ரகுராம் ராஜன் – தொடரும் அபத்த விவாதங்கள் …

ரிஸர்வ் வங்கியின் இன்றைய கவர்னர் ரகுராம்ராஜன் அவர்கள் தன்னுடைய ஒப்பந்த காலம் முடிவதை ஒட்டி ஒப்பந்தத்தை இன்னொரு மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்க கோருவதில்லை என்ற முடிவை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது கடந்த ஓராண்டாக அவரைச்சுற்றி நடைபெற்று வந்த அபத்தமான விவாதங்கள் (இது என்னுடைய கருத்தே) உச்சகட்டத்தை எட்டியுள்ளன. நான் ஏன் இந்த விவாதங்களை அபத்தமானவை என்று கூறுகிறேன் என்பதை விளக்குவதே என்னுடைய இந்த கட்டுரையின் நோக்கம்.

சுதந்திர இந்தியாவில் வரலாற்றின் ஒருகட்டத்தில் (சேஷன் காலத்தில்) தலைமைத் தேர்தல் கமிஷனர் என்பவர் முக்கிய இடத்திற்கு வந்ததைப் போல ரிஸர்வ் வங்கியின் கவர்னரும் உலகமயமாக்கல் கட்டத்தில் முக்கிய இடத்திற்கு வந்துள்ளார்.

ரிஸர்வ் வங்கியானது நாட்டின் நிதியமைப்பு முறையின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய பணிகளை செய்யும் அமைப்பாகும். மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகள் மூலம் சரக்குகள் உற்பத்தியாகின்றன. சரக்குகளுக்கு மதிப்பு இருக்கிறது. சம மதிப்புகள் சந்தையில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. மதிப்புகள் விலைகளின் வாயிலாக வெளிப்படுத்தப்படுகிறது. விலைகளை வேண்டல்-வழங்கல் தீர்மானிக்கிறது எனினும் வேண்டல்-வழங்கல் எவ்வளவுதான் அலைவுற்றாலும் அதன் விளைவாக அலைவுறும் விலையானது அதன் மதிப்பை சுற்றியே அலைவுறும்.

இதெல்லாம் இயல்பான பொருளாதார நியதிகள். பண்டங்கள் பரிமாறப்படுவதற்கு பணமும், கடன்-செலாணி (Credit System) அமைப்பு முறையும் பரிமாற்ற ஊடகமாக பயன்பட்டு வருகிறது. இந்த பரிமாற்ற ஊடகங்களின் பராமரிப்பை செய்வது ரிஸர்வ் வங்கி.

மேலை நாடுகளின் பாதாள மெட்ரோ ரயில் நிலையங்களில் இயங்கும் மின்னேணிகளுக்கு அருகில் ஒரு பொறுப்பாளர் நின்று கொண்டிருப்பார். அவர் வெறும் பார்வையாளரே ஒன்றுமே செய்யமாட்டார் ஆனால் மின்னேணி பழுதானாலோ யாரேனும் தவறி விழுந்து விபத்துக்குள்ளானாலோ அவர் செயல்படுவார். மற்றபடி எல்லாமே தானியக்கமாக நடைபெறும். ரிஸர்வ் வங்கியின் பொறுப்பும் இதைப் போன்றதே. ஆகவேதான் ரிஸ்ர்வ் வங்கியின் கவர்னர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்தார்.

உலகமயமாக்கல் கட்டத்தில் ஊகவணிகம் பெருத்துப் போய் மின்னேணிகளில் நடக்கும் விபத்துக்கள் அதிகரித்தால் அதன் கண்காளிப்பாளர் தலையீடு அதிகரிப்பது போல், ரிஸர்வ் வங்கியின் கவர்னர் செயல்பாடும் அதிகரித்து மையத்துக்கு வந்துவிட்டார். அடிக்கடி பத்திரிக்கையாளர்களைக் கூட்டி வட்டிவீதத்தை கூட்டியோ குறைத்தே அறிவிப்பது போன்றவைகளை செய்து வருகிறார். பாய்மத்தின் ஓட்ட வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் கட்டுப்பாட்டு உத்தி மாறிவருவது போல (வெறும் PID Control வைத்து கட்டுப்படுத்த முடியாத நிலையில் Fuzzy Logic வந்ததைப் போல்) ஊகவணிகத்தால் பரிமாற்ற ஊடகத்தின் ஓட்டவேகம் அதிகமான நிலையில் Dumb Squib ஆக இருந்த ரிஸர்வ் வங்கி கவர்னர் Active Person ஆகிவிட்டார்.

இந்திய முதலாளிகளில் ஒரு பிரிவினர் அடிப்படையில் வங்கி வட்டி வீதத்தை குறைக்கக் கோரியும் இன்னொரு பிரிவினர் அது நீடிக்க கோரியும் அவர்களுக்குள்ளே நடைபெற்ற சர்ச்சையின் விளைவே இந்த விவாதங்களுக்கு அடிப்படை. இன்னொரு புறம் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டில் பணியாற்றி அங்கேயே சில காலம் வாழ்ந்த ராஜனுக்கு இயல்பாகவே ஒரு தராளவாத சிந்தனைப் போக்கு (Liberal Mindset) இருக்கும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் தராளவாத சிந்தனைப் போக்கிற்கு இடமில்லை. எனவே இப்படிப்பட்டவர் ஒரு தீவிரபழைமைவாத தன்மை கொண்ட அரசின் கீழ் பணிபுரிவது பிரச்சனையாகும். இன்னொருபுறம் தீவிரபழமைவாத அரசும் அதன் கருத்தியலாளர்களுக்கும் தாராளவாத சிந்தனைப்போக்கு உள்ளவர்களை சகித்துக் கொள்ள முடியாது. ஆகவேதான் முதலாளிகளின் இருபிரிவினருக்குள் நடைபெற்ற சர்ச்சையானது, தாராளவாத சிந்தனைப் போக்கிற்கும் தீவிரபழமைவாதப் போக்கிற்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சையாக அது வெளிப்பட்டது (Manifestation).

நான் Manifestationக்குள் செல்ல விரும்பவில்லை ஏனென்றால் இன்றைக்கு ஏற்படும் எல்லாப் பிணக்குகளும் இப்படிப்பட்ட வடிவத்தில்தான் அது முடியும். இந்த Manifestationக்கு அடிப்படை காரணமான முதலாளித்துவ சர்ச்சையையே நான் விவாதிக்க விரும்புகிறேன். இந்த சர்ச்சையே அபத்தம் என்பது எனது வாதம்.

வட்டிவீதம் குறைக்கக் கோரும் முதலாளிகளின் வாதம் என்னவென்றால் வட்டிவீதம் குறைந்தால் அது வளர்ச்சிக்கு உதவும் என்பதே. இதற்கு அவர்கள் கூறும் காரணம்: வங்கியில் முடங்கிக் கிடக்கும் பணம் வட்டிவீதம் குறைந்தால் வங்கியிலிருந்து வெளியேறி சந்தையில் பொருட்களை வாஙகும் சூழ்நிலையை ஏற்படுத்தும், இது உற்பத்திப் பொருட்களின் விற்பனையை துரிதப்படுத்தி மூலதனச் சுற்றோட்டத்தை வேகப்படுத்தும். மூலதனச் சுற்றோட்டம் வேகமானால் அது வளர்ச்சியடையும் வேகம் அதிகரிக்கும். இத்துடன் குறைக்கப்பட்ட வட்டிவீதத்தால் முதலீட்டுச் செலவு குறைந்து அதன் விளைவாக உற்பத்திச் செலவும் குறைந்து அது பொருட்கள் விலை குறைப்பை நோக்கிச் சென்று அதிகவிற்பனையில் முடியும் என்பதும் மற்றொரு வாதம்.

எளியமக்கள் குறைந்த வட்டிகாலத்தில் சேமிப்பைவிட செலவிற்கு முன்னுரிமை கொடுப்பதால் விற்பனை அதிகரிக்கும் என்பதும் அவர்கள் வாதம். இந்த வாதம் அபத்தமானது என்பதே எனது கருத்து. அதிகபட்சமாகப் போனால் வட்டிவீதத்தை 0.25 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் குறைக்கலாம். அல்லது அதிரடியாக 1 சதவீதம் கூட குறைக்கலாம். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் வட்டிவீதம் கிட்டத்த சுழியன் சதவீதத்தில் பல ஆண்டுகளாக இருக்கிறது ஜப்பானில் அது எதிர்மறை வீதத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருக்கிறது. அங்கெல்லாம் உயர்ந்த வளர்ச்சி இல்லை பொருளாதாரம் தேக்க நிலையிலேயே நீடிக்கிறது வேலையின்மை பத்து சதவீதத்தை தாண்டிவிட்டது. ஆக வட்டிவீதத்தை குறைத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற கோட்பாடு பொய்ப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில் இங்கே அந்த கோட்பாட்டை வலியுறுத்திப் பேசுவது அபத்தமே.

ஆயினும் வட்டிவீதத்திற்கும் பொருளாதாரத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறமாட்டேன். முதலாளிகளின் ஒருபிரிவினர் கூறும் அர்த்தத்தில்தான் சம்பந்தம் இல்லை என்கிறேன். பணவடிவில் இருக்கும் மூலதனமானது ஓரிடத்தில் தங்கி உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டால் அது வேலைவாய்ப்பை பெருக்கி செல்வ உற்பத்திக்கு வழிகோலும். எனினும் லாபமில்லாமல் அது உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடாது. சராசரி குறைந்தபட்ச லாபம் தரக்கூடிய அளவிற்கு உள்ள மூலதனம் இயங்கிவரும் சூழ்நிலையில் மேலும் மூலதனம் களமிறங்கினால் சந்தை விரிவடையாமல் இருக்கும் சூழ்நிலையில் இருக்கும் மூலதனத்திற்கு லாபம் குறையும். இந்த ஆபத்தை உணரும் மூலதனமானது உற்பத்தி நடவடிக்கைக்கு பதிலாக ஊகவணிக நடவடிக்கைக்கே முன்னுரிமை கொடுக்கும். ஊகவணிக நடவடிக்கையில் முக்கியமானது அதிவேகமாக சுழன்றடித்து பயணிப்பது. இதற்கு தடையாக இருப்பது வட்டிவீதம்.

அதிக வட்டிவீதம் இருந்தால் வங்கியில் முடங்கும். வட்டிவீதம் குறைந்தால் அதிக வருவாய் ஈட்டும் நோக்கத்தில் ஊகவணிக நடவடிக்கைக்கு வரும். இன்றைக்கு கூட வெறும் 8 சதவீத வட்டிக்கு நாம் ஏன் நம்முடைய பிஎஃப் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் அதை பங்குச் சந்தையில் போட்டால் அதைவிட அதிகமாக கிடைக்கும் என்ற வாதம் எடுபடுவதற்கு இதுதான் காரணம். எனவே வட்டிவீதத்தை குறைக்க வேண்டும் என்று கூறும் முதலாளிகளின் ஒருபிரிவினர் ஊகவணிக முதலாளிகளே. இவர்கள் இன்றைக்கு பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக திகழ்கிறார்கள்.

முதலாளிகளின் இன்னொரு பிரிவினர் வட்டிவீதத்தை குறைக்க்க் கூடாது என்கின்றனர். இதற்கு இவர்கள் கூறும் காரணம் வட்டிவீதம் குறைந்தால் பணவீக்கம் அதிகரிக்கும். குறைந்த வட்டி என்ற பொருளாதாரச் சூழலில் வேண்டல் அதிகரிப்பையே உருவாக்கும். அதிகரித்த வேண்டலானது மதிப்பைவிட அதிகரித்த விலை என்ற நிலை ஏற்பட்டு பணவீக்கம் ஏற்படும். பணவீக்கம் ஏற்பட்டால் அது பணத்தின் மதிப்பை குறைக்கும். பணத்தின் மதிப்பு குறைந்தால் மூலதனத்தின் மதிப்பு குறையும். ஆபத்துகளை சந்தித்து லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செய்யப்படும் முதலீடுகள் பணத்தின் மதிப்புத் தேய்வால் மதிப்பை இழக்கின்றன எனவே பணவீக்கம் இல்லாத பொருளாதாரமே ஸ்திரமான முன்னேற்றத்திற்கு அடிப்படை என்பதே இவர்கள் வாதம்..

இன்றைக்கு இந்தியாவில் தென்படும் பணவீக்கம் என்பது மக்கள் பணத்துடன் வந்து பொருட்களுக்காக அலைமோதுவதால் ஏற்பட்டதல்ல. உலகமயமாக்கல் கட்டத்தில் அதிகரித்த கடும் பொருளாதாரச் சுரண்டலால் இந்திய மக்களில் ஆகப் பெரும்பாலோனோரின் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதனால் விலைவாசி உயர்வாகத் தெரிகிறது. இந்த விலைவாசி உயர்வை வைத்து பணவீக்கம் அதிகரித்திருக்கிறது என்கின்றனர். இங்கேயும் காரணமும் விளைவும் மாற்றிப் போடப்படுகிறது. பணப்புழக்கம் அதிகரித்தால் ஏற்பட்ட பணவீக்கமல்ல இது. வாங்கும் சக்தி குறைந்ததால் ஏற்பட்ட பணவீக்கமே இது. 100 சதவீத வேலை வாய்ப்பும் அதன் விளைவாக ஏற்படும் அதிகரித்த வாங்கும் சக்தியும், அது தூண்டிவிடும் வேண்டல் அதிகரிப்பும் அதன் விளைவாக ஏற்படும் பணப்புழக்கமும் பணவீக்கத்திற்கான காரணங்களில் ஒன்று. இம்மாதிரியான பணவீக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இருபது ஆண்டுகளில் ஏற்பட்டது. ஆனால் இதை மட்டுமே பேசிப் பேசி பணவீக்கம் என்றால் பணப்புழக்கம் அதிகரித்து எல்லார் கையிலும் பணமிருப்பதாக ஒரு மாயை உண்டாக்கப்பட்டுவிட்டது. இந்த மாயையான கோட்பாட்டை இன்றைய இந்தியாவிற்கு முதலாளிகளின் இன்னொரு பிரிவினர் பொருத்துவதால் இதை அபத்தம் என்கிறேன்.

இந்த இரு நிலைப்பாட்டில் ராஜன் எடுத்த நிலைபாடு என்பது வட்டிவீதத்தை குறைப்பதில்லை என்பது. இதற்கு இரண்டுமே காரணமல்ல. ராஜன் பொறுப்பேற்றுக் கொள்ளும் பொழுது இந்திய நாணயத்தின் மதிப்பானது உலகளவில் வீழ்ச்சியடைந்திருந்தது. மீண்டும் உலக நாணயச் சந்தையின் அடிப்படை விதிகளை நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது.

உலகநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் என்பது அடிப்படையில் பண்டங்களை பரிமாறிக் கொள்வதே. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் பரிமாற்றம் என்றால் சம மதிப்புகளின் பரிமாற்றம் என்பதே. மனிதர்களின் நடவடிக்கையால் உற்பத்தியாவதே பண்டங்கள் எனவே பண்டங்களின் மதிப்பு என்பது மனிதர்களின் நடவடிக்கைக்கு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறது. மனிதர்களின் நடவடிக்கை என்பது தன்னை மறுஉற்பத்தி செய்து கொள்ள இயற்கையில் கிடைப்பவற்றின் மீது அவன் புரியும் வினையாற்றலைத் தவிர வேறு எதுவுமில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனின் உழைப்பே பண்டங்களைப் படைக்கிறது அதன் மதிப்பு என்பது அதில் அடங்கிருக்கும் உழைப்பே. இந்த உழைப்பானது அவன்து மறுவுற்பத்திக்காக (வாழ்வதும் மறையும் பொழுது அவனிடத்தில் இன்னொருவனை உருவாக்கி கொணர்வதுமே மறுவுற்பத்தி என்கிறேன்) செலவிடும் சமூக வழியில் அவசியமான சராசரி உழைப்பேயாகும். சமூகவழியில் அவசியமான சராசரி உழைப்பு என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் பண்டங்களின் மதிப்பும் வேறுபடும். இரண்டு மனிதநாட்கள் உழைப்பு கொண்டு ஒரு நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு பண்டம் இன்னொரு நாட்டில் ஒரு மனிதநாளில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

எனவே நாடுகளுக்கிடையேயான பண்டப் பரிமாற்றங்கள் என்பது அந்தந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களுக்குள் அடங்கியிருக்கும் சமூகவழியில் அவசியமான சராசரி உழைப்பை சார்ந்திருக்கிறது. இதையொட்டியே நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் தீர்மானிக்கப்படுகிறது. நடைமுறையில் இந்த தீர்மானமான புள்ளியைச் சுற்றியே சர்வதேச நாணய மதிப்பு அலைவுறும். இந்த அலைவை தீர்மாணிப்பது ஏற்றுமதி-இறக்குமதியே. உலகமயமாக்கல் கட்டத்தில் இது ஊகவணிகத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி அலைவுறும் வேகம் அதிகரித்துவிட்டது. இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதியின் மதிப்பைக் காட்டிலும் 1000 மடங்கு அன்னியச் செலவாணியின் பரிமாற்றம் நடைபெறுவது இந்த ஊகவணிக நடவடிக்கையின் ஆழத்தை காட்டுகிறது. கொஞ்சம் Complex ஆன விஷயம்தான். அடிக்கூறு கெடாமல் முடிந்தளவு எளிமைப்படுத்தியிருக்கிறேன்.

2013ம் ஆண்டு ராஜன் பொறுப்பேற்றுக் கொண்ட ஆண்டில் ஊகவணிக ஆதிக்கத்தில் இருக்கும் அன்னியச் செலவாணிச் சந்தையில் அன்னிய ஊகவணிகர்கள் பெருமளவில் இந்தியாவிலிருந்து நிதியை திரும்ப்ப் பெற்றுக் கொண்டிருந்தனர். இது அவர்களின் இயல்பான நடவடிக்கைதான். இதன் விளைவாக இந்திய நாணயமதிப்பு வீழ்ச்சியடைந்து வந்த்து. இதை நிலைநிறுத்துவதற்காகவே இந்திய முதலாளிகளால் தேடிப்பிடித்து கொணரப்பட்டவர் ராஜன். சராசரி சர்வதேச வட்டிவீத்த்தை விட இந்திய வட்டிவீத்த்தை சற்று அதிகமாக பராமரித்தால் அல்லது இருந்து வந்த வட்டிவீதத்தை சற்று உயர்த்தினால் விலகிக் கொண்டிருக்கிற அன்னிய நாணயம் சற்று தங்கும் என்ற நிலைபாடு எடுத்து செயல்படுகையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி சற்று ஆசுவாசுபடுத்திக் கொள்ள அவருக்கு வகை செய்தது. வட்டி வீத்த்தால் வெளியேறும் வேகம் சற்று மட்டுப் பட்டபொழுது கச்சா எண்ணெயின் விலை இறக்கத்தால் ஏற்றுமதி-இறக்குமதி இடைவெளி குறைந்து அன்னிய செலவாணி வேண்டலுக்கான அழுத்தம் குறைந்து போனது. காற்றடைத்த பலூனின் வாயை கையால் பிடித்துக் கொண்டு அதற்குள் இருக்கும் காற்றை காப்பது போல் வட்டிவீதத்தில் சர்வதேச நாணயமதிப்பை காப்பாற்றி வருகிறார். ஆம் பாதாள ரயில் மின்னேணியின் பொறுப்பாளர் செயல்படுவதைப் போல் அவர் பணியை செய்து வருகிறார். இதன் நடுவில் முதலாளிகளின் இருபிரிவினருக்கும் இடையில் சர்ச்சை.

இந்த சர்ச்சையான எப்படி Resolve செய்யப்படும்? இது மாதிரி விஷயங்களில் யார் கை ஓங்கியிருக்கிறதோ அவர் சொல்வதே நடக்கும். ஊகவணிகப்பிரிவினரின் கை ஓங்கியிருப்பதாகத் தெரிகிறது ஆகவேதான் தீவிரபழமைவாதத்தைக் கண்டு பயந்து ஓடும் ராஜனை தடுத்து நிறுத்தாமல் விட்டுவிட்டது. இன்றைய ஊகவணிக பொருளாதாரச்சூழலில் இது அன்னியச் செலவாணி பின்வாங்கலை மேலும் துரிதப்படுத்தும். இதை தடுக்கும் நடவடிக்கையாக நேரடி அன்னிய மூலதனத்திற்கு இன்னும் அதிக சலுகை கொடுத்து இருத்திவைப்பதற்கான அறிவிப்புகள் ராஜனின் முடிவை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக தராளவாத சிந்தனைப் போக்கிற்கும் தீவிரபழமைவாதப் போக்கிற்கும் இடையில் சமூகதளத்தில் நடைபெறும் இந்த மோதலானது ஆட்சியதிகாரத்தில் இருக்கும் தீவிரபழமைவாத்த்தை அன்னிய மூலதனத்திற்கு சலுகை கொடுத்து இருத்தி வைக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இது சலுகை கோரி இந்தியப் பொருளாதாரத்தின் கையை முறுக்கிக் கொண்டிருந்த (Economic Arm Twisting) அன்னிய மூலதனத்திற்கு சாதகமாக அமைந்துவிட்டது. அதாவது இந்திய மக்களின் சுயாதிபத்தியத்தின் பிடிமானம் அரிக்கப்பட்டுவிட்டது.

விஜயன்