அன்டோனியோ கிராம்ஷி மற்றும் அமேடியோ போர்டிகா வின் தலமையில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி 1921 ல் உருவான ஊர் லிவோர்னோ (Livorno). கட்சி உருவாகி கொஞ்சம் காலத்திலேயே அந்நாட்டில் தடை செயப்பட்டது.

அதே இத்தாலியில் அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட சிவப்பு வண்ணக் கொடிகளை ஏந்திக் கொண்டு அழகாக வரைந்த மார்க்ஸ் லெனின் சே வின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளை உயர்த்தி பிடித்து “Forward people, towards redemption.. Red Flag…Red Flag.. Red Flag will triumph…Red Flag will be triumphant… ” இப்படி Bandiera Rossa எனும் சோசலிச பாடலை உரக்க பாடிய படி விளையாடுகிற கால்பந்து அணி ஒன்று உள்ளது… கிராம்ஷி எந்த மண்ணில் கம்யூனிஸ்ட் கட்சி கொடியை நாட்டினாரோ அவ்வணிக்கும் அதே பெயர் தான்..

A S Livorno !

google

1915 ல் உருவான லிவோர்னோவின் கால்பந்தாட்ட திறமைகளை பற்றி அல்ல மாறாக அவர்களது அந்த அணியின், ரசிகர்களின் அரசியல் பார்வையை, அரசியல் சாய்வை
பற்றிய தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

இத்தாலிய கால்பந்து விளையாட்டின் முக்கியமான லீகான(league) சீரி ஏ (Serie A) வில் பல ஆண்டுகள் விளையாடியது லிவோர்னோ. பூரணமான இடதுசாரி அரசியலை பின்பற்றினார்கள் என்ற காரணத்தினால் முசோலினியின் கொடுங்கோல் ஆட்சியில் இத்தாலிய கால்பந்து விளையாட்டில் இருந்தே தடை செய்யப்பட்ட வரலாறும் லிவோர்னோக்கு உண்டு.

1949 க்கு பிறகு 2004 – 2008 காலகட்டத்தில் தான் திரும்பவும் Serie A விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. பல விதமான அடக்குமுறையை சந்திக்க நேர்ந்திருந்தாலும் கிளபின் உயர்வு தாழ்வுகளை கணக்கில் கொள்ளாமல் அவர்கள் பின்பற்றிய அரசியலில் உறுதியாக இருந்தனர்.. இருந்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பாசிசத்தை வீழ்த்திய புரட்சியாளர்கள் லெனின் சே ஸ்டாலின் போன்றவர்களின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் உலகின் ஒரே கால்பந்தாட்ட அணியாக திகழ்கிறது லிவோர்னோ. ஹ்யூகோ சாவேஸ் இறந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்தியது.

ஈராக் போரில் பங்கெடுத்த இத்தாலிக்கு போரில் உயிரிழந்தவர்களுக்கும் மற்ற கிளபுகள் எல்லாம் ஒரு நிமிட மௌன அஞ்சலி வழங்கிய போரில் பங்கு கொண்டு அரசு நடவடிக்கையை எதிர்த்து ஒரு நிமிஷம் எதிர் கோஷமிட்டு அரசையே அதிரச் செய்தனர் லிவோர்னோ ரசிகர்கள்.

அவ்வளாக அரங்கு நிறையாத லிவோர்னோவின் northern stand அல்லது அவர்களின் கோலுக்கு (Goal) பின்புறம் ஒரு அரசியல் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடக்குமிடமோ என்று வரை சந்தேகம் வரலாம்.. மிலிட்டரி நிற உடைகளும் செங்கொடிகளும் கோஷங்களுமாக விளையாட்டு முடியும் வரை ஆவேசமாக இருப்பார்கள் .

நட்சத்திர ஆட்டக்காரர்களின் கோல் போடும் திறமைகளை பற்றியல்ல சே குவேராவின் தன்னலமற்ற புரட்சிகர நடவடிக்கைகளை குறித்து பாடினார்கள் லிவோர்னோ ரசிகர்கள். எதிரிகளை வீழ்த்தும், சுய பெருமை பேசும் வாசககங்களை அல்ல துன்பமுறும் உலக தொழிலாளர்களின் இன்னல்களுக்கு தங்கள ஆதரவை தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தினார்கள்.

உயரத்தில் பறக்க விட்ட கொடிகள் இத்தாலியின் கொடி அல்ல மாறாக சோவியத் ரஷ்யாவின் கொடிகளும் செங்கொடிகளும் பறக்க விட்டனர். கம்யூனிஸ்டுகள் நாங்கள் என்று பெருமையுடன் தங்களை உலகிற்கு அடையாளப்படுத்தும் விதமாகவே அவர்கள் களங்களை பயன்படுத்தினர் லிவோர்னோ ரசிகர்கள்.

பாலஸ்தீன விடுதலை போருக்கு வெளிப்படையாக ஆதரவை தெரிவித்தார்கள். அதே போல ஹெய்தில் (Republic of Haiti) பூகம்பம் ஏற்பட்ட போது மற்ற யாரையும் விட சர்வதேச அளவில் முதலில் நிதி திரட்டியவர்களும் லிவோர்னோ ரசிகர்களே. ஒரு கால்பந்து கிளப் எனும் அளவிற்கு மட்டுமே தங்கள் அரசியலை சுருக்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இடதுசாரி அரசியல் சாய்வு கொண்ட மற்ற அணிகளோடு் நட்பை பேணிய அதே சமயத்தில் முசோலினியின் பாசிச ஆதரவு கொண்ட லாஸியோ கிளபுடன் லிவோர்னோ ரசிகர்களின் சச்சரவும் வேடிக்கையான ஒன்று.

இடதுசாரி அரசியலில் வேரூன்றி நிற்கும் லிவோர்னோ எனும் அணியை பற்றி பேசும் போது தவிர்க்க முடியாத மற்றொரு பெயர் இருக்கிறது. இத்தாலி நாட்டிற்காக under 21 கால்பந்து போட்டியில் கோல் போட்ட பிறகு jerseyயை கழற்றி உள்ளே அணிந்த சேகுவேரா டீஷர்ட் ரசிகர்களை காண்பித்து கொண்டாடிய கிறிஸ்டியானோ லூக்காரெல்லி. லிவோர்னோவில் விளையாட வேண்டும் என்ற சின்ன வயதிலேயே தான் கொண்ட ஆசைக்காகவும் தான் கொண்ட தத்துவத்திற்காகவும் பாதி சம்பளத்தில் Serie B ல் லிவோர்னோவில் விளையாடிய சேகுவேரா காதலன். தங்கள் வருமானத்தை வைத்து விலையுயர்ந்த கார்களை வாங்கிய மற்ற வீரர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த அணி மாற்றத்தை அசாதாரணமான ஒரு பதலில் உலகின் வாயை அடைத்தார் லூக்காரெல்லி.. ” I bought a Livorno shirt” !

முதலாளித்துவ முறைகளுக்குள் கால்பந்தாட்டம் மாறிய போதும் லிவோர்னோ இப்போதும் கிராம்ஷியின் தத்துவங்களை பின்பற்றுகிறார்கள். உலக தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களுக்கு, கம்யூனிச தலைவர்களுக்கு ஆதரவை தெரிவித்தும் பாசிச நாடுகளின் போர்களுக்கும் அட்டூழியங்களுக்கும் எதிராக கோஷங்கள் முழங்கியும் அவர்கள் தங்கள் அரசியலை பிரகடனம் செய்கிறார்கள்.விளையாட்டு அரசியலுக்கானது அல்ல என்கிற FIFA வின் அறிவிப்பு காகிதங்களை கிழித்து காற்றில் பறக்க விடுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி பிறந்த மண்ணில் அவர்கள் இப்போதும் ” The people united shall always be victorious ” என அறைகூவல் விடுத்து முசோலினியின் ரசிகர்களுக்கு முன்னால் செங்கொடி காண்பிக்கிறார்கள்.

சிவப்பு அவ்வளவு எளிதில் மங்கி போகிற நிறமல்ல… எந்த திசையில் பார்த்தாலும் அது ஒளிரவே செய்யும்… அது விளையாட்டாகவே இருந்தாலும் சரி… !

-காளிமுத்து.

Related Posts