இதழ்கள் இளைஞர் முழக்கம்

மோடியின் அடுத்த சீர்குலைப்பு முயற்சி – வீ.பா.கணேசன்

மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள மிருக பலத்தை சாதகமாக்கிக் கொண்டு, இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான அமைப்புகளை, அதன் மைய நோக்கங்களில் இருந்து விலகச் செய்யும் வகையில், ஒவ்வொன்றாக பலவீனப்படுத்தி வருகிறது. மத்திய திட்டக் கமிஷனிலிருந்து துவங்கி படிப்படியாக நிதி, நீதி, தேர்தல் போன்ற துறைகளின் கண்காணிப்பு அமைப்புகளை செல்லரித்து வருகிறது. கூட்டாட்சி தத்துவம் என்பதே மறந்து போய் மத்திய அரசின் தயவுக்கு இலவு காத்த கிளிகளாய் மாநில அரசுகளை ஏங்கச் செய்து வருவதன் ஓர் உதாரணம்தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் அது காட்டிய அலட்சியப் போக்கு.

இதன் அடுத்த கட்டமாய் இந்திய நிர்வாகத்தின் முக்கியப் பகுதியாக விளங்கும் இந்திய ஆட்சிப் பணி இப்போது மோடியின் இலக்காக மாறியுள்ளது. மத்திய பொதுத் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்டு வரும் இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் பெற்ற தரவரிசையின் அடிப்படையில் இதுவரையில் அவர்களுக்கு பணியிடத்தை (மாநிலத்தை) ஒதுக்குவது என இருந்து வந்த நிலையை மாற்றி, அதன் பிறகு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக நடக்கும் அடித்தளப் பயிற்சியின் முடிவில் நடக்கும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களையும் சேர்த்து மதிப்பிட்டு, அதன் பிறகு பணி (மாநில) ஒதுக்கீடு செய்யலாம் என கருத்துரை அனுப்பியுள்ளது பிரதமர் அலுவலகம்.

இப்போது இதற்கு என்ன அவசியம் வந்தது என்பதே கேள்வி. தேர்வாணையம் இதுநாள் வரையில் தேர்வு முறையை காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து கொண்டேதான் வருகிறது. அதில் ஏதாவது புதிய முறையை அறிமுகம் செய்ய வேண்டும் எனில், அதற்கும் ஒரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். உதாரணமாக, முன்பு முழுமையும் எழுத்துத் தேர்வாக இருந்ததை மாற்றி, சரியான பதிலை சுட்டிக் காட்டும் முறையை (ஆப்ஜெக்டிவ் முறை) துவக்க நிலைத் தேர்வில் அறிமுகம் செய்ய 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து, போட்டியிடுவோர் அதற்குரிய பயிற்சி பெற கால அவகாசமும் வழங்கப்பட்டது. அதே போன்று தேர்வு முறையை நவீன முறையில் மாற்றியமைக்க விரும்பினாலும், இவ்வாறு கால அவகாசம் தந்தே அதையும் அறிமுகம் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக, ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட முறையில் தேர்வு பெற்றவர்களை புதிய முறையில் தரவரிசைப்படுத்துவது என்பது முறையானதல்ல.

இந்திய ஜனநாயக சமூகம் என்பது நான்கு தூண்களைக் கொண்டது. நாடாளுமன்றம், நீதித் துறை, நிர்வாகத் துறை மற்றும் பத்திரிகைத் துறை என்பவையே அவை. இவற்றில் அரசின் நிர்வாகத் துறை என்பது தனித்துவம் பெற்றதாக, அதன் முதுகெலும்பாக இருந்து, அரசின் இதர அங்கங்களை இயக்கும் தன்மை கொண்டதாக அமைகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று, அவற்றை அமலாக்கும் கடமை இந்திய ஆட்சிப் பணி (ஐஹளு) எனப்படும் பிரிவுக்கும், சட்டத்தை நிலைநாட்டும் கடமை இந்திய காவல் பணி (ஐஞளு) என்ற பிரிவுக்கும் உள்ளது. இவை தவிர அயலுறவு, வனம், தணிக்கை, வருவாய், ரயில்வே போன்ற பல்வேறு துறைகள் உள்ளிட்டு மத்திய அரசின் 27 துறைகளுக்கான உயர் அதிகாரிகளை தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும் பொறுப்பு மத்திய பொதுத் தேர்வாணையம் (ருஞளுஊ) என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அமைப்பிடம் உள்ளது.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் காலியிடங்களுக்கு உகந்த வகையில் குடிமைப்பணித் தேர்வை நடத்தி வருகிறது. இது மூன்று கட்டங்களாக நடைபெறும். 1) துவக்க நிலைத் தேர்வு- இரண்டு தாள்களைக் கொண்ட பொது அறிவை சோதிக்கும் சரியான விடையை சுட்டிக் காட்டும் முறையிலான (டீதெநஉவiஎந வலயீந) இத்தேர்வில் வெற்றிபெற்றவர்களே இரண்டாவது மையத் தேர்வில் கலந்து கொள்ள முடியும். மையத் தேர்வு இந்திய மொழி, ஆங்கிலம் உள்ளிட்டு மொத்தம் 7 தாள்களைக் கொண்ட எழுத்து வடிவத் தேர்வு (நுளளயல வலயீந) ஆகும். இந்த மையத் தேர்வில் வெற்றி பெறுவோர் பின்பு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வரின் ஆளுமைத் திறன் உள்ளிட்டு பல திறமைகள் இதன் மூலமாக சோதிக்கப்படும். மையத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 1750. நேர்முகத் தேர்வுக்கு 275 மொத்தம் 2025 மதிப்பெண்கள்.

இவை இரண்டிலும் வாங்கிய மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வர்களின் தரவரிசையை தேர்வாணையம் உருவாக்கி, உரிய நியமன உத்தரவுக்காக மத்திய அரசின் ஊழியர் மற்றும் பயிற்சித் துறைக்கு அனுப்பி வைக்கிறது. தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது, ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள நாட்டின் பகுதிகளில் பணி புரிவதற்கான (உதாரணமாக ஐந்தாம் பகுதி என்பது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது) தங்கள் விருப்பத்தை கீழிறங்கு முறையில் (அதாவது அதிக விருப்பமுள்ள, அதற்கடுத்து விருப்பமுள்ள என்ற வரிசையில்) தெரிவிக்க வேண்டும். இந்த விருப்பங்கள், தரவரிசை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வருக்கு உரிய மாநிலம் ஒதுக்கப்படும்.

பின்பு இந்திய ஆட்சிப் பணிக்கு, இந்திய வெளியுறவுப் பணிக்கு, இந்திய காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒன்றிணைந்து முசோரியில் உள்ள நிர்வாக பயிற்சி அகாதெமியில் 3 மாத அடித்தளப் பயிற்சி பெறுவர். பின்பு இந்திய காவல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஹைதராபாத் நகரில் உள்ள காவல் துறை அகாதெமியில் பயிற்சிக்கு செல்வார்கள். இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முசோரியில் ஆட்சி நிர்வாகம் குறித்த கல்வி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலத்தில் கள அனுபவம் (இது வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கும்) என 2 ஆண்டுகளுக்கு மாறி மாறி பயிற்சி பெறுகின்றனர்.

இந்த நடைமுறைக்குப் பதிலாக பிரதமர் அலுவலகம் முன்வைக்கும் யோசனை என்பது நமக்கு கல்லூரிக் காலத்தை நினைவுப்படுத்துகிறது. செய்முறைத் தேர்வுகள் உள்ள பாடங்களில் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் எவ்வாறு ஆசிரியரின் விருப்பத்தையே பெரிதும் சார்ந்திருந்ததோ, அதைப் போன்றே இந்தப் பயிற்சிக்கால தேர்விலும் பயிற்சி ஆசிரியர்களின் விருப்பங்களே (ஆண்டுக்கணக்கில் தயார் செய்து, இரண்டு கட்டங்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்ற) இந்தத் தேர்வர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பது எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்?

உண்மையிலேயே மிகச் சிறந்தவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என அரசு விரும்பினால், தேர்வு முறையை பெருமளவிற்கு சீர்திருத்த வேண்டும் என்று கூறலாம். அதுவும் கூட இந்த குடிமைப்பணி தேர்வுகள் குறித்தும், அதைத் தொடர்ந்த பயிற்சிகள் குறித்தும் பி.எஸ்.பஸ்வான் கமிட்டி 2016ஆம் ஆண்டில் அளித்த பரிந்துரைகள் என்னவென்பதோ, அதை எப்போதிலிருந்து அரசு அமல்படுத்தப்பட இருக்கிறது என்றோ இன்றுவரை அரசு வாய் திறக்காத நிலையில், பிரதமர் அலுவலகத்தின் இந்தத் திடீர் யோசனை நிச்சயம் நியாயமான ஒன்றாக இருக்க முடியாது. 2014 பிப்ரவரியில் கிரண் அகர்வால் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் அடித்தளப் பயிற்சிக்கு முன்பாகவே தேர்வர்களுக்கான மாநிலங்களை ஒதுக்கினால்தான் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வர்கள் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சியை மேலும் வலுப்படுத்த முடியும். இதன் மூலம் அடித்தளப் பயிற்சியை மேலும் தீவிரமாக வழங்க முடியும் என்று மிகத் தெளிவாகப் (ளவசடிபேடல சநஉடிஅஅநனேநன) பரிந்துரைத்திருந்தது. அதைப் போன்றே மத்திய ஊழியர் மற்றும் பயிற்சித் துறை தனது 05.09.2017 தேதிய அறிவிக்கையில் (எண். 13013/2/2016-ஹஐளு.ஐ) அடித்தளப் பயிற்சிக்கு முன்னதாக இந்த மாநில ஒதுக்கீடுகளை முடித்துவிட வேண்டும் எனவும், இது 2017ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணித் தேர்வர்களுக்குப் பொருந்தும் எனவும் குறிப்பிட்டிருந்தது. எட்டே மாதங்களில் அரசுக்கு ஏன் இந்த மனமாற்றம்?

குஜராத் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது ஜிஎஸ்டி வேண்டவே வேண்டாம் என்று கூறிய மோடி, பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடன் இரவோடு இரவாக எவ்வித அடிப்படைத் தயாரிப்புமின்றி ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தி இந்திய வர்த்தக உலகத்தையே சீரழித்து வரும் கதைதான் இப்போது நினைவுக்கு வருகிறது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என்ற கேள்வியும் மனதில் எழுகிறது. ஜனநாயகத்தை முற்றிலுமாக குழி தோண்டிப் புதைக்க அடுத்தடுத்து முயற்சிகளைச் செய்து வரும் பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்களை மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தி யில் அம்பலப்படுத்துவோம்!

Related Posts