இலக்கியம்

வன்மத்தின் காட்டுப் பாய்ச்சல் …

ஒருநாள் இரவில், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பிரதான சாலையிலிருந்து வீடு திரும்பும் குறுக்குச் சாலையில் திரும்பும்போதுதான் அந்த ஞாபகம் வந்தது. வீட்டில் கோடை விடுமுறைக்காக அன்றுதான் ஊருக்குச் சென்றிருந்தார்கள். இரவு உணவை வெளியிலேயே முடித்திருக்க வேண்டும். மறந்துபோய் வீடு வரை வந்துவிட்டேன். அங்கிருந்து ஹோட்டலுக்குத் திரும்பி செல்ல மீண்டும் நான்கு கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியிருந்ததால், அருகிலிருந்த வண்டிக்கடையில் பார்சல் வாங்கிச் செல்லலாமென முடிவு செய்தேன்.

நான் அந்த வண்டிக்கடைக்குச் சென்றபோது ஒரே ஒருவர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரும் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் இருந்தார். நான் கடைக்காரரிடம், இரண்டு தோசை பார்சல் கட்டுங்கள் என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். ஒரே ஒரு தோசை வார்க்கக்கூடிய அளவுள்ள சிறிய கல்லில் மாவை ஊற்றி முதல் தோசையைச் சுட்டெடுத்துவிட்டு, இரண்டாவது தோசையை வார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர் சாப்பிட வந்தார். அவர் கடைக்காரரிடம், இரண்டு தோசை கொடுங்க என்று சொல்லிவிட்டு எனக்கருகில் இருந்த ஸ்டூலில் வந்தமர்ந்தார்.

அப்போது கடைக்காரர், வெந்திருந்த இரண்டாவது தோசையை எடுத்து முதல் தோசையுடன் சேர்த்து பார்சல் கட்டிக்கொண்டிருந்தார். உடனே, அருகில் அமர்ந்திருந்தவர் திடீரென எழுந்து, நான் சாப்பிட வந்து உக்காந்திருக்கேன். எனக்கு போடாம இவருக்கு பார்சல் கட்டிட்டு இருக்கீங்க…. மொதல்ல எனக்குப்போடுங்க, அப்பறம் இவருக்கு கொடுங்க என்று என்னை கைநீட்டிக் காண்பித்துக் கோபமாகக் கத்த ஆரம்பித்தார்.

அதற்குக் கடைக்காரர், அண்ணே, இவரு முன்னாடியே வந்துட்டாரு…இது அவருக்கு சுட்ட தோசை. கொஞ்சம் பொறுங்க, உங்களுக்கு சுட்டுத் தர்றேன் என்று சொன்னார். அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. சாப்பிட வந்தவங்களுக்கு கொடுத்துட்டுத்தான் பார்சல் வாங்க வந்த இவருக்கு கொடுக்கணும் என்று சொல்லி, மீண்டும் என்னைக் கை நீட்டிக் காண்பித்து கடைக்காரரிடம் கத்த ஆரம்பித்தார். நான் எதுவுமே பேசவில்லை. மெல்ல அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். நிச்சயமாக அவர் மது குடித்திருக்கவில்லை. அவர் முகம் கோபத்தில் சிவந்து கொப்பளித்துக் கொண்டிருந்தது. உதடு துடித்துக் கொண்டிருந்தது. அவர் என்னை, பகைகாரனைப் போல வன்மத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். அதற்குள் பார்சல் தயாராகியிருந்தது. கடைக்காரர் பணம் வாங்கிக்கொண்டு, பார்சலை என்னிடம் கொடுத்துவிட்டு அவருக்குத் தோசையை வார்க்க ஆரம்பித்தார்.

நான் பார்சலை வண்டியின் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு வண்டியைக் கிளப்பினேன். அப்போதும் அவர், கடைக்காரரிடம் ஏதோ சொல்லிக் கத்திக்கொண்டிருந்தார்.

வண்டி வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. எனக்கு ஒன்று மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. முன்பின் அறிந்திராத சக மனிதர் மேல், திடீரென்று எப்படி இவ்வாறு வன்மம் கொள்ள முடிகிறது? கை நீட்டிக் கத்த முடிகிறது? இந்த வன்மம் எங்கிருந்து துவங்குகிறது? எப்படி இதை அனுமதிக்கிறோம்? இங்கு மட்டுமல்ல, சாலையில் தினந்தோறும் இதுபோன்று எண்ணற்ற நிகழ்வுகளைக் காண்கிறோம். சாலையை, வயது முதிர்ந்த ஒரு முதியவர் மெதுவாகக் கடக்கிறார். அதி வேகமாக வரும்வாகன ஓட்டி, வாகனத்தின் வேகத்தைக் கொஞ்சம் கூடக் குறைக்காமல், அந்தப் பெரியவரைக் கைநீட்டி ஏதோ ஒரு வன்சொல்லால் வசைபாடிச் செல்கிறார்.

திடீர் திடீரென்று சாலைகளில் ஆங்காங்கே சண்டை நடந்துகொண்டிருக்கும். சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்கள் அனேகமாக ஒருவரை ஒருவர் முன்னர் பார்த்தேயிருக்கமாட்டார்கள். உடனே இருவரும் கை வைத்துக்கொள்வார்கள். இது எப்படி சாத்தியம்? ஒரே நொடியில் ஒருவரை வசைபாடவும், வன்மம் கொண்டு தாக்கவும் எப்படி இவர்கள் தயாராகிறார்கள்?

சிறு சாதாரண நிகழ்வுகளைக் கூட இவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதேயில்லை. மகிழுந்து ஓட்டும் சிலரை கவனித்திருக்கிறேன். சாலையில் போகும்போது எதிர்வருபவரையும், கடந்து செல்பவர்களையும் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக இவர்கள் திட்டிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு திட்டாமல் வண்டி ஓட்டவே முடியாது. திட்டுவதற்கு ஏதேனும் ஒரு காரணத்தை கண்டுபிடித்துக்கொண்டேயிருப்பார்கள்.

பேருந்தில், தெரியாமல் ஒருவர் காலை மிதித்ததற்கெல்லாம், இறங்கும் இடம்வரும்வரை சண்டையிட்டுக் கொண்டடே வருபவர்களைக் காண்கிறோம். அற்ப காரணக்களுக்காக, வன்மத்தையும் வசைகளையும், அறிந்திராத மனிதர்களை நோக்கி எப்படி வீசுகிறார்கள்?

வீடு வந்து சேரும்வரை மனதில் சிந்தனைகள், சலசலத்து ஓடும் ஆறு போல நில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தது. என்னை நோக்கி, கை நீட்டி நீட்டி வன்மம் கொண்ட சாப்பிடவந்தவர் தோற்றம் தோன்றி மறைந்தது. மிகுந்த மனத்துயரை அளித்தது. அப்படியே கட்டிலில் சாய்கிறேன். விடையில்லாக் கேள்விகள் வெற்றுக் காட்சிகளாக என்னைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. வாழ்க்கை என்பதே சிறு சிறு விட்டுக்கொடுத்தல்களிலும் பகிர்ந்து கொள்வதிலும்தானே அடங்கியிருக்கிறது. இந்தக் கோபமும் வன்மமும் வசையும் எங்கிருந்து ஆரம்பித்தது?வண்டிக்காரர் தோசையை முதலில் தராததுக்கு கோவப்படும் நாம், ஏன் தோசைக்காரரின் ஏழ்மையைக் கண்டு அதற்கு காரணமானவர்கள் மீது கோவப்படுவதில்லை? தனி மனித பிரச்சனையை நமது கோபத்தின் காரணமாக பொது பிரச்சனையாக மாற்ற பார்க்கிறோம். ஏன், பொது பிரச்சனைக்காக இயல்பாகவே நமக்கு வர வேண்டிய கோபம் வருவதில்லை?  கேள்விகளை என் அடிமனதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது. அந்த இரவில் தூக்கம் தொலைந்து போயிருந்தது. கதிரவன், ஜன்னல் வழியே வெளிச்சக்கீற்று பாய்ச்சுவது கண்களுக்குத் தெரிந்தது.

அப்போது,

வண்டிக் கவரில் இருந்த தோசைப் பார்சலை, நேற்றிரவு எடுத்துவரவேயில்லை …

Related Posts