இந்திய சினிமா சினிமா

பிரமாண்ட போர்க்களம்: ருத்ரமாதேவி ஒரு பார்வை…

ஹேமாவதி ஹேம்ஸ்

சமீப காலத்தில் வெளிவந்த பிரமண்டமான சரித்திர படங்கள்தான் பாகுபலியும் ருத்ரமாதேவியும். இதில் உள்ள  ஒற்றுமை இரண்டு படத்திலும் நடித்தவர் ஒரே பெண்தான். ஆனால் அப்பெண்ணின் கதாபாத்திரங்கள் வேறு வேறு.

என் மகன் வருவான் என்னை காப்பாற்ற என்று கூறி 25ஆண்டு காலம் சிறையில் சங்கிலியில் பிணைக்கப்பட்டு தள்ளாடி தள்ளாடி சுள்ளி பொருக்கும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ள அனுஷ்கா தான். ருத்ரமா தேவியில் மதம்பிடித்த யானையை அடக்கும் பெண்ணாக, வாள் முனையில் ஒரு தேசத்தையே கட்டி ஆளும் ராணியாக, பல ராஜ்யங்களை வீழ்த்தும் ஆளுமையாக, ஒரு நாட்டின் வீரத்தாயாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

சரித்திரப் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட படங்கள் இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம். இந்த இரண்டு படத்திலும் பெண்கள் வீரமாக காட்டப்படுகின்றனர். ஆனால் பாகுபாலி படத்தில் – சமரசமற்ற வீரத்தோடு பெண்களின் வீரத்தையும் போர்க் குணத்தையும் ஒரு ஆண் எப்படி எதிர்கொள்கிறான் என்றால், அப் பெண்ணை சாதாரண பெண்ணாக மாற்றுவதன் மூலமே.

அதற்கு அவன் கையாளும் ஒரே தந்திரம் காலகாலமாக ஆணாதிக்க சமுகம் கடைபிடிக்கும் மலிவான பாலியல் தூண்டலும்,  தாய்மையையே ஒரு சிறையாக்கி அவளை சிக்கவைப்பதுதான்.

சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பங்கு என்ன என்பது குறித்துப் பொது புத்தியில் ஆழமாகப் படிந்திருக்கும்  மதிப்பீடுகளின்  விளைவே பாகுபலில் காட்டப்பட்ட இதுபோன்ற காட்சிகள்.

இதேபோல காட்சிகளுக்கான வாய்ப்பு இருந்தும் அதை மோதி உடைத்ததுதான் ருத்ரமா தேவி திரைப்படத்தின் வெற்றி. பெண்களுக்கு தலைமை பண்பு, தன்மானம்,   பெண் பெண்ணாய் வாழ உரிமை ஆகியவைகளை பேசுகின்ற படமாக ருத்ரமா தேவி வந்துள்ளது.

பெண் என்றால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களுடன்தான் இருக்க வேண்டும் என்று சமூகம் வரையறைத்து வைத்துள்ளது. பெண் என்பவள் ஆண் சொல்கிறபடி எல்லாம் கேட்க வேண்டும் என்ற ஆணாதிக்க கட்டமைப்பின் பிடியிலே சிக்கி, ஆமைகளாய், ஊமைகளாய் அடிமைப்பட்டுக் கிடந்த சூழலிலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் திறமையை வீரத்தை பதிய வைத்த ஒரு வீராங்கணையின் படம்தான் இது.

ஆந்திராவில் 3ம் நூற்றாண்டில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த ஒரு பெண்ணின் கதை தான் ருத்ரமாதேவி. இந்த சரித்திரப்படத்தை எடுத்து பெண்ணின் வீரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநர் குணசேகரனுக்கு வாழ்த்துகள்.

நாமறிந்த இந்திய திரைப்படமல்ல இது. உலக திரைபடங்களுக்கு இணையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முப்பரிமான கோணத்தில் பெண்ணை வீராங்கணையாக மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்  அபூர்வமான தொடக்கம்.

எவ்வளவு தான் ஆணுக்கு பெண் சமம் என்று சொன்னாலும் பெண் தலைமை பொறுப்புக்கு வருவது என்பது அன்றும் இன்றும் கடும் போராட்டமாகவே உள்ளது.

அக்கால வழக்கத்தின்படி, ஆண்கள் மட்டுமே ஆட்சி பீடத்தில் அமர முடியும்  என்பதால் ருத்ரமா தேவி பெண் என்பதை நாட்டு மக்களுக்கு மறைத்து இளவரசனாக அறிவிக்கப்பட்டு வாள் சண்டை, குதிரையேற்றம், யானைசவாரி என அனைத்து  கலைகளில் தேர்ச்சி பெறுகிறாள் ருத்ரமாதேவி. வளர் இளம் பெண்ணாக தன்னை அறியும் நேரேத்தில் தன் கவசங்களை துக்கி ஏறிகிறாள்.  ஆனால் தொடர்ந்து தனது தேசத்தை சூழ்ந்துள்ள ஆபத்தை அறிந்து நாட்டு மக்களின் நன்மை கருதி ஆணாகவே நடிக்க முடிவெடுக்கிறார்.

இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் பங்காளிகளின் வலியுறுத்தலால், இளவரசனாக வாழும் ருத்திரமா தேவிக்கு முறை பெண்ணுக்கும்  திருமணம் ஏற்பாடுகள் நடக்கும்போது தான் படம் பார்ப்பவர் மனதில் இது எப்படி சாத்தியம். ஒரு பெண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்யமுடியும்? என்று யோசிக்கும் நேரத்தில்  திருமணமும் நடந்துவிடுகிறது.

ஒரு கட்டத்தில் அப்பெண்ணுக்கு தான் திருமணம் செய்து கொண்டது ஒரு இளவரசியை என்ற உண்மை தெரியும் நேரத்திலும் எந்த விதமான கலக்கமுமின்றி நான் என் நாட்டிற்காக தான் இதை எல்லாம் செய்தேன். எனக்கு என் பெண்மையை விட நாடுதான் முக்கியம் என்று அப்பெண் ருத்ரமாதேவியைவிட உயர்ந்து நிற்கிறாள். இது இப்படத்தின் மற்றுமொரு அற்புதம்.

அதேபோல, ருத்ரம்மாவின் ராஜ்ஜீயம் சூழ்ச்சியாள் கைவிட்டுபோன சூழலிலும் அவள் பதராமல், உறுதியான பெண்ணாக எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாதவளாக வாழ்ந்ததை எடுத்து காட்டியிருப்பது சிறப்பு.

முன்னணி நடிகர்களாக இருந்தாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்து நடித்துள்ள பிரகாஷ்ராஜ்,   ராணா, அல்லு அர்ஜூனாவை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

இந்திய வரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இருந்துவரவில்லை. இங்கு வேலுநாச்சியர், ராணி லட்சுமி பாய், ராணி அவந்திபாய், அயோத்தியின் ராணி பேகம் ஹசரத் மஹல், கர்நாடகவை சேர்ந்த ராணி சென்னம்மா என பல பெண் ராணிகளும் மக்கள் ஆதரவோடு ஆட்சி புரிந்துள்ளனர். சமூகத்தில் எப்போதும் சரிபாதி மக்களாக இருந்து வரலாற்றை படைத்துள்ள பெண்களின் பதிவுகள் ஒப்பீட்டளவில் குறைவு.

ஆனால், சாமானியர்கள் வரலாற்றை சொல்லாமல் வெறும் மன்னர்களின் ஆட்சியை மட்டும் துதிப்பாடுவது, அதிலும் ஆண்களை மட்டுமே உயர்த்திச் சொல்வதென்பது ஒரு தலைபட்சமானதாகும். மறக்கப்பட்ட வரலாற்றை இந்திய திரை உலகிற்கு கொண்டு வந்த பட்டியலிள்  இயக்குநர் குணசேகரனும் இணைகிறார். வாழ்த்துக்கள் ருத்ரமாதேவி திரைப்பட குழுவினருக்கு.

Related Posts