அரசியல்

யாருங்க நீங்க . . . . . . . . . . ?

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, யாருக்குமே பிரயோஜனம் இல்லாத அந்த சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தோடு சேர்த்து, ரஜினிகாந்த்தும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார். ஒரேயொரு கேள்விதான் நேற்று ரஜினிகாந்த் கிளப்பிய அனைத்து களேபரங்களுக்கும் அடிப்படையாக இருந்தது. இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘#நான்தான்பா_ரஜினிகாந்த்’ முதலிடத்தைப் பிடித்து, ரஜினியை அம்பலப்படுத்தவும் அந்த ஒற்றைக் கேள்வியே காரணமாக அமைந்தது.

தூத்துக்குடியில் ஸ்ட்ரெலைட் போராட்டத்தின்போது அதிகார வர்க்கம் நடத்திய அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் சொல்லப்போவதாக நேற்று கிளம்பிச்சென்றார் நடிகர் ரஜினிகாந்த். ‘ஒரு நடிகனான என்னைக் கண்டால் மக்கள் ஆறுதலடைவார்கள்’ என்று சொன்ன ரஜினிகாந்த், சிரித்த முகத்துடன் ஒவ்வொருவராக நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது,  மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்பாபுவிடம் அவர் சென்றபோது, ‘யாருங்க நீங்க?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அதற்கு ‘நான் ரஜினி’ என அவர் பதிலளிக்க.. ‘அது எங்களுக்கு தெரியாதா? நீங்கதான் ரஜினின்னு யாருக்கும் தெரியாமல் இல்லை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 100 நாட்களாக நாங்கள் போராடிய போது சென்னை ரொம்ப தூரத்தில் இருந்ததா?’ என்று கேள்வியெழுப்ப, பதில்சொல்ல முடியாத நடிகர் ரஜினிகாந்த், மழுப்பலான சிரிப்புடன் அந்த இடத்தில் இருந்து அப்படியே நகர்ந்தார்.

மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லச்சென்ற நடிகர் ரஜினிகாந்த், கடைசியில் அவருக்கே ஆறுதல் சொல்லவேண்டிய நிலையை உருவாக்கி இருந்தது அந்த ஒற்றைக் கேள்வி. நியாமானதும், அறம் நிறைந்ததுமான அந்தக் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறிய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களின் சரமாறியான கேள்விகளால், கடைசியில் தான் யார் என்பதையும் பொதுவெளியில் அடையாளம் காட்டிவிட்டார்.

போராட்டம் சமூக விரோதிகளால் திசைதிருப்பப் பட்டதாகவும், போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்றும் கொஞ்சமும் கூசாமல் பேசிவிட்டு, காவல்துறையினருக்கு வக்காலத்து வாங்கும்போதே அவர் யார் என்பதை ஊருக்கு உரக்கச் சொல்லிவிட்டார். தன் படத்தின் ப்ரமோஷனுக்காக மட்டுமின்றி, தான் கட்டவிழித்துவிட இருக்கும் அரசியல் அஜெண்டாவின் ஒத்திகையாக்காக தேவைப்பட்ட இந்த விசிட் ரஜினிக்கு தோல்வியையே தந்திருக்கிறது.

‘யூனிஃபார்ம் போட்ட போலீஸ் மேல கைய வச்சது தப்பு’ என ஆவேசமாக பேசிய ரஜினி, யூனிஃபார்ம் போடாத காக்கிகளால் மக்கள் வேட்டையாடப் பட்டதை ஏன் திட்டமிட்டு மறைக்கப்பார்க்கிறார்? அதுமட்டுமின்றி, பல்லைக் கடித்துக் கொண்டும், ஏய் என்று ஆவேசமாக கத்திக்கொண்டும் பேசி எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விட்டுச் சென்றிருக்கும் இடத்தை நிரப்பப் பார்க்கிறாரா? யார் நீங்க என்ற சந்தோஷின் கேள்விக்கு தன் ஆவேசத்தின் மூலம் அதையே உரக்கச் சொல்லியிருக்கிறாரா அவர்? இதற்கெல்லாம் பதில் சொல்ல ரஜினி தயாராக இல்லையென்றால், மீண்டும் முதலில் இருந்து கேட்போம் ‘யாருங்க நீங்க?’ என்று அவரிடமே..

– தேன்சிட்டு.

Related Posts