தொழில்நுட்பம்

மெட்ரோ ரயில் மக்களுக்கா? மேட்டுக்குடிகளுக்கா?

– பகத் வீர அருண்

அப்பா!!!! ஒரு வழியா சென்னை மெட்ரோ ரயில் ஓட தொடங்கிடிச்சு.. அம்மா நேருல போகாம சட்டமன்றத்துல இருந்தே ரிமோட் கன்ட்ரோல்ல பொத்தானை அமுக்கி துவக்கி வைச்சுடாங்கோ…

பத்திரிக்கை, பேஸ்புக், வாட்ஸ்சப் என எதைப் பாத்தாலும் மெட்ரோ ரயில பத்திதான் பேச்சு.. ஏகப்பட்ட செல்ஃபி, ரயில் அழக பத்தி, வேகத்தைப் பத்தி ஏகப்பட்ட புள்ளி விபரம் மற்றும் முக்கியமா முதல் மெட்ரோவை இயக்கப்போறவங்க பெண் ஓட்டுனர்கள்தான் என பல தரப்பட்ட கொண்டாட்ட செய்திகள்.. மகிழ்ச்சி தான்…
ஆனால், இப்ப பிரச்சனை இந்த மெட்ரோ ரயில் யாருக்காக்க இயங்கப்போகுது என்பதுதான்.

அறிவிக்கப்பட்டிருக்கிற கட்டணத்தை பாத்தா இது அனைவருக்குமான பொது போக்குவரத்து சேவையாக தெரியவில்லை. கட்டணப் பட்டியலே அனல் பறக்குது. சென்னை மெட்ரோ திட்டத்தில் உள்ள 3 தடங்களில், தற்போது துவங்கியுள்ள ஆலந்துர்-கோயம்பேடு தடத்தில் சுமார் 10 கி.மீ தூரத்திற்கான அதிகப்பட்ச கட்டணம் ரூ40 என்றும் குறைந்த பட்ச கட்டணம் ரூ10 என்றும் நிர்ணயிக்கப்பட்டள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலின் கட்டணம்தான் இந்தியாவிலேயே அதிகம். மெட்ரோ ஏற்கனவே இயங்கும் நகரங்களான கொல்கத்தா, டெல்லி, மும்பை, பெங்களுர் என அனைத்தையும் விட அதிக கட்டணம் சென்னையில் தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மெட்ரோவில் குறைந்த கட்டணம் 10 ரூபாயும் அதிக பட்சம் 30 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் Huda city centre to Jahangirpuri செல்ல 43 கி.மீ தூரத்தைக் கடக்க 73 நிமிட பயணத்திற்கு கட்டணம் ரூ.29 தான்.

அதேபோல் dwaraga sec-21 to golf course station பயணம் தான் டெல்லி மெட்ரோவில் அதிக தூரம் என்று நினைக்கிறேன். இதன் மொத்த தூரமான 47 கி.மீ கடக்க 86 நிமிட பயணத்திற்கு கட்டணம் வெறும் 30 ரூபாய். கொல்கத்தாவில் மெட்ரோவில் குறைந்தபட்ச கட்டணம் வெறும் 5 ரூபாய் எனவும், அதிகப்பட்ச கட்டணம் ரூ 25 உள்ளது. முதல் 5 கி.மீ பயணத்திற்கு ஐந்து ரூபாயும், 10 கி.மீ பயணத்திற்கு பத்து ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவின் அதிக விலைவாசியுள்ள பெருநகரங்களாக கருதப்படும் மும்பை மற்றும் பெங்களூரு மெட்ரோவில் கூட சென்னையை விட கட்டணம் குறைவுதான். பெங்களூருவில் குறைந்த பட்சம் ரூ 10, அதிக பட்சம் ரூ 17 வசூலிக்கின்றனர். ரிலையன்ஸ் நிறுவனமே நேரடியாக வசூல் வேட்டை நடத்தும் மும்பையில் கூட அதிகபட்ச தொலைவிற்கு 40ரூபாயும், குறைந்த பட்ச கட்டணம் ரூ 10 வசூலிக்கப்படுகிறது.

மேற்கண்ட அனைத்து நகரங்களையும் விட அதிக கட்டணம் வசூலிக்கும் அளவிற்கு சென்னை என்ன அப்பேர்பட்ட அப்பாடக்கர்களின் நகரமா?? என்ன? தற்போது தொடங்கியுள்ள தடத்தில் மட்டும் 10 கி.மீ தொலைவு பயணகத்திற்கே ரூ.40 என்றால். இனிமேல் இயக்கப்பட உள்ள தடங்களில் மீனம்பாக்கம் முதல் வண்ணாரபேட்டை வரை போய் சேர ஆகும் 24 கி.மீ பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்போகிறார்கள் என்று நினைத்தால் தலையை சுற்றுகிறது.

உண்மையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் உருவாக்கமே எழை மக்களுக்கான திட்டமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நகருக்கு வந்து செல்ல குறைந்த கட்டணத்தில், விரைந்த பயணம் மற்றும் சென்னை நகரத்தின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது என்ற அடிப்படையில்தான் திட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால் இது இன்று சென்னை நகருக்குள் பயணிக்கும் ரயிலாக மாறிவிட்டது. மேலும் சென்னை மெட்ரோ தடத்தை முடிந்த வரை வடசென்னை பக்கம் வராம நம்ம அ(ச)திகாரத்தில் உள்ளோர் மிக கவனமாக பார்த்துக்கொண்டனர்.

இதன் மூலம் பெரும்பகுதி உழைப்பாளி மக்களை மெட்ரோ ரயில் பயன்பாட்டில் இருந்து லாவகமாக ஒதுக்கிவிட்டனர். இப்பொது இயங்கும் பகுதியிலும் கட்டணத்தை அதிகமாக நிர்ணயிப்பதின் மூலம் மெட்ரோ ரயிலை முழுமையாக ஏழை எளிய மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக மாற்றி அவர்களை தவிர்க்க நடக்கும் திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கையாகவே இதனை உணர முடிகிறது.

பின்குறிப்பு-
“ஏன்டாப்பா, ஸ்பீடா போறது, குளு குளு ஏ.சி வேற, 40ரூ கொடுத்தா கொறஞ்சா பொயிட்றது”?

“ப்ரோ, திங்க் பாசீடிவ் ப்ரோ!! டிக்கட் ஃபேர் ஜாஸ்தியா இருந்தா, சர்வீஸ் நல்லா இருக்கும்”.

இப்படி எவனாவது மொன்னையா பேசிகிட்டு திரிவான். அவன கண்டா கலுத்து மேலயே ரெண்டு போட்டு அனுப்புங்க?? தப்பே இல்ல!!!

ஏன்னா இவனுங்க வெளியில பேசுறது இப்படி? உள்ள மைன்ட் வாய்ஸ் என்னான்னா?

“மெட்ரோ டிக்கட் விலைய அதிகமா வெச்சா, கும்பல் அதிகம் வராது. நாம எப்பவுமே உட்கார்ந்துகிட்டு சௌரியமா குளு! குளுனு ஏசியில போயிவரலாம்“ என்பதுதான்.

Related Posts