அரசியல் பிற

மோடியின் உரை யாரை காப்பாற்றுகிறது ? நாட்டின் குடிமக்கள் சாலைகளில் நடந்து போய் இறந்து கொண்டிருக்கிறார்கள்!!

பிரதமர் மோடி சொன்னதை நிறைவேற்றியதில்லை. உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 31 ல் சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பொய் சொன்ன அரசாங்கம் இது.

நீங்கள் ரயில் கட்டணம் இலவசமாக கொடுக்கிறீர்களா என்று கேட்டதற்கு அதைப் பத்தி இங்கே சொல்ல முடியாது என்று சொன்ன அரசாங்கம் இது. உச்சநீதிமன்றத்தில் நேர்மையாக பதில் சொல்லாத அரசாங்கம் இன்று மட்டும் நேர்மையாக என்ன செய்து விடும்.?

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்தை கேட்கிறார்கள். ஆனால் அரசு ஏ.சி ரயிலின் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தி பணம் உள்ளவர்கள் செல்லலாம் என சொல்கிறது. மக்கள் பசியுடன் இருக்கிறார்கள். மக்களுக்கு அரிசி வழங்க வேண்டிய அரசு பெரும் முதலாளிகளுக்கு எத்தனால் எடுக்க அரிசியை வழங்க முடிவெடுக்கிறது.

மோடி கூட்டாட்சி தத்துவத்தின் கோட்பாடுகளை சிதைத்து வந்திருக்கிறார்.ஊரடங்கு தொடங்கும் போது 500 பேராக இருந்த பாதிப்பு 48 வது நாளில் 70 ஆயிரத்தைக் கடந்தும், இறப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியும் சென்று கொண்டுள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் மாநிலம் தான் இதை கையாள்வதற்கு அனைத்து வாய்ப்பும் திறமையும் தகுதியும் படைத்த அமைப்புகள். ஆனால் அவற்றிக்கு உரிய தொகையை கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றுகிறது.

6 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் என சொல்லிறார். இப்படி அவர் பேசுவது எத்தனையாவது முறை?

17 உயிர்களின் மீது ரயில் ஏறி இருக்கிறது. பிரதமருக்கு அதை குறித்து பேச நேரம் இல்லையா? மாநிலங்களுக்கு அறிவித்த நிவாரணம் என இதுவரை எதுவும் இல்லை. தொழில் துறைக்கு மட்டும் அறிவிப்பு உள்ளது. அதிலும் கூட தொழிலாளர் சட்டங்களில் கை வைக்கிறது அரசு.

போன முறை செய்தது போல் பட்ஜெட்டில் தான் கை வைக்க போகிறது அரசு. அரசு 1 லட்சம் கோடி எனவும் 20 லட்சம் கோடி எனவும் அறிவிக்கும் தொகை சாதாரணமாக போரூரில் ரோட்டில் போராடும் வடமாநில தொழிலாளர்களை ஊருக்கு அனுப்புவதற்கு உதவுமா?

மக்களின் வரிப்பணத்தை தங்களின் சொந்த பணமாக நினைக்கிறது. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு என சொல்லி அரசு செய்ததை நாம் பார்த்திருக்கிறோம். இதுவரை 2017 – 18 கி.எஸ்.டி பாக்கி தொகையை மத்திய அரசு மாநிலங்களுக்கு தரவில்லை.

இவர்கள் பட்ஜெட்டிலிருந்து தான் எடுக்கிறார்கள் என்பதை நாங்கள் சொல்லித் தான் தெரிய வேண்டுமா?

ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி என நிவாரணம் அறிவித்து விவசாயத்துக்கு வழங்குவதாக சொன்ன 2000 ரூபாய் எதிலிருந்து எடுக்கப்பட்டது?
விவசாய தொழிலாளர்களுக்கான 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு இதுவரை 32 நாட்களுக்கான பணம் தான் மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை 75% எடுத்துக்கொள்ளலாம் எனவும் கட்டுமான தொழிலாளர்கள் அவர்களின் நலவாரிய தொகைகளை எடுத்துக் கொள்ளலாம் எனவும் சொன்னதெல்லாம் பிரதமர் அறிவித்த ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி கணக்கில் தான் வருமா?

இதையெல்லாம் நேருக்கு நேர் விவாதிக்கலாமா?

85% ரயில் கட்டணத்தை தருவதாக பொய் சொன்ன அரசாங்கம் இது. ஒரு நயா பைசா கூட கொடுக்கவில்லை.

கடந்த கால அனுபவம் தான் அரசின் நிவாரணத்தை நம்புவதற்கான ஏற்பாடு…அரசின் கடந்த காலம் இப்படித் தான் இருக்கிறது. உலகில் நாம் தான் முன்னோடி என இந்த அரசு சொல்லிய அனைத்தும் மக்களை ஏமாற்றத்தை நோக்கி கொண்டு போய் நிறுத்தி உள்ளது.

ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருகிறோம் எனசொல்லி அடுத்த தேர்தலில் அதைக் குறித்து ஒரு வார்த்தையையும் பேசாதவர் தான் மோடி. அவர் அரிச்சந்திரன் எனவும் அதை நம்பித் தான் ஆக வேண்டும் எனவும் எப்படி கூற முடிகிறது.?இந்த காலத்தில் ஏறக்குறைய 60 லட்சம் பேரின் வேலை பறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்தையும் விற்றுவிட்டு சுதேசி குறித்து பேசுவார்கள்.

10 லட்சம் கோடிக்கும் அதிகமாக சிறு குறு நடுத்தர தொழில் நடத்துவோருக்கு கொடுக்க வேண்டும். சேம்பேர் ஆப் காமர்ஸ் உள்ளிட்டோர் தங்களுக்கு 15 லட்சம் கோடி தேவை என கேட்டதற்காக பிரதமர் 20 லட்சம் கோடி நிவாரணத்தை அறிவித்துள்ளாரா என சந்தேகப்பட வேண்டி உள்ளது.

இந்த நாட்டின் குடிமகன் சாலைகளில் நடந்து போய் இறந்து கொண்டிருக்கிறான். அவர்களுக்கு ஒரு உதவியை கூட இந்த அரசு செய்யவில்லை. குறைந்தபட்சம் ஒரு ஆறுதலைக் கூட சொல்லவில்லை. இந்த மோடி அரசு அவர்களுக்கு எதையும் செய்யப்போவதில்லை.

தமிழக அரசின் சார்பாக வேண்டிய நிவாரணத்தை அதிமுகவினர் கேட்டுப்பெற வேண்டும். அதை தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டியவை. இதை எதிர்பார்க்க வேண்டியது எங்களின் உரிமை

தோழர் கனகராஜ் மாநிலக் குழு உறுப்பினர் சிபிஐ(எம்) அவர்கள் தனியார் தொலைக்காட்சியில் கலந்துகொண்ட பேசியதன் தொகுப்பு

தொகுப்பு : ராம் குமார்

Related Posts