பிற

வன்னியர்கள் வாழும் காலத்தையெல்லாம் உழவுத்தொழிலுக்கே அர்ப்பணித்தவர்கள்…

இதுவரை நான்கு நாவல்களும் நான்கு  சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று கவிதை தொகுப்புகளும்  ஒரு   நடுநாட்டுச்  சொல்  அகராதியும் படைத்திருக்கும் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் (42)  விருதாச்சலம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் தொழில்நுட்ப பணி புரிகிறார். கனடா இலக்கியத்  தோட்டம் விருது, சுந்தர ராமசாமி விருது, தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பெற்றவராவார். “அஞ்சலை” நாவலின் வழியே பிரபலமாக அறியப்படும் கண்மணி குணசேகரன் அந்நாவலில் ஆதிக்க சாதித் திமிரை எந்த இடத்திலுமே பதிவுறாமல்  தலித்துகளுடனான அன்யோன்னியமான வாழ்வை அவர்களின் வலியை  வாழ்வின்  மீதான அலைச்சலை கண்ணீரும் கம்பலையுமாகப் பதிவு செய்து இருக்கிறார் என்று வ.கீதா கூறுகிறார்.

ஆனால் அதற்கு மாறாக வந்தாரங்குடி நாவல் வன்னியர்களின் வாழ்வாதாரப் போராட்டத்திற்கான உந்துதலையும் இடப்பெயர்வையும் அலைக் கழிப்புகளையும் பதிவு செய்வதாக அமைந்திருக்கிறது.நாவலிலிருந்து நாம் கேட்ட கேள்விகளுக்கு கண்மணி அளித்த பதில்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

1. என்.எல்.சி. நிர்வாகத்தால் அய்யனார் கோயில் இடிக்கப்படும் நிகழ்வைக் கவித்துவமான மொழியில் விவரிக்கிறீர்கள். அம்மொழியினை எங்கிருந்து கண்டடைந்தீர்கள்?

எப்போதும் போலவே இந்த படைப்பையும், எம் மக்களுக்கு நெருக்கமான மொழியில்தான் எழுதியுள்ளேன். கதைப்போக்கில் நிலம் கையகப்படுத்தப்பட்டு மக்களை அப்புறப்படுத்தியபின் வீடுவாசல், பள்ளிக்கூடம், கிணறு போன்றவற்றை இடித்து நிரவி அள்ளிக்கொண்டுபோய் மண்மேட்டில் சிலைகளாய் நிற்கும் அய்யனார் போன்ற காவல் தெய்வங்கள் அவற்றின் குதிரைகள் போன்றவற்றை எப்படி இடித்து அப்புறப்படுத்துவார்கள், என யோசித்த போது எனக்குள் பேரதிர்வு. இடிப்பு மற்றும் தோண்டு இயந்திரத்தை இயக்குபவனுக்கு அதுவும் வேற்றுமொழிக்காரனுக்கு இம்மண்ணின் சாமி, பூதம் எல்லாம் கணக்கில் கொள்ளாமல் சாதாரணமாக நெட்டி அள்ளிக்கொண்டுபோய் கொட்டுபவர்கள் எனத் தெரிந்ததுதான்.

ஆனாலும் ஊர் மக்களைக் கட்டி காபந்து பண்ணிய அமானுட ஆளுமைகளை பொசுக்கென்று இடித்தார்கள், போனார்கள் என எழுதுவது எனக்கு உசிதமாகப் படவில்லை. அதே வேளை துஷ்ட தெய்வங்களான அவைகளை இயந்திர கரங்கொண்டு இடிக்கும் காட்சியை நினைத்துப் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் என்னுள் பயமும் பதற்றமும் கூடிக்கொண்டே இருந்தது. துணிந்து, எரித்துவிடுகிற மாதிரி முறைத்துக் கொண்டே யிருந்த அய்யனாரின் செவுளில் இயந்திர கையால் ஒங்கி அறைந்து உடைத்து நொறுக்கிய காட்சியை எழுதும்போது எனக்குள் நடுக்கமே கண்டுவிட்டது. அந்த நடுக்கமும் பயவுணர்ச்சியுமே ஒரு தேர்ந்த கவித்துவ நடைக்கு நகர்த்தியிருக்கலாம் என நினைக்கிறேன்.

2. உங்கள் படைப்புகளில் வாழ்க்கையின் மீதான அலைச்சலையும் அதைக் கடந்து செல்வதற்கான உந்துதலையும் ஒருசேர பார்க்க முடிகிறதே?

உண்மைதான். எனது படைப்புகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோருக்குமே எளிய வாழ்தல் கூட பெரும்பாடாக, அலைச்சலாகத்தான் இருக்கிறது. சற்றே தேறிய மற்றவர்களைப் போல நாமும் வாழ்ந்துவிட வேண்டும் (கடந்து சென்றுவிடவேண்டும் என்பதல்ல) என்கிற நம்பிக்கையை வைத்துக்கொண்டு பெரும்அலைச்சலாய் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

3. மானிட  சமூகத்திற்கேயான உழைப்பு சக்தியை வன்னியர்களின் சிறப்பியல்புகளாக நாவலில் சித்தரித்தது நியாயமா?

வன்னியர்கள் பெரும்பாலும் வரப்பில் நின்று வேலை வாங்கக்கூடிய பெருவிவசாயியாக இல்லாமல் நிலத்தில் இறங்கி உழுந்து பறித்துக் கொண்டு கிடக்கிற சிறு, குறு விவசாயிகளே. மற்ற சமூகத்தாரைப்போல் வியாபாரம், தொழில் என எதிலும் அக்கறைக்காட்டாமல் வாழும் களத்தையெல்லாம் உழவுத்தொழில் ஒன்றே என அர்ப்பணித்துக்கொண்டவர்கள். மேலும் நெய்வேலியால் கையகப்படுத்தப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் முக்காலே முணுவீசம் நிலங்களும் வன்னியர்களுடையதே. இந்த வந்தாரங்குடி நாவலில் வரும் அவர்களைப் பற்றி, அவர்களது உழைப்புப் பற்றி எழுதும்போது அவர்களுக்கு உரிய சிறப்பியல்புகளாக அவைகள் தோற்றம் காட்டுகிறது தவிர வெறெதுவும் உள்நோக்கம் இல்லை.

4. விருத்தாசலம் பழமலய் நாதர் கோயிலை முஸ்லிம்கள் இடித்ததாக பதிவு செய்திருக்கிறீர்கள். எந்த வரலாற்று அடிப்படையில் இதை நிறுவுகிறீர்கள்?

விருத்தாசலம் பழமலை நாதர் கோயிலின் உட்பகுதியில் ஏகப்பட்ட சிலைகள் உடைந்த, சிதைந்த வண்ணமாய் இருப்பதை சிறுவயதிலிருந்தே பார்த்தும் முஸ்லிம்களின் படையெடுப்புத் தாக்குதலில் தான் இப்படி நிகழ்ந்ததென அப்போதிருந்தே பேசக் கேட்டும் வருகிறேன். நாவல் எழுதும்போது இது சம்பந்தமாய் சரித்திர பேராசிரியர்களிடம் வினவிய போது வெளிப் பிரகாரம் தகர்க்கப்பட்டது. உள்ளே சிலைகள் உடைக்கப்பட்டது எல்லாம மொகலாயர்களால் நிகழ்த்தப்பட்டது என்பது ஆணித்தரமான உண்மை. ஆனால் எந்த காலக்கட்டத்தில் நிகழ்த்தப்பட்டது என கண்டறியும் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். அதே சமயம் ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்டதற்கு வாய்ப்பே இல்லையெனவும் தேர்களுக்கு சங்கிலிகளும், உள்தளங்கள் அமைத்து கோயிலையே புணரமைப்பு செய்தது அவர்கள்தான் என்றும் தெரிவித்தார்கள்.

இவைகளையெல்லாம் கவனத்தில் கொண்டும், காலங்காலமாய் சொல்லப்பட்டுவரும் நம்பிக்கைகளின் அடிப்படையிலும், பொதுவாகவே ஏராளமான கோயில்களை மொகலாயர்கள் தாக்கியிருப்பதை பாடநூல்களில் படித்ததின் பொருட்டும் ஒரு புனைவில் இவைகள் போதுமான காரணங்கள்தான் என அவ்வாறு எழுதினேன்.

5. அறிவழகன், சிகாமணி, குறள்மணி போன்றவர்கள் வாழும் காலத்தில்தான் தனபால், சதாசிவம் போன்றவர்களும் இருக்கிறார்கள். எதிர்மறையான மனிதர்கள் என்பது சமூகத்தின் சாபக்கேடா என்ன?

சாபக்கேடுதான். ஆனால் சற்றே முரண்நிலைகளில் காணப்படுகின்ற இவர்களை முதலில் கண்டறிந்து அவர்களை அதிகார வர்க்கம் தன் வசப்படுத்தி மக்களுக்கு எதிராக திருப்பிவிட்டு விடுகிறது. இறுதியில் அவைகள் வெற்றியும் பெற்று விடுகின்றன.

6. என்னதான் சாதிசனம் என ஓடி ஓடி உழைத்தாலும் சிகாமணிக்கு தனது ரத்த உறவுகளே எதிரிகளான துயரம். அத்துயரத்திற்கு எதிராக சிகாமணிக்கு ஆதரவாக பயனுற்ற மக்கள் இல்லைதானே. இதுதான் மனித இயல்பா என்ன?

இதற்கு நிலங்கள் முக்கிய காரணியாய் நிற்கின்றன. “ஏந்நகைய வித்து வாங்கன நெலம்” என வெள்ளச்சியின் சிறு மனத்தாங்கலாக இருந்தாலும், சாவு வாழ்வே இல்லாமல் போய்விட்ட கம்சலாவின் வெறுத்தொதுக்கலாக இருந்தாலும் எல்லோருக்கும் ஆதாரமாக இருந்த நிலம், நிலமாக இருக்கிற வரை எந்தவொரு வேர் பறிக்கிற வேலைக்கும் இடமில்லை. நிலம் பறிபோகிறபோதுதான் உறவுகள் தங்கள் குடும்பத்தின் மீதான உரிமை என்ன என்கிற தேடலில் நுழைகிறது. பிடுங்கப்பட்ட நிலங்களுக்கு சமானமான தொகையாக இல்லாவிட்டாலும் பார்க்காத கண்களுக்கு பகீரென்று தோற்றம் காட்டுகிற பெருந்தொகை, கைநிறை சம்பளத்துடன் வருகிற மத்திய அரசு வேலை… என இறுதி வாய்ப்பாய்க் கிடைத்த, கிடைக்கவிருக்கிறதில் தமக்கான பங்கு என்ன என்று இறங்குகிற போதுதான் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் ரத்த உறவுகளே வேட்டுவைக்கிற வேலைகளில் இறங்கிவிடுகின்றன.

அதேபோன்று ஒட்டுமொத்தமாய் எல்லோருக்கும் சிக்கல் என்று வருகிறபோது தன்னையறியாமலேயே ஒவ்வொருக்குள்ளும் ஒற்றுமை வந்து விடுகிறது. அதனை முன்னெடுத்துச் செல்பவர்களை தளபதிகளாய் போற்றி பின்தொடர்கிறார்கள். அதே சமயம் பெரும்பாடுகளுக்கு பின் சிக்கல்கள் தீரந்து விடுகிற போது அனைவரும் தனித்தனி என்கிற சுயநலம் தானாக கவ்விக்கொண்டுவிடுகிறது. சாதாரண மனித இயல்புக்கு இறங்கிவிடுகிறார்கள். பாடுபட்டு முன்னெடுத்துச் சென்ற சிகாமணி போன்றோர்களின் பிரச்சனை தனி நபர் சார்ந்ததாகி விடுகிறது.

ஒற்றுமையாய் /கூட்டை / உடைத்தெறிந்துவிட்டு/ திக்காலுக்கொன்றாய் / பறந்து போகின்றன – / பஞ்சுகள்  – எங்கோ எழுதிய எனது வரிகள் நினைவுக்கு வருகின்றன.

7.  நாவலின் கடைசிப் பகுதியில் எல்லோரும் வந்தாரங்குடிதான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் நீங்கள்தான் வன்னியர்கள் ஆண்ட பரம்பரை அதிகார மனோபாவத்தையும் பதிவு செய்கிறீர்களே?

சிக்கலான, நெருடலான, துயரமான தருணங்களில் அழுகிற பிள்ளைக்கு ஆறுதல் சொல்லறதுமாதிரி, அதிலிருந்து மீண்டுவர அதற்கு முக்கியத்துவம் கொடுக்காததுபோன்று சற்றே தாழ்த்திக் கொள்வதுதானே ஒழிய மற்றபடி அழுத்தம் கொடுப்பதெல்லாம் ஒன்றுமில்லை. வந்தாரங்குடியாய் வந்திருப்பதினாலேயே மணக்கொல்லையில் இருப்பவர்கள் தங்களைத் தொந்தரவு கொடுத்து நட்டப்படுத்துவதாய் ராசோக்குலம் சொல்லிப் புலம்புகையில் கலியபெருமாள் “எல்லாரும் வந்தாரங்குடியா வந்து பொறந்தவங்கதான்…” என்று ஆறுதல் சொல்வார்.

ஆனால் ஒரு பெரும் சமூகத்தில் நிகழ்கிற பகுதியான பிரச்சனை இது. அதேநேரம் ஒட்டுமொத்த சமூகத்திற்கு இடஒதுக்கீடு போன்ற தேவை எழுகிற போது தாம் யார், தங்கள் செல்வாக்கு என்ன, சிறப்புகள் யாவை எனச் சொல்லி அப்பேர்கொத்த சமூகம் தற்போது கல்வியில் வேலைவாய்ப்பில் எப்படி பழிவாங்கப் பட்டிருக்கிறோம், புறக்கணிக்கப் பட்டிருக்கிறறோம் என்பதையெல்லாம் பேச வரும்போது ஆண்ட பரம்பரை என அதிகாரம் பேசுவதாய் மற்றவர்களுக்கு தோற்றம் காட்டுகிறது.

8.  நிலம் சார்ந்த வாழ்வில் பயிர் பச்சைகளை எல்லாம் நேசிக்கும் ஒருவன் சாலை மறியலின்போது மரம் வெட்டுவது உறுத்தாமலா இருக்கும்?

காலம் காலமாய் பயிர்பச்சைகள் என நேசிப்போடு வாழ்ந்தவர்கள்தான். ஆடுமாடுகள் கடிக்காமல் குடலிவைத்துக் கட்டி மரம் மட்டைகளை வளரவிட்டு அழகு பாரத்தவர்கள்தான். ஆனாலும் அவர்களுக்கான நெருக்கடிகள் வரும்போது எதிர்ப்பைக் காட்ட வேறுவழியில்லாமல் மரம் மட்டைகளையே நாடுவது தவிர்க்க இயலாமல் போய் விடுகிறது. இயல்பாகவே மரங்களை வளர்த்தெடுப்பது போன்று மரங்கள் வெட்டுவதும் விவசாயம் சார்ந்ததுதான். மரம்மட்டைகளை வெட்டி காரியங்களைப் பார்க்கத்தானே செய்கிறார்கள். முள்ளை வெட்டி வேலி அடைத்துத்தானே ஆக வேண்டும். அதோடு வெட்டுகிற மரங்களுக்கு ஒன்றுக்கு நூறாய் வளர்த்தெடுக்கும் மனப்பாங்கில், மறியலுக்கு வெட்டுகிறபோது உறுத்தலாக இருந்திராது.

9. தொடர்சாலை மறியல் போராட்டத்தை செய்தியாகவும் போஸ்டர்களின் வாயிலாகவும் ஏற்கனவே அறிவித்துவிட்டதினால் மக்கள் தங்களின் பயணத்தை மேற்கொள்ளமாட்டார்கள் என்று அறிவழகனும் சிகாமணியும் பேசிக்கொள்வதான காட்சியை எப்படி நியாயப்படுத்த முடியும்?

துண்டறிக்கைகள் கொடுத்து சுவரொட்டிகள் ஒட்டி வேலைநிறுத்தம் மறியல் போராட்டம் போன்றவைகளுக்கு அழைப்புவிடுக்கும் எல்லா கட்சிகளும் சங்கங்களும், அமைப்புகளும் மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு ஆதரவளிப்பார்கள் என்கிற நம்பிக்கையில்தான் இதுகாறும் அறைகூவல் விடுக்கின்றன. அத்தகையதொரு நம்பிக்கையில்தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் பெரும்பான்மை சமூகமான தங்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையை உணர்ந்து பயணத்தை மேற்கொள்ள மாட்டார்கள் தொடர்சாலை மறியலுக்கு ஆதரவளிப்பார்கள் என அவர்கள் யோசிப்பதும் பேசிக்கொள்வதும் பெரிய தவறு எதுவுமில்லை.

10.  பூமாவையும் சிகாமணியையும் நிர்கதியாக விட்டுவிட்டீர்களே? உங்கள் மனம் வலிக்கவில்லையா?

பூமாவுக்கும் சிகாமணிக்கும் கல்யாணம் செய்துவைத்து அழகு பார்க்கிறமாதிரி பெருவாழ்வு ஒன்றும் அங்கு பூத்துவிடவில்லை. வாழ்வாதாரங்களை விட்டுவிட்டு வந்தாரங்குடியாய் தொடரும் சூழலை ஒத்ததுதான் அவர்கள் காதலும். இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக முருகன் தரும் வாக்குறுதியை நம்புவதைத் தவிரவும் நமக்கு வேறு வழி எதுவுமில்லை.

-புத்தகம் பேசுது ஜூலை 2014 இதழில் வெளியாகியுள்ளது .

Related Posts