லை.

ஒரு வழக்கறிஞரை நிரந்திர பணி நீக்கம் செய்யும் அதிகாரமோ அல்லது பணி இடைநீக்கம் செய்யும் அதிகாரமோ நீதிமன்றத்திற்கு கிடையாது. வழக்கறிஞர் தொழில் என்பது மருத்துவர், இன்ஜினியர் போன்ற புரொபஷனலிஸ்ட். FL08LAWYERNEW_2902933gஅவர்களுக்குள்ளாகவே ஒரு குழுவை அமைத்துக்கொண்டு விதிகளை பின்பற்றி நடப்பவர்கள். வழக்கறிஞர்களை பணி இடை நீக்கம் செய்யவோ அல்லது நிரந்திரமாக பணி நீக்கம் செய்யவோ பார் கவுன்சிலுக்கு மட்டும் தான் முழு அதிகாரம் உண்டு. வழக்கறிஞர்கள் ஏதாவது தவறு செய்திருப்பின், நீதிபதிகள் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மட்டுமே பார்கவுன்சிலுக்கு பரிந்துரை செய்ய முடியும். அல்லது நீதிபதிகளால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் மூலமாக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மட்டுமே நேரிடையாக எடுக்க இயலும். ஆனால், நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரத்தினையும் கைக்கொள்ள விரும்புகிறார்கள். முழுக்க முழுக்க நேர்மையற்ற இந்த சட்டவிதிகளை கண்டு கொதித்தெழுந்த வழக்கறிஞர்கள் முழுமையாக இந்த சட்டவிதிகளை திரும்ப பெற கோரி (வாபஸ்) தொடர் போராட்டங்கள் நடத்தினர். ஆனால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சட்டவிதிகளில் திருத்தங்களை வேண்டுமானால், அதற்காக நியமிக்கப்பட்ட குழுவில்(Judges committee) முறையிடலாம்; ஆனால் முழுமையாக திரும்பபெற முடியாது என சொல்லிவிட்டார். அந்த கமிஷனில் இருந்த ஐந்து நீதிபதிகளில் மூன்று பேர், திருத்தப்பட்ட வழக்கறிஞர் சட்ட விதிகளுக்கு ஆதரவு அளித்தவர்கள் தான்.

     மேலும், இந்த திருத்தியமைக்கப்பட்ட சட்ட விதிகளின் படி, நீதிபதிகள் மீது ஊழல் புகார் அளித்தால், உயர்நீதிமன்றத்தில் எந்த நீதிபதி மீது புகார் அளிக்குறோமோ, அந்த நீதிபதியே, புகாரளிக்கும் வழக்கறிஞரை பணி இடைநீக்கமோ அல்லது நிரந்த பணி நீக்கமோ செய்ய முடியும். மேலும், Browbeat செய்தால் அதாவது வழக்கறிஞர்கள் நீதிபதிகளை பயமுறுத்துமாறு வாதிட்டால், அவ்வழக்கறிஞர்களை நீதிபதிகள் பணியிடை நீக்கமோ அல்லது நிரந்திரமாக பணி நீக்கமோ இயலும். இந்த விதி வழக்கறிஞர்கள் மீது தவறாக பிரயோகிக்கப்படவும் வாய்ப்புண்டு. வழக்கறிஞர்கள் யாருக்காக நீதிமன்றத்தில் வாதிடுகிறார்கள்? மக்களுக்காக தானே. மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு இறுதிகட்ட நம்பிக்கையுடன் வழக்கறிஞர்களினை நாடி நீதிமன்றத்திற்கு வருகின்றனர். அங்கே வழக்கறிஞர்களே குரலுயர்த்தி பேச முடியவில்லை எனில்? இந்த சட்ட திருத்தம் வழக்கறிஞர்களை மட்டும் பாதிக்கவில்லை. நியாயம் கோரி நீதிமன்றம் நாடும் மக்களினையும் சேர்த்து பாதிக்கும். நீதிமன்ற வளாகம் முற்றுகை போராட்டத்திற்கு நாள் அறிவித்த உடன் போராட்டத்தினை முன்னின்று நடத்திய வழக்கறிஞர்களை பார் கவுன்சில் பணி இடை நீக்கம் செய்தது. இங்கே வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லாமலும், இளம் வழக்கறிஞர்கள் பெரும் பொருளாதர சுமையுடனும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர்; தொடர்ச்சியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அச்சத்தோடுதான் நீதிவழங்கிக் கொண்டிருப்பதாக இந்திய தலைமை நீதிபதி தத்து, டெல்லியில் இருந்து அறிவித்தார். இப்படி ஒரு சூழல் நிகழ்வதாக இதுவரை நமது உயர்நீதிமன்ற நீதிபதியோ மற்ற நீதிபதிகளோ ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை? துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையும் (CISF), தனிப்பாதுகாப்பு அதிகாரிகளும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கும் பொழுது, இவற்றையெல்லாம் கடந்துமா போராடும் வழக்கறிஞர்கள் அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்? நீதிபதி ஹரிபரந்தாமன், தனது பிரிவு உபச்சார விழாவின் பொழுது, வழக்கறிஞர்கள் இவ்வளவு காலமாக தொடர்ந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது சரியானதல்ல என்று பேசினார். அதன் பின், நீதிபதி ராமசுப்பிரமணியன் சென்னையிலிருந்து மாறுதலாகி ஆந்திர நீதிமன்றம் செல்லும்பொழுது, ”தலைமை நீதிபதியின் ஒரு தொலைபேசி அழைப்பின் தொலைவில் தான் நான் இருக்கிறேன்; இங்கிருக்கும் சிறு குழுவினை ஏவுகணையினால் தாக்குவேன்; அவர்கள் கனவினிலும் சென்று என்னால் பயத்தினை உருவாக்க முடியும்.” என தலைமை நீதிபதியின் முன்னிலையிலேயே மிரட்டல் விடுத்தார். நீதிபதிகளே இப்படி மிரட்டல் விடும் நிலைமையில் தான் நீதிமன்றம் உள்ளது. அதனைத் தொடர்ந்து நீதிபதி சந்துரு, நீதிபதி ஹரிபரந்தாமன் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக பேசியதினால் தான், நீதிபதி ராமசுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மாற்றுதலாகி செல்கின்றார் என கொளுத்திப்போட்டார். மத்திய தொழில் பாதுகாப்பு படை வருவதிலிருந்து, வழக்கறிஞர்களுக்கு எதிரான இந்த சட்ட திருத்தங்கள் வரை எல்லாவற்றையும் ஆதரிக்கின்றார் நீதிபதி சந்துரு. இப்படியாக வழக்கறிஞர்களினை ஒடுக்கும் முயற்சியில் நீதிபதிகளே இறங்கிவிட்ட பொழுதில்,  வழக்கறிஞர்களினை பணி நீக்கம் செய்யும் முழு அதிகாரத்தினையும் நீதிபதிகள் கைகளில் கொடுப்பது என்பது, பள்ளி மாணவர்களுக்கு செய்முறை பாடம் வைத்து, மதிப்பெண்களை ஆசியர்கள் கைகளில் கொடுப்பது போன்று. எப்பொழுதும் பயபக்தியுடன் வலம் வர வேண்டும்.

     இந்நிலையில் வழக்கறிஞர்களின் விடாப்போராட்டத் தொடர்ச்சியின் காரணமாய், சட்ட திருத்த விதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாய் (kept in abeyance) தலைமை நீதிபதி சொன்னார். இருப்பினும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்படும்வரை போராட்டத்தினை தொடர்ந்தார்கள். இறுதியாக பணி இடை நீக்கப்பட்டவர்கள் மீதான நடவடிக்கையை பார்கவுன்சில் திருப்பி பெற்றதும் வழக்கறிஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்பினை திரும்ப பெற்றுகொண்டார்கள். ஆனாலும், முதலில் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட (ஹெல்மெட் எதிர்ப்பில் ஆரம்பித்த) பத்து வழக்கறிஞர்கள் கிட்டதட்ட ஒரு வருட காலமாக தொடர்ந்து பணி இடை நீக்கத்திலேயே இருந்து வருகின்றனர்.

     வழக்கறிஞர்கள் மீதான சட்டத்திணிப்பு வெறும் வழக்கறிஞர்கள் மீதானது மட்டுமில்லை. அது மக்கள் மீதானதும் கூட.

– நிலவுமொழி செந்தாமரை.

Related Posts