சமூகம்

லக்‌ஷ்மி | Lakshmi

முதலில் இந்த குறும்படத்திற்கு பதிவு எழுத வேண்டாம் என்றே இருந்தேன். நண்பர்கள் உங்கள் கருத்து என்ன என்று தொடர்ந்து கேட்டதாலும், பெண்ணிய வகுப்பெல்லாம் இங்க அள்ளித் தெளிக்கப்பட்டதைப் பாத்ததும் இந்த பதிவை எழுதத் தோன்றியது

ஒருபுறம் கலாச்சார சீர்கேடு, ஒருபுறம் இதெல்லாம் பெண்ணியமா பெண் சுதந்திரமா என இன்னொரு கோஷ்ட்டி. இதில் பெரிய அதிர்ச்சியே பாரதி மைக்கேல் ஏஞ்சலோ ஆகியோருக்கு இத்தனை ரசிகர்களா என்பதே!

அப்புறம் அவன் பாரதி பாடல் பாடி (?) முடித்ததும் ‘அப்படினா? என்கிறாள், இயக்குனர் ஆலுமா டோலுமா பாடிருந்தாலும் அதனால் அவள் கவரப்படவில்லை, ஒரு குறும்படத்தையே இந்த லட்சனத்தில் பார்த்து அதுக்கு ஒழுக்கநெறி வகுப்புகள் வேறு.

லக்‌ஷ்மி ஆக்கம் ஆரம்பக்கட்ட பட ஆக்கத்தில் இருப்பவர்களுக்கான ஒரு முதிர்சியில் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் இங்கு பிரச்சனை இல்லை, அதன் உட்கருத்துதான் இங்கு பிரச்சனை. உடனே கும்பல் கும்பலாக கிளம்பிவிட்டார்கள், இதில் பெண்ணை மோசமாக சித்தரித்துவிட்டார்கள், பாலியல் வேட்கையோடு இருப்பதாக பெண்ணை சித்தரித்துவிட்டார்கள் போன்ற விமர்சனங்களை அதிகம் பார்க்க முடிந்தது.

இப்படியான அடல்ட் கண்ட்டன்ட்க்கு பாரதியை துணைக்கு அழைத்து அசிங்கப்படுத்திவிட்டார்கள் அய்யகோ என ஏகப்பட்ட ஸ்டேட்டஸ்கள் மீம்கள் வேறு.

சரி விஷயத்திற்கு வருவோம். லக்‌ஷ்மி குறும்படத்தை பார்த்து முடித்ததும் அடப்பாவிகளா இதுல என்னடா குறைய கண்டீங்க என்றே தோன்றியது. சரி தவறு விமர்சனங்கள் எனபதைத்தான்டி லக்‌ஷ்மி படத்தை வைத்து எழுதிய கேலியும் கிண்டல்களும் தான் சற்றே அருவருப்பைத் தந்தது.

இந்த படமென்று இல்லை அடல்ட் கண்ட்டன்ட்ஸ், பாலியல் சிக்கல்கள், உறவு சிக்கல்கள், பெண்கள் தொடர்பான பல விஷயங்களை என எப்போதும் கேலியாகவே நம் சமூகம் அணுகிக்கொண்டிருப்பது அயர்ச்சியளிப்பதாகவே உள்ளது.

படத்தில் கதிர் கேரக்டர் பாரதியையும் ஓவியத்தையும் வைத்து பெண்ணை இம்ப்ரஸ் செய்ய முயல்வதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் நாம் இங்கே அவற்றை விமர்சனமாக எப்படி வைத்தோம்? ஆண்டிகளை உஷார் செய்வது எப்படின்னு காட்டிருக்காங்கடா, இதுக்கு பாரதியார வேற துணைக்கு அழச்சிருக்காங்கடா, புருஷன் இன்னொரு பொண்ணோட போனா பொண்டாட்டியும் போகலாமா? இதுதான் பெண் சுதந்திரமா? இதுதான் பெண்ணியாமா என மட்டமான மொழிகளைக் கொண்டு கையாள்கிறோம்.

லக்‌ஷ்மியோ கதிரோ ஒட்டு மொத்த ஆண் பெண்ணுக்கான பிரதிநிதியாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? இயக்குனர் எழுதிய பாத்திரப்படைப்பு என்பதைத் தான்டி அதை ஒட்டு மொத்த ஆண் பெண்ணுக்கான பிரதிநிதியாக யோசிக்கக்கூட தேவையில்லை என்றே கருதுகிறேன்.

என்னளவில் ஒரு குறும்பட பிலிம் மேக்கருக்கான மேக்கிங்காக, எழுத்தாக, தேர்ந்தெடுத்த களம், நடிகர்கள் என அனைத்தும் சரியான விதத்திலேயே இயக்குனர் கையாண்டுள்ளார். இதுபோன்ற உறவு சிக்கல்கள் குறித்த கதைகள் ஏற்கனவே பல வந்திருந்தாலும் இன்றைக்கும் இம்மாதியான கதைகள் வரவேண்டுமென்றே கருதுகிறேன். இதை கருத்தியல் ரீதியாக அணுகி ஆரோக்கியமான விமர்சனம் மற்றும் உரையாடலை படைப்பின் மீது வைத்தால் மேலும் பேசத்தயங்கும் இதுபோன்ற பிரச்சனைகளை பேசு பொருளாக்கி முதிர்ச்சியோடு கையாளப்பட்ட படைப்புகள் வரலாம்.

அதைவிடுத்து இதன்மீது கேலி கிண்டல்களுக்கான தேவை வருகிறதென்றால் நிச்சயம் நம்முடைய சமூகம் உறவு சிக்கல்கள் குறித்து வெளிப்படையான பேச்சுகளை பார்த்து பதட்டமடைவதாகவே தோன்றுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பார்வையாளராக அதிலும் சினிமா ரசிகையாக ஒரு இயக்குனர் உறவு சிக்கல் தொடர்பான களத்தை தேர்ந்தெடுப்பது அவருடைய முழுச் சுதந்திரம் என்றே ஆணித்தரமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

Sonia Arunkumar

Related Posts