சொல்லப்படாத அமெரிக்க வரலாறு தொடர்கள்

மீண்டுவருமா வாழைப்பழதேசம்? (ஹோண்டுரஸ்) – 3

தொடரின் முதல் இரண்டு பகுதிகள் – முதல் பகுதி , இரண்டாம் பகுதி

புதிய அதிபர்… புதிய கொள்கைகள்…

இப்படியாக, ஆட்சியாளர்களையும் அரசையும் கலைப்பதும் மாற்றுவதும் கவிழ்ப்பதுமாக இருந்தாலும், ஹோண்டுரசை வெறும் வாழைப்பழ விலை நிலமாக மட்டுமே வைத்திருந்தன வாழைப்பழ நிறுவனங்களும், அவர்களுக்கு உதவி புரிந்த அமெரிக்க அரசும். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோண்டுரசை மாறிமாறி ஆண்டுவருவது “ஹோண்டுரஸ் தேசியக்கட்சி” மற்றும் “ஹோண்டுராஸ் லிபரல் கட்சி” ஆகிய இரண்டே இரண்டு தீவிர வலதுசாரிக் கட்சிகள்தான்.அவர்களுக்குள் கொள்கைகளில் பெரிய வேறுபாடில்லையென்பதால் வட அமெரிக்க அரசிற்கோ, வாழைப்பழ நிறுவனங்களுக்கோ ஹோண்டுரசைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் எவ்வித சிக்கலும் இருந்ததில்லை.

2006 இல் நடந்த அதிபர் தேர்தலில், மிகப்பெரிய செல்வந்தரும் தொழிலதிபருமான மேனுவேல் செலயா “ஹோண்டுரஸ் லிபரல் கட்சி”யின் சார்பாகப் போட்டியிட்டு, வெறும் 3% ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஹோண்டுரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்றத்தில் அவரது கட்சி, மொத்தமுள்ள 128 தொகுதிகளில் 62இல் வெற்றிபெற்றது. அதிபராகப் பதிவியேற்றபின், ஹோண்டுரசின் தலைவிதியை மாற்ற வழியேதும் புலப்படவில்லை அவருக்கு. ஆனால், அருகாமை நாடான வெனிசுவெல்லா பரம ஏழை நாடு என்கிற அபாயநிலையிலிருந்து அதிவேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்ததைப் பார்த்தார் மேனுவேல் செலயா. தீவிர வலது சாரிகொள்கைகளுடைய ஒரு கட்சியின் சார்பாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேனுவேல் செலயா, தென்னமெரிக்காவில் அடித்துக்கொண்டிருந்த “சாவேஸ் புயலால்” ஈர்க்கப்பட்டார். சாவேசுடன் அடிக்கடி சந்தித்து, வெனிசுவெல்லாவின் வளர்ச்சி இரகசியத்தை அறியத் துவங்கினார். சாவேஸ் துவங்கிய “அல்பா” என்கிற தென்னமெரிக்க பொலிவாரியக் கூட்டமைப்பில் ஹோண்டுரசையும் இணைத்துக்கொண்டார். ரால் காஸ்ட்ரோ மற்றும் சாவேஸ் ஆகியோருடன் நெருங்கிப் பழகலானார். மக்கள் நல அரசாக செயல்படுவதே, நாட்டின் வறுமையைப் போக்கும் ஒரே இரகசியம் என்பதைக் கற்றுணர்ந்தார். உலக வரலாற்றிலேயே தீவிர வலதுசாரிக் கட்சி அதிபரொருவர், இடதுசாரிக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு மக்கள்நலன் குறித்து சிந்திக்கத்துவங்கிய முதல் மனிதர் மேனுவேல் செலயாதான் என்று சொல்லுமளவிற்கு ஹோண்டுரசின் ஆட்சிமுறையினையே மாற்றினார். வெனிசுவெல்லாவின் அடியொற்றி, மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தத் துவங்கினார். ஹோண்டுரஸ் மக்கள் இத்தனை ஆண்டுகளாக பார்த்திராத திட்டங்கள் அவை என்பதால், மக்களின் ஆதரவு அவருக்கு பெருகியது.

  • எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி
  • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அரசு மானியம்
  • விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்
  • குறைந்தபட்ச் ஊதியம் 80% அளவிற்கு உயர்வு
  • 16 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத்திட்டம்
  • தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைப்பு
  • இரண்டே ஆண்டுகளில் நாட்டின் வறுமை 10% சரிவு
  • மிகக் கொடுமையான வறுமையில் இருந்த 2 லட்சம் குடும்பங்களுக்கு நேரடி அரசு உதவிகள்
  • மின்சாரத்தையே பயன்படுத்தியிராத ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம்

Manuel Zelaya

இவ்வாறாக பல நூறாண்டுகளாக இருளில் தத்தளித்துக் கொண்டிருந்த ஹோண்டுரஸ் மக்களை வெளிச்சத்தினை நோக்கி அழைத்துச் செல்லத் துவங்கினார் மேனுவேல் செலயா. வெளிச்சம் வெகுதூரத்திலிருந்தாலும், அவர் அழைத்துச் செல்லும் பாதை வெளிச்சத்தினை நோக்கிய சரியான பாதையாக இருந்தது. மக்கள் ஆதரவு பெருகியிருந்தாலும், அவருக்கு எதிர்ப்பு அவரது கட்சியிலிருந்தே ஆரம்பித்தது. ஆண்டாண்டு காலமாக பெருமுதலாளிகளுக்கே சாமரம் வீசிய கட்சியாயிற்றே அவரது கட்சி. சோசலிச பாதையில் நடைபோட விட்டுவிடுமா என்ன? பாராளுமன்றத்திலும் அவரது கொள்கைகளுக்கு எதிராக ஒற்றுமையாகப் பேசினர் அவரது கட்சி எம்பிக்களும் எதிர்க்கட்சியான “ஹோண்டுரஸ் தேசியக் கட்சி” எம்பிக்களும். அதோடு, ஹோண்டுரஸ் நாட்டின் அரசியலமைப்புச் சட்டமானது, 1982 இல் இராணுவ ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டமாகும். அது மக்கள் நலனுக்கு எதிரானதாகவே இருந்தது. எனவே தென்னமெரிக்காவில் ஈக்வடார், பொலிவியா, வெனிசுவெல்லா போன்ற நாடுகள் தங்களது அரசியலமைப்புச் சட்டத்தினை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியதுபோல, ஹோண்டுரசின் அரசியலமைப்புச் சட்டத்தினையும் மாற்றியமைக்க முடிவு செய்தார் மேனுவேல் செலயா. இதனை நிச்சயமாக பாராளுமன்றத்தில் கொண்டுவந்தால், முதலாளிகளின் வடஅமெரிக்காவின் தோழர்களான எம்பிக்கள் தோற்கடித்துவிடுவார்கள் என்பதனை நன்கு உணர்ந்திருந்தார். எனவே அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்றலாமா வேண்டாமா என்று நாட்டின் ஒட்டுமொத்த மக்களிடமும் கருத்துக் கேட்க ஒரு ஓட்டெடுப்பு நடத்த முடிவெடுத்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தினை “மாற்றலாம்” அல்லது “வேண்டாம்” என்று மக்களே தீர்மானிக்கட்டும் என்று மேனுவேல் செலயா அறிவித்தார். இதற்கு மக்கள் மத்தியில் பெரியளவில் ஆதரவு உருவாகிற்று. மாணவர்கள், ஆசிரியர்கள், பழங்குடி மக்கள், தொழிற்சங்கங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மேனுவேலின் பரிந்துரையினை ஆதரித்து ஒரு மாபெரும் பேரணி நடத்தினர். 48000 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட ஹோண்டுரஸ் ஆசிரியர்க் கூட்டணி, இது குறித்து நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாகவும், அவர்களிடமும் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்போவதாகவும் அறிவித்தது. ஆனால், பாராளுமன்றம், இராணுவம், நீதிமன்றம், இருபெரும் கட்சிகள் என்று எல்லாமே அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் வாழைப்பழ முதலாளிகளின் வசம் இருந்ததாலும், மேனுவேல் செலயாவின் இத்திட்டத்தினை எப்படியாவது முறியடிக்கவேண்டுமென்று முனைந்து செயற்பட்டனர். ஏற்கனவே அவரது இடதுசாரிக் கொள்கைகளாலும், தொழிலாளர் நலத் திட்டங்களாலும் கொதிப்படைந்து, மேனுவேல் செலயாவை பதவியிறக்க சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தவர்கள், இதனையே சரியான வாய்ப்பாக எடுத்துக்கொண்டார்கள். அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்றலாமா வேண்டாமா என்று மக்களிடத்தில் கேட்பதே அரசியலமைப்புச் சட்டத்தின்படி தவறு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், மேனுவேல் செலயாவோ அதற்கெல்லாம் அஞ்சாமல், ஓட்டெடுப்பு நடந்தே தீரும் என்று அறிவித்தார். ஓட்டெடுப்பிற்கு எவ்வித ஒத்துழைப்பும் தரமாட்டோம் என்று இராணுவத்தலைவர் ரோமியோ அறிவித்தார். உடனே, அவரை பதவிநீக்கம் செய்து மேனுவேல் உத்தரவிட்டார். உடனே உச்சநீதிமன்றமோ, அவரது உத்தரவு செல்லாது என்று அறிவித்து, ரோமியோவை மீண்டும் பதியேற்க சொன்னது. ஓட்டுப்பதிவுக்கு முன்னரே, ஓட்டுப்பெட்டிகளையும் ஓட்டுச்சீட்டுகளையும் பறிமுதல் செய்து இராணுவ குடோனில் ஒளித்துவைத்தது இராணுவம். மக்களோடு இணைந்து மேனுவேல் செலயாவும் இராணுவ குடோனிற்குள் நுழைந்து, ஒட்டுப்பெட்டிகளையும் ஊட்டுச்சீட்டுகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதற்குள், தீவிர வலதுசாரி எம்பிக்கள் நிறைந்த பாராளுமன்றமோ, இதனை சட்டவிரோதமாக அறிவித்து மேனுவேல் செலயாவை கைது செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. மறுநாளே, இராணுவம் அவரை கைது செய்து, விமானம் மூலம் நாடுகடத்தி கோஸ்டா ரிக்காவில் கொண்டு விட்டுவந்தது. வழக்கம்போல இராணுவமே ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்வதும், ஆட்சியாளர்கள் மாறுவதும் ஹோண்டுரசிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இம்முறை மக்கள் நலனில் அக்கறையுள்ள மக்கள் ஆதரவைபெற்றிருக்கிற ஒரு அதிபரை, இராணுவம்-உச்சநீதிமன்றம்-பாராளுமன்றம்-பெருமுதலாளிகள்-அவர்களின்​_​ஊடகங்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைவிட்டே விரட்டிவிட்டனர்…

நாட்டின் அதிபரையேகைது செய்து நாடு கடத்தியதற்கு பின்னால், அமெரிக்க சி.ஐ.ஏ.வின் கைவரிசை இருந்தது என்று உலகறிந்த உண்மை. இச்செயலை ஒருங்கிணைத்த வஸ்கேஸ் என்பவர், தென்னமெரிக்காவில் குழப்பம் விளைவிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட எஸ்.ஒ.ஏ. என்கிற பயிற்சி நிறுவனத்தில் அமெரிக்க சி.ஐ.ஏ.வால் பயிற்சியளிக்கப்பட்டு ஹோண்டுரஸ் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  மேனுவேல் செலயாவே ஒரு பதவி விலகல் கடிதம் கொடுத்தது போன்ற போலியான ஒரு கடிதத்தை பாராளுமன்றத்தில் அவர்களே வாசித்துவிட்டு, அவரை அதிபர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துவிட்டனர். மிசலெட்டி என்கிற இராணுவ ஆதரவு முன்னாள் எம்பியை தற்காலிக அதிபராக அறிவித்தனர்.

அதன்பின்னரான அவலநிலைதான் சொல்லிமாளாது. ஏராளமான ஹெலிகாப்டர்களும், இராணுவ விமானங்களும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு மேலே நிரந்தரமாகவே பறக்கத் துவங்கின. மின்சாரமும் இணையமும் துண்டிக்கப்பட்டன. அரசினால் இயக்கப்பட்ட வானொலி அலைவரிசைகளைத் தவிர வேறேதும் ஒலிபரப்ப அனுமதிக்கப்படவில்லை. சர்வதேச பத்திரிகையாளர்கள் கைது செயப்பட்டனர். கியூபா, வெனிசுவெல்லா மற்றும் நிகாரகுவாவின் தூதர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். மேனுவேல் அதிபராக இருந்தபோது, அயல்துறை அமைச்சராக இருந்த பட்ரிசியாவும் சிறைக்குள் தள்ளப்பட்டார். தொழிற்சங்க உறுப்பினர்கள், விவசாய சங்க உறுப்பினர்கள் போன்றோர் விசாரணையின்றி கைதுசெய்யப்பட்டனர். எனினும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அதிபர் மாளிகையைச் சுற்றிவளைத்துக்கொண்டு மேனுவேலுக்கு ஆதரவாக ஹோண்டுரசின் தேசிய கீதத்தினை தொடர்முழக்கமாக பாடிக்கொண்டிருந்தனர். மக்கள் நாடு முழுக்க வேலை நிறுத்தங்களை நடத்தினர். தலைநகரை நோக்கி, மக்கள் கூட்டம் திரண்டுவரத்துவங்கியதும், இராணுவம் எல்லாப் பேருந்துகளையும் இயக்கவிடாமல் தடுத்துவைத்தது. அதையும் மீறி, மக்கள் கூட்டம்கூட்டமாக நடந்தே வரத்துவங்கினர். இராணுவத்தின் ஒரு சில பிரிவுகள், மக்களுக்கு ஆதரவு தெரிவித்தன. அவர்களை எல்லாம் உடனடியாக இராணுவம் பணிநீக்கம் செய்தது. ஏறத்தாழ ஒரு மக்கள் புரட்சி ஏற்படும் நிலையில், அமெரிக்காவின் ஆதரவில் ஹோண்டுரசின் இராணுவம் தனது சொந்த நாட்டு மக்களையே அடித்துத் துன்புறுத்தியும், கொன்று குவித்தும் ஆட்சியைத் தக்கவைத்தது. இராணுவத்தினரால் ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகினர். இராணுவத்தினரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். எனினும் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்த மறுநாளே, ஹோண்டுரசிற்கான இராணுவ உதவியை அதிகரிக்கக் கோரிய மசோதா அமெரிக்க செனட்டில் கொண்டுவரப்பட்டது. ஹோண்டுரஸ் இராணுவத்திற்கென்று சொந்தமாக எதுவுமே இல்லை. அமெரிக்க அரசின் உதவியால் மட்டுமே ஹோண்டுரசின் இராணுவமே இயங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் அனுமதியில்லாமல், ஹோண்டுரசின் இராணுவம் ஓரணுவையும் அசைக்காது. தென்னமெரிக்க நாடுகள் அனைத்தும், ஹோண்டுரசுடனான உறவைத் துண்டித்துக் கொண்டன. ஆனால், அமெரிக்கா மட்டும் அதனைச் செய்யவில்லை. மாறாக, நெருக்கத்தினை அதிகரித்தது.

 

நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த மேனுவேல் செலயா எப்படியாவது ஹோண்டுரசிற்கு திரும்பி வருவதென முடிவெடுத்தார். ஆனால், அரசிற்கு தெரிந்து வந்தால், கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்படுவார். எனவே, மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்தே பல மணிநேரங்கள் பயணம் செய்து ஹோண்டுரசிற்குள் நுழைந்து, பிரேசிலின் தூதரகத்திற்குள் நுழைந்துவிட்டார். பிரேசில் போன்ற மிகப்பெரிய நாட்டினை பகைத்துக்கொள்வது சரியல்ல என்பதால், ஹோண்டுரஸ் இராணுவம் பிரேசிலின் தூதரகத்திற்குள் அத்துமீறி உடனடியாக நுழைய முயற்சிக்கவில்லை. அதற்குபதிலாக, பிரேசிலிற்கு 10 நாட்கள் அவகாசம் கொடுத்தது ஹோண்டுரஸ் இராணுவ அரசு. பிரேசிலின் அதிபர் லூலாவோ, “அவர்களின் கெடுவை எல்லாம் நான் மதிக்கவே இல்லை. ஆட்சிக்கவிழ்ப்பு செய்யும் வன்முறையாளர்கள் சொல்வதை எல்லாம் பிரேசில் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாது. இப்படி பேசியதற்கு ஹோண்டுரஸ் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.” என்றார். பிரேசில் தூதரகத்தை விட்டு மேனுவேல் செலயா வெளியே வந்தால், உடனே கைது செய்துவிடுவோம் என்று அறிவித்தேவிட்டனர் ஹோண்டுரஸ் இராணுவத்தினர். ஆட்சிக்கவிழ்ப்பு நடந்த 5 மாதத்தில், மீண்டும் அதிபர் தேர்தல் நடத்தியது இராணுவ அரசு. வழக்கம்போல இரண்டு தீவிர வலதுசாரிக் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியது. 60% மக்கள் ஒட்டுப்போட்டதாக அறிவித்தார்கள். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு 49% தான் ஓட்டுப்போட்டார்கள் என்றார்கள். ஆக அது ஒரு சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு நடந்த கண்துடைப்புத் தேர்தல். புதிய அரசு வந்ததும், ஒப்பந்தம் போட்டு செலயாவை டொமினிக் குடியசிற்கு நாடுகடத்தியது. ஆட்சியையும் கையில் வந்துவிட்டது, செலயாவால் இனி எதுவும் செய்யமுடியாது என்ற எண்ணம் வந்தவுடன், ஓராண்டிற்குப் பிறகு அவரை மீண்டும் ஹோண்டுரசிற்குள் வர அனுமதியளித்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களின் வரவேற்பிற்கு நடுவே அவர் ஹோண்டுரசிற்கு திரும்பினார்.

மீண்டும் தேர்தல்….

மேனுவேல் செலயாவை ஆட்சியிலிருந்து இறக்கியபின்னர், ஹோண்டுரஸில் அவர் கொண்டுவந்த மக்கள் நலச் சட்டங்கள் யாவும் மாற்றப்பட்டுவிட்டன. அரசை எதிர்த்துக் குரல் கொடுப்போர் சிறைக்கோ கல்லறைக்கோ அனுப்பப்பட்டனர். ஹோண்டுரசும் உலகின் கொலைகார நாடுகளின் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துவிட்டது. 2013 நவம்பர் மாதம் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு கட்சிகளே மாறி மாறி போட்டியிடுவதும், வெற்றிபெறுவதும், வாழைப்பழ நிறுவனங்களும் அமெரிக்க அரசும் ஹோண்டுரஸ் மக்களைச் சுரண்ட விடுவதுவாகவே நடந்துவந்திருக்கின்றன அந்நாட்டின் தேர்தல். மேனுவேல் செலயாவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதற்காக முயன்ற இயக்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து “சுதந்திரம் மற்றும் மறுசீரமைப்புக் கட்சி (லிப்ரே)” யை உருவாக்கினர். ஆனாலும், மேனுவேலை மீண்டும் தேர்தலில் பங்கேற்க அனுமதிக்காதவாறு சட்டம்போட்டுவிட்டனர் ஆட்சியாளர்கள். அவருடனே தொடர் போராட்டத்தில் பங்கெடுத்துவந்த அவரது மனைவி காஸ்ட்ரோவை அக்கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக அறிவித்தது லிப்ரே கட்சி.

லிப்ரே கட்சி தேர்தலில் பங்கேற்கிறது என்று அறிவித்த நாளிலிருந்தே அதன் முக்கிய தலைவர்களின் மீதும் பாராளுமன்ற வேட்பாளர்களின் மீதும் தொடர் தாக்குதல் நடத்திவந்தது இராணுவ அரசு. லிப்ரேவைச் சார்ந்த 18 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்; பெருமுதலாளிகள், அவர்களது பணபலம், அவர்களுக்குப் பின்னாலிருக்கும் அமெரிக்க அரசு, ஹோண்டுரஸ் அரசு, இராணுவம் என எல்லா வகையான எதிர்ப்புகளையும் மீறி லிப்ரே கட்சி மக்களை நம்பி தேர்தலில் பங்கெடுக்கும் முடிவினை திரும்பப் பெறாமல் பிரச்சாரத்தைத் தொடர்ந்தது.

2013 நவம்பரில் நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் துவங்கியது. வாக்கு எண்ணும் ஒவ்வொரு மையத்திலிருந்தும் தகவல் சேகரித்தனர் லிப்ரே கட்சியினர். அத்தகவலின்படி குறைந்தது 3.5% ஓட்டுக்களாவது அதிகம் பெற்று காஸ்ட்ரோ வெற்றிபெற்றிருக்கவேண்டும் என்பது லிப்ரே கட்சியின் கணிப்பு. ஆனால், தேர்தல் ஆணையமோ, காஸ்ட்ரோ 8% ஓட்டுகள் குறைவாகப் பெற்று இரண்டாம் இடம் இடம்தான் பிடித்தார் என்று அறிவித்தது. விரிவான விவரங்களைத் தரமறுத்தது தேர்தல் ஆணையம். வரலாறு காணாத அளவிற்கு 1.5 லட்சம் ஓட்டுகளை செல்லாத ஓட்டுகள் என்றும் அறிவித்தது. “ஹோண்டுரஸ் தேசியக் கட்சி”யின் யுவான் ஒர்லாண்டோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஹோண்டுரசைப் பொருத்தவரை எப்போதும் தேர்தல் ஒரு கண்துடைப்புதான் என்பது நன்கு அறிந்தவொன்றுதான் என்றாலும், லிப்ரே கட்சியினர் ஓட்டு எண்ணிக்கையில் நடந்த குளறுபடிக்கு நியாயம் கேட்டு தெருவில் இறங்கிப் போராடினர். வழக்கம்போல இராணுவம் தனது ஆயுதங்களால்தான் அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. “யார் ஓட்டுப்போடுகிறார்கள் என்பதைவிட யார் ஓட்டை எண்ணுகிறார்கள் என்பது தான் முக்கியம்”, என்று ஆப்கன் மக்கள் போராளி மலாலா சோயா சொன்னது ஹோண்டுரசிற்கு நிச்சயம் பொருந்தும்.

காஸ்ட்ரோவைத் தோல்வியடைய வைத்ததில் வாழைப்பழ வியாபாரிகளும் அமெரிக்க இராணுவ ஆட்சியாளர்களும் மிக்க மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். ஆனால், இந்தத் தோல்விக்கு பின்னாலிருந்த போட்டியானது, அவர்கள் 100 ஆண்டுகளாக பார்த்திராத போட்டி. இரண்டு கட்சிகளையும் ஒரேயொரு கூட்டம் பின்னிருந்து இயக்கிவந்த காலத்தினை மலையேற்றிவிட்டது மக்களாதரவுடன் இரண்டாவது இடம் வரை வந்திருக்கிற இடதுசாரி “லிப்ரே” கட்சி. ஹோண்டுரசின் மாற்று எதிர்காலத்திற்காக தெருவில் இறங்கிப் போராட, வரலாற்றில் இப்போதுதான் முதன்முறையாக ஒரு மக்கள் இயக்கம் உருவாகியிருக்கிறது. மற்றனைத்து தென்னமெரிக்க நாடுகளும் விழித்துக்கொண்டு தங்களது உரிமைகளைத் தாங்களே தீர்மானிப்பதுபோல், ஹோண்டுரசும் வெகுவிரைவில் மாறட்டும்… மாற்றம் பெற வாழ்த்துவோம்…. துணை நிற்போம்….

Related Posts