அரசியல் சமூகம் வரலாறு

மீண்டெழும் மாற்றுகள் – 1

முதலாலித்துவம், மூலதனம், உழைப்பு, உபரி மதிப்பு, சமூக நீதி, பெண்ணியம், உலக பொருளாதாரம், உலக அரசியல் போன்றவற்றை பற்றி பேசும் பொழுது தவிர்க்க முடியாதவர் கார்ல் மார்க்ஸ். உழைக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை, திறமையை அழிப்பது மட்டுமின்றி பூமியின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் முதலாலித்துவத்தை பற்றி முதன்முதலில் கண்டு உலகறியச் செய்த பெருமை அவரையேச் சேரும். ஆனால் முதலாலித்துவ மீடியாக்கள் அவரை கம்யூனிசத்தின் தந்தை என்று மட்டுமே வர்ணிக்கிறது.

மார்க்ஸ்-ஏங்கல்ஸ்

முதலாலித்துவத்தை தீவிரமாக ஆராய்ந்த மார்க்ஸும் ஏங்கல்ஸும், அதன் குணாதசியங்களையும், உள் முரண்பாடுகளையும் அதனால் ஏற்படும் கேடுகளையும், அது எப்படி ஒரு நிலையில்லாத ஒரு கட்டமைப்பு என்று விளக்கியதோடு மட்டும் நில்லாமல் முதலாலித்துவத்திற்கு மாற்று என்று கார்ல் மார்க்ஸும், அவரது தோழரான ஏங்கல்ஸும் முன்வைத்தது கம்யூனிசம் என்னும் கோட்பாட்டை. ஃபெரஞ்சு புரட்சியின் விளைவாக தோன்றிய கம்யூன்களை (Commune) அடிப்பகடையாக வைத்தே கம்யூனிச கோட்பாட்டை அவர்கள் முன்வைத்தனர். கம்யூனிச சமுதாயமானது எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுத்த மார்க்ஸும், ஏங்கல்ஸும், ஒரு சமூகக் கட்டமைப்பிலிருந்து கம்யூனிச சமூகக் கட்டமைப்புக்கு எப்படி நகர வேண்டும் என்று எந்த ஒரு ரெடிமேட் (Readymade) வழிமுறையையும் முன்வைக்கவில்லை. அப்படி வைப்பது மடத்தனம் என்றும் அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் ஒன்றை மட்டும் மிகத் தெளிவாக அவர்கள் இருவரும் கூறிவிட்டனர். அது என்னவென்றால், முதலாலித்துவவாதிகள் அவ்வுளவு எளிதில் தாங்கள் சுரண்டிய சொத்துக்களை உழைக்கும் வர்கத்திடம் ஒப்படைத்துவிட மாட்டார்கள். அவர்களிடம் இருக்கும் பொருளாதார பலத்தின் வழியே அவர்களின் அரசியல் பலத்தைக் கூட்டி, அரசு என்னும் இயந்திரம் மூலம் தனியுரிமைச் சொத்துகளுக்காண சட்டத்தை அவர்களுக்கு ஏற்றாற்போல் மேலும் உறுதியாக்கிக் கொள்வதோடு, இதற்கெதிரான எந்த போராட்டத்தையும் அரசு அதிகாரத்தின் (இராணுவம், போலீஸ், மற்றும் பல) மூலமாகவே ஓடுக்கிவிடுவார்கள் என்பதே! இதன் அடிப்படையிலேயே 20-ஆம் நூற்றாண்டில் ‘கிளர்ச்சியின் மூலம் புரட்சி‘ என்னும் வழிமுறையை ரஷ்யா போன்ற பல நாடுகள் கையிலெடுத்தன.

ரஷ்ய புரட்சி

ரஷ்யாவில் ஜனநாயகத்திற்கு எதிரான மன்னர் ஆட்சிக்கு எதிராக 1907-ல் புரட்சி நடந்தது. கம்யூனிசக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் இப்புரட்சியை வழிநடத்தினர் போல்ஷெவிக்குகள். புரட்சியின் நோக்கம் இரண்டு.

  1. அதிகாரம் மையத்தில் குவிந்து கிடக்கும் மன்னர் ஆட்சியை தூக்கி எறிவது.
  2. ஏற்கனவே இருந்த மன்னர் ஆட்சி முறைக்கு மாற்றாக ஒரு புதிய சமூகத்தை கட்டமைப்பது.

அப்போது லெனினுக்கு இரண்டு மாற்றுகள் இருந்தன.

  1. முதலாலித்துவம் (தனியுடைமைச் சமூகம்).
  2. கம்யூனிசம் (பொதுவுடைமைச் சமூகம்).

ரஷ்ய புரட்சி நடந்தது முதலாம் உலகப் போர் நடந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அப்போருக்குக் காரணம் முதலாலித்துவத்தின் உச்சகட்டம் என்று லெனின் கருந்திய ஏகாதிபத்தியம் ஆகும். அதாவது ஒரு நாடு மற்றொரு நாட்டை அடிமையாக்கி அதன்மூலம் தன் நாட்டுக்கு வளங்களை சேர்க்கும் போக்கு. மார்க்ஸ், ஏங்கல்ஸ் என்று பலரைப் படித்த லெனினுக்கு முதலாலித்துவம் எப்படிப்பட்டது என்பது தெரியும். எனவே அவர் மன்னர் ஆட்சியிலிருந்து, முதலாலித்துவத்தைத் தவிர்த்து,  சோஷலிசம் (Socialism), பின் அங்கிருந்து கம்யூனிசம் என்று சமூகத்தைக் கட்டமைக்கலாம் என்று கருதியிருக்கிறார்.

கம்யூனிசமே இலக்கு என்று பயணிக்கத் தொடங்கியது சோவியத் யூனியன் (U.S.S.R) என்னும் ரஷ்யா. லெனினின் மரணத்திற்குப் பின் நிகழ்ந்த பல்வேறு தவறுகள் மற்றும் முதலாலித்துவ நாடுகளின் ராணுவ, பொருளாதார நெருக்கடி மற்றும் சதி ஆகியவற்றால் 1990-களில் சோவியத் யூனியன் உடைந்தது. உலகில் முதலாலித்துவ நாடுகளின் மத்தியில் இந்தியா, ஆப்ரிக்கா போன்ற காலனிய ஆதிக்கத்திற்கு அடிமையாய் இருந்த நாடுகளுக்கு பெருமளவில் நம்பிக்கைத் தந்த ஒரு மாற்று சக்தியாக இருந்த சோவியத் யூனியன் உடைந்தது ஒரு பின்னடைவே.

சோவியத் யூனியன் உடைந்து விட்டது, எனவே கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று முதலாலித்துவ நாடுகள், அவைகளின் தனியுடைமைக் கட்டுப்பாட்டில் இருக்கும் பத்திரிக்கைகள் மூலம் புரட்டு செய்தியை பரப்பியது. இது ஏன் பரட்டு செய்தி என்றால், கம்யூனிசமே இலக்கு என்று மிகவும் பிற்போக்கான சூழலில் வளர்ச்சியைக் கண்டிறாத ஒரு நிலையிலிருந்து பயணிக்கத் தொடங்கியது சோவியத் ஒன்றியம், ஆனால் அது கம்யூனிசத்தை அடைவதிலிருந்து மிக மிக வெகு தொலைவில் இருந்தது.

அதைவிட முக்கியமானது, கம்யூனிசம் என்பது ஏதோ ஒரு நாட்டில் மட்டும் வந்துவிட முடியாது. காரணம் முதலாலித்துவச் சந்தை என்பது ஒரு சர்வதேசச் சந்தை, அதற்கு மாற்று என்னும் கம்யூனிசமும் ஒரு சர்வதேச அளவில் எட்டப்பட வேண்டிய ஒன்று. அதனால் தான் மார்க்ஸ் “உலக உழைப்பாளிகளே ஒன்று சேருங்கள், உங்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை, பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் இருக்கிறது” என்று உலக உழைப்பாளிகளுக்கு அறைக்கூவல் விடுத்தாரே தவிர, ஏதோ ஒன்றிரண்டு நாடுகளுக்கு மட்டும் அவர் அழைப்பு விடுக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தில் அறங்கேறிய புரட்சி என்பது அரசு இயந்திரத்தைக் கைப்பற்றி அதன் உழைக்கும் மக்களுக்கான சோவியத்துகளை வலுப்படுத்தி படிப்படியாக உலகின் பல்வேறு நாடுகளில் புரட்சிகளுக்கு வழிவகுத்து அதன் மூலம் முதலாலித்துவத்தை எதிர்த்து உலக உழைக்கும் வர்கத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதே! அது போலத்தான் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் புரட்சி வெடிக்கத் துவங்கியது. அதன் பின்னணியிலேயே உலக கம்யூனிச அகிலமும் (Communist International) தோற்றுவிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மன்னர் ஆட்சியிலிருந்த சோவியத் யூனியனில் லெனின் தலைமையிலான அரசு அமைந்து இதுவரை எந்த முதலாலித்துவ நாட்டிலும் இல்லாத திட்டங்கள் இங்கே கொண்டுவரப்பட்டன. ஒரு பக்கம் ரஷ்யாவின் எழுச்சியைக் கண்ட இந்திய சுதந்திர போராட்டக்காரர்களில் பலர், அதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு இங்கும் விரைவாக புரட்சி நடத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டனர். அதில் முக்கியமானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், இ.வெ.ராமசாமி என்னும் பெரியார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இப்படி பல்வேறு நாடுகளில் கிளர்ந்தெழுந்த புரட்சியைக் கண்டு அஞ்சிய முதலாலித்துவ நாடுகள், இதுவரையில் அவர்கள் நினைத்திராத மக்கள் நல (சமூகநல) திட்டங்களை (Welfare Schemes) அவர்கள் நாட்டில் கொண்டுவந்தனர். சோவியத் யூனியனில் இப்புரட்சி நடந்திராவிட்டால் ஐரோப்பா முதல் பலக் கண்டங்களில் தொழிற்சங்கம் வைக்கும் உரிமை, எட்டு மணி நேர வேலை, ஓய்வூதிய திட்டங்கள், அரசு காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.

கம்யூனிசம் ஏற்கனவே தோற்றுவிட்டது என்கிற புரட்டுச் செய்தியை இன்றளவில் செய்து வருகிறது முதலாலித்துவ மீடியாக்கள். கார்ல் மார்க்ஸ் தான் கம்யூனிசத்தின் தந்தை என்று கூறும் முதலாலித்துவ பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், அவர் தான் முதலாலித்துவத்தின் தோளை உலகிற்கு உரித்துக் காட்டியவர் என்பதை மறைக்கிறது. காரணம், முதாலித்துவத்தின் தன்மைகள் புரியத் தொடங்கிவிட்டால், அதற்கு மாற்று என்கிற சிந்தனையில் பலர் இறங்கிவிடுவர். அதனால் தான் TINA (There Is No Alternative) என்று மார்கெரெட் தட்சர் என்னும் பெண்மனியின் கூற்றையும் சேர்த்தே பரப்பி வருகிறது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் காரணமாக மாற்றே இல்லை என்ற முடிவுக்கு வரலாமா? இல்லை 21-ஆம் நூற்றாண்டிற்கான மாற்று வழிகள் இருக்கின்றனவா? அல்லது முதலாலித்துவம் தான் வரலாற்றின் இறுதி பாகமா? தொடர்ந்து தேடுவோம்.

Related Posts