புதிய ஆசிரியன்

மௌனம் களைந்திடுவோம்

    இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதத்திலி ருந்து 49 சதமாக உயர்த்துவதற்கான மசோதாவை மோடி தலைமை யிலான அரசு மக்களவையில் முதலில் நிறைவேற்றியது. ஆனால், அதற்கும் முன்னால் அவசரச் சட்டமாகக் கொண்டு வந்து ஒபாமாவின் இந்திய விஜயத்தின் போது அவரது காலடியில் இந்தப் பரிசை வைத்து வணங்கியது. மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில் இரு அவைகளின் இணைந்த அமர்வில் நிறைவேற்றி பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க மோடி அரசு தயாராக இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் அவசியம் இன்றி அந்நிய மூலதனத்திற்கு காவடி எடுப்பதில் பாஜக வுக்குச் சற்றும் சளைக்காத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறிவிட்டது. இச்சட்டத்தின் மூலம் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டைக் கூட்டவும், பங்கு களை விற்கவும் முடியும். ஏற்கனவே 26 சத முதலீடுகளுடன் இன்சூரன்ஸ் துறைக்குள் வந்த அந்நிய நிறுவனங்கள் சாதித்தது என்ன? அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி. நிறுவனம், நெதர்லாந்தின் ஐ.என்.ஜி. நிறுவனம், ஆஸ்திரேலியாவின் ஏஎம்பி இவைகளெல்லாம் வந்த சுவடே தெரியாமல் ஓடிப் போய்விட்டன. போட்டிகள் இருந்தால்தானே மக்களுக்குப் பயன் கிடைக்கும் என்று சொல்லி அந்நிய கம்பெனி களைக் கொண்டு வந்தார்கள். இவர்களின் வருகைக்கு முன் வெறும் நாற்பது ரூபாயாக இருந்த டூவீலர் இன்சூரன்ஸ் நாநூறு ரூபாயாகவும், 350 ரூபாயாக இருந்த ஆட்டோ இன்சூரஸ் 3500 ரூபாயாகவும் உயர்ந்ததுதான் நாம் கண்ட பலன். ஒண்ணரை லட்சம் இன்சூரன்ஸ் ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்றுவது இந்திய மக்கள் அனைவரின் கடமையல்லவா? நாற்பது கோடிக்கும் மேலானவர்கள் எல்ஐசியின் பாலிசிகளால் பயனடைந்து வருகிறார்கள். இந்நிறுவனம் அந்நிய முதலாளிகளின் வேட்டைக்கு இரையானால் இவர்களின் கதி என்னாவது? இதையும் தாண்டி எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பல லட்சம் கோடிகளை கொடுத்து உதவி வருகின்றதே, தங்க முட்டையிடும் நவரத்தின பொதுத்துறை இன்சூ ரன்ஸ் நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டாமா? மௌனத்தைக் களைவோம். பொதுத்துறையைக் காத்திட உரக்கக் குரல் கொடுப் போம்!                                 – ஆசிரியர் குழு

Related Posts