இதழ்கள் இளைஞர் முழக்கம்

வரலாற்று புரிதலொடு மாற்றத்தை எதிர்கொள்வோம் துணிச்சலோடு – பேரா. சுபா

உலக அளவில் பெண்களின் விடுதலை மற்றும் சமத்துவத்திற்கான கேள்விகளும் போராட்டங்களும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே துவங்கிய போதிலும் இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தான் பெண்களின் சமத்துவத்திற்கான விவாதங்கள் தொடங்கப்பட்டது. இச்சூழலில் தான் அதுவரை இந்திய சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றிவந்த பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளும் அநீதிகளும் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டது. முதல்முறையாக இந்தியப் பாரம்பரியம் மற்றும் மரபுகள் என்ற பெயரில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளின் மீது எழுப்பப்பட்ட கேள்விகள் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது இந்தியச் சமூகத்தின் சாதி மதம் சார்ந்த நிலவுடைமைச் சமூகத்தின் அமைப்பு முறையோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது என்பதின் பிரதிபலன்களாகவே குழந்தை திருமணம் உடன்கட்டை ஏறுதல் தேவதாசி விதவைப் பருவம் சிசுக் கொலை மற்றும் பலதார மணம் ஆகியவற்றை பார்க்க முடிகிறது.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் விடுதலை என்பது சமூக சீர்திருத்த இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் ராஜாராம் மோகன்ராய் (சாதி ஒழிப்பு) ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (விதவைகள் மறுமணம்) கார்வே ராணடே, கோபால் ஹரி தேஷ்முக் (பெண் கல்வி) அப்தாப் ஹீசைன் அலி சேக் முகம்மது அப்துல்லா (முஸ்லிம் பெண்களின் சீர்திருத்தம்) வீரசேலிங்கம் பந்துலு வெங்கட் ரத்னம் நாயுடு (திருமண சீர்திருத்தம்) போன்றவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். மதக் கோட்பாடுகளை கேள்விக்குட்படுத்தாமல் சமூக சீர்திருத்தம் பேசப்பட்ட காலத்தில் இந்து மதம் சார்ந்த பிராமணிய கோட்பாடுகளுக்கும் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கும் உள்ள தொடர்புகளை கேள்விக்குட்படுத்தியதோடு உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்த குரல்களில் ஜோதிராவ் பூலேயின் குரல் மிக முக்கியமானது. சீர்திருத்தங்களை கடந்து பெண்களுக்கும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்ற திசைவழியை முன்னெடுத்தவர் பூலே. இக்காலத்தில் பெரும்பான்மையாக ஆண்களோடு பெண்களின் விடுதலைக்காக மற்றும் சமத்துவத்திற்காக வாதிட்ட பெண்களும் உண்டு. அவர்களுள் சாவித்திரிபாய் பூலே மற்றும் பண்டித ரமாபாய் ஆகியோர் முக்கியமானவர்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்கள் தாமாகவே முன்வந்து சிறுசிறு குழுக்களாக இணைந்து அமைப்பு ரீதியாக பெண்களுக்கு எதிரானவைகளுக்கு குரல் எழுப்பினர். அப்போது பெண்களுக்கான பிரச்சனைகளை பெண்களே முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டதால் பாரத் மகிளா பரிஷத் ஆகிய மகிளா சமாஜ் ஸ்ரீசந்தோஷி மண்டல் (பார்சி பெண்கள் வட்டம்) முஸ்லீம் பெண்கள் சங்கம் என பல்வேறு நிலைகளில் அமைப்பு ரீதியாக பெண்கள் இயங்க ஆரம்பித்தனர். ஆயினும் அவர்களின் செயல்பாடுகள் குறிப்பிட்ட வரையறைக்குள்ளாகவே இருந்தன. இச்சூழலில் மூன்று பெண்கள் சங்கம் பெண்களுக்கான இந்திய தேசிய கவுன்சில் மற்றும் அகில இந்திய பெண்கள் மாநாடு ஆகியவற்றின் பங்கு மிக குறிப்பிடத்தக்கதாகும். இம்மூன்று அமைப்புகளின் வழியே பெண்கள் அனைத்து பிரச்சினைகளையும் விவாதித்தும் போராடியும் சமூகத்தின் விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி நகர்த்தினர்.

உரிமை கோரி

இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகள் பெண்களின் பிரச்சனைகள் பெண் விடுதலை மற்றும் சமத்துவம் என்பதன் அடிப்படையிலேயே வாதிடப்பட்டது. பெண்கல்வி மற்றும் பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகள் மையமாகப் பார்க்கபட்டது. மேலும் இந்திய விடுதலைக்கான சுதந்திரப் போராட்டம் அது தொடர்புடைய பல போராட்டங்களும் பெண்களை களப்போராட்டங்களுக்கும் உரிமை சார்ந்த போராட்டங்களுக்கும் வழி அமைத்துக் கொடுத்தது. பெண்களும் அவர்கள் சார்ந்த அமைப்புகளும் உரிமை கோரும் போராட்டங்களுக்கு குரல் கொடுத்தனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பெண்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் வாக்குரிமை, இந்துப் பெண்களுக்கு திருமணம், சொத்துரிமை போன்ற பிறவற்றில் சம உரிமை தேசிய திட்டக் குழுக்களில் பெண்களின் பங்கேற்பு மிக முக்கியமானதாகும். டோரத்தி ஜின்னாரசிதாசா, அன்னிபெசன்ட், மார்கரைட் கசின், சரோஜினி நாயுடு, ஹேராபாய், முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோரின் பங்களிப்பு என்பது அளப்பரியது. இடைவிடாத தொடர் முயற்சியின் காரணமாக பிரிட்டிஷ் அரசு முதன்முதலாக 1921 ஆம் ஆண்டு சென்னை மற்றும் பம்பாய் மாகாணங்களில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. அதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த மாகாணங்கள் (1923) பஞ்சாப், வங்காளம், மற்றும் அசாம் (1926) மத்திய மாகாணங்கள், பீகார் மற்றும் ஓரிசா (1930) பெண்களுக்கான வாக்குரிமை அளிக்கப்பட்டது. எனினும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்ததால் சட்ட அவைகளில் பெண் பிரிதிநிகளின் பங்கேற்பு என்ற முழக்கத்தை முன்வைத்து போராடி இந்தியாவிலேயே முதல்முறையாக டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டி சென்னை சட்டமன்ற அவையின் உறுப்பினராக 1927ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

கல்வி மற்றும் சொத்துரிமையின் அடிப்படையிலேயே வாக்குரிமை என்பதனால் பல்லாயிரக்கணக்கான பெண்களின் அறிவியல் பங்கேற்பு மறுக்கப்படுவதை உணர்ந்து அடுத்த கட்ட போரோட்டங்களை நடத்த வேண்டிய சூழலில் இடஓதுக்கீடு மற்றும் வயதுவந்தோருக்கான வாக்குரிமை என்ற நோக்கங்களோடு போராடி 1935-ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி 6 மில்லியன் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். இதைத் தொடர்ந்து 1937-ம் ஆண்டுத் தேர்தலில் 10 பெண்கள் பொதுத் தொகுதிகளிலும், 41 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் தேர்வு செய்யப்பட்டதோடு 5 பேர் மாகாண கவுன்சில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். விஐயலெட்சுமி பண்டிட் துறைசார்ந்த அமைச்சரான, அனுசுயாபாய் கேல், மத்திய மாகாணத்தின் துணை சபாநாயகராகவும், ஹன்சா மேத்த பம்பாயின் பாராளுமன்ற செயலாளராக என பெண்கள் பொது நிர்வாகத்தில் பங்கேற்றனர். அதன் பிறகு பெண்களின் பிரச்சனைகளின் மீதான பார்வைகளும், மையப்பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்குக்கு பணம் பெறும் இன்றைய சூழலில் வாக்குரிமைக்கான பெண்ணுரிமைப் போராளிகளின் இயக்கங்களின் வரலாறுகளை அனைவரும் குறிப்பாக பெண்கள் அறிவது அவசியமாகும்.

சுதந்திரப் போராட்டத்தில்…

இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் பெண்கள் மிகவும் தீவிரமாக பங்கேற்று செயல்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாது உண்மையாகும். வரலாறு அதை பதிவு செய்யும் கடமைகளில் இருந்து தவறிப்போய்விட்டது என்பது உண்மையை மறைக்கும் குற்றமாகப் பார்க்கப்பட வேண்டும். அன்னிபெசன்ட், சரோஜினிநாயுடு, முத்துலெட்சுமிரெட்டி, நெலிசென்குப்தா போன்ற முற்போக்கான, படித்த மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் தலைமைப் பொறுப்பாளர்களாக அடையாளம் கண்டறியப்பட்டு இருந்தாலும் பல லட்சக்கணக்கான பெண்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சுதந்திரப் போராட்டத்தில், கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர். பல போராட்டங்களையும், கூட்டங்களையும் முன்நின்று நடத்தியுள்ளனர். சுதேசி இயக்கத்தில் பெண்கள் கதர் ஆடைகளை விற்பனை செய்வது, அன்நியப் பொருட்களை எதிர்த்து கடை மறியல் செய்வது, பிறநாட்டு ஆடைகளை நிராகரிப்பது போன்ற பல்வேறு நிலைகளில் போராடியுள்ளனர். மேலும் உடல் உழைப்போடு தங்களின் நகைகளை சுதந்திரப் போராட்டத்திற்காக வழங்கியுள்ளனர். இது போன்ற போராட்டங்களுக்கு பெண்கள் பலர் தலைமை வகித்துள்ளனர். அவர்களுள் ஹன்சா மேத்தா, மிதுபென், அவந்திகாபாய், பிரோமாபாய், (தெற்கு இந்தியா) சுவருப்ராணிநேரு, பார்வதி தேவி, லாடுராணி, சத்தியவதி தேவி(வடஇந்தியா) அம்புஐம் அம்மாள், ருக்பணிலெட்சுமிபதி, துர்க்காபாய் (தென் இந்தியா) பசந்தி தேவி, ஊர்மிளா தேவி, சரளாதேவி மற்றும் மாலதி சௌவுத்திரி(கிழக்கு இந்தியா) குறிப்பிடத்தக்கது.
இந்திய சுதந்திரப் போராட்டங்களின் மிக முக்கியப் போராட்டங்களான உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், சுதேசி இயக்கம் போன்ற பல போராட்டங்களில் பெண்கள் பெரும் திரளாகப் பங்கேற்றனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இளம் பெண்ணான அருணா ஆசாப் அலியின் பங்கு அளப்பரியது. உப்புச்சத்தியாகிரகத்தில் சரோஜினிநாயுடும், சுசிச்லா கிருபாலினியும் ஆண்களுக்கு இணையாக பங்கேற்றனர். தண்டியாத்திரையில் பெண்களை இணைக்காதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்தாலும், தொடர்ந்து போராடி பெண்களையும் இணைத்து கொள்ள வைத்த பெருமையும் இவர்களையே சேரும். சுதந்திரப் போராட்டத்திற்கு கூட பெண்களை இணைத்துக் கொள்ள வைப்பதற்கும் பெண்கள் போராட வேண்டியிருந்த உண்மையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் இந்தியச் சமூகம் பாலின சமத்துவ உணர்வு நிலையற்ற, ஆணாதிக்க சமூகமாகவும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது சான்றாகும். மேலும் இன்றளவிலும் பெண்களைப் புரிந்து கொள்கிறோம் என்ற பெயரில் இதுபோன்ற புறக்கணிப்புக்கள் தொடர்ந்து பெண்களுக்கு பொது வாழ்க்கையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாலின சமத்துவ உணர்வற்றவர்கள் அவர்கள் என்பதை உணர மறுத்து.
ஆண்களுக்கு இணையாக அனைத்து நிலைகளிலும் பெண்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அது அமைதிப் போராட்டங்களாக இருந்தாலும் சரி புரட்சிகரமான போராட்டங்களாக இருந்தாலும் சரி. புரட்சிகரமான போராட்டங்களில் பெண்களின் பங்களிப்புகளுக்கு பிகாஐஞ காமா, கல்பனாதத், பீரித்திலதா வடேதர், சாந்தி கோஷ், சுனிதி சௌத்திரி, பினா தாஸ் ஆகியோரே சான்று. மேலும் கேப்டன் லெட்சுமின் பங்கு என்பது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் மிகப்பெரிய திருப்பம் மற்றும் வரலாறு. ஆனால் ஏனோ இந்திய வரலாற்றை எழுதும் எழுதுகோல்கள் தேசிய வளர்ச்சியில் பெண்களின் சமபங்களிப்பை எழுத மறுத்து சமூக அநீதிகளை தொடர்ந்து செய்கிறது என தெரியவில்லை.

சுதந்திர இந்தியாவில் பெண்கள்

1947 ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய அரசியல் சாசனம் பல்வேறு பிரிவுகளில் கீழ் அனைவரும் சமம், வித்தியாசங்கள் பாகுபாடுகள் எதன் அடிப்படையிலும் எந்த அடையாளத்தை பயன்படுத்தியும் கூடாது என்று உறுதி செய்த போதிலும் பெண்களின் பாலின சமத்துவம் மற்றும் பாலின சம வாய்ப்புக்கான விவாதங்களும், வாதிடல்களும், போராட்டங்களும் புரிதல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சுதந்திரமான இந்தியாவில் பெண்களைப் பயனாளிகளாகப் பார்க்கும் பார்வையே மேலோங்கி இருந்தது. அதாவது பெண்களின் வளர்ச்சியைப் பற்றி பெண்களைத் தவிர அவர்களின் பங்கேற்பற்ற கொள்கை மற்றும் செயல்பாடுகளே உருவாக்கப்பட்டது. பெண்களைச் சமமாகப் பார்ப்பதற்கும், அவர்களுக்கான அத்தனை அதிகாரங்களும் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதற்குமான இந்தியச் சமூகம் (வேறு யாரும் அல்ல நாம்தான்) சாதி, மதம், வர்க்கம், பால் என பல நிலைகளில் சமத்துவத்தை சிக்கலாக்கிக் கொண்டேயிருக்கிறது. இந்தியச் சமூகத்தின் மேல்கட்டுமானங்களான குடும்பம், மதம், சாதி, வர்க்கம் பாலினம் அரசு ஊடகங்கள் போன்ற நிறுவன ரீதியான ஏற்பாடுகள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க மனமற்று பெண் என்ற பால் அடையாளத்தை ஒற்றைக் குறியீடாக மாற்றி அதிகாரச் சுரண்டல் செய்து ஆதிக்கத்தில் திளைத்துக் கொண்டிருக்கிற போக்கையும் பெண்கள் கேள்விக்குட்படுத்தினார்கள். 1970க்கு பிறகு இந்தியப் பெண்களின் நிலையில் மாற்றம் என்பது கடந்த காலங்களைவிட சற்றே மாறுபட்டதாகும். சுதந்திரத்திற்கு பிறகு பெண்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது இக்காலக்கட்டம். ஐக்கிய நாடுகள் சபையின் (1975) சர்வதேச பெண்கள் ஆண்டு மற்றும் சர்வதேசப் பெண்களுக்கான பத்தாண்டுகள் (1975-85) அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை அதன் உறுப்பு நாடுகளிடம் அந்நாட்டுப் பெண்களின் நிலையைப் பற்றிய அறிக்கையை சமர்பிக்க கேட்டது. இந்திய அரசாங்கம் இந்தியப் பெண்கள் நிலை அறியும் குழுவை அமைத்தது. இக்குழு இந்தியா முழுவதும் ஆய்வுகள் மேற்கொண்டு ‘சமத்துவத்தை நோக்கி” என்ற அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையே இந்தியப் பெண்களின் உண்மை வாழ்வு நிலையை அறிவியல் பூர்வமாக நிரூபித்துக் காட்டியது. பெண்கள் இந்தியாவில் சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல், மற்றும் ஆரோக்கியத்தின் மிகவும் பின்தங்கியுள்ளதை வெளிச்சம் போட்டு உரக்கச் சொல்லியது. இதில் வீணா மசுந்தார், குமுத் சர்மா, மீராதேசய், லொதிகா இவர்களின் பங்கு மிக முக்கியமானது ஆகும். இவ்வறிக்கையை தொடர்ந்து பெண்களின் தன்னார்வு குழுக்களும் மற்றும் தேசிய அளவிலான பெண்கள் இயக்கங்களான அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய மாதர் சம்மேளம் அமைப்புகள் பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் உரிமைக்கான பல ஆய்வுகள், போராட்டங்கள் மற்றும் விவாதங்கள் நாடு முழுவதும் நடத்தினர். பெண்களின் இயங்கங்களின் பல்வேறு தொடர் போராட்டங்களின் விளைவாக பெண்கள் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள், சட்டத்திருத்தங்கள் புதிய சட்டங்கள், மகளிருக்கான ஆணையங்கள் நிறுவன ரீதியான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இதைத் தொடர்ந்து 1988ம் ஆண்டு இலாபட் தலைமையில் சமர்பிக்கப்பட்ட சுயதொழில் மற்றும் அமைப்புச் சாரா பெண் தொழிலாளர்களின் நிலை பற்றிய அறிக்கை பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகளை இந்திய சமூகத்திற்கு எடுத்துரைப்பது. தற்கால இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண்கள் இயக்கங்களின் பங்களிப்பு என்பது வரலாற்று முக்கியதுவம் வாய்ந்தது. ஆனால் தொடர்ந்து ஊடகங்கள் பெண்ணியம், பெண்களில் இயக்கங்கள் பற்றியும் தவறான உண்மைக்கு மாறான சித்தரிப்புகளை செய்து பெண்களின் பிரச்சனைகளையும் அவர்களின் செயல்பாடுகளையும் நீர்த்து போகச் செய்கிறது.

1980க்கு முன் பெண்கள் இயக்கங்கள் உடன்கட்டை ஏறுதல், வரதட்சணை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைகள், பெண் சிசு கொலை, ஊடகங்கள் பெண்களை தவறாக சித்தரிப்பது போன்ற பிரச்சனைகளின் மீது பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டது. 1980களுக்கு பிறகு பெண்கள் உரிமைக்கான பிரச்சனைகள் மீதான பெண்கள் இயக்கங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்தது. பல தொடர் போராட்டங்களின் மூலமே பெண்களுக்கான உரிமைகள் பெறப்பட்டது என்பது வரலாற்று உண்மை. அவற்றுள் மதுரா பாலியல் வன்முறை சம்பவம், ரூப் கன்வர் உடன் கட்டை ஏறுதல் தொடர்பான சம்பவம், சாபானு ஜீவனாம்ச வழக்கு, பன்வாரி தேவி வழக்கு, போபால் விஷவாயு போராட்டம், பொது சிவில் சட்டம், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு, குஜராத் படுகொலைகள் நிர்பயா வழக்கு என பல போராட்டங்களையும் சம்பவங்களையும் பட்டியலிட்டு சொல்ல முடியும்.

பெண்களின் உரிமைக்கான வரலாற்று சிறப்புமிக்க மிகமுக்கியமான சட்டங்களான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் (2005) கிரிமினல் சட்ட திருத்தம் (2013) பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டம் 2013 குழந்தைகளின் மீதான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டம் 2012 கருவிலேயே குழந்தைகளின் பாலினத்தை கண்டறிவதை தடுக்கும் சட்டம் போன்றவைகள் பெண்களில் இயக்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக பெறப்பட்டதே. தற்போதைய புதிய பொருளாதார கொள்கை அமலாக்கத்தின் சூழலில் அனைத்தும் சந்தையாகி வியாபாரம் ஆகி போன சூழலில் பெண்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வரும் போக்கை பார்க்க முடிகிறது. மறுபுறம் பெண்கள் மீதான உரிமை மீறல்களின் வடிவங்களும் தன்மைகளும் புதிய புதிய வகைகளில் அதிகரித்து வருகின்றது. மேலும் இச்சூழல் தகவல் தொழில் நுட்பங்களை பெரும்பான்மையோர் பயன்படுத்துவம் நிலையும் உருவாகி உள்ளது. இத்தகைய டிஜிட்டல் இந்திய சூழல் மனித உறவு சங்கிலியை கண்ணிகளாக துண்டித்து கொண்டிருப்பதோடு பன்முக தன்மை கொண்ட நேரடியான விவாத களங்களையும் செயற்பாட்டு தளங்களையும் சுருங்கசெய்திருக்கிறது. புதிய பொருளாதார கொள்கைகளால் மக்களின் வாழ்வாதாரங்கள் சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கும் சூழலால் வெகு மக்களை அவர்களுக்கான உரிமை போராட்டங்களிலிருந்து தள்ளி நிற்க வைத்திருக்கின்றது. இருந்த போதிலும் உரிமைகளை நோக்கிய போராட்டங்களும் விவாதங்களும் தொடர்ந்து கொண்டு இருப்பது மாற்றத்திற்கான நம்பிக்கையை ஊக்குவிக்கின்றது. இது மேலும் வலுப்பெற இன்றைய தலைமுறையினர் வரலாற்று புரிதல்களோடு மாற்றத்திற்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதே சரியானதாக இருக்க முடியும். அதுவே இன்றைய கட்டாய தேவையாகவும் இருக்கின்றது.

Related Posts