அரசியல் சமூகம்

யார் இந்த 99 சதவீதம்?

1 – ஒன்று
10 – பத்து
100 – நூறு
1000 – ஆயிரம்
10,000 – பத்தாயிரம்
100, 000 – 1 லட்சம்
10,00,000 – 10 லட்சம்
100,00,000 – 1 கோடி
700,00,000 – 7 கோடி
1,00,00,00,000 – 100 கோடி (1 பில்லியன்)
7,00,00,00,000 – 700
கோடி (7 பில்லியன்)

இந்த உலகத்தின் மொத்த மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டியுள்ளது (அதாவது 7 பில்லியனைத் தாண்டியுள்ளது) என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது என்னவெனில், இந்த 700 கோடி பேர் வசிக்கும் பூமியில் உள்ள சொத்துக்களில் 48% சதவீதம் வெறும் 1% சதவீதம் மக்கள் கையில் உள்ளது.

700 கோடியில் 1% என்பது 7 கோடி மட்டுமே. இவர்கள் யார் என்றால் வருடாவருடம் வெளிவருமே, உலகின் 100 பெரிய பணக்காரகள் பட்டியல் நினைவிருக்கிறதா? அதில் கூட Bill Gates, Warren Buffet போன்ற பெயர்களைப் பார்த்திருக்கிறோமே. நினைவிருக்கிறதா?

இந்த 7 கோடியில் 100 பெயர்கள் தான் வெளியிட்டார்கள், மீதமுள்ள 6,99,99,900 பெயர்கள் நமக்குத் தெரியாது அவ்வுளவு தான்.

இதோ உலகப் பணக்காரர்களின் பட்டியல்
http://www.forbes.com/billionaires/list
இவர்கள் அனைவரும் பெரு நிறுவனங்களின் முதலாளிகள்.

இதோ முதல் 100 இந்தியப் பணக்காரர்களின் பட்டியல்
http://www.forbes.com/india-billionaires/

சரி இப்போது மீதமுள்ள 693 கோடி (6,93,00,00,000) பெயர்களைப் பார்ப்போமா? அதாவது 700 கோடி மக்கள் தொகையில் 1% பணக்காரர்கள் போக, மீதமுள்ள 99% மக்களின் நிலை.

எங்கே போய்ப் பார்ப்பது? ஒன்றும் சிரமப்படத் தேவையில்லை, வழக்கம்போல் வீட்டை விட்டு வெளியே நண்பர்களோடு சென்று வாருங்கள். நாம் பார்க்கும் ஒவ்வோர் மனித முகமும் 693 கோடியில் ஒன்றாக இருக்கும். ஏன் நீங்களும், நானும் அதில் ஒருவர் தான்.

இந்தியா, மற்றும் சீனாவை சேர்த்தாலே போதும் 693 கோடியில் 60% சதவீததைப் பார்த்துவிடலாம்.

பொதுவாக ஒரு கருத்தை சொல்வாங்க, என்னன்னா, “ கடுமையா உழைக்கணும், அப்படி உழைச்சா பெரியாளா ஆயிடலாம்“. கடுமையா உழைக்கணுங்குறதுல எனக்கு சந்தேகமில்ல, ஆனா இப்போ பெரியாளா ஆகியிருக்குற பட்டியல பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு.

பணக்காரப் பட்டியலில் இருக்கும் இவர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவன முதலாளிகள். ஒரு நிறுவனத்த தொடங்கும் போதே இவர்கள் தங்களை தாங்களே முதலாளிகள்னு சொல்லிகிட்டுதான் ஆரம்பிக்குறாங்க. நிறுவனத்துல இருக்குற மத்தவங்கயெல்லாம் தொழிலாளிகள் அல்லது உழைப்பாளிகள் அல்லது பாட்டாளிகள்.

அவங்க பெயர்லியே உழைப்பாளிகள்னு இருக்கும்பொழுது,

  • உழைப்பாளிகள் ஏன் இன்னும் உயராம இருக்காங்க?
  • ஒரு நாளைக்கு உழைப்பாளிகள் உழைக்குற நேரத்த விடவா முதலாளிகள் கூடுதலா வேலை செய்யுறாங்க?
  • இருக்குற இடத்துல ஒக்காந்து உழைப்பாளிகளை வேலை வாங்குறதும், வியாபாரம் பேசுறதும் உழைப்புல சேருமா?
  • இல்ல இவங்க உழைப்புக்கு ஈடாகுமா?

நாம் அன்றாடம் பயன்படுத்தும், வீட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கையோடு ஒட்டிக் கொண்டிருக்கும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் இவைகளை மூலப்பொருட்களான மண், தாதுக்கள், கனிமங்கள் ஆகியவற்றிலிருந்து உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களாக மாற்ற ஒரு நாளைக்கு மெஷின்களுடன் சேர்ந்து வேலை செய்வது யார்? இவர்கள் வேலை செய்யவில்லையெனில், பொருட்களின் உற்பத்தி நடக்குமா? முதலாளிகள் வெறும் பணம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி வைத்துவிட்டால் மட்டும் பொருள் உறபத்தி ஆகிவிடுமா? முதலாளிகள் பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்ற காரணத்தால் அவர்கள் முதலாளிகள் ஆனார்களானால், உழைப்பாளிகள் தங்கள் உடல் மற்றும் அறிவுத் திறனைக் கொண்டு செலுத்தும் உழைப்பு அவர்களின் முதல் தானே! உழைப்பு இல்லாமல் எதுவும் மாறாது, நகராது.

முதலாளிகள் உழைப்பாளிகளின் நேரத்தையும், உழைப்பையும் சுரண்டுவது தான் உண்மை. இது எந்தத் தொழிலாக இருந்தாலும், .டி துறையாக இருந்தாலும் இது தான் உண்மை. சுரண்டப்படுவது தெரியாமல் இருக்க, தொழிலாளிகளையே முதலாளிகளின் பார்வையில் சிந்திக்க வைக்கிறார்கள். நாம் என்று சொல்வார்கள், இலாபத்தில் மட்டும் நான் என்பார்கள். முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம், இரண்டும் எதிரெதிரானது. இதைப் புரிந்துக் கொள்வது தான் முதல் தெளிவு.

மனிதன் உணவு சங்கிலியில் மேலே இருக்கிறான் அதனால் சுற்றுப்புறத்தையும், இயற்கையையும், மற்ற உயிரினங்களையும் இரக்கம் இல்லாமல் மிதித்து மேலே வாழ்கிறான் என்பார்கள். இந்த செயலை செய்பவர்கள் முதலாளிகளே. அவர்களின் திட்டங்களிலும், கட்டளையிலும் தான் இவை நடக்கிறது. இவர்கள் அவற்றோடு சேர்த்து தன் மனித இனத்தையே மிதிப்பது தான் இந்த முதலாளித்துவ (Capitalism) கட்டமைப்பின் உச்சக்கட்டம்.

மேற்கண்ட ஆய்வு அறிக்கையின் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், 2016-க்குள் உலகில் உள்ள 50% சதவீதம் சொத்துக்கள் 1% சதவீத முதலாளிகள் கையில் சென்றடைந்துவிடும். ஆய்வினைப் பற்றி மேலும் அறிய,

எவை சொத்துக்கள்? இவை எங்கே இருக்கிறது?

இந்தச் சொத்துக்கள் எல்லாம் என்னென்ன? எப்படி அவர்கள் கையில் செல்கிறது? இயற்கையில் சொத்து என்பது ஒரே ஒரு வகைத்தான். அது பொதுச்சொத்து. பொதுச்சொத்துக்கள் எனப்படுவது ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் ஒரே சமூகமாகப் பயன்படுத்தக்கூடிய சொத்து. உதாரணத்திற்கு, அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு போக்குவரத்துகள், போன்றவை. மக்களின் அத்தியாவசிய தேவைகளான கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்றவற்றை வைத்து இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் தொடங்குவது தான் தனியார் நிறுவனங்கள். அவர்களின் முதல் குற்றச்சாட்டு என்னவெனில் அரசு சேவைகள் எதுவும் சரியில்லை என்பார்கள். அது உண்மையாகக் கூட இருக்கும், அந்தக் கருத்தை மக்கள் மத்தியில் சமூக வலைத்தளம் வழியாக பரப்ப செய்வார்கள். இவை அனைத்தும் மக்களை வைத்தே. பின் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு, தங்கள் வியாபரத்தை தொடங்குவார்கள் (தமிழ்நாட்டிலேயே, எத்தனை தனியார் கல்லூரிகள்? அவர்கள் சீட்டை விற்பதில்லையா? கல்வி செய்கிறார்களா? வியாபாரம் செய்கிறார்களா? அதன் மூலம் கிடைத்த கோடிகள் தான் இன்றைய கோடீஸ்வரப் பட்டியல்). இதை மற்ற துறைக்கும் பொருத்திப் பாருங்கள்.

பொதுத்துறை வழங்கும் சேவையில் குறைகள் இருப்பின், அந்தச் சேவையைப் பெறும் மக்களைத் தெளிவு பெற செய்து, அந்த குறைகளை அரசாங்கம் உடனே கையில் எடுத்து தீர்வு காண வைப்பதே உண்மையான முன்னேற்றம். ஏனெனில் ஒரு சாமானிய உழைக்கும் மனிதனால் தனியாரின் சேவையை அவ்வுளவு எளிதில் பெற இயலாது. எத்தனை மாணவர்கள் கல்லூரி படிப்பை முடிப்பதற்குள், அவர்களின் பெற்றோர் கடன்களை வாங்கி, அதிக நேரம் உழைத்து படிக்க வைக்கிறார்கள்? படித்த பின் எத்தனை வேலையில்லாப் பட்டதாரிகள் அவதரிக்கிறார்கள்? அப்படியே வேலை கிடைத்தாலும், முதலாளிகளின் சுரண்டல் கட்டமைப்புக்குத்தானே செல்கிறார்கள். மூச்சு விடுவதற்கே பெரும்பாடுபடுபவர்களுக்கு எங்கே சமூகம் குறித்த சிந்தனை எழப்போகிறது? இந்த நாள் கழிந்தால் போதும் என்று வாழ தள்ளப்படுகிறார்கள்.

அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை, வேடிக்கை பார்க்கிறது. ஆம். தனியார் நிறுவனம், கார்பரேட்டுகளின் உதவியோடு பதவிக்கு வரும் அரசாங்கம், பொதுத்துறையை கண்டு கொள்ளுமா? இல்லை தனியார் முதலாளிகளை கண்டு கொள்ளுமா? மக்களா? முதலாளியா? என்றால் முதலாளிகள் என்பார்கள். ஆனால் மக்களை அமைதி பெற செய்ய, அவ்வப்போது அங்கங்கே ஒன்று இரண்டுகளை செய்வார்கள். மக்கள் ஒன்று கூடிவிடக் கூடாது என்பதற்காக வலதுசாரிகள் மதம், சாதி, இனம், மொழி என்று ஏதேனும் ஒன்றை வைத்து மக்களை பிரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள்.

பிறந்ததிலிருந்து மக்கள் அனைவரும் சமம். ஏற்றத்தாழ்வுகள் பார்க்கக் கூடாது என்பது சாதி, மதம், செய்யும் தொழில் ஆகியவையோடு மட்டும் ஏன் நாம் நின்றுவிடுகிறோம்? அந்தச் சமத்துவத்தை ஏன் பொருளாதாரத்தில் நாம் பார்க்கத்தவறினோம்? அவன் ஏன் வறுமையில் வாடுகிறான்? இயற்கையில் அனைவருக்கும் பொதுவான, சமமான இந்த பூமியில் எப்படி ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு உருவானது? இவைகளுக்கான பதிலை கார்ல் மார்க்ஸும், ஏங்கல்சும் மிக அற்புதமாக விளக்கியும், அவைகளை படித்து தெளிவு பெறுவதிலிருந்து நம்மை தடுப்பது எது?

ஒரு நாட்டில் வறுமையான மக்கள் அதிகம் இருப்பதற்கு காரணம், பொதுத்துறை நிறுவனங்கள் மெல்ல அழியத் தொடங்குவதற்கு காரணம், உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து பல போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டே இருக்க காரணம் ஆகியவற்றை பற்றி நீங்கள் சிந்திப்பீர்களேயானால், முதலில் உழைப்புச் சுரண்டலை புரிந்துக் கொள்ளுங்கள்.

தனியார் நிறுவனங்கள், கார்பரேட்டுகளின் உதவிகளைப் பெறக் கூடாது என்று எந்தக் கட்சி இருக்கிறதோ, அதுவே பொதுத்துறையையும், பொது மக்களைப் பற்றிச் சிந்திக்கும் கட்சி. உழைக்கும் மக்களுக்காகப் போராட போராடிக் கொண்டிருக்கும் உலகம் முழுவதும் ஒரே ஒரு உண்மையான அமைப்பு தான் இருக்கிறது.

உலக உழைப்பாளிகளே! ஒன்று சேருங்கள்!” – கார்ல் மார்க்ஸ்.

Related Posts