பிற

வங்க பிராமணர்கள் ஏன் மாமிச உணவுப் பழக்கம் கொண்டிருக்கிறார்கள்?

பிராமணர்கள் என்றாலே மரக்கறி உணவுப் பழக்கம் உடையவர்கள் என்ற பொதுபுத்தி தமிழகத்தில் இருக்கிறது. இப்பொழுது அது மறைந்து வருவது வேறுவிஷயம். எனினும் இந்தியாவில் உள்ள அனைத்து பிராமணர்களும் மரக்கறி உணவுப் பழக்கம் உள்ளவர்கள் கிடையாது. குறிப்பாக வடகிழக்கு பிரதேச பிராமணர்கள் மரக்கறி உணவுப் பழக்கம் உள்ளவர்கள் கிடையாது. இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் மட்டுமல்ல மரபியல் ரீதியான காரணங்களும் உண்டு. இதை ஆய்வு செய்யும் கட்டுரை ஒன்று ஜியோ கரண்ட் என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அசல் கட்டுரையை படிக்க விரும்புவர்கள் http://www.geocurrents.info/cultural-geography/culinary-geography/the-indian-diet-milk-in-the-northeast-meat-in-the-northeast என்ற இணைப்பை சொடுக்கவும் இத்துடன் வங்க பிராமணர்கள் ஏன் மீன் உட்கொள்கிறார்கள் என்ற கட்டுரையும் https://shankariyerh.wordpress.com/2014/12/05/click-here-2/ இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் பால் குடிப்பதை தாங்கும் சக்தி ஏன் இருக்கிறது என்ற கட்டுரையும் http://blogs.wsj.com/indiarealtime/2011/09/15/why-indians-and-europeans-tolerate-milk/ படிக்க வேண்டும். இதெல்லாம் படிக்க எனக்கு நேரமில்லை. விஷயத்தை சுருக்கமாக சொல் என்பவர்கள் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்

மனித உடலின் மரபணுவை முற்றிலுமாக வரைபடத்தொகுப்புக்குள் (Mapping) உள்ளடக்கிய பிறகு, ஒவ்வொரு பிரத்யேக மரபணுக்களின் குணாம்சங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் 13910T என்ற மரபணு. மனித உடல் என்பது செல்களால் ஆனது. செல்களுக்குள் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு குரோமோ சோமிலும் டிஎன்ஏக்கள் உள்ளன. டிஎன்ஏ என்பது சுழலேணி வடிவில் செல்லும் மூலக்கூறு சங்கிலித்தொடர். எளிமைப்படுத்துவதற்காக இப்படிக் கூறலாம் இந்த ஏணிகளின் படிகளை ஏ, சி, ஜி, டி ஆகிய நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தப் ஏணிப்படிகள் வேதியல் பந்தங்களைக் (Chemical Bond) குறிப்பவை. டிஎன்ஏ சங்கிலியில் குறிப்பிட்ட நான்கு வகை பந்தம் இணைப்பு ஒரு தொடராக செல்லும் பிறகு வேறு ஒரு குறிப்பிட்ட நான்கு வகை பந்தம் தோன்றும். இப்படியாக மறுபிரதி இல்லாத இணைப்பை மட்டும் எடுத்துக் கொண்டால் நாம் அதை ஒரு மரபணு என்கிறோம். மனித உடலில் லட்சக்கணக்கான வகையான மரபணுக்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் 13910T என்ற மரபணு..

மரபணுக்கள் திரிபடைந்து (Mutation) வருகின்றன. திரிபடைந்தவை நிலைபெற்றுவிட்டால் அது தொடர்ந்து பரம்பரம்பரையாக நீடிக்கும். திரிபடைந்தவை தொடர்ந்து உயிர் வாழ்வதை டார்வினின் இயற்கைத் தெரிவுவிதிதான் தீர்மானிக்கிறது. 13910T என்ற மரபணுவின் வயது 7500 வருடமே. அதாவது இந்த மரபணு வேறொரு மரபணுவிலிருந்து திரிபடைந்து 7500 வருடங்களே ஆகின்றது. எனவே இது எல்லா மனிதர்களிடமும் இருப்பதில்லை. ஏனென்றால் இந்த உயிரினம் 1 – 1.5 லட்சம் வருடங்களுகு முன்பே முழு மனிதனாக பரிணமித்துவிட்டது. இந்த மரபணு பெரும்பாலான இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இருக்கிறது. இந்த மரபணுவின் சிறப்பு குணாம்சம் என்னவென்றால் லாக்டோஸ் எனப்படும் ஒருவகை புரோட்டினை சகித்துக் கொள்ளும் தன்மையை மனித உடலுக்கு இது வழங்குகிறது. லாக்டோஸ் என்ற புரோட்டின் பாலில் உள்ள புரோட்டினாகும். இந்த மரபணு இல்லாதவர்களால் பாலை உணவாக எடுத்துக் கொள்ள முடியாது. உணவாக எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம், இரத்தம் உரைதல் போன்றவை ஏற்படும்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வாழும் மக்களிடம் 13910T என்ற மரபணு பொதுவாக காணப்படுவது கிடையாது. ஆகவே இப்பகுதி மக்கள் பாலை உணவாக உண்ணும் வழக்கம் கொண்டவர்கள் கிடையாது. எனினும் மனிதனின் வளர்சிதை மாற்றத்திற்கு புரோட்டின் உணவு இன்றியமையாதது. வளர்சிதை மாற்றத்திற்கு பால் மூலமாக புரோட்ட்டின் கிடைப்பவர்கள் பாலை உணவாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்திற்கு வருகிறார்கள் என்றால் பாலை உண்ண முடியாதவர்கள் வேறுவகை புரோட்டினைத்தான் தெரிவு செய்வார்கள். புரோட்டினைக் கொண்ட பருப்பு வகைகள் வடகிழக்கு பகுதிகளில் அதிக விளைச்சல் இல்லாததாலும் மாமிசங்களில் அதிக புரோட்டின் கிடைப்பதாலும் மாமிச உணவுப் பழக்கம் என்பது தவிர்க்க முடியாதது இவர்களுக்கு. இயற்கைதான் உணவுப் பழக்கவழக்கத்தை தீர்மானிக்கிறது. உணவுப் பழக்க வழக்கம் கொண்ட வாழ்நிலைதான் அவன் வாழ்நிலையை பிரதிபலிக்கும் தத்துவங்களைப் படைக்கின்றது எனவேதான் பிரஹதாரண புராணம். ஷஃபரா. ஷகுலா போன்ற மத நூல்கள் மாமிசத்தை உணவுப் பழக்கவழக்கமாக ஏற்றுக் கொள்கின்றன. வங்க பிராமணர்கள் மட்டுமல்ல கோவா மாநில பிராமணர்களும் மாமிச உணவுப் பழக்க வழக்கம் உள்ளவர்கள். இவர்களுக்கும் 13910T என்ற மரபணு கிடையாது. மூஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரத்தில்தான் இந்தியாவில் குறைவான மாமிசம் உட்கொள்ளப்படுகிறது. காரணம் காஷ்மீரிகளுக்கு பால் மூலமாக புரோட்டின் கிடைக்கிறது. பாலை சகித்துக் கொள்ளும் 13910T மரபணு இருக்கிறது
இந்தியர்களில் ஒரு பகுதியினர் மட்டுமல்ல உலகில் 68 சதவீத மக்களுக்கு 13910T மரபணு கிடையாது. தாய்ப்பால் மட்டும் என்னவாம் மனிதன் ஒரு பாலூட்டியே எனவே பால் குடிக்காமல் எப்படி ஒரு பாலூட்டி உயிரினம் வாழ முடியும் என்று விஞ்ஞான பூர்வமாக சிலர் கேட்கலாம். ஆம் எல்லா பாலூட்டிகளுக்கும் குழந்தைப் பருவத்தில் லாக்டஸே என்ற என்சைம் சுரக்கிறது. இதுதான் பாலை சீரணிக்கச் செய்கிறது. குறிப்பிட வளர்ச்சியை அடைந்தவுடன் இந்த என்சைம் சுரப்பு நின்றுவிடும் அதனால்தான் குழந்தைப் பருவத்தை தாண்டியவுடன் பாலூட்டிகளுக்கு பால்குடி மறந்து விடுகிறது. லாக்டஸே என்சைம் சுரப்பை நீடிக்கும் தன்மை கொண்டதே 13910T திரிபடைந்த மரபணு. இப்படி ஒரு திரிபு மனித உயிரணுக்களில் 7500 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திராவிட்டால் இன்று உலக மக்கள் அனைவரும் மாமிச உன்னிகளாகவே இருக்க வேண்டியதிருக்கும். திரிபடைந்த மரபணுவானது டார்வினின் இயற்கைத் தெரிவுற்கு உட்படாமல் இருந்திருந்ததால் சில பரம்பரம்பரைகளுக்குப் பிறகு அது மறைந்திருக்கும். இந்த நிலை ஏற்பட்டிருந்தால் மனிதர்கள் அனைவரும் மாமிச உன்னிகாளாகவே இருந்திருப்பார்கள். இந்த இரண்டும் நடக்காதததால் எவ்வளவு பிரச்சனைகள் பாருங்கள். இருவேறு உணவுப் பழக்கம் உடைய மனிதர்கள் இல்லாவிட்டால் உணவுப் பழக்கத்தை கையிலெடுக்கும் அரசியலுக்கு இடமேது?. மரபணு வரலாற்றில் என்றோ நடந்த தவறு எந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டிருக்கிறது பாருங்கள்!

விஜயன்

 

Related Posts