சமூகம்

வகுப்புவாதமும் பெண்களும்

செ.முத்துக்கண்ணன்

மலாலா இன்றைய உலகின் பேசப்படும் பெயர் மட்டுமல்ல,.. மறுக்கப்பட்ட கல்வியை அனைவருக்கும்  உரித்தாக்க உயிரை இழக்க சித்தமான சிறுமி,.. இன்று இளம் பெண்,.. தலிபான் மத தீவிரவாதிகளுக்கு எதிராக தனது நிலையை உறுதிப்பட செய்ததன் விளைவு மதம் அனுமதிக்காத விசயத்தை ஒரு பெண் பிள்ளை எப்படி உரிமை கோரலாம் என்பதற்காக அவரின் மீது தாக்குதல்,.. மலாலா ஐக்கிய நாடுகள் சபையில் கல்விக்கான கோரிக்கையை வைத்து உரையாற்ற வைத்தது. அனைத்து நாட்டு தலைவர்களையும் எழுந்து நின்று அவரது பேச்சை ஆர்ப்பரித்து வரவேற்க வைத்தது என்றால் பெண் பிள்ளைகளின் வீரத்தை சமகாலத்தில் நம்மால் காண முடிந்தது., வகுப்புவாதத்திற்கு எதிரான அவர்களின் உறுதியான போராட்டத்தை,.. ஆம்,. இது ஏதோ இஸ்லாமிய மதம் மட்டுமல்ல,.. உலகின் அனைத்து மதங்களும் செய்யும் போதனை பெண் என்பவள் ஒடுக்கப்பட்டவள்,. அவளுக்கு எதற்கு உரிமைகள் எல்லாம் என்றுதான் இன்று வரை சொல்லி வருகிறது.. இந்து மதத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் பல அமைப்புகளும் பெண்களுக்கு எதிரான கருத்தியலை அன்றாடம் முன்வைத்த வண்ணம் உள்ளது. இதனை பல பெண்களும் ஏற்றுக்கொண்டு அந்த அமைப்புகளோடு பணியாற்றுவது வரலாற்றின் முரணாகும்..  1993ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில் இந்து முன்னணி மாதர் அமைப்புகளை இராமருக்கு கோவில் கட்டுவது என்ற அடிப்படையில் திரட்ட ஆரம்பித்திருந்த தருணத்தில் அதற்காக நாட்டின் பல பகுதிகளில் மாநாடுகளை நடத்தி வந்தது,. அப்போது அதன் மகளிர் அமைப்புகளின் தலைவர்கள் கீழ்க்கண்டவாறு பேசினார்கள்,.. பெண்களுக்கு எங்கு பாதுகாப்பு – மதச்சார்புடைய சமுதாயத்திலா? மதச்சார்பற்ற சமுதாயத்திலா? மதசார்ப்பற்ற என்ற வார்த்தைக்கு தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அதற்காக பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என கோமதி நவீன், கீதா ரவிந்திரன் போன்ற இந்து மத தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கருத்தியலுக்கு பின்னால் உள்ள அரசியல் என்ன?   பொதுவாக நல்ல குழந்தைகளை உருவாக்க காலம் காலமாக பொறுப்பு தீர்மானிக்கப்பட்டவள் பெண்தான் எனவே அவள் குடும்பத்திற்குள் மட்டுமே தனது கடமையை ஆற்ற வேண்டும். இலட்சியம் கொண்டு வெளியே செல்லக்கூடாது. இதற்கு ஏராளமான கருத்தியலை உருவாக்கினார்கள்,. ஆண் தன்னுடைய நலனுக்கும், சுகபோகத்திற்கும், சொத்தை பாதுகாக்கும் வாரிசுகளை உற்பத்தி செய்து தரும் இயந்திரமாகவே பெண்ணை பார்த்தான்.,. பெண்ணை போகப்பொருளாக பார்க்கும் இந்த நிலைதான் இன்று நிறுவனங்கள் பெண்களை வணிகப்பொருளாக (உலக அழகிப்போட்டி வரை பொருட்கள் விற்கும்) பார்க்கும் நிலைக்கு இட்டுச் சென்றது. இந்த சிந்தனைக்கு கருத்தியல் வடிவம் கொடுத்தது மதங்கள்.,. இந்த கருத்தியல் வடிவங்கள் தான் இன்றுவரை பெண்ணை நச்சரிக்கும் குடும்ப வேலைகளில் இருந்து வெளியே வராமல் பாதுகாத்து அடிமையாக வைத்திருக்க பயன்படுகிறது. அதனால் தான் லெனின் நச்சரிக்கும் குடும்ப வேலைகளில் இருந்து எப்போது ஒரு பெண் விடுதலையடைகிறாளோ அப்போது தான் இந்த சமூகம் விடுதலை அடையும் என்று சொன்னார்.

மதச்சார்புடைய சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்றால் கீழ்க்காணும் உதாரணங்களை எங்கே வைப்பது. அரிச்சந்திரன் சத்தியவதி, இராமன் சீதை, நளன் தமயந்தி, தர்மன் திரவ்பதி இந்த புராண, இதிகாச கால கதாபாத்திரங்கள் அனைத்தும் நேர்மைக்கு, உண்மைக்கு, தர்மத்திற்கு உதாரணமாக சொல்லப் பட்டவை,. ஆனால் இதில் அனைத்து ஆண்களும் மனிதர்களாக பிறந்து பின்னர் இறந்து கடவுளாக மாற்றப் பட்டவர்கள் என்று  கதைகளில் சொல்லப்படுகிறது. கேள்வி என்னவென்றால் அரிச்சந்திரன் தனது மனைவியை விற்றவன், இராமன் மற்றொருவன் தவறாக சொன்னான் என்று இரண்டுமுறை தீக்குளிக்க வைத்தவன், நளன்  நடுகாட்டில் தூங்கும் போது மனைவியை தனியாக காட்டில் விட்டு விட்டு சென்றவன், தர்மன் தன்னை மட்டுமல்ல தனது மனைவியையும் சூதாட்டத்தில் இழந்து அடுத்தவன் மானபங்கப் படுத்தும் போது நெட்டை மரமென வேடிக்கைப் பார்த்தவன்,. இது தான் மதங்கள் சொல்லும் பெண்களுக்கான பாதுகாப்பா? என்று இந்து மதப் புராணங்களை படித்தவர்களுக்கு வரும் இயல்பான கேள்வி,.. இந்த கதாபாத்திரங்களை முன்னுதாரணங்களை இன்று வரை சொல்லி வருகிறார்கள்,.. எந்த மதமும் ஆணுக்கு நிகராக பெண்ணை பார்த்ததில்லை. மதங்கள் பெண்களுக்கான ஆடை, அலங்காரம், கல்வி, பொதுவெளியில் செயல்படுவது, சிந்தனை ஆகியவற்றை கட்டுப்படுத்தின. ஆண் எவ்வளவு திருமணங்கள் வேண்டுமானலும் செய்து கொள்ளலாம். பெண்கள் ஒரு முறை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும், கணவன் இறந்தால் உடன்கட்டை, சதி ஏற வேண்டும். (இந்தியாவில் ரூப்கன்வர் சதி ஏற கட்டாயப்படுத்திய சம்பவம்). ராணி ஸதி சேவா சங் என்ற அமைப்பு ஸதி கொடுமைஎன்ற கருத்தியலுக்காக நாடு முழுவதும் கோவில் கட்ட கிளம்பியது. பூரி சங்காரச்சாரியாரோ உடன் கட்டை ஏறும் உரிமையை மறுக்கும் சட்டம் ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்று சொல்லி இதை நிலைநாட்ட உயிர்த் தியாகம் செய்வேன் என்றார்,. ஒரு பெண் உடன்கட்டை ஏறுவது கணவன், தகப்பன் குடும்பத்திற்கு மூனரைக்கோடி ஆண்டுகளுக்கு மோட்சம் கிடைக்கும் என்றார். ராஜஸ்தான் முதல்வர் விஜயராஜே சிந்தியாவோ ஸதி என்றால் அர்ப்பணிப்பு, தியாகபலி இதுதான் பெண்ணுரிமை என்றார்.,.

அரசாங்கம் மதத்தை ஏற்றுக்கொண்டால் என்ன ஆகும் என்பது இன்று பல அரபுநாடுகள், ஆப்பிரிக்க நாடுகளின் அனுபவம் தோலுரித்துக் காட்டுகிறது. நமது அண்டை நாடுகளான ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இதே நிலையே உள்ளது. மதச்சார்ப்பற்ற சமூகம் என்பது மதங்களை மறுத்த சமூகமல்ல,.. அது அரசின் அன்றாட செயல்பாட்டில் மதங்களின் தலையீடு இல்லாமல் அது தனி மனிதர்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாக பார்க்கப்படும்,. காந்தி சொன்னாரே எனக்கு இந்தியாவின் சர்வாதிகாரியாகும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் செய்வது,. மதத்தை அரசியலில் இருந்து பிரிப்பது. அது தான் மதச்சார்ப்பற்ற தன்மை. ஒரு அரசு எந்த மதங்களையும் சாராமல் அனைத்து பிரிவினரையும் சமமாக நடத்துவது. அதனால் இந்தியாவின் அரசியல் சாசனம் கூட இந்தியா ஒரு மதச்சார்ப்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று தன்னை பிரகடப்படுத்திக் கொண்டிருக்கிறது. மதத்தினை வளர்ப்பது அரசின் வேலையல்ல,..  என்று நாம் சொல்லும் போதுதான் இந்த வகுப்பு வெறியர்களுக்கு கோபம் வருகிறது. மதங்களை கட்டி வளர்ப்பதில் பெண்களுக்கு பண்பாட்டு ரீதியாக முக்கிய பங்கு உள்ள போது அவர்களை மதச்சார்ப்பற்ற சமூகத்தில் கொண்டு வந்தால் கோபம் வராதா? எனவேதான் மேற்கண்ட இந்து முன்னணியின் மகளிர் தலைவர்கள் மதச்சார்பின்மை என்ற வார்த்தையையே தடை செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். மதங்கள் ஆசியோடு உள்ள அரசுகள் பெண்களுக்கான கருக்கலைப்பை தடை செய்கின்றன. பெண் கருவுறுவது என்பது அவளது உடல்நிலையோடு, பொருளாதார நிலையோடு, குடும்பச் சூழலோடு சம்பந்தப்பட்டது. ஆனால் இன்று பாலியல் வன்முறை மூலம் கருவுறுதல் நிகழ்ந்தால் அது அவமானத்தின் சின்னம் எனக் கருதி அந்த பெண் கருக்கலைப்பு செய்ய முடியாது என்று பல மதங்களை தாங்கியுள்ள நாடுகளின் சட்டங்கள் சொல்கின்றன. இது எப்படி நியாயமாக முடியும். மேலும் தனிநபரின் விருப்பமான திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தையை தத்தெடுப்பது, சொத்துரிமை போன்ற விசயங்களில் இந்திய இஸ்லாமிய மதக் கோட்பாடுகள் பெண்களை கட்டுப்படுத்துகிறது. இந்திய இஸ்லாமிய பெண்ணான ஷாபானு ஜீவனாம்சம் குறித்து உச்சநீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125ன் படி பெற உரிமை உள்ளது என்று தீர்ப்பு வழங்கிய போது, இஸ்லாமிய அடிப்படைவாதிகளோ கணவனிடமிருந்து மனைவி ஜீவனாம்சம் கோருவது லஞ்சத்திற்கு ஒப்பானது. இது பெண்களை பாலின அராஜகத்திற்கு இட்டுச் செல்லும். இது மனைவியின் சுயமரியாதைக்கு எதிரானது. இஸ்லாமியத்திற்கு புறம்பானது என ஓலமிட்டனர். வாக்கு வங்கியை மனதில் கொண்டு அன்று ராஜீவ்காந்தி சிஆர்பிசி 125 சட்டப்பிரிவு முஸ்லிம் பெண்களுக்கு பொருந்தாது என  சட்டமியற்றி ஏழை இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டார்,.. இது கிறிஸ்தவத்திலும், இந்து மதத்திலும் கூட இப்படி பல சட்டங்கள் பெண்களுக்கு எதிராகவே உள்ளது. அதே போல கடவுளின் முன்பு அனைவரும் சமம் என்கின்றனர். ஆனால் பூசாரியாகவோ, பாதிரியாகவோ ஒரு பெண் நினைத்தால் கூட ஆக முடியாது.,. அதனால் இன்று வரை பெண்கள் பூசாரியாவதை இந்து மதம் தடை செய்கிறது. கத்தோலிக்க கிறிஸ்தவமோ ஏசு நாதர் தனது சீடர்களாக ஆண்களை மட்டுமே ஏற்றுக் கொண்டார். பெண்களை ஏற்கவில்லை. எனவே பாதிரிமாராக பெண் வர முடியாது என்று நியாயம் கற்பிக்கின்றனர். இது, தான் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற சொலவடைக் கேற்ப மதங்களின் விலை உள்ளது.  இன்றைய இந்துமதத்தின் அடிப்படையான மனு நீதி போன்ற சாஸ்திரங்கள் பெண்களுக்கு எதிராகவே இன்று வரை இருந்து வருகிறது.  பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் ஆகியோரை கொலை செய்வது மைனர் குற்றமாகும். பெண் வேத மந்திரங்களை ஓத முடியாது. அவள் பொய்க்கு சமம் என்று மனு சொல்கிறது. அதனால் தான் பெண் படிக்கக்கூடாது, வேலைக்கு போகக் கூடாது. காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னாரே, வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் பத்தினியாக இருக்க முடியாது என்று வாய் கூசாமல் பெண்களை இழிவுப்படுத்தினார்கள்,. பல பெண்கள், வாலிபர் அமைப்புகளின் எதிர்ப்புக்கு பின்னால் தனது வாய்துடுக்குத்தனத்தை கட்டுக்குள் அன்று வைத்தார். ஆர்எஸ்எஸ் ன் மகளிர் அணியான ராஷ்டிர சேவிகா சமிதி, இந்து முன்னணியின் அன்னையர் முன்னணி, பிஜேபியின் மஹிலா மோர்ச்சா, விஸ்வ ஹிந்து பரிசத்தின் துர்கா வாஹினி போன்ற அமைப்புகள் அனைத்தும் பெண்களை இறைப்பக்தி, தேசபக்தி, மதம் போன்ற மூகமுடிகளின் பின்னணியில் பாசிச அரசியலை ஏற்றி வருகிறார்கள். இது இந்து ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே. இன்று பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என சாகாக்கள் நடத்துகிறார்கள். எதற்கு வலிமையான பாரதத்தை படைக்க வலிமையான குழந்தைகளை பெற்றெடுக்க என்று.. எப்படியோ பெண்கள் உடற்பயிற்சிக்கு அனுமதித்தார்களே என்று பார்த்தால் பின்புலத்தில் அகண்ட பாரதத்தை உருவாக்க பெண்களை தயார் படுத்துவது என்ற அரசியலே வைத்துள்ளனர். ராஷ்டிர சேவிகா சமிதி அமைப்பு சொல்கிறது பெண்களுக்கு பொருளாதார நிர்பந்தம்  இருந்தால் ஒழிய பெண்கள் வேலைக்கு போகக் கூடாது நல்ல மனைவியாகவும், தாயாகவும் இருப்பதன் மூலமே பெண்கள் தேச சேவை செய்ய முடியும் பெண்களை பொறுத்தவரையில் கு டும்பம்தான் முதலில், லட்சியமெல்லாம் இரண்டாவதுதான்.,. என்று முழங்குகிறது.,.

பெண்கள் சொத்தில் சமபங்கு உரிமை வேண்டும் என்று சொன்னால் வரதட்சணைக் கொடுமை அதிகமாகிவிடும் என பெண்களுக்கு சொத்துரிமை வேண்டியதில்லை என்கின்றனர் இந்த இந்து சனாதனவாதிகள். அதுமட்டுமல்ல இயற்கையின் அற்புத குணங்களில் ஒன்று காதல், இது மனிதர்களுக்கு கிடைத்த அரிய வரம். ஆனால் இதில் இன்று சாதி பார்த்து, குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து காப் பஞ்சாயத்து, கட்ட பஞ்சாயத்து, கௌரவக் கொலைகள், சதிக் கொலைகள், கூட்டான பாலியல் வன்முறைகள் என்று நடத்தப்படும் பெண்களுக்கெதிரான வன்முறை குறித்து இன்றைய ஆர்எஸ்எஸ், பிஜேபி வகையறாக்கள் வாய் திறப்பதில்லை. சத்தம் போடாமல் இந்த நிகழ்வுகளை நிறைவேற்ற துணை நிற்கின்றன. பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றான் மகாகவி, ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே என்றார்.

(நூல் ஆதாரம்: பெண்களும், மதச்சார்பின்மையும் – மைதிலி சிவராமன்)

 

Related Posts