இதழ்கள் இளைஞர் முழக்கம்

மேகியை விசமாக்கியது எது? – என். சிவகுரு

மனிதனுக்கு அத்தியாவசியமானத் தேவைகளில் முக்கியமானது உணவு. அதோடு இன்றைய உலகச் சூழலில் மருந்துகளும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்தியாவில் தற்போது சுவீடன் நாட்டு கம்பெனி நெஸ்லேவின் தயாரிப்பான ‘ மேகி ‘ நூடுல்ஸ் தடை விவகாரம் சூடு பிடித்துள்ளது. அன்றாடம் செய்திகளில் மத்திய மாநில அரசுகளின் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வுகள் நடத்துவதும், குழந்தை உணவுகள் மற்றும் சில பொருட்களிலும் வேதியியல் ஆய்வும் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் மேலும் பல பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கலாம் என்றெல்லாம் தொடர்ந்து சொல்லப்படுகின்றது.

தற்போது ஏற்பட்ட திடீர் பரபரப்புக்கு காரணம் என்ன? உத்தரபிரதேச மாநிலத்தின் உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரியான திரு வி.கே பாண்டே, பாராபங்கி மாவட்டத்தில் ஒரு கடையில் உள்ள மேக் நூடுல்ஸ் பாக்கெட்டுகளின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்புகின்றார். அதில் மோனோ சோடியம் குளூட்டோமேட் எனும் வேதிப் பொருள் வரையறுக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக இருப்பது தெரிய வருகின்றது. இந்த வேதிப் பொருள் மணத்தை (FRAGRANCE)    அதிகமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு மையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது. முதலில் உ.பி. அரசும், தொடர்ச்சியாக, பல மாநில அரசுகளும், இறுதியாக மத்திய அரசும் ‘மேகி’ நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கின்றது.

திறந்துவிடப்பட்ட கதவு

‘மேகி’ நூடுல்ஸ் மட்டுமல்ல. இது போன்ற பல உணவுப் பொருட்கள் (பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும்) இன்று நாம் பார்க்கும் இடத்திலெல்லாம் நீக்கமறக் கிடைக்கிறது. பின் தங்கிய மாநிலம், மாவட்டம் என சகல இடங்களிலும் இப்படி கிடைப்பதற்கான வழிகளை உருவாக்கியது 1980களில் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட தாராளமயக் கொள்கை.

ஒரு கட்டுப்பாட்டுடன் கூடிய பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்பட்ட போது தேவையான தரக்கட்டுப்பாடுகள் இருந்தன. எந்நேரத்திலும் ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் விற்கப்பட்டன. வர்த்தகத்துக்கான கதவுகள் அகல திறந்துவிடப்பட்டதன் விளைவு அத்தியாவசியத்தேவை எனக் கருதப்பட்டது குறைவாகவும், தேவையில்லாத உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்கள் பெயரிலானவை மட்டுமல்லாமல், மருந்துகளும் தங்கு தடையின்றி எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிடைக்கப் பெற்றன. அதன் விளைவுகளைத்தான் இந்திய சமூகம் இன்று சந்தித்து கொண்டிருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் உணவுப் பொருட்கள் இந்தியாவிற்குள் வந்தபோது, அதற்கென உருவாக்கப்பட்ட கவர்ச்சிகரமான விளம்பரங்கள், மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வகையில் சொல்லப்பட்ட ’பஞ்ச்’ டயலாக்குகள் மூலம் அனைத்து வயதினரும் மாய வலைக்குள் விழுந்தனர்.

ஏற்கனவே, நம் பொதுப்புத்தியில் அழுத்தி நிறுவப்பட்டிருந்த பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் அனைத்துமே தரமானதாக இருக்கும் எனும் எண்ணம் அவர்களின் வியாபார வெற்றிக்கு உதவியது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் அப்பொருட்களின் தூதுவர்களாய் வந்த பெரும் பிம்பம் கொண்டவர்கள் திரும்பத் திரும்ப நம் கண் முன்னே வந்தது….. கேட்கவா வேண்டும். இப்படி அப்பொருட்களின் வர்த்தகம், விண்ணை முட்டியது. பெரும்பாலான பொருட்கள் நம் வாழ்க்கையின் அங்கமாக அன்றாட அத்தியாவசியத் தேவையாக மாற்றப்பட்டது. சற்றே யோசிப்போம். எத்தனைப் பொருட்களுக்கு நாம் இப்படி அடிமையாகிவுள்ளோம் இன்று?

மறைக்கப்பட்ட சர்ச்சைகள்:

சில ஆண்டுகளுக்கு முன்னர் பன்னாட்டு நிறுவனமான ‘ காட்பரி ‘ (CADBURY) நிறுவனத்தின் தயாரிப்பில் புழு இருப்பதாகவும், தரக்கட்டுப்பாட்டில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை எனும் புகாரும் வந்தது.

அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியது. ஆனால் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. இன்றும் அந்த பொருளின் வியாபாரம் கனஜோராக தங்கு தடையின்றி நடக்கின்றது.

பன்னாட்டுக் குளிர்பானங்களான கோக் மற்றும் பெப்சியில் அளவுக்கு அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ச்சியாக அதை அருந்துவோருக்கு குடல் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்ட சமூக செயற்பாட்டாளர் வந்தனாசிவா தெரிவித்தார். என்ன நடந்தது?

இந்த ஆய்வுகள் முழுவதும் பொய் என்றும் தங்கள் நிறுவனத் தயாரிப்பின் மீது களங்கம் விளைவிக்கும் நோக்கோடு செய்யப்பட்டவை என்றும் சொல்லிவிட்டு வாய் திறக்காத அரசின் துணையோடு இன்று விளையாட்டு போட்டிகளையும் நடத்திட பண உதவி செய்கின்றது.

இப்படி பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் மீதான நியாயமான சந்தேகங்கள் பொது வெளியில் குறைவாகவே விவாதிக்கப்பட்டன. திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது. இது போன்ற பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

உலகமெல்லாம் தடை செய்யப்பட்டால் கூட ஏன் இந்தியாவில் மட்டும் தடையில்லை எனும் கேள்வி நம் அனைவருக்கும் எழும். விடை உங்களுக்கு தெரிந்ததுதான் …………. (உங்களுக்கு தெரிந்த வார்த்தைகளால் கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்க)

தற்போது குழந்தைகள் மத்தியில் பிரபலமான முட்டை வடிவிலான கிண்டர் ஜாய் (KINDER JOY) எனும் சாக்லேட் போன்ற பண்டம் (ரூ 30) உலகத்தில் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பொருள். இதன் மூலப் பொருட்களில் ஒன்றான ஒரு வேதிப் பொருள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்றும் அடிக்கடி உட்கொண்டால் சிந்திக்கும் திறனையே இழ்ந்துவிடுவதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தியக் குழந்தைகளை முட்டைகளாக்கும் ஏற்பாட்டைச் செய்யும் பன்னாட்டு நிறுவனத்துக்கு எவ்வித தடையும் இல்லை. கட்டுப்பாடும் இல்லை. மாறாக நொடிக்கு ஒரு முறை குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் சில குறிப்பிட்ட சேனல்களில் விளம்பரம்

அதேபோல, மேலை நாடுகளில் பிரட் மற்றும் இதர உணவுப் பண்டங்களோடு சேர்த்து உட்கொள்ளப்படும் கெட்சப் (KETCHUP) எனும் ஜாம் போன்ற இனிப்பு பண்டத்தில் மிருகக் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் பொருள் சேர்ந்து இருப்பதாகக் கண்டறியப்பட்டு அது உடல் நலத்திற்கு தீங்கானது என்பதால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் நிலைமையோ தலைகீழ்.

HEINZ எனும் நிறுவனம் தன்னுடைய கெட்சப்பை மிகப் பிரபலமாக்கி அமோகமாக விற்பனை செய்து வருகிறது. தடுப்பதற்கு யாரும் இல்லை. இதைப் போலவே குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி மிட்டாய்கள் (JELLY FRUIT CHOCLATES) தயாரிப்பில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் குடல் செரிமானத்தை பாதிக்கின்றது என ஆய்வுகள் சொன்னதால் பல மேலை நாடுகளில் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இங்கோ அனைத்துக் கடைகளிலும் கலர் கலராய் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஜெல்லி வகைகள்.

இப்படிப் பட்டியல் போட்டால் அரசுகளின் பாராமுகத்தால், அலட்சியத்தால் எந்த பொருள் வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் எனும் அவல நிலை. ஆனால் பத்திரிக்கைகளில் புகைப்படங்களோடு, “ கடைகளில்… உணவுக் கூடங்களில் ஆய்வு” , “பாதுகாப்பற்ற பொருட்கள் பறிமுதல், அழிப்பு” என்று வரும் செய்திகள் பெரும்பாலும் வெறும் கண் துடைப்பு நாடகங்களே!

மருந்திலும் தடைகளே இல்லை

1980களின் துவக்கத்தில் மருந்துத் துறையில் உள்ள மோசடிகளுக்கும் அறிவியலற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக உலக அளவில் பல மக்கள் அறிவியல் இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்க என பலரும் தொடர் பிரச்சாரம் செய்ததன் விளைவாக வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் தாரளமாக கிடைத்துக் கொண்டிருந்த, பயன்பாட்டிலிருந்த மருந்துகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஆனால் மருந்துகள் உற்பத்தியில் அக்காலத்தில் தன்னிறைவு பெறாத நிலையில் இருந்த நம் நாடு உடனடியாக தடை செய்கின்றோம் என்று சொல்லாமல் அறிக்கையை ஆய்வு செய்திட நிபுணர் குழுவை நியமித்தது. தேச நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட அக்குழு தேவையற்ற மற்றும் தடைசெய்யப்பட வேண்டிய (UNWANTED AND BANNED) மருந்துகளின் பட்டியலை வெளியிட்டது.

அதன் பிறகுதான் இந்திய அளவில் மருந்துகள் பற்றிய ஒரு சிறு விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன் பிறகுதான் பிரபலமாக இருந்த வலி நிவாரணி மருந்தான அனால்ஜின்(analgin), உடலுக்கு செயற்கையாக ஊக்க மருந்தாக பயன்படும் மருந்துகள் (ANABOLIC STEROIDS) உள்ளிட்ட பல வகைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டன. கொள்ளை கொள்ளையாக ஈட்டிய லாபத்தை இழக்குமா பன்னாட்டு நிறுவனங்கள்? கொல்லைப்புற வழியாக சில மாற்றங்களை செய்து கொண்டு புதிய வடிவத்தில் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன.

மருந்துகளைப் பொறுத்தவரையில், தடை செய்யப்பட்டதை விட வேண்டாத, தேவையற்றவைகளின் பட்டியல்தான் மிக அதிக அளவில் உள்ளது. எவ்விதப் பலனையும் உடலுக்கு அளிக்காத அதே சமயத்தில் தொடர்ந்து உட்கொண்டால் கேடு விளைவிக்கும் மருந்துகளின் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் ஆணையங்கள் (REGULATORY BODIES) திட்டமிட்டு அரசுகளால் முடக்கப்பட்டுள்ளன. ஆக உணவு, மருந்துகள் விஷயத்தில் அவ்வப்போது சில வெளிச்ச ஒளிக் கீற்றுகள் தோன்றும் (மேகி தடை போல்) அதை மக்கள் இயக்கமாக, விழிப்புணர்வு விஷயமாக மாற்றிட வேண்டும்.

புறச்சூழல் நிலையும்… நமது நிலையும்…

பன்னாட்டு நிறுவனங்களின் சந்தைப் பொருளாக, அடிமையாக நம்மை மாற்றி வருகின்றனர். உணவு மற்றும் மருந்துகளின் விற்பனைக்கு வருவதற்கு முன்னால் செய்யப்பட வேண்டிய கட்டுப்பாட்டு ஆய்வுகள் முழுவதுமாக தவிர்த்து எப்படி வேண்டுமானாலும் அனுமதி பெற்று விடலாம் எனும் நிலை உருவாகியுள்ளது. தாராளமய வெள்ளம் கட்டுப்பாட்டு மதகுகளை உடைக்கின்றது. பன்னாட்டு நிறுவனங்கள் அரசுகளை அதன் கைப்பாவைகளாக மாற்றியுள்ளதால் மக்கள் கையறு நிலையில் உள்ளனர்.

கட்டுப்பாடற்ற சந்தை, தளர்த்தப்படும் விதிகள் என அனைத்துக்கும் வேட்டு வைத்திருக்கும் நிலையில் வெகு மக்கள் எழுச்சியும், தொடர் விழிப்புணர்வும் தான் நமக்கு தீர்வாக இருக்கும். உணவுகளின் மூலம் நம் தலைமுறையினரை பாதிப்புக்குள்ளாக்கும் நவீனச் சுரண்டலைத் தடுத்திட வேண்டிய காலமிது! காரணம் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பால் பல்கே, ‘மேகி’ நூடுல்ஸ் தடையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ”எங்கள் நிறுவனத்துக்கு 3.2 பில்லியன் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, நாங்கள் எப்படியாவது இந்தத் தடையை தகர்ப்போம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நெஸ்லே தலைமை செயல் அதிகாரி சொன்ன “எப்படியாவது” எனும் சொல்லுக்கு நாம் எதிர்வினை ஆற்ற வேண்டிய மாபெரும் பணியினை செய்திடுவோம்.

கொசுறு செய்தி:

சந்தையிலிருந்து கைப்பற்றப்பட்ட 27000 டன் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிப்பதே பெரும் வேலையாக இருக்கிறதாம். பெரும்பாலும் சிமெண்ட் ஆலைகளின் அறவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதாம்

Related Posts