இதழ்கள் இளைஞர் முழக்கம்

வழக்கம் போல் இன்றும் – த.ஜீவலட்சுமி

வழக்கம் போல் இன்றும்

நீ அதிமெதுவாகவே சாப்பிட்டிருக்கலாம்

வண்டியை உதைத்து உந்தி

இயங்கவில்லை என சொல்லியிருக்கலாம்

வழியில் பயண முனைப்பு தவிர்த்து

வேறேதும் பேசியிருக்கலாம்

அந்த இருட்டுப் பள்ளத்தைக் கடக்கையில்

சொற்கள் தவிர்த்து

கொஞ்சம் மௌனம் தொட்டிருக்கலாம்

கைகுலுக்கும் சாக்கில்

பெருவிரலால் உள்ளங்கை உரசி

ஒற்றைப் பார்வையில் சொல்லியிருக்கலாம்

போகாதே என்று …

பசலை பாடிப் பார்த்திருக்க நேரமில்லை

அவரவர் பாதையில் அவரவர் பயணமே

சரியாயிருக்கிறது என்றாலும்

எப்படித்தான் முடிகிறதோ ?

அணைப்பின் இறுக்கத்தில்

மூச்சடைக்காமல் பார்த்துக்கொள்ளும்

அதே கரிசனத்தோடு

தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொடுத்து

போர்வையை நினைவுபடுத்தி

சன்னலோரம் நின்று

கலக்கமின்றி

கையசைத்து வழியனுப்ப

எப்படித்தான் முடிகிறதோ போ…

– த.ஜீவலட்சுமி

Related Posts