இலக்கியம்

மொழியைப் பெயர்ப்போம்

டாக்டர் ஜி. ராமானுஜம்

எழுத்துக்கள் தோன்றியது முதலே அச்சுப் பிழைகளும் தோன்றி விட்டன. அறிஞர் அண்ணாவின் சிறுகதை ஒன்றில் வீட்டில் சண்டை போட்டு விட்டு விரக்தியில் இருக்கும் அச்சுக் கோர்ப்பவன் ஒருவன்’ மஞ்சள் காசு மாலையுடன் காணப்பட்டாள்’ என்பதற்குப் பதிலாக ‘மஞ்சள் காமாலையுடன் காணப்பட்டாள் என்று அச்சுக் கோர்த்து வேலையை இழப்பான். அதேபோல் கிரேஸி மோகனின் நாடகம் ஒன்றில் ஒரு பெயிண்டர் ‘ஜெய ப்ரதா ஹேர் கட்டிங் சலூன்’ என்பதற்குப் பதிலாக ‘ஜெயவர்த்தனே ஹெட் கட்டிங் சிலோன் என்று பெயிண்ட் அடித்து விடுவார். தமிழ் உணர்வாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கடையில் வியாபாரம் பிய்த்துக் கொண்டு போய்விடும்.

தவறுதலாக அச்சுப்பிழை வருவது ஒரு வகையென்றால் தொழில் நுட்பம் வளரவளர வேறு பிரச்சனைகள் வந்தன. கணினி வந்த புதிதில் தமிழில் தட்டச்சு செய்வது மிகக் கடினமாக இருந்தது. பலவிதமான எழுத்துருக்கள். பல வார்த்தைகளை அடிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். அப்படியே அடித்தாலும் அதை இன்னொருவர் படிக்கும்போது சீனப்பெருஞ்சுவர் உடைந்து வீழ்ந்த்துபோல் கட்டம் கட்டமாக இருக்கும். ஷ அடிக்க முடியாது ஆகவே கதாநாயகி கஷ்டப்பட்டாலும் கஷ்டப்பட்டாள் என்று எழுத முடியாது. துயரப்பட்டாள் என்று எழுத வேண்டியிருக்கும். அன்புள்ள மாணவிக்கு என்று தட்டச்சு செய்ய அது அன்புள்ள மனைவிக்கு என்று வந்து ஆசிரியர்களின் குடும்பத்தில் குழப்பங்களெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன.

சில வார்த்தைகள் பலங்காலச் செய்யுட்களில் வருவது போல் அளபெடைகளுடன் மழை தூஊறியது என்றெல்லாம் இருக்கும். அதிலும் ஞ, ங போன்ற எழுத்துக்களை அடிக்க ஜெகஜாலம் செய்ய வேண்டியிருக்கும். ஞாயிற்றுக் கிழமை என்றுதட்டச்சு செய்தால் நாறிற்றுக் கிழமை என்று வரும்.  எழுத்தாளர் இராஜேந்திரகுமார் கதைகளில் வருபவர்கள் ஙே என்று முழித் தனர் என்று எழுதுவார். இன்று அவர் இருந்தால் ஙே என்பதைத் தட்டச்சு செய்ய முடியாமல் ஙே என்று விழிப்பார்.

இப்பொழுது யூனிகோட் முறையில் தட்டச்சு செய்வதால் ஓரளவிற்குச் சுலபமாகத் தட்டச்சு செய்ய முடிகிறது. இருந்தாலும் எதற்கு வம்பு என்று இன்னும் சிலர் தமிழை ஆங்கிலத்திலேயே அடித்துக் கொண்டிருக்கின்றனர். எழுத்தாளர் ஜெயமோகன் கூடத் தமிழை ஆங்கில வரி வடிவத்திலேயே எழுதலாம் என்று சொல்லி யிருந்தார். அதற்காகப் பயலியது கெழீஇய மயிலியற் றெறியெயிர் என்பது போன்ற குறுந்தொகைப் பாடல்களைத் தமிழில் படித்தாலே தலை சுற்றும். இதை ஞயலயடலையவார முநணாலைலைய Payaliyathu Kezhiyiya MayilyaR treyeyiR என்று ஆங்கிலத்தில் படித்தால் அவ்வளவுதான். கண்கள் காளிங்க நர்த் தனம் ஆடிவிடும்.

தட்டச்சு செய்வதைவிட மிகக் கொடுமையான ஒன்று மொழி பெயர்த்தல். சமீபத்தில் எழுத்தாளர் பி.ஏ கிருஷ்ணன் முகநூலில் ஒரு தகவலை இட்டிருந்தார். He is a poor translator என்பதை அவர் ஒரு ஏழை மொழிபெயர்ப்பாளர் என்று மொழிபெயர்த்திருந்தாராம் ஒரு மொழி பெயர்ப்பாளர். உடனே எனக்கு நானும் என் மகளும் விளையாடும் ஒரு விளையாட்டு நினைவிற்கு வந்தது. Terrible Translation என்ற பெயரில் படுகேவலமான மொழிபெயர்ப்பு செய்து விளையாடுவோம். Angry Dry = கோவக்காய், Sin Dry = பாவக்காய், Auction Dry = ஏலக்காய், Caste Dry = ஜாதிக்காய் என்றெல்லாம் மொழிபெயர்த்துக் கொல்வோம். ஷெல்லி இருந்திருந்தால் ஆங்கிலம் இனி அர்ஜெண்டாகச் சாகும் என்றுபாடியிருப்பான். வாய்மையே வெல்லும் என்பதை Lipstick alone wins என்றும் Post Modernism என்பதைத் தபால் நவீனத்துவம் என்றும் மொழி பெயர்த்தவர்கள் உண்டு. ஒரு மாநாட்டைப் பற்றிச் சொல்லும் போது அம்மாநாடு வெற்றி கரமாக முடிந்தது என்பதை The article was Red ink (அம்மா+ நாடு) என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அலற அடிப்பவர்களும் உண்டு. அதற்காக இந்தக் கட்டுரை செம்மையாக இருந்தது என்பதற் காக கூhந யசவiஉடந றயள சுநன iமே (செம்மை= சிவப்பு மை) என்று எனக்குப் பாராட்டுக் கடிதம் அனுப்பவேண்டாம் என்று Low Ink உடன் (தாழ்மையுடன்) கேட்டுக் கொள்கிறேன்.

Related Posts