அறிவியல் சமூகம் நிகழ்வுகள்

வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 2

 வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 1 புதியதாக படிப்பவர்கள் இந்த முதல் பகுதியை படித்துகொள்வது நலம். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றமும் அவை உற்பத்தியில் ஏற்படுத்திய மாற்றங்களும் மேன்மேலும் உற்பத்தியில் உபரியை உருவாக்கி மானுடக் கூட்டத்தில் ஒரு சிறுபகுதியாவது நீண்டகால நோக்கில் மானுட வாழ்க்கையையும் அது நடைபெறும் சூழலையும் ஊன்றிக் கவணித்து அதில் மாற்றம் கொண்டுவர சிந்திக்கவும் செயல்படவும் சாத்தியங்களை உருவாக்கியுள்ளது. இந்த சாத்தியங்கள் காலம் காலமாக தமது காலத்திற்குரிய வரம்புகளோடு மானுட வாழ்க்கையையும் அது இயங்கும் சூழலையும் மாற்றி வந்துள்ளது. அதனால்தான் மாமேதை மார்க்ஸ் அவர்களே,

l  … உற்பத்தித் திறனுள்ள மூலதனம் சாத்தியமான அளவுக்கு அதிவேக வளர்ச்சி காண்பதே, தொழிலாளிக்குச் சகிக்கத்தக்க வாழ்க்கைக்கான தவிர்க்கவியலா நிபந்தனையாகும்….

        l  இருந்தபோதிலும், மூலதனத்தின் விரைவான வளர்ச்சியே கூலியுழைப்புக்கு மிகவும்               சாதகமான நிலைமை ஆகும்.

                                –    மார்க்ஸ் கூலி உழைப்பும் மூலதனமும் நூலில்  என்றெல்லாம் கூறியுள்ளார்.

இதுகாறும் நடந்த மாற்றங்களின் பலன்கள் எல்லாம் எல்லோருக்கும் சமமாக வந்து சேரவில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த மாற்றங்களால் பயனே அடையாத மக்கட்பகுதி என்பது மிகவும் குறைவு என்பதே எதார்த்தம். அந்தமானின் ஜாரவா போன்ற பழங்குடிகள் இன்றும் இந்த மாற்றங்களின் பலன்கள் எதனையும் அடையவில்லை. மாறாக அதன் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுபவர்களாக மட்டும் இருக்கின்றனர் என்பது உண்மையே. முதலாளித்துவ உற்பத்திமுறை ஏனைய உற்பத்தி முறைகளை அழிப்பதோடு முதலாளித்துவ உற்பத்தி முறையில் வந்து இணையாதவர்களை கொடும் சுரண்டலுக்கும் அடிமைத் தனத்திற்கும் உள்ளாக்கி விடுகின்றது. அதுமட்டுமல்லாது அடிப்படையிலேயே முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது அராஜகமானதாகவும் இருக்கின்றது. இதனைத்தான் ஏங்கல்ஸ்,

……. முதலாளித்துவ உற்பத்தி முறையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, இதுநாள்வரை உள்ளுறைந்து கிடந்த, பண்ட உற்பத்தியின் விதிகள், மிகவும் வெளிப்படையாகவும், அதிக வலிமையோடும் செயல்படத் தொடங்கின. பழைய பிணைப்புகள் தளர்ந்தன. ஒதுங்கிய நிலையின் பழைய வரம்புகள் நொறுங்கின. உற்பத்தியாளர்கள் மென்மேலும் சுயேச்சையான, தனித்தொதுங்கிய பண்ட உற்பத்தியாளர்களாக மாற்றப்பட்டடனர். மொத்தத்தில் சமுதாயத்தின் உற்பத்தி முழுமையும் திட்டமின்மையாலும், நோக்கமின்மையாலும், அராஜகத்தாலும் ஆளப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த அராஜகம் மென்மேலும் உச்ச நிலைக்கு வளர்ச்சி பெற்றது. ஆனால், சமூகமயமான உற்பத்தியின் இந்த அராஜகத்தைத் தீவிரப்படுத்த முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு உதவிய முதன்மையான சாதனம், அராஜகத்துக்கு நேர் எதிரான ஒன்றாகும். ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தி நிறுவனத்திலும் உற்பத்தியில் மேற்கொள்ளப்பட்ட, சமூக அடிப்படையில் அமைந்த கூடுதலான ஒழுங்கமைப்புதான் இந்த முதன்மையான சாதனம். இதன்மூலம் உற்பத்தி முறையின் பழைய, அமைதியான, மாறாத நிலைமைக்கு முடிவு கட்டப்பட்டது. உற்பத்தியின் இந்த ஒழுங்கமைப்பு எங்கெல்லாம் ஒரு தொழில்பிரிவில் புகுத்தப்பட்டதோ, [அங்கெல்லாம்] அது, தன்னருகில் வேறெந்த உற்பத்தி முறையையும் அனுமதிக்கவில்லை. …

–    ஏங்கெல்ஸ் – கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் என விளக்குகின்றார்.

ஆனால் ஜாரவா போன்ற விதிவிலக்குகளைத் தவிர ஏனைய பகுதி மக்கட் சமூகம் முழுமையுமே பலன்பெற்றுள்ளனர் என்பதே எதார்த்தம். ஆனால் இது குறித்து எழுத முன்வரும் சூழலியல் ஆர்வலர்கள், குழுக்கள், அறிவுஜீவிகள் இந்த வரலாற்றுப் புரிதல் இல்லாது எழுதுவதாகவே தெரிகின்றது.

வளர்ச்சி மேம்பாடு ஆகியவற்றுக்கு எதிரான கருத்துகளை எழுதும் பலர் உயர் மத்திய வர்க்கத்தையும் உயர் சாதிகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நில உடமை என்பது குறித்தும் அதில் சாதிகளுக்கு இடையில் உள்ள பெரும் ஏற்றத் தாழ்வுகள் குறித்தும் கிஞ்சித்தும் சிந்தனையின்றி எழுதுபவர்களாக இருக்கின்றனர். அதாவது இந்திய வேளாண்மை அரங்கம், இந்திய சமூக நகர்வு, மேம்பாடு, வளர்ச்சி என்பவற்றை வர்க்கம், சாதி என்ற சட்டகங்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு புரிந்துகொள்ளவும் விளக்கவும் முயற்சிக்கின்றனர். தவிர்க்க வொன்னாமல் அவற்றைப் பற்றி பேச நெரும்போது ‘அந்த ஆண்டு வெட்டுப் புழுக்களின் தாக்குதல் அதிகம் இருந்ததும் மகசூலைப் பாதித்தது’ என அவை ஏதோ மூன்றாம் நாண்காம் நிலை முக்கியத்துவம் வாய்ந்தவை போலப் பேசிக் கடக்கின்றனர்.

வரலாற்று ரீதியிலான புரிதல் இல்லாத காரணத்தால் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு இங்கு ஏதோ பொற்காலம் நிலவியது போல ஒரு மாயையான சித்திரத்தை தீட்டிக் காட்டுகின்றனர். பின் இங்கு நேர்ந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் மேலை அறிவியல், ஆங்கில ஏகாதிபத்தியம் ஆகியவைதான் காரணம் என்றவிதமாக தங்கள் வாதத்தினைக் கட்டி எழுப்புகின்றனர். சமகாலத்தில் கூட பிரச்சினகள் எல்லாம் எகாதிபத்தியங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் இவற்றின் தங்கு தடையற்ற நடவடிக்கைகளால் மட்டுமே நடப்பது போன்ற ஒரு கதையாடலைச் செய்துவிடுகின்றனர். இந்திய அரசு, இந்தியாவின் ஆளும் வர்க்கங்களின் கருவி என்பதோ இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இங்கு நடைபெறும் நிகழ்வுகளில் தலையாய பங்கிருக்கின்றது என்பதோ பெரிதும் வெளிவருவதில்லை. இன்னும் மோசமாக பிரச்சினைகளுக்கெல்லாம் நவீன அறிவியலும் தொழில்நுட்பமும்தான் காரணம் எனக் கூறி முதன்மையான உண்மையான காரணங்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதற்கு வழிவகுக்கின்றனர்.

விரிவான நூல் விமர்சனங்களுக்கு இங்கு இடமில்லை; ஆனால் சில நூல்கள் குறித்து சற்றேனும் காண்பது அவசியம். எடுத்துக் காட்டாக  எண்ணெய் மற மண்ணை நினை எனும் நூலில் வந்தனா சிவா, ‘புனித மாடு அல்லது புனித கார்’ எனும் தலைப்பிலேயே ஒரு அத்தியாயம் எழுதியுள்ளார்.’

கார்களுக்கான சூழலியல் வெளியை விரிவாக்கம் செய்வதற்காக புனிதப் பசுக்கள் கொல்லப்படுகின்றன. காலங்கள் அற்ற இந்தியாவின் பரிசு புனித மாடுகளின் மீது மைந்திருக்கின்றது என்றால்இந்தியாவின் தற்காலிக பொருளாதாரத்தின் மிரட்சி புனிதக்கார்களின் மீது அமைந்திருக்கின்றது

என்ற ரீதியில் தொடர்கின்றார். இதில் புவி வெப்ப மூளலைப் பற்றிப் பேச வரும் வந்தனா சிவா அதற்கு முதற் பெரும் காரணமான நிலக்கரி பற்றி அமைதி காத்து எண்ணெய் பற்றி மட்டும் பேசிச் செல்கின்றார். பெட்ரோல் பயன்பாடுதான் ஏழை மக்களின் உணவு நெருக்கடிக்கு காரணம் என கூறிச் செல்வதை வியப்போடுதான் படிக்க வேண்டியுள்ளது. விவசாயத்தை நம்பி இருப்பவர்களில் பெரும்பான்மை, நிலமற்ற கூலித் தொழிலாளர் என்பதோ அவர்களில் பெரும்பான்மை தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்பதோ இந்த நூலில் மட்டுமல்ல  ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ என்ற முந்தைய நூலிலும் காணமுடியவில்லை. பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நலனுக்கு எதிரான சொந்த நலன்களை பேனுபவர்களைப் பற்றி அமைதி காத்து ‘அறிவியல்’ என்பதே மக்களின் எதிரி என்பதுபோல எழுதுவது யாருடைய நலனைப் பாதுகாக்கும்? என்பதை அடுத்த தொடரில் பார்க்கலாம்

(தொடரும்)

Related Posts