இதழ்கள் இளைஞர் முழக்கம்

முரண்பாடு வெடித்து போராட்டமாகக் கிளம்புகிறது – எஸ்.பாலா

யாரும் கோரிக்கை வைக்காமல்? தீர்மானம் போடாமல்? மனுக்கொடுக்காமல்? போராட்டம் செய்யாமல்? பத்தாயிரம் கோடியில் ஒரு திட்டம் வருகிறது. என்ன ஒரு ஆச்சரியம்! அதுவும் நமது தமிழகத்தில்.
இதுவரை கவனத்தில் கொள்ளாத குடிதண்ணீர் துவங்கி ரேஷன் கடை வரை பல ஆண்டு காலமாக கோரிக்கைகள் நீடிக்கின்றன தமிழகத்தில்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதாக கூறிய அறிவிக்கப்பட்ட திண்டுக்கல், விருதுநகர் மருத்துவக் கல்லூரிகள்.

கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டு கலெக்டர், எஸ்பி என அனைவரிடமும் மனுக்கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே மாண்டு போன இசக்கி முத்து குடும்பம் இறந்த தமிழகத்தில்.

மக்கள் போராடிய போது அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் 13 பேரை சுட்டுக்கொன்ற (பின்தான் ஆலையை மூடியது) தமிழகத்தில்.
இப்படி ஒரு பசுமை வழித்திட்டமா? ஆம். தமிழகத்திற்குத் தான். அது மட்டுமல்ல. அவசர வழித்திட்டமாக மிகத் தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே சென்னையில் இருந்து சேலத்திற்கு மூன்று வழிகளில் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு நான்கு வழிச்சாலைகள் ஆகும். தற்போது அமையவிருக்கும் சாலை சென்னை – வண்டலூர் துவங்கி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் புறவழிச்சாலை வரை அமைக்கப்படுகிறது. இதன் பயண தூரம் 277 கிமீ ஆகும். இதில் 120 கிமீ வேகத்தில் பயணம் செய்திடலாம் என திட்ட அறிவிக்கை குறிப்பிடுகிறது. இதனால் பயணதூரத்தை மூன்று மணி நேரத்தில் கடந்து செல்ல முடியும்மென்று கூறுகிறார்கள்.

இந்த திட்ட அறிக்கையில் குறிப்பிடும் நன்மைகளின் முக்கிய அம்சம் இதுதான். இந்த பசுமை வழிச்சாலை மூலம் தொழிற்சாலை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இணைக்கப்படும். இப்பாதை பயன்பாடு மூலமாக இவ்வட்டாரத்தில் தொழிற் வளர்ச்சி என்பது ஏற்படும். வளர்ச்சி ஏற்படும் என்பது சரி. ஆனால் யாருக்கு வளர்ச்சி? எப்படிபட்ட வளர்ச்சி என்பதுதான் இந்திய மக்கள் எழுப்பும் முக்கியமான கேள்வி.

1990 களில் தொடர்ந்து சொல்லப்படும் பொய்களில் முக்கியமானது வளர்ச்சி என்பதுதான். இதுநாள் வரையில் யாருக்கு வளர்ச்சி என்று ஆராய்ந்தால் பயனடைந்தவர்கள் பற்றிய உண்மை வெளிவரும். இத்திட்டங்களுக்கு புதிய பொருளாதாரக் கொள்கை, டங்கல் திட்டம், உலகமய, தனியார்மய, தாராளமய கொள்கைகள் தான் மூலாதாரமாகும்.

இத்திட்டங்களின் மூலமாக கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, இயற்கை வளம், சுற்றுச்சூழல் போன்றவைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இம்மாற்றங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நலனுக்கானதாகதான் இருக்கிறது. கல்விக் கட்டணத்தை செலுத்த மத்தியதர வர்க்கத்தினர்கூட கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கடனைக்கூட மாதத் தவனை முறையில் செலுத்தி வருகின்றனர். இதனைத் தனியார் பள்ளிக்கூடங்களே ஏற்பாடுகள் செய்வதாக தகவல்கள் உள்ளன.
மருத்துவம் பார்க்க செலவழிக்கும் பணத்தினால் மக்கள் ஏழையாகி வருகின்றனர் என மேனாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியது நினைவிற்கு வருகிறது. வேலை வாய்ப்பின் தன்மை என்பது மாற்றப்பட்டு காலவரையறைக்குட்பட்ட வேலைவாய்ப்பு முறை தீவிரமாக புகுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுரண்டப்பட்டு வருகிறது. இதில் இந்திய அரசின் உள்நாட்டு உற்பத்திக்கும் அதிகமான பணம் புரள்கிறது.
நாம் வாழும் பூமி என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. கோடான கோடி உயிரினங்களையும் உள்ளடக்கியது. எல்லா உயிரினங்களுக்குமான உணவுச் சங்கிலியையும் கொண்டு உள்ளது. இப்பூமியை எந்த வரையறையும் இல்லாமல் சுரண்டுவது மிகப்பெரிய குற்றமாகும். மீண்டும் ஒருமுறை யோசித்துப் பாருங்கள். இப்படி அழிக்கும் கொள்கையால் பூமியை மீண்டும் உருவாக்கிட முடியுமா?

இந்தப் பின்னணியில் தான் வருகின்ற ஒவ்வொரு திட்டத்தையும் அலசி ஆராய வேண்டியுள்ளது. பசுமை வழிச்சாலை முன்வைக்கும் நன்மைகள் குறித்த விஷயங்களை இனிபார்க்கலாம்.

  • மூன்று பாதைகள் இருக்கும் போது மற்றொரு பாதை எதற்கு?
  • வாகன பெருக்கம்தான் காரணம் எனில் இவ்வழியில் செல்லும்
  • வாகனங்கள் எவை? யாருக்குச் சொந்தமானது?
  • நேரம்தான் காரணம் எனில் எந்த அடிப்படையில் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நேரம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
  • 10 ஆயிரம் கோடி செலவழிப்பதாக சொல்லும் அரசாங்கம் ஒன்பது இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க யாருக்கு அனுமதி அளிக்கிறது?
  • 7500 ஏக்கர் நிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 7 ஆறுகள், 8 மலைகளை அழிப்பதற்கு பெயர் பசுமை வழிச்சாலையா?

நெல்லுக்கு உற்பத்திச் செலவைக் கேட்டால் தரமறுக்கும் அரசு, ஏக்கருக்கு ரூ. 9 கோடி தருகிறேன் எனச் சொல்வதன் மர்மம் என்ன?

இவ்வளவு கேள்விகள் இருப்பின் தமிழக அரசின் பதில் என்ன? எட்டு வழிச்சாலை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனச் சட்டமன்றத்தில் அறிவிக்கிறது தமிழக அதிமுக அரசு.

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டி இல்லாத அரசாகவே உள்ளது. ஆனால் மக்கள் விரோதத் திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது.

மத்திய அரசின் கொள்கையை முன்நின்று அமல்படுத்தத் துடிக்கும் அடிமை அரசாகவும் மாறியுள்ளது. எந்த குற்றச் செயலையும் செய்து நிதி மூலதனத்தின் அசுர லாபத்தினை பெருக்கிட இவர்கள் தயங்கிடவில்லை.
எட்டு வழிச்சாலை செல்லும் வழியெங்கும் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. திருவண்ணாமலையில் கவுத்தி, வேடியப்பன் மலைகள் உள்ளன. இம்மலைகளில் 35 லட்சம் டன் இரும்புத் தாது உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு 325 ஹெக்டேர் நிலத்தில் சுரங்கம் அமைத்து இரும்புத்தாதுக்களை பிரித்தெடுக்க ஏற்கனவே திட்டம் உள்ளது. வருடம் ஒன்றுக்கு 1 லட்சம் டன்னாகும். இக்குறிப்பிட்ட மலைகளின் வயது 5,70,48,000 மில்லியன் ஆகும். இதுபோக இன்னும் 6 மலைகள் உள்ளன. இதில் கஞ்சமலையில் 229 மீட்டர் 5.5 கோடி லட்சம் மூலப்பொருட்கள் இருப்பை கொண்டுள்ளது.

மலை என்பது இயற்கைக் கொடை. முதலாளித்துவ சுரண்டல் அமைப்பானது இயற்கையை அதன் சொத்தாக பாவிக்கும் பார்வைக் கோளாறு கொண்ட அமைப்பாகும். இயற்கை வளங்களை அதானிக்கும், ஜின்டாலுக்கும் தனிச்சொத்தாக மாற்றிடும் திட்டத்தைதான் அமலாக்க துடிக்கிறது மோடியின் எடுபிடி அதிமுக அரசு.

“முழுமையான அறிவுடன் மனிதர்கள் புரியும் தீயச் செயல்தான் துரோகம்”. ஆம். ஆளுகின்ற அரசுகள் இதைத்தான் செய்து வருகின்றன. ஒரு விஷயத்தைத் தெரியாமல் செய்வது தவறு. அதனை இவர்கள் தெரிந்தே செய்கின்றனர்.

இன்றைக்கு சொந்த மக்களுக்கு எதிரானத் திட்டங்களை நிறைவேற்றுவது தீவிரமடைந்து வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பயனாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்துத் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தால் கூட தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் பெயரால் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜனநாயக நாட்டில் அமைதி வழிப்போராட்டம் கூட மறுக்கப்பட்டு வருகிறது.

இந்திய நாடு முழுவதும் நிலப்பறிப்பு என்பது பல்வேறு பெயரில் நடைபெற்று வருகிறது. நான்கு, எட்டு, பதினான்கு வழிச்சாலைகள் என்ற பெயரில் சாலை அமைப்பது அதிகரித்துள்ளது. சென்னை முதல் சேலம் வரை, மதுரையிலிருந்து தஞ்சை என தற்சமயம் தமிழ்நாட்டில் இரண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தங்க நாற்கரச் சாலை உயர்தர நெடுஞ்சாலைகள், சரக்குப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவை சிறப்புப் பொருளாதார மண்டலம், தனியார் தொழிற்சாலைத் திட்டங்கள், காற்றாலை கடலொர மேலாண்மைத் திட்டம், இராசயன மண்டலங்கள் என பல வகையில் பாதித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு நிலப்பறிப்பு என்பது தீவிரமடைந்து வருகிறது.

1857 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரில் பகதூர்ஷா அரசு மீண்டும் உருவானது. அந்த அரசின் திட்டத்தில் நிலச்சீர்திருத்தம் வாக்குறுதியாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின்னரும் நிலக்குவியல் என்பது உடைக்கப்படவில்லை. நிலச்சீர்திருத்தம் என்பது முறையாக அமல்படுத்தப்படவில்லை. இதனால் பெரும்பகுதி மக்களுக்கு காலம் காலமாக நிலம் என்பது உரிமையாக்கப்படவில்லை. உழைப்பை செலுத்திய போதும் நிலத்தின் மீது உரிமையில்லாத நிலையே தொடர்ந்தது.
தற்சமயம் மத்திய, மாநில அரசின் கொள்கைகளால் மக்களிடம் உள்ள எஞ்சிய நிலத்தையும் பறிக்கும் கொடூரக் கரம் கொண்டதாக அரசின் தன்மை மாறியுள்ளது. மக்கள் நல அரசு என்பது இன்று கார்ப்பரேட் நல அரசாக பரிணமித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெற்ற பணத்திற்காக விசுவாசமான தனது சேவையை தீவிரபடுத்தியுள்ளது. இதனால் வளர்ச்சி எனும் முழக்கத்தை இந்திய மக்கள் ‘கார்ப்பரேட் வளர்ச்சி’ என புரிந்து கொள்ளத் துவங்கியுள்ளனர்.

கார்ப்பரேட் வளர்ச்சிக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு வெடித்து போராட்டமாகக் கிளம்புகிறது. இதன் விளைவாக போராட்டக் களத்திற்கு மக்கள் வந்துள்ளனர். போராட்டங்கள் தோற்பதில்லை என்ற வரலாறு திரும்புகிறது.

Related Posts