குறும்படங்கள்

லக்ஷ்மி குறும்படம் – இருவேறு கோணத்தில் ஓர் பார்வை . . . . . . .

முதல் கோணம்:

கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;

பாரதியின்  வரிகள் கற்பு எனப்படுவதை இருபாலருக்கும் சமமென்கிறது. இந்த குறும்படம் ‘லட்சுமி’ நிச்சயமாக கற்பை பற்றிய விவாதங்களுக்காக எடுக்கப்பட்டதல்ல. ஒரு மத்திய தர அல்லது நடுத்தர குடும்பங்களின் இயந்திர ஒட்டத்தில் உணர்வு பகிர்வுகளுக்கான நேரம், உணர்வை வெளிப்படுத்துவதற்க்கான வெளி ஏற்படுவதில்லை.

இயந்திரத் தனமான வாழ்க்கை நகர்வில் உடலுறவை தவிர்த்து ஒருவருக்கொருவர் செலவிடும் நேரம் என்பது மிக குறைவு .உடலுறவின் உண்மை தன்மையை, உடல் மொழியை , முணங்கும் ஒலிகளைக் கூட நடுத்தர வாழ்க்கை கட்டுப்படுத்துகிறது.  அந்தக் கணவன் உடலுறவின் போதும் கூட தனக்கான இயந்திரமாகவே அவளைப் பார்க்கிறான். அன்பு முத்தங்களோ, இறுதி அணைப்புகளோ அவளுக்கு கிடைப்பதில்லை. வாழ்க்கையின் எந்த நொடியிலும் தனக்கான முக்கியத்துவம் இருப்பதை அவள் உணரவேயில்லை.

தனக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை, தனியான கவனத்தை நினைத்து பெருமைப்பட   வாய்ப்பே அவளுக்கு வழங்கப்படுவதில்லை. இது தான் எதார்த்தம்  என்று நகர்ந்து கொண்டிருக்கறாள். தீடீரென தனக்கு கிடைக்கும் ஒரு அங்கீகாரம் தனக்காக செலவிடப்படும் நேரம் ஆகியவற்றால் அவள் உணர்வுகளில் உண்டாகும் இனிமையான மாற்றங்கள் அதை நோக்கி அவளை நகர்த்துகிறது.

அவளும் கற்பின் புனிதங்களை ஏற்றுக் கொண்ட சராசரி பெண்தான். அவன் உடை மாற்றும் போது திரும்பிக் கொள்கிறாள். அவளுக்கு அவன் உடலோ, அழகோ ஒரு பொருட்டாக இல்லை, அவள் அவனுடன் வர சம்மதித்தது தனக்கு கிடைத்த அங்கீகாரம் தன் மீது விழுந்த அக்கறையை இன்னும் கொஞ்ச நேரம் நீட்டிக்கவே. உடலுறவு அவளுக்கு ஒரு பொருட்டல்ல, தான் ஏங்கி தவிக்கும் அன்பும், அங்கீகாரமும் அவளை அவனுடன் இணைத்து விடுகிறது.

அவனுடனான அவளது  உறவு உடல் பசிக்கானது அல்ல.   குக்கர் விசிலிலும், நான்கு சுவரின் நடுவில் விரிக்கப்பட்ட பாய்க்குள்ளும் அடைத்திருந்த அவள் உணர்வுகளின் உண்மைத் தன்மையை வெடித்து சிதற வைக்க கிடைத்த உளவியல் வடிகால் தான் அந்த ஓவியன்.

” மெல்லச் சிரி மெளனத் தாரகையே

வேறொருவனின் வானில் ஒளிர்ந்ததை 

அன்றி ,

வேறொரு குற்றமும் உனைச் சேராது ,

கிரகணத்தை நோக்கி நீ ஓடலாம் 

ஆனால் மறவாதே கண்மணியே 

நீ மிளிர்ந்த இந்நாளை 

மனதில் கொண்டு கும்மியடி” எனும் வரிகள் உணர்த்துகிறது

அந்த பெண்ணின் இயல்பான நடிப்பு திறன்  மிக மிக துல்லியமான முகபாவத்தில் வெளிப்படுகிறது .

அருமையான காட்சிகள் டைரக்டருக்கு வாழ்த்துக்கள்.

– சித்தாரா

இரண்டாம் கோணம்:

இருவேறு ஆண்களின் மனப்போக்கை வாழ்முறையை சந்திக்கும் ஒரு பெண்ணின் கதையிது. இன்னொரு வகையில் ஒரு பெண்ணின் வாழ்வை இரு வகையில் சுரண்டும் இரு ஆண்களின் கதையும் கூட.

இச்சமூக அமைப்பில் பெரும்பாலும் இரு வகை ஆண்களைத்தான் பெண்கள் சந்திப்பது வழக்கம். தாலி கட்டியோ கட்டாமலோ வலிமையின் மூலம் அணுகி பெண்களை ஜடமாய் வீழ்த்துவார்கள். அதில் தாலி என்பது ஒரு ஸ்பெஷல் லைசென்ஸ்! இன்னொரு வகை பெண்களின் மெல்லுணர்வை தங்களின் வாய்ச்சொல் மற்றும் செயல்திறமை மூலம் பிரமிப்பூட்டி காதலின் பேரில் பெண்களை வீழ்த்துபவர்கள்.

இந்த இரு வகையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்களே இதன் நாயகர்கள்.

இதன் நாயகி  பெற்றோர் மூலம் கிடைத்த ஆண் துணை போல் தன்னை இயந்திரமாய் நடத்தாமல்.தன் உணர்வை மதித்து மனுசியாய் நடத்த வேண்டும் எனும் எதிர்பார்ப்பில் இரண்டாம் வகை ஆணின் வலையில் வீழ்கிறாள்.

இறுதியாய் அவள் வழக்கமாய் செல்லும் ரயிலில் செல்லாமல் பஸ்ஸில் செல்ல முடிவெடுக்கிறாள். இதையும் இரண்டு வகையாய் பார்க்கலாம்.

ரயில் சிநேகிதனை பார்ப்பதை தவிர்க்க பஸ்ஸில் செல்லும் முடிவெனில் இந்த சமூக கட்டமைப்பை முழுமையாய் மீற தைரியமின்றி அதே வாழ்வில் நீடிக்க எனலாம். பஸ்ஸில் செல்வதன் மூலம் அவனை நேரடியாய் சந்திப்பது எளிது என கருதியிருந்தால் என் பாதை மாறி விட்டது எனக் குறிப்பால் உணர்த்துவதாய் நினைக்கலாம். இந்த இரு வகைக்கும் இறுதிக் காட்சி இடம் தருகிறது.

இச்சமூகம் பெண்ணை மனுசியாய் பார்க்கத் துவங்கும் நாளில் பெண்ணை வீழ்த்துவது ஆணுக்கு அவசியமற்றுப் போகும். பெண்ணும் வீழ்ந்தவளாய் வீழ்த்தப்படுபவளாய் இருக்க மாட்டாள். காதல் என்பது இரு மனமும் உடலும் இயல்பாய் சங்கமிக்கும் பூவாய் மலர்ந்திருக்கும்.

அந்த வகையில் லஷ்மி எனும் தனிமனுசியின் கதையல்ல இது. ஆணாதிக்க பெண்ணடிமைத்தன சமூக மாற்றம் நோக்கி பயணிக்க இக்கதை ஒரு அடையாளக் குறியீடு.

இடையில் தப்பு செய்வது குறித்த ஒரு வசனம்தான் இப்பட இயக்குநரின் நோக்கத்தை ஐயம் கொள்ள வைக்கிறது. கதை பற்றிய புரிதலை.தடுமாற வைக்கிறது.

மற்றபடி இது ஒரு அழுத்தமான கதையும் காட்சியமைப்பும் கொண்ட குறும்படம்.

– செம்மலர்.

Related Posts