நிகழ்வுகள் பிற

யார் பெற்ற மகனோ …..

கரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய முதல் நபரை தேடி

த வி வெங்கடேஸ்வரன் , முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், புது டெல்லி

கொசுவினால் மலேரியா பரவுவது போல எதோ விலங்கின் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது என கருதினர். பின்னர் தான் நேருக்கு நேர் சந்திப்பின் வழியே தான் இந்த தொற்று வைரஸ் பரவுகிறது என நோயாளிகளை குறித்த நோய் பரவல் ஆய்வு (epidemiology) தெளிவுபடுத்தியுள்ளது. மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுகிறது என அறிந்த பிறகு யார் யாருக்கு எவரிடமிருந்து பரவியது என தொற்று நோயின் மூலத்தை தேடி ஆய்வு நடத்தினர். முதன் முதலில் இந்த தொற்று எங்கே ஏற்பட்டது, யாருக்கு ஏற்பட்டது என ஆய்வுகள் நடந்து வருகின்றன.

மர்மக் காய்ச்சல்

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் கடந்த டிசம்பர் 15 மூன்று நோயாளிகள் மர்மமான சுவாசக் கோளாறு நோயுடன் ஜின்யின்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் நிமோனியாவை ஒத்த சுவாசக் கோளாறு போல் தென்பட்டது. நோயாளிகளிடம் இருமல், மூச்சு முட்டுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. டிசம்பர் எட்டு முதல் பதினெட்டு வரை மொத்தம் ஏழு நோயாளிகள் மர்ம சுவாச கோளாறுடன் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவருக்கும் நிமோனியாவுக்கான சிகிச்சை போதுமானதாக இருக்கவில்லை. சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர்களுக்கு சந்தேகம் தோன்றியது. ஏன் ஒரே சமயத்தில் பலர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டிய அளவு நிமோனியாவை ஒத்த சுவாசக் கோளாறுடன் மர்ம காய்ச்சலோடு நோய் படுகிறார்கள். மருத்துவர்கள் திகைத்தனர். எதோ ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டது என டிசம்பர் 12 முதல் அறிவிப்பு வெளியிட்டனர்.

டிசம்பர் 20, 21, 22 மற்றும் 23 தேதிகளில் முறையே 5, 4, 3, 8 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்து சேர்ந்தனர். ஜனவரி ஒன்று வரை மொத்தம் 59 நோயாளிகளுக்கு மர்ம காய்ச்சல்.

தொண்டைக் குழி, மூக்கு மற்றும் நுரையீரலில் குவிந்துள்ள திரவத்தை எடுத்து பரிசோதனை செய்து பார்த்தனர். ஏற்கனவே தெரிந்த எந்த வித நோய் கிருமியும் இல்லை. சில ஆண்டுகள் முன்னர் இதுபோல தான் சார்ஸ் என்ற சுவாச கோளாறு நோய் அதுவரை அறியப்படாத சார்ஸ் வகை கரோனா வைரஸால் ஏற்பட்டு தொற்று நோய் உருவாகியது. புதிய தொற்றுநோய் தோன்றி இருக்கலாம் என்ற கருத்து டிசம்பர் 21 மெல்லமெல்ல வலுப்பெறத் துவங்கியது. சர்வதேச சுகாதார அமைப்பு (WHO)வுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி சீன அரசு அதிகார பூர்வமாக இனம் காணப்படாத புதிய தொற்று ஏற்பட்டுள்ளது என்ற அறிவிப்பை அளித்தது. அதுவரை இந்த நோயால் எந்த மரணமும் நிகழவில்லை. ஜனவரி 9, 2020 இந்த நோயால் ஏற்பட்ட முதல் மரணம் நிகழ்ந்தது.

தொற்றுப் பரவல்

வூஹானிலும் மர்ம தொற்றுநோய் பரவுகிறது எனக் கண்ட மருத்துவர்கள் நோய் பரவல் ஆய்வுகளை மேற்கொண்டார்கள். தொற்றுநோய் பரவி தான் நோய் ஏற்பட்டது என்றால் நோயாளிகள் இடையே எதாவது தொடர்பு இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தில் காலரா பரவுகிறது என்றால், நோயாளிகள் எங்கிருந்து குடிநீரை பெறுகின்றார்கள் என்ற தகவலை திட்டுவார்கள். அந்த குடிநீர் ஆதாரங்களிலிருந்து நீரை எடுத்து பரிசோதிப்பார்கள். எந்த நீர் ஆதாரத்தில் காலரா கிருமி இருக்கிறது என கண்டுபிடித்து அந்த நீரை எடுப்பதை தடை செய்வதன் மூலம் நோய் பரவலை தடுக்கலாம்.

நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட அணைத்து நோயாளிகளும் நோய்வாய் படும் முன்னர் எங்கெல்லாம் சென்றார்கள் என தகவலை திரட்டினர். நோயாளிகளில் பலர் வூஹான் நகரின் இறைச்சி சந்தையில் ஒரே நாளில் சென்றது தெரியவந்தது. என்ன தொற்று, என்ன கிருமி, எப்படி பரவுகிறது என்பது குறித்து எதுவும் தெரியாத நிலையில் ஜனவரி ஒன்று அன்று அரசு அந்த கடல் உணவு இறைச்சி சந்தையை மூடிவிட்டது.

மரபணு ஆய்வு

ஐம்பத்தி ஒன்பது நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட பதக்கூறுகளை மரபணு ஆய்வு செய்து பார்த்தபோது புத்தம் புதிய கரோனா வைரஸ் தான் இந்த நோய்க்கு காரணம் என தெரியவந்தது. உள்ளபடியே இந்த ஐம்பத்தி ஒன்பது நோயாளிகளில் நாற்பத்தி ஒன்று பேர் தான் இந்த புதிய நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் ஏற்கனவே அறிந்த சுவாசக் கோளாறு நோய் கொண்டவர்கள் எனவும் தெரிய வந்தது. புத்தம் புதிய என்ற பொருள்படும் நாவல் கரோனா வைரஸ் என்று இந்த கிருமிக்கு பெயர் சூட்டினார்கள்.

ஜனவரி ஏழு அன்று வெளியான இந்த வைரஸின் மரபணு தொடரை ஆராய்ந்தபோது வௌவால்களிடம் இருந்த ஒரு ரக கரோனா வைரஸ் தான் மனிதனிடம் தாவி தகவமைத்துக் கொண்டு நோயை ஏற்படுத்தும் ரகமாக பரிணமித்துள்ளது என தெரியவந்தது.

புரளிகள்

முதன்முதலில் கிருமி பரவிய இடம் கடல் உணவு இறைச்சி சந்தையாக இருக்கலாம் மற்றும் வௌவால்களிடமிருந்து இந்த வைரஸ் மனிதனுக்கு தாவி இருக்கலாம் என்ற இரண்டு யூகத்தையும் பிணைத்து ஊடகங்கள் பரபரப்பு ஏற்படுத்தினர். சீனப் பெண் ஒருவர் சமைத்த வௌவால் இறைச்சியை கையில் வைத்துக்கொண்டு இது கோழிக்கறியைவிட சுவையாக உள்ளது என கூறும் வீடியோ உலகம் முழுவதும் பரவியது. சீனர்களின் விசித்திரமான உணவுப் பழக்கம் தான் இந்த புதிய நோய் தோன்ற காரணம் என்ற புரளி உருவாகி சமூக வலைத்தளத்தில் பரவ துவங்கியது.

உள்ளபடியே மேற்கு பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பலோவ் தீவுக்கு சென்ற ஒரு பிரபல ஊடக தொகுப்பாளர் தனது பயண நிகழ்ச்சியை தொகுத்து 2016ம் ஆண்டு வெளியிட்ட வீடியோ தான் அது.வூஹானிலோ சீனாவிலோ பதிவு செய்யப்படவில்லை. சமைக்கப்பட்ட உணவில் வைரஸ் இருக்காது. இந்த நோய்க்கும் வௌவால்களை உணவாக உட்கொள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மை காலில் செருப்பு போடுவதற்கு முன்பு பொய் உலகை ஒருமுறை சுற்றி வந்துவிடும் தானே.

பழி ஓரிடம் பாவம் ஓரிடம்

மர்ம காய்ச்சலோடு தீவிர சுவாச சிக்கலுக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட முதன் முதல் நோயாளிக்கு நோய் அறிகுறி டிசம்பர் 8 அன்று தான் துவங்கியது என இதுவரை கருதி வந்தனர். தற்போது அந்த பகுதியில் எல்லா மருத்துவமனை தரவுகளையும் பரிசோதித்த பின்னர் நாவல் கரோனா வைரஸ் நோய் தாக்கிய முதல் அறிகுறி டிசம்பர் 1 அன்றே ஒரு நோயாளியிடம் வெளிப்பட்டு விட்டது என்று தெரியவந்துள்ளது. அவர் ஐம்பது ஐந்து வயது முதியவர். அல்சைமர் நோயால் அவதிப்படுபவர். மருத்துவ நெறிமுறைகளுக்கு இணங்க அவர் பெயர் வெளியிடப்படவில்லை. அவருக்கும் கடல் உணவு இறைச்சி சந்தைக்கும் தொடர்பே இல்லை. எனவே இறைச்சி சந்தையில் தான் விலங்கிடமிருந்து மனிதனுக்கு இந்த வைரஸ் முதன் முதலில் பரவியது என்ற கருத்து அடிபட்டு போனது.

மூலவர்

உலகம் முழுவதும் பிரளயம் போல பரவி கதிகலங்கும் இந்த தொற்றுநோய் ஒரே ஒரு நபர் மூலம் ஏற்பட்டு இருக்குமா என்ற வியப்பு நமக்கு ஏற்படலாம்.

டைபாய்டு மேரி என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட மேரி மலான் 1883-ல் அயர்லாந்திலிருந்து தனது பதினைந்தாம் வயதில் அமெரிக்காவுக்கு குடிபுகுந்தார். செல்வந்த குடும்பங்களில் சமையல் வேலை செய்து வந்தார். அவர் வேலை செய்த ஏழு குடும்பங்களிலும் டைபாய்டு நோய் ஏற்பட்டு மொத்தம் ஐம்பது பேர் மரணம் அடைந்தனர். பின்னர் தான் மேரி மலான் மூலமே இந்த கிருமி பரவி அந்த குடும்பங்களில் மரணம் ஏற்பட்டது என தெரிய வந்தது. அவருக்கு கிருமி தொற்று இருந்தாலும் அவருக்கு டைபாய்டு நோய் ஏற்படவில்லை,

அதே போலத்தான் மேற்கு ஆபிரிக்காவில் 28,616 பேரை தாக்கி 11,310 உயிர்களை குடித்த 2014ஆம் ஆண்டு எபோலா வைரஸ் தொற்றுநோய் பரவல் கினி குடியரசில் ஒரு இரண்டு வயது குழந்தையிடமிருந்து துவங்கியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுவரை மிக அரிதாக இருந்த எபோலா வைரஸ் மரபணு தொடரில் ஏற்பட்ட ஒற்றை மரபணுப் பிறழ்ச்சி காரணமாக நான்கு மடங்கு தீவிரமாக தாக்கும் அதி பயங்கர கொள்ளை நோயாக மாறியது.

தொற்றுப் பரவல் பகுப்பாய்வில் யார் அந்த முதன்முதல் நோய் கடத்தி என்று தேடுவது பழி அந்த நபர் மீது போடுவதற்காக இல்லை. எப்போது எப்படி இந்த புதிய வைரஸ் ரகம் மனிதன் மீது தாவியது என்பதை கண்டுபிடிக்க உதவும். மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்திய மூல நபரை கண்டுபிடிப்பதும் அவ்வளவு எளிதல்ல. அவருக்கு நோய் அறிகுறியே இல்லாமல் டைபாய்டு மேரி மற்றவர்களுக்கு பரப்பி இருக்கலாம்.

யார் பொறுப்பு

எந்த ஒரு ஆண்ட்டிபயாடிக் மருந்துக்கும் கட்டுப்படாத “சூப்பர்-பக்’ எனப்படும் என்டிஎம்-1 (நியு டெல்லி மெட்டல்லோ பீட்டா லேக்டமஸ்) பாக்டீரியா டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இனம் காணப்பட்டது. NDM-1 ஊடுருவிய கிருமிகள் எந்த மருந்துக்கும் கட்டுப்படாது என்பதால் எதிர்காலத்தில் பாக்டீரியா நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போகும் என அச்சம் எழுந்தது. 2010 இல் இனம் காணப்பட்ட இந்த அச்சுறுத்தும் சூப்பர் பக் இன்று ஆர்டிக் வரை பரவியுள்ளது.

வகைதொகை இல்லாமல் ஆண்ட்டிபயாடிக் மருந்து பயன்படுத்துவதன் தொடர்ச்சியாக பரிணமித்துள்ள ஒரு ரகம் தான் இந்த என்டிஎம்-1. அந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் ஏன் பொதுவே இந்தியாவில் வரைமுறையின்றி ஆண்ட்டிபயாடிக் மருந்து பயன்படுத்தப்படுகிறது என்பது மெய்யாக இருந்தாலும் இந்த ஆபத்தான சூப்பர்-பக் உருவாகியது இந்தியாவோ அல்லது அந்த மருத்துவமனையோ அல்ல.

உலகெங்கும் பொதுவே அளவுக்கு அதிகமாக ஆண்ட்டிபயாடிக் மருந்து பயன்படுத்தப்படுகிறது. அந்த நிலையில் பாக்டீரியாகளுக்கு பரிணாம அழுத்தம் ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக பாக்டீரியாவின் மரபணுவில் பற்பல மரபணுப் பிழற்சி ஏற்படும். பல மாற்றங்கள் பாக்டீரியாவுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் இன்றி அமைந்து போகும். சில பாக்டீரியா பாதகமாக அமையும். பதாக மாற்றங்கள் அடுத்த சில தலைமுறையில் அழிந்து போய்விடும். பாக்டீரியாவுக்கு சாதகமான மாற்றங்கள் தலைமுறை தலைமுறையாக தொடரும்.

பற்பல சாதகபாதகமற்ற மாற்றங்கள் உலகின் பல பகுதிகளில் நடந்து இருக்கும். தற்செயலாக NDM-1 எனும் சாதக மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டது. அவ்வளவே. இதற்க்கு இந்தியாவோ அந்த மருத்துவ மனையோ பொறுப்பு அல்ல

அதுபோலத்தான் வௌவாலில் வாசம் செய்யும் கரோனா வைரஸ் வகை தான் மனிதரிடம் தாவி நாவல் கரோனா வைரஸாக பரிணமித்துள்ளது. இங்கும் இந்த பரிணாம மாற்றம் மட்டுமல்ல பற்பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். அந்த மாற்றங்கள் மனிதனில் வாழக்கூடிய தகவமைப்பை தந்து இருக்காது. எனவே அங்கு தொற்று ஏற்படவில்லை. தற்செயலாக சீனாவில் அந்த பகுதியில் அந்த முதன்முதல் நோய்க் கடத்தியிடம் மனிதனை நோய் கொள்ள செய்யும் ரகம் தற்செயலாக ஏற்பட்டது அவ்வளவே. இதற்க்கு அவரோ சீனாவோ பொறுப்பாக முடியாது.

இகழ்ச்சி

போகிற போக்கில் பாம்பு பல்லியை உணவாக கொள்ளும் சீனர்களால் தான் இந்த கரோனா வைரஸ் உருவாகியது என எள்ளல் செய்வதால் இந்த நோய்குறித்து அருவெறுப்பை ஏற்படுத்துகிறோம்.

கரோனா பாதிக்கப்பட நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை விமானத்தில் சென்று மீட்டு வந்த விமான பணியாளர்களை குடியிருப்போர் நல சங்கங்கள் தொல்லை தருவதாக கவலை தெரிவித்து ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. நோய் குறித்த அச்சம் மற்றும் அருவெறுப்பின் தொடர்ச்சியாக மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்களை வீட்டை காலி செய்து போகுமாறு சில வீட்டு உடமையாளர்கள் நிர்பந்தம் செய்கிறார்கள். தங்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக வெளியே சொன்னால் சமூகம் தங்களை ஒதுக்கி வைத்துவிடும் என அச்சப்பட்டு ஓடி ஒளிந்து கொண்டவர்கள் குறித்து தகவல் வந்த வண்ணம் உள்ளன. இதனால் மேலும் கூடுதலாக கரோனா வைரஸ் பரவுதல் ஏற்படுகிறது.

வடகிழக்கு பகுதியை சார்ந்த இளைஞர்கள் குறிப்பாக யுவதிகள் டெல்லியில் “கரோனா” என்று கேலி செய்து தொந்திரவு செய்வதாக புகார்கள் தெரிவிக்கின்றனர். இதற்க்கு முன்பு வரை ‘சிங்கி’ என கேலி செய்யப்பட்டு வந்தனர். முதல் நோய்கடத்தி சீனாவை சார்ந்தவர் என்பதால் இது எதோ சீனாவின் குற்றம் எனவும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பபடுகிறது.

தொற்றுநோய்கள் எவருக்கும் வரலாம், உலகில் எங்கு வேண்டுமென்றாலும் தோன்றலாம். நோய் தொற்றியவர்களை மனிதாபிமானத்துடன் தான் அணுகவேண்டும். இகழ்ச்சி கூடாது.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

Related Posts