அரசியல்

ராணுவ வீரர்களின் இரண்டாவது எதிரி !

தீமைகளில் இருந்து காப்பாற்றும் எவரும் வீரர்தான். ராணுவ வீரர்கள், எல்லை ஊடுருவல்களில் இருந்து காக்கும்போது வீரர்களாகின்றனர். எடுத்துக்கொண்ட பணியை சிறப்பாக செய்த வீரர்களும் உண்டு, வீரரைப் போல் காட்டிக் கொண்டு அநீதியிழைப்போரும் உள்ளனர்.
 
கள்ளப் பணத்தையும், திருட்டுப்பணத்தையும் ஒழிக்கிறேன் என்று காட்டிக்கொண்டு – நோட்டு பரிவர்த்தனைச் சந்தையை சிக்கலுக்கு உள்ளாக்கி ஏழை மக்கள், விவசாயச் சந்தைகளை அழித்த ஒருவர் – தன்னை வீரரைப் போல் காட்டிக் கொண்டார். அவரின் கட்சியும், அவருடைய சார்பான அனைவரும் ஏதோ மிகப்பெரிய மாற்றம் நடக்கவிருப்பதாக நம்மிடம் தெரிவித்தார்கள்.
 
செல்லா நோட்டு அறிவிப்பின் தவறான நோக்கங்களை எதிர்த்தோருக்கு எல்லையில் ராணுவ வீரர்கள் உதாரணமாக சொல்லப்பட்டனர். மீறி எதிர்ப்போர் ஊழல்வாதிகள் என்பது போல் சித்தரிக்கப்பட்டனர்.
 
எல்லை ராணுவ வீரர்களும், குடும்பத்தாரை ஏ.டிம்.எம் வரிசைக்கு அனுப்பத்தான் வேண்டி வந்தது.
 
இந்த சூழலில்தான் ஒரு ராணுவ வீரர் தங்கள் சோற்றிலே நடக்கும் ஊழல் பற்றி வாய் திறந்து கதறினார். வாட்சாப் வழியாக அப்பிரச்சனை வெளிவந்தது. நம்மில் பலருக்கும் அப்போதுதான் உண்மை உரைத்தது. ராணுவமாக இருந்தாலும், இந்த ஆட்சியின் கீழ், ஊழல் முறைகேடுகளுக்கு உட்பட்டுத்தானே செயல்பட வேண்டியுள்ளது.
 
இப்போது மற்றொரு மிகக் கொடுமையான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராய் மேத்யூ என்ற ஒரு ராணுவ வீரர் – ராணுவ அதிகாரிகள் எப்படி ராணுவ வீரர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள். ராணுவத்தில் நடக்கும் முறைகேடுகள் என்னென்ன என்பதை வெளிப்படுத்தினார்.
 
பத்திரிக்கைகள் செய்தியை வெளியிட்டதுடன், அவரின் அடையாளத்தையும் வெளியிட்டு, வாட்சாப்பில் பரவ – இப்போது அந்த ராணுவ வீரர் மர்ம மரணமடைந்துள்ளார். குடும்பத்தார் கதறியழுகின்றனர்.
 
இது பற்றிய பிடிஐ செய்தி:
 
// மேத்யூ ,உயரதிகாரி களால் ராணுவ வீரர்கள் எப்படி துன்புறுத்தப்படுகின்றனர் என தனது முகத்தை மறைத்தபடி தெரி வித்துள்ளார். அப்போது இந்த வீடியோ வெளியாகாது என அந்த பத்திரிகையாளர் கொடுத்த வாக் குறுதியை அடுத்து, துணிச்சலுடன் ராணுவ முகாம்களில் நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து அவர் விவரித்தார். அதில் உயரதிகாரி களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது முதல் பல் வேறு பணிகளை செய்ய வேண்டி யிருக்கிறது என குறிப்பிட்டார்.
 
ஆனால் அந்த வீடியோ பதிவு திடீரென சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதும் மேத்யூ மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். ராணுவம் சார்பிலும் இந்த ரகசிய பேட்டி குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், தியோலாலி கன்டோன்மென்டில், ஒதுக்குப்புற மாக இருந்த ஒரு அறையின் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ராய் மேத்யூவின் உடலை போலீஸார் நேற்று முன் தினம் கண்டெடுத்தனர். அவர் உயிரிழந்து 3 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
 
இந்த வீடியோ கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானது. அப்போது முதல் மேத்யூ மாயமாகி இருந்தார். மேலும் அவரது குடும்பத்தினரிட மும் கடைசியாக அன்று தான் பேசியுள்ளார். இந்த பேட்டி மூலம் தனது வேலை பறிபோக வாய்ப்பு இருப்பதாகவும், கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் அப்போது குடும்பத்தினரிடம் அவர் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
 
அதன்பின், குடும்பத்தினரையும் அவர் தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது ராணுவ அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பின், ராணுவத்திடம் மேத்யூவின் உடல் ஒப்படைக்கப்படும் //
 
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – பற்றி மறந்திருக்க மாட்டீர்கள். ராணுவ வீரர்களின் தியாகத்தை – தேர்தலுக்கு பயன்படுத்தும் தரமற்ற வேலையைச் செய்தது பாஜக. பிரதமர் அதற்கு தன் படம் பயன்படுத்தப்பட்டதை எதிர்க்கவில்லை.
 
ராணுவ வீரர்கள் அநீதிக்கு எதிராக பேசினால் மட்டும், தங்கள் போஸ்டர் பசையை கொஞ்சம் வாய்க்குள் போட்டு அமர்ந்துகொள்கிறார்கள்.
 
எல்லையில் ராணுவ வீரர்கள் – அண்டை நாட்டு எதிரிகளால் மட்டுமல்ல, உள்நாட்டு ஊழல், முறைகேட்டாளர்களாலும் தாக்கப்படுவதை அறிந்து – நாம் எப்படி அமைதிகாப்பது?

Related Posts