மாற்று‍ சினிமா

‘மேற்கு தொடர்ச்சி மலை’ எனும் தவற விடக்கூடாத வாழ்வுப்பிரதி . . . . . . . . . . . !

ஒரு கலைப்படைப்பு என்பது காலத்தின் பதிவு. கவிதை, சிறுகதை, சினிமா, ஓவியம் என எந்தக் கலைப்படைப்பும் காலத்தை நிறுத்தி பிரதியெடுத்தலே. மேற்கு தொடர்ச்சி மலை, தேனி தேக்கடி மூணாற்றின் கடந்த எண்பதுகளுக்கு பின்னான காலப்பதிவு.

ஒரு துண்டு நிலம். வரலாறு நெடுக நிலமற்ற உழைக்கும் மக்களின் கனவு இதை நோக்கியே இருந்திருக்கிறது. வாழ்வாதராமாக நிலத்தை அடைய கனவு காணும் உழைக்கும், சுரண்டப்படும் மக்களுக்கும் – நிலத்தை அதிகாரமாக தலைமுறை தலைமுறையாக கையில் வைத்திருக்கும் ஆண்டைகளுக்கும் ஊடாகத்தான் வரலாறு எப்போதும் இருந்திருக்கிறது.

ரங்கசாமி – இன்னமும் தார் ரோடுகளை காணாத ஏண்பதுகளின் தேனி, பண்ணைப்புரம், தேக்கடி மலைப்பகுதியில் ஏலம் தூக்கி ஏறி இறங்கும் தொழிலாளி. ரங்குவின் நிலம் வாங்கும் கனவு ஒரு குடும்ப சண்டையால் முடங்குவதில் தொடங்குகிறது படம்.

மொத்த படத்திலும் இரண்டே இரண்டு நாடகீய தருணங்கள் மட்டும் தான். Locked-down camera angle படம் நெடுக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை இரண்டும் எந்த ஒரு கருத்து திணிப்பும், யாருடைய கோணமும் நோக்கும் இல்லாத வரலாற்றை வெறுமனே எந்த பூச்சும் இன்றி காட்சிப்படுத்தும் படம் இது என நிறுவுவதோடு மட்டுமன்றி பார்வையாளர்களை – சாட்சிகளாக (Witnesses) மாற்றவும் செய்கிறது. நாம் ரங்குசாமிக்காக பதறுவதில்லை, சிரிப்பதில்ல. வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு ரயிலில் பயணிப்பவன் ஜன்னல் வழியே பசியில் பக்கத்து ரயில் தடத்தில் சுருண்டு கிடக்கும் கிழவனை பார்த்துக்கடப்பது போல ரங்கசாமியின் வாழ்வு திரையில் கடக்கிறது.

லெனின் பாரதியின் பாத்திரங்கள், மிக அடர்த்தியானவை. படத்தில் நடித்திருப்பவர்கள் எல்லோரும் அந்த மலை மக்கள். நீங்கள் தமிழக, கேரளத்தின் எல்லா மலைகளிலும் இந்த கதாபாத்திரங்களை காணலாம். பாட்டையாக்கள், தேநீர்க்கடை பாட்டி, எஸ்டேட்டை தந்தைக்கு பின் பார்க்கத்துவங்கும் மைனர் சட்டை மகன், தொழிளாலர்கள் – மக்கள், மாநில எல்லைகளை கடந்து மக்களுக்காக பேசும் சகாவு என அந்த மலையின் மனிதர்கள் அப்படியே திரையில் இருக்கிறார்கள்.

வசனங்கள் மிக கூராக அவர்கள் வாழ்வியலை, அவர்கள் நடைமுறைகளை, அவர்களுகு எது முக்கியம்/எது முக்கியமில்லை, எது அவர்களுக்கான நகைச்சுவை என போகிற போக்கில் யதார்த்தமாக சொல்லிவிட்டு போகிறது. கழுதையை மூட்டை தூக்க விடும் பாட்டைய்யாவுக்கும், நான் தான் தூக்கி சுமப்பேன் என்னும் பாட்டையாவுக்கும் இடையில் நிகழும் உரையாடல் ஒரு உதாரணம்.

உங்களுக்கு மலை பிடிக்கும் தானே? பயணம்? என்றேனும் இந்த மலை எப்படி உருவானது என எண்ணிப்பார்த்து இருக்கிறீர்களா? பஸ்ஸில், சலூனில் உட்கார்ந்து மொபைல் நோண்டிக்கொண்டிருக்கிறோமே தினமும் மலையில் டவர் இல்லாத மக்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என யோசித்து இருக்கிறீர்களா? ரோடுகள் எல்லாம் வருவதற்கு முன் தேயிலையும், மற்ற மலையில் பயிராகும் பொருட்களும் எப்படி சமதள மக்களிடம் சேர்ந்தன? இந்த தொழில் நுட்பம் எல்லாம் வளர்வதற்கு முன் இவர்களது பறிமாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன?

மழை வந்து ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ளும் ஒருவர், தன் மனைவிக்கு எப்படி தகவல் சொல்லியிருப்பார்? உயிர் காக்கும் மருந்துகள் எப்படி மலைக்குள் பயணிக்கும்? பியர் பாட்டில்கள் காலில் ஏறி மரணிக்கும் யானைகளோடு மக்கள் எப்படி உறவாடினார்கள்?

மலையில் வாழும் மக்களின் ஆசைகள் என்ன? தேவை என்ன? நகைச்சுவை எத்தகையது?

ரத்தமும், சதையும், சூடும், குளிரும், மழையும், அட்டையும், மரணமும், உயிர்ப்பும், வாழ்வுமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் லெனின் பாரதி. உங்களுக்கு மலைகளை பிடிக்குமெனில், மனிதர்களை பிடிக்குமெனில், அவர்களை புரிந்து கொள்ள கொஞ்சமேனும் எத்தனிப்பீர்கள் எனில், நீங்கள் தவற விடக்கூடாத வாழ்வுப்பிரதி ‘மேற்கு தொடர்ச்சி மலை’.

– ஷான் சைலேஷ்.

 

Related Posts