இதழ்கள் இளைஞர் முழக்கம்

வரலாற்றின் முன் நாம் குருடர்களாகிவிட வேண்டாம்? – மதுவந்தி

 

வரலாற்றை நாம் ஏன் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்? அது வரலாறு என்று சொல்லப்பட்டதாலா? கால மாற்றத்தில் மனித இனத்தின் கடந்த பக்கங்கள் படிக்கப்படாமலே போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் அதைப் பற்றிய ஆவணங்கள் வரலாறுகளாக்கப்பட்டன. ஆனால் உற்று நோக்கினால் கற்கள் கூட கால ஓட்டத்தில் பெருமாற்றம் அடைந்திருப்பதை உணரலாம், அப்படியாகத்தான் வரலாறும். நம்மிடம் வரலாறு எனக் கொடுக்கப்பட்ட எதுவும் அதன் கதை வடிவங்களே அவற்றில் உண்மைத்தன்மை ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் அல்லது கானலில் நீரெனக் கிடக்கும்.

இதைதான் ரொமிலா தாப்பர் எழுதி தமிழில் சஃபி மொழியாக்கம் செய்து “கஜினி முகம்மதுவின் சோமநாதா படையெடுப்பு – வரலாற்றின் பல குரல்கள்” நமக்கு உணர்த்துகிறது. நமக்கு கூறப்பட்ட கஜினி முகம்மது வேறு. அவன் கண்ணுக்கு சோமநாதர் கோவிலைத் தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. சோமநாதரை ஒரு இஸ்லாமியனாக அவன் வெறுத்தான். அதனைத் தகர்ப்பதற்கே மலைகள் பல கடந்து பலமுறை சோமநாதர் ஆலயத்தின் மீது போர் தொடுத்தான். இந்தியாவை இஸ்லாமிய தேசமாக்கத் துடித்தான். அவனால் அது முடியவில்லை. ஆனால் ரொமிலாவின் பல ஆண்டுகால ஆய்வின் வழி கண்டறியப்பட்ட கஜினிக்கு வேறு பல கொள்கைகள் இருந்தன. அவன் அடிப்படையில் செல்வங்களைக் கொள்ளையடிப்பதையும் நிலங்களை ஆக்கிரமித்து வெற்றி சூடுவதையும் பெரிதும் விரும்பினான். அவன் இஸ்லாமியர்களில் ஷியா பிரிவைச் சேர்ந்தவன். இஸ்லாமிய சன்னி பிரிவைச் சேர்ந்த ஆப்கானிய குறுநிலமன்னர்களையும் சூறையாடி இருந்தான்

அதற்கான ஆவணங்கள் அந்தந்த நிலப்பகுதிகளில் இன்றும் எஞ்சி இருக்கின்றன. மேலும் அரபு வணிகர்கள் மேற்கிந்தியாவின் வழியாக குதிரை வாணிகத்தை மேற்கொண்டிருந்தார்கள். அது கஜ்னவி என்னும் சிற்றூரின் வழியாக மேற்கொள்ளப்பட்டிருந்த குதிரை வணிகத்தை பாதித்தது. சோமநாதர் ஆலயம் இருந்த குஜராத்தின் வட சௌராஷ்டிரப் பகுதிதான் அரபியர்களுக்கான போக்குவரத்து வாயிலாக இருந்தது.
அதை தடுக்கவே கஜினி போர் தொடுத்ததாகவும் வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. அனைத்து வரலாற்று ஆய்வுகளுமே கஜினியை ஒரு கொடுங்கோலனாக சித்தரித்தாலும் அப்பகுதியின் நாட்டார் பாடல்கள் அவனை கருணைமிக்கவனாகப் பார்க்கின்றன. இப்படி கஜினி பற்றிய பல கோணங்களை ஆய்வின் வழியாக முன்வைக்கிறார் தாப்பர்.

அதுமட்டுமில்லை சோமநாதர் ஆலயத்தில் இருந்தது உண்மையிலேயே சோமநாதர் என்னும் கடவுள்தானா என்கிற கேள்வியையும் தன் அத்தாட்சிகள் வழியாக நம்மிடம் கேட்கிறார். கஜினி முகம்மது எண்ணற்ற முறை படையெடுத்தானா என்றும் அவ்வளவு முறையும் அங்கு சோமநாதர் ஆலயம்தான் இருந்ததா என்றும் கேட்கிறார். காரணம் கஜினி படையெடுத்ததாகச் சொல்லப்பட்ட வருடத்திற்கான பிந்தைய ஆண்டுகளில் அங்கு மசூதிகள் இருந்ததற்கான கல்வெட்டுத் தடயங்களே கிடைக்கின்றன மேலும் அது இந்து முஸ்லிம் என்ற இருபிரிவினரும் சேர்ந்தே எழுப்பியதாகச் சான்று. கஜினி படையெடுத்து வந்து போனதால் மதரீதியாகப் பெரும் சர்வாதிகார மாற்றமே நிகழ்ந்திருக்கும் நிலையில் இப்படியான நல்லிணக்கங்கள் எப்படிச் சாத்தியமாகின என்னும் அவரது கேள்வி சற்றே சிந்திக்க வைக்கிறது.

1947க்குப் பிறகு பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னான சுதந்திர இந்தியாவில் அதன் அரசியலை நிலைநிறுத்துவதற்கு கஜினி முகம்மது தேவைப்பட்டிருக்கிறார். அதுவும் பரந்து விரிந்த பல நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவன் என்கிற அடையாளம் இல்லாமல் இந்துத்துவத்தை எதிர்த்த ஒரு இஸ்லாமியன் என்கிற தனிப்பட்ட அடையாளத்தின் மீதானதொரு மிகைப்படுத்தப்பட்ட போக்கு தேவைப்பட்டிருக்கிறது. அதுதான் இன்றைய பொதுமைப்படுத்தப்பட்ட வரலாற்றில் நாம் வாசித்துவரும் கஜினியும் கூட.

ரொமிலா பல ஆவணங்களை ஒரு சேரத் தொகுத்து இந்தியாவின் அடிப்படை எழுமானத்தின் மீதான தனது சந்தேகங்களை நம்மிடம் கேட்கிறார். ஒரு இடத்தில் இப்படியாக வருகிறது,”கஜினி படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று குறிப்பிட்ட நாம் ஆங்கிலேயர்கள் ஆக்கிரமிப்பை கிறுஸ்தவப் படையெடுப்பு என்று கூறாதது ஏன் என்று கேட்கிறார். வார்த்தைகள்தான் எவ்வளவு நுண்ணுர்வைத் தனக்குள்ளே கொண்டிருக்கின்றன!

நான்கு குருடர்கள் சேர்ந்து யானை ஒன்றின் ஒவ்வொரு பகுதியையும் தங்கள் கரங்களால் உணர்ந்து அது என்னவென்று வர்ணிக்க முயன்ற கதை நினைவில் இருக்கலாம். வரலாற்றின் முன் நாம் குருடர்களாகி விடவேண்டாம்.

 

Related Posts