இதழ்கள் இளைஞர் முழக்கம்

மோடி அரசு: வரம் கொடுத்த மக்களுக்கு சாபங்கள்…!

‘தீமைதான் வெல்லும்’ என்ற பாடல் சமீபத்தியது. நம் வாழ்வும் அதுபோலாகிவிடுமோ என்ற அச்சத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்…

நம் நாட்டில் நாம் பெறவிருக்கும் அரசியல் சுதந்திரமானது, நம் நாட்டு மக்களுக்கு உண்மையான பொருளாதார சுதந்திரத்தைக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்புடன்தான் “இறவாப் புகழ் பெற்ற பகத்சிங் போன்ற லட்சக்கணக்கானவர்கள், சுதந்திரப் போராட்ட வேள்வியில், தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள்”. இந்தத் திசை வழியில் எந்த அளவிற்கு நாம் பயணித்திருக்கிறோம் என்பதும், இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதுமே மாணவர்கள், இளைஞர்களாகிய நம்முன் இப்போதுள்ள பிரதான கேள்வி.

இரண்டாண்டுகளுக்கு முன்பு, மே 26 அன்று இந்திய ஜனாதிபதி முன்னிலையில் நரேந்திரமோடி பிரதமராகவும், அவரது சகாக்கள் மந்திரிகளாகவும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். பகட்டான இந்நிகழ்வில் சார்க் நாடுகளிலிருந்தும், பல மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பெருநிறுவன முதலாளிகள், மதத் தலைவர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடந்த 30 ஆண்டுகளில் முதன் முறையாக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தது பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ. பாஜக தலைமையிலான தேஜகூ அரசின் 2.0 ஆரம்பமாகிறது. அது கடந்த 2 ஆண்டுகளாக எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மதிப்பிடுவது நம்முடைய வரலாற்றுக் கடமை.

எவரையும் விட்டு வைக்காத தாக்குதல்:

கல்வி: சமூகம் குழந்தைகளின் மூளைக்குள் திணித்திருக்கும் நம்பிக்கைகளை நீக்கி அவர்களைச் சுய சிந்தனை உடையவர்களாக ஆக்குவது என்பது கல்வியின் பொருள். ஆனால் இதற்கு நேர்மாறாகத்தான் இந்த அரசு செயல்பட்டிருக்கிறது. பாடத் திட்டங்களை மாற்றுவது, கல்வி நிறுவனங்களை அவர்களது ஆட்களைக் கொண்டு நிரப்புவது, ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் கல்வியே கேள்விக்குள்ளாகும் வகையில் வகைதொகையின்றி கல்வி நிறுவனங்களின் அனைத்து துறைகளும் தனியார்மயமாக்குவதுமாக இருக்கிறது. ஆனால் சமஸ்கிருதம் திணிப்பு, பசு புனிதம் என மதவாத அரசியல் செய்கிற ஆர்.எஸ்.எஸ் கும்பலோ, பெரும்பான்மையான “இந்துகளை” பாதிக்கின்ற கல்வி கட்டண உயர்வை குறித்து வாய் திறப்பதில்லை. அதற்கு ஆதரவாகவே கூவுகிறார்கள்.

என்.ஐ.டி யில் பி.டெக் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் 2.15 லட்சம் ரூபாயாக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.

கல்விக் கட்டணம் மட்டுமின்றி மாணவர்கள் பயன்படுத்துகிற விடுதிகளிலிருந்து (2020க்குள் ஐ.ஐ.டி சென்னை உள்ள மாணவர் விடுதிகளை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஐ.ஐ.டி நிர்வாகம் முடிவு செய்துள்ளது) கழிவறை (சென்னை ஐ.ஐ.டியில் துப்புரவுப் பணிக்கு வழங்கப்பட்ட தனியார் ஒப்பந்தம் ஸ்மிருதி இராணியின் உறவினர்) வரை தனியார்மயத்தின் கோரமுகத்தை மாணவர்கள் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதன் பின்னணியில் போராட முனைகிற மாணவர்களை எதிர்கொள்ள இன்றைக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு, மூலைமுடுக்கெங்கும் கேமிரா கண்காணிப்பு, கல்லூரிக்குள் காவல் நிலையம் என்று போராடுகிற மாணவர்களை சட்டபடி ஒடுக்கவும், மாணவர்களின் சமூக அரசியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அவர்களை அரசியலறிவற்ற தக்கைமனிதர்களாக ஆக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டு வருகிறது.

(ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாகவே அவர்கள் இந்தியாவெங்கிலும் சுமார் 60,000 கல்வி நிறுவனங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.)

“தேச விரோதிகள்’’ பட்டம் :

மேலே குறிப்பிட்டுள்ள மாணவர் விரோத செயல்களை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி அடக்கிட இந்த தேசத் துரோகக் குற்றப்பிரிவு பயன்படுத்தப்படுகிறது. தட்டிக் கேட்டுப் போராடும் மாணவர்களுக்கு மரணமும், தேச விரோதிகள் பட்டமுமே கிடைக்கின்றன.

ரோஹித் வெமுலாவின் மரணம், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி, புனே திரைப்படக் கல்வி நிலையம், அலகாபாத் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பிரச்சனைகளே அதற்கு சாட்சி. பல்கலைக்கழகங்கள் மட்டுமல்ல, ஐ.சி.எச்.ஆர் போன்ற இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.

நம் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒருவகையான சகிப்பின்மை அதிகரித்து வருவதும், அதற்கு தேசியம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். சுருங்கச் சொல்வதானால் அரசு நமது அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதைப் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு:

ஒவ்வொரு வருடமும் 1.3 கோடி இந்திய இளைஞர்கள் வேலை சந்தையில் இணைகிறார்கள். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, இன்னும் எத்தனையோ இந்தியா என்று கூப்பாடு போட்டார்கள், இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும் என்றார்கள். இந்தியாவில் பொருள்களைத் தயாரித்து, அதை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிலேயே பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார்கள்.

ஆனால் இந்த 2 ஆண்டுகளில் இந்தத் திட்டங்கள் மூலம் சொல்லிக் கொள்ளும்படியான எந்த வேலையும் உருவாக்கப்படவில்லை. அதற்கு உதாரணம், அரசு இணையதளத்திலோ, பாஜகவின் இணையதளத்திலோ, ஏன் மோடியின் இணையதளத்திலோ கூட உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு சம்மந்தமான எந்தத் தகவலும் இல்லை.

பாதுகாப்புத் துறைக்கு தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்வதில் அன்னிய நேரடி முதலீடு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை ஒரு சில சேவைகளில் 100 சதவீதம் வரை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.

2015 அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் மிக குறைந்த புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வருடத்திற்கு இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்ற மோடியின் வாக்குறுதி எங்கே?

சமூகநலன்:

நலத் திட்டங்கள்: பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (வங்கிக் கணக்குகள்), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி (ஆயுள் காப்பீடு), பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா (விபத்துக் காப்பீடு), அடல் பென்ஷன் யோஜனா (அமைப்பு சாரா துறையினருக்கான ஓய்வூதியம்) போன்ற நலத் திட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் 7 நாள்களில் நாடு முழுவதும் 5.05 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. தற்போது 15 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் 15,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

எரிவாயு மானியத் திட்டம்: சமையல் எரிவாயுவுக்கான (எல்பிஜி) நேரடி மானியத் திட்டம் மூலம் எரிவாயுக்கான மானியம் நேரடியாகப் பயனாளிகளுக்கே சென்றுவிடும். இந்தத் திட்டங்களினால் பலனடையப் போவது பெரும் கார்ப்பரேட் வங்கிகள்தான். 01 ஜீன் 2016 ல் சேவை வரி 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் பரிமாற்றமும் இதில் அடக்கம். இப்போது புரிகிறதா வங்கி கணக்குகள் ஏன் எல்லோருக்கும் உருவாக்கப்பட்டுள்ளது என்று.

ஸ்மார்ட் சிட்டி: மோடி அரசு நாடு முழுவதும் ‘ஸ்மார்ட் சிட்டி’ எனப்படும், அனைத்து நவீன வசதிகளை கொண்ட 100 நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுக்கு ரூ.48,000 கோடி ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டிக்கும் ஆண்டுக்கு ரூ.100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும்.

இது ரியல் எஸ்டேட், சிவில் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிகளுக்கான திட்டம் என்றுதான் மக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிவேக ரயில்கள்: அதிவேக ரயில்களுக்கான ‘வைர நாற்கர’ திட்டம் மூலம், மும்பை -அஹமதாபாத் இடையே புல்லட் ரயில். சென்னை மெட்ரோவில் எத்தனை சாமானியன் ஏற முடியும் என்பது நம் கண்முன் உள்ள எடுத்துக் காட்டு.

கருப்புப் பணம்: 25 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளிநாட்டில் பதுங்கிக் கிடக்கிறது. அதை அள்ளி வருவோம். அப்படியே மக்களுக்கு தருவோம் என்றார்கள். “தம்பி நான் சொன்னதை அப்டியே நம்பிருச்சு”ன்னு வடிவேல் சொல்ற மாதிரி இப்போது மோடியின் சகா அருண்ஜேட்லி பேசுகிறார்.

மருத்துவம்: தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை பிரதமர் மோடி, அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக அந்நாட்டின் மருந்துக் கம்பெனிகளை மகிழ்விக்கும் விதமாக நீக்கினார். (தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த 108 மருந்துகளின் விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.)

உயிர் காக்கும் மருந்துகளின் விலை 14 மடங்கு உயர்ந்துள்ளது. புற்றுநோய்க்கான மருந்தான கில்வெக் மாத்திரையின் விலை ரூ.8500லிருந்து 1 லட்சத்து 18,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. ரத்தக் கொதிப்பிற்கான பிளே விக்ஸ் மாத்திரை 147 ரூபாயிலிருந்து 1,615 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வெறி நாய்க்கடிக்கான ஊசி விலை 2,670 ரூபாயிலிருந்து 7000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக…

 • 63 வருடங்களில் இல்லாத அளவில் ஏற்றுமதி வீழ்ச்சி – 17 மாதங்கள் தொடர்ச்சியான வீழ்ச்சி.
 • 6.8 சதவீத மூலதன வீக்கம், பருப்பு விலைகள் 30 சதவீத உயர்வு
 • வருடாந்திர மூலதனத்துறை வளர்ச்சி வெறும் 2.7 சதவீதம். இது 10 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.
 • 2015-ல் 2,997 விவசாயிகள் தற்கொலை. 2016 ஜனவரி-மார்ச்-ல் மட்டும் 116 விவசாயிகள் தற்கொலை.
 • MGNREGA கட்டணங்கள் செலுத்தப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு பிறகுதான் நிலுவை கட்டணம் செலுத்தப்பட்டன.
 • 10 வருடத்தில் கிராமப்புற ஊதியம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
 • சேமிப்பு வங்கி வைப்பு வளர்ச்சி 53 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது.
 • வங்கியின் வாராக் கடன் 13 லட்சம் கோடிக்கும் மேல் வளர்ந்துள்ளது.
 • புதிய மற்றும் அதிக வரி. ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பெருட்களின் மீது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை.
 • தீப்பெட்டி, பட்டாசு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்ற 20 தொழில்களை சிறு குறு தொழில்கள் பட்டியல்களிலிருந்து எடுத்துவிட்டார்கள். இனி சலுகைகள் கிடையாது. பெரு நிறுவனங்களின் வரியை 5 சதவிகிதம் குறைத்துவிட்டார்கள்.
 • பாலியல் குற்றங்களால் பாதிக்கபபட்ட பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ரூ.2000 கோடி நிர்பயா நிதியை முறையாகப் பயன்படுத்தாதது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி.
 • பொய் பேசுவதை வழக்கமாகக் கொண்ட ஒரு பிரதமர்; கரும்பு விவசாயிகளின் கடன் 5795 கோடி, ஆனால் மோடி சொல்லியிருப்பது 700-800 கோடி
 • நம்முன் நிற்கும் அபாயம் – வகுப்புவாதம்

ஒவ்வொரு திட்டத்திற்குப் பின்னும் ஒவ்வொரு முதலாளியின் நலன் இருக்கிறது. மக்களுக்கான திட்டங்களை வழங்குவது மோடி அரசின் நோக்கமல்ல. பெரு முதலாளிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்கான வேலையிலேயே கடந்த 2 ஆண்டுகளும் மோடி அரசு முழுக் கவனம் செலுத்தியுள்ளது.

அரசு செய்யும் பாதகச் செயலை யாரும் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக அவ்வபோது மத மோதலையும், வெறுப்பு பேச்சுக்களையும் தொடர்ந்து செய்கிறார்கள் மோடியின் சகாக்கள் (பாஜக மந்திரிகள் மற்றும் ஆர்எஸ்எஸ்).  இதனால் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகப்போவது பெரும்பான்மை உழைக்கும் மக்களே.

மோடி அரசின் உண்மையான நோக்கம், அது பயன்படுத்தும் முகமூடிகள், அதன் சாதிய அடிப்படை, அது இந்திய பாசிசமாக உருவெடுத்து வரும் விதம், இதற்காக அரசையும், சிவில் சமூகத்தையும் பயன்படுத்தும் விதம் ஆகிய எல்லாம் குறித்து நாம் விழிப்புணர்வோடு மட்டுமல்ல, அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதை நாம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் மோடி அரசு இரண்டாண்டு சாதனை விழா கொண்டாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிட்டது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல பிரபலங்களை அழைத்து கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்பட்டு அதை பத்திரிகை, தொலைக்காட்சியில் பிரபலமாக்கி மக்களை மடையர்களாக்கும் செயல்களையே தொடர்ந்து செய்யும். மோடி அரசு 8000 திரையரங்குகளிலும், அனைத்து தொலைக்காட்சி, அலைவரிசைகளிலும், நாளிதழ்களிலும் விளம்பரப்படுத்திக் கொண்டாடுகிறது.

என்னைத் தேர்ந்தெடுங்கள் அனைத்தையும் மாற்றிக் காட்டுகிறேன் என்று கேட்டு பிரதமராகிய மோடி அரசின் 2 ஆண்டு அனுபவம் பயங்கர கனவாய் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. இது தொடரும்பட்சத்தில் நம் வாழ்வும் கனவாகவே இருக்கும். எனவே, நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளங்களின் அடிப்படையின் மேல் நின்று சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட வேண்டுமென்ற செய்தியை ஒவ்வொரு இளைஞரிடமும் கொண்டு சென்று இணைப்போம் அனைவரையும். போராடுவோம், வெற்றி பெறுவோம்.

– சுதிர்.

Related Posts