சமூகம்

வரவேற்புக்குரிய வாரிசு அரசியல்: ஒரு நேர்காணல்!

(இன்று அரசியலில் முகம் சுழிக்க வைக்கும் வாரிசு அரசியல்கள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில், ஒரு வரவேற்கத் தகுந்த வாரிசாக, அவசியமான ஒளிக் கீற்றாக உருவாகியிருக்கும் ‘ஹமீத் தபோல்கரின்’ நேர்காணலை தங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். இந்திய அரசியலில் மூடநம்பிக்கைகளுக்கும், பிற்போக்குத்தனங்களுக்கும் ஆதரவான ‘அரசியல் சக்திகள்’, ‘சங் பரிவாரங்கள்’ தலையெடுக்க முயற்சிக்கும் காலம் இது, இந்த நேரத்தில் அவர்களுக்கு எதிரான சமரசமற்ற போரை முன்னெடுக்க இதுபோன்ற வாரிசுகள் வரவேற்புக்குரியவர்கள்)

சில மாதங்களுக்கு முன்னர் மஹாராஷ்ட்ரத்தில், மூடநம்பிக்கைக்கு எதிரான போராளி நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை ஒரு திட்டமிட்ட சதிச்செயல். இது சமூக, அரசியல் கொலையும் கூட. இந்தக் கொலை, சமயக் கோட்பாடுகளை எதிர்த்து கேள்விகள் கேட்பவர்களுக்கும், அறிவியல் நடைமுறைகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இது திட்டவட்டமான சதிச்செயல், ஏனெனில் மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்தியலையும், கொள்கையையும் பலவீனப்படுத்துவதே அந்தக் கொலையின் நோக்கம்.

நரேந்திர தபோல்கரைக் கொன்றவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து ஹமீத் தபோல்கர் தெரிவித்துள்ள கருத்துகளை இங்கே காண்போம். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராளி டாக்டர். நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட ஆகஸ்ட் 20ஆம் நாள், ஹமீத் தபோல்கர் புனேவில் இல்லை. அந்தக் கொலையால், தடுத்து நிறுத்தப்பட்ட தன் தந்தையின் போராட்டத்தை முன்னெடுக்க ஹமீத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.

மஹாராஷ்ட்ர சட்டமன்ற சபைக்குச் செல்லும்போதும், மதக்குழுக்களிடம் உணர்ச்சிவசப்படாமல் தனது தர்க்கங்களை எடுத்து வைக்கும்போதும் மூட நம்பிக்கைக்கு எதிரானவர்கள் மீது கட்டமைக்கப்பட்ட ‘அச்சம்’ அதன் கூர்மையை இழக்கிறது. Anti-Black magic Act என்ற மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை வரவேற்ற தங்கள் போராட்டம் துவங்கிய விதத்தை, ஹமீத் தபோல்கர் கொடுத்த நேர்காணலை ‘மாற்று’ வாசகர்களுக்கு தருகிறோம்.

இந்த மசோதா நிறைவேறியதற்கு வாழ்த்துக்கள். உங்கள் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, இந்த மசோதா நிறைவேறுவதற்கு விரைவாக பணியாற்றி இருக்கிறீர்கள். இதற்கான அரசியல் உங்களுக்கு புதிதாக இருக்கக்கூடும்…

ஹமீத் தபோல்கர்: ஆம். நன்றி, இந்த மசோதா நிறைவேற்றம் ஒரு தொடக்கமே. என் தந்தையின் மரணம், எங்கள் அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி. தனிப்பட்ட ஒருவருக்கு இது விவரிக்க முடியாத உணர்வு, ஆனால் ஒரு இயக்கத்திற்கு, இது மிகப் பெரிய இழப்பு. டாக்டர் தீர்மானித்ததன்படி (ஹமீத், இங்கே அவரது தந்தையை டாக்டர் எனக் குறிப்பிடுகிறார்) எங்கள் இயக்கத்தின் அனைத்து நிகழ்வுகளும் திட்டமிட்டபடி நிகழ்ந்து வருவதில் எனக்கு மிகவும் திருப்தி.

தந்தையின் மரணத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் வெளிவர வரவேண்டும் இயக்கமாகவும், குடும்பமாகவும், நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். இந்த மசோதாவை எதிர்க்கும் சில குழுக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளால் நாங்கள் மன உறுதியை இழக்கப்போவதில்லை.

எங்கள் இயக்கத்தில், கடந்த மூன்று மாதங்களில், அனைத்து பின்னடைவுகளையும் ஆந்திர ஷ்ரத்த நிர்மோலன் சமிதி, தாங்கி நின்றது. இந்த மசோதாவை தடம்புரள வைப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எங்களின் ஆயிரமாயிரம் போராளிகளின் கடும் உழைப்பினால், இந்த புதிய மசோதாவின் செய்தி பரப்புகின்றனர் மேலும் அதற்கான சாதகமான சூழலையும், பதிலுணர்வையும் நாங்கள் காண்கிறோம்.

உங்கள் தந்தையின் மரணத்திற்கு பிறகு 100 நாட்களுக்கு மேலாகியும், அவரைக் கொன்றவர்கள் கைது செய்யப்படாததில் வருந்தவில்லையா?

ஹமீத் தபோல்கர்: டாக்டர் கொல்லப்பட்ட நாளன்று, நான் சதாராவில் இருந்தேன். இது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே மிகவும் துயரமான செய்தி. நான் அவரை சுட்டுத்தள்ளியவர்களைக் குறித்து மட்டும் சிந்திக்கவில்லை, இக்கொலைக்கு மூளையாக செயல்பட்டவர்கள் சிறைபிடிக்கப்பட வேண்டும். கொலை செய்தவர்கள் யார் எனக் கண்டறிவது கடினம் என நினைக்கவில்லை. ஆனால், இதைக் குறித்து மேலும் பேசப்போவதில்லை. அதே சமயம், மாநிலத்தின் உள்துறை அமைச்சரும் கூட இதுகுறித்து வருந்துவதுவதாக கூறியிருப்பது சிந்திக்கத் தூண்டுகிறது.

சிவ சேனைத் தலைவர் திவாகர் ராவ்தே உங்களையும், உங்களைச் சேர்ந்தவர்களையும் மாநிலத்தின் ‘தலால்கள்’ (தரகர்கள்) எனக் குற்றம் சாட்டியுள்ளார்களே?

ஹமீத் தபோல்கர்: ராவ்தேவின் குற்றஞ்சாட்டும், பெயர் குறிப்பிட்ட பேச்சும் ஜனநாயக நாகரித்தின் அத்துமீறலாகும். இதுபோன்ற செய்கையும், பேச்சும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற சிலரின் பேச்சுக்கள், மக்களிடத்தில் எங்களுக்கான கடமை மற்றும் அதற்கான பணிகளின்மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன். அவர் அதற்காக மன்னிப்பு கோரியிருப்பதால், மேற்கொண்டு எதுவும் சொல்வது சரியாய் இருக்காது.

இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வரும் அரசிலுக்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொண்டீர்களா?

ஹமீத் தபோல்கர்: இந்த மசோதாவின் மீதான பொதுமக்களின் திடீர் எழுச்சி, இந்த விஷயம் எவ்வளவு அரசியலாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இப்படி ஒரு மசோதா நிறைவேற்றப்படும் என யாரும் கற்பனை செய்திருக்கமாட்டார்கள். ஆண்டுக்கணக்கில் எதிர்ப்புகளை மீறி போராடிவருகிறோம். உண்மை இன்றைக்கு நிகழ்ந்திருக்கிறது. இந்த கறாரான சட்டத்திற்கான உட்கருத்து விவாதத்திற்கு வந்து 18 வருடங்களுக்குப் பிறகு சாத்தியமாயிருக்கிறது. இந்த மசோதாவிற்கு எதிரான புரளிகளும், எதிர்ப்புகளும் ஆச்சரியமூட்டுகிறது. சில தவறான கருத்துகளும், தகவல்களும் பரப்பப்படுகிறது.

உங்கள் தந்தையின் மரணத்திற்குப் பின்னர் நீங்களும் மிரட்டப்பட்டீர்கள். அடிப்படைவாதிகள் உங்கள் தந்தையின் இயக்கத்தையும், இந்த மசோதாவையும் தொடர்ந்து எதிர்த்தார்கள். அரசு, இந்த தீவிரமான குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், அவர்களை உற்சாகப்படுத்தியதாக நினைக்கிறீர்களா?

ஹமீத் தபோல்கர்: அனைத்து மத தீவிரவாதக் குழுக்களும், கருத்தாக்கங்களும் ஒன்றுதான். இப்படிப்பட்ட கருத்துக்களை உடையவர்கள், மத நம்பிக்கையுடையோராக இருக்கமுடியாது. இவர்கள் ஜனநாயகத்திற்கு மிரட்டல் விடுப்பவர்கள். கைது செய்யப்படவேண்டிய ஆபத்தானவர்கள்.

அரசு, இந்தக் குழுக்களுக்கு எதிராக கண்டிப்பான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியான தீவிரக் கருத்தாக்கங்களைக் கொண்ட குழுக்கள் வளர்ந்ததையும், அதைப் பார்த்துக்கொண்டு அரசு அமைதி காத்ததையும் நாங்கள் பார்த்தோம். அறிவியல் சிந்தனையும், கேள்விகளையும் கொண்டவர்களை – அவர்களிடமிருந்து காப்பாற்ற அரசு வலுவான கொள்கை உறுதியைக் கையாள வேண்டும்.

Related Posts