சொல்லப்படாத அமெரிக்க வரலாறு தொடர்கள்

மீண்டுவருமா வாழைப்பழதேசம்? (ஹோண்டுரஸ்) – 2

வாழைப்பழ போர்கள்:

1911 இல் ஹோண்டுரசில் 15000 ஏக்கர் நிலத்தினை வாங்கியது சியாமல் நிறுவனம். இருப்பினும், ஹோண்டுரஸில் அப்போது ஆட்சியிலிருந்த ஹோண்டுரஸ் அதிபர் மிகுவேல் அரசோ, யுனைடட் ஃப்ரூட் நிறுவனத்திற்கே ஆதரவாக இருந்தது. இதனை மாற்றி ஹோண்டுரசின் அப்போதைய அரசைக் கவிழ்க்க, ஹோண்டுரசின் முன்னாள் அதிபர் மேனுவேல் பொனிலாவுடனும், இராணுவ ஜெனரலுடனும் கைகோர்த்தார் சியாமல் ஃப்ரூட் நிறுவனத்தின் நிறுவனர் சாம். ஹோண்டுரசில் எந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தாலும், அது அமெரிக்க கப்பற்படையின் அனுமதியோடும் உதவியோடுமே நடக்கும். இம்முறையும் அவ்வாறே நடந்தேறியது. அமெரிக்காவின் உதவியோடு, நினைத்தபடியே அதிபர் மிகுவேல் தலைமையிலான அரசை இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் கவிழ்த்தன அமெரிக்க வாழைப்பழ நிறுவனங்கள். அதற்கு உதவிய மேனுவேல் பொனிலா, ஹோண்டுரசின் அதிபராகப் பதவியில் அமர வைக்கப்பட்டார்.

முதல் போடாமலேயே அதிக அளவிலான இலாபமீட்டுவதற்கு தடையாக இருக்கிற அரசுகளை கவிழ்ப்பதை தென்னமெரிக்காவில் துவக்கிவைத்து அதனை இன்றுவரை தொடர்ந்து நடத்திவருகின்றன அமெரிக்க கார்ப்பரேட் அரசுகள். ஹோண்டுரஸில் அரசியல் நிலையற்றத் தன்மையினை தொடரவைக்க, அரசுகளைக் கவிழ்ப்பதும் வாழைப்பழ வியாபாரத்தை தடையில்லாமல் நடத்த அனுமதிதரும் அடிமை ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர வைப்பதுமாக தொடர்ந்து கொண்டிருந்தது வாழைப்பழ முதலாளிகளின் பணி. பாரிஸ் ஒப்பந்தத்தின்மூலம், கியூபாவும் போர்டோரிகொவும் ஸ்பெயினிடமிருந்து அமெரிக்காவின் வசம் வந்தது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நாடுபிடிக்கும் வேகம் அதிகரித்தது. பனாமா, ஹோண்டுரஸ், நிகாரகுவா, மெக்சிகோ, ஹெயித்தி, டொமினிகன் குடியரசு போன்ற நாடுகளில் அத்துமீறி இராணுவ ஆக்கிரமிப்பை நடத்தியது அமெரிக்கா.ஹோண்டுரசை பொறுத்த வரை அமெரிக்க வாழைப்பழ பெருநிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டது அமெரிக்கா. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அமெரிக்க வாழைப்பழ நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொண்டு, அந்நாட்டில் வாழும் மக்களை அடிமைகளாக வேலைக்கமர்த்தி, வாழைப்பழங்களை செலவில்லாமல் உற்பத்தி  செய்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக லாபம் ஈட்டின அந்நிறுவனங்கள்.

வாழைப்பழ வியாபாரத்திற்காகவே 1903, 1907, 1911, 1912, 1919, 1924, 1925 ஆகிய ஆண்டுகளில் தன்னுடைய படைகளுடன் ஹோண்டுரசில் நுழைந்து ஆட்சியை கவிழ்த்தோ, ஆட்சியாளர்களை மாற்றியோ அரசியல் நிலையற்றத் தன்மையினை ஹோண்டுரஸில் தொடரவைத்தது அமெரிக்க அரசு. இவை தவிர 210 முறை நடந்த உள்நாட்டுப்போருக்கு அமெரிக்க அரசும், வாழைப்பழ பெருநிறுவனங்களும் காரணமாக இருந்தன.

ஹோண்டுரசில் நடைபெற்ற பெரும்பான்மையான வாழைப்பழ போர்களின் போதும் அமெரிக்க கப்பற்படைத் தளபதியாக இருந்த ஸ்மட்லி பட்லர், ஒய்வு பெற்றபின் எழுதிய “War is a Racket” என்கிற நூலில் விரிவான ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் .

“அமெரிக்க இராணுவ சேவையில் 33 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அக்கால கட்டத்தில் பெருமுதலாளிகளும், வங்கிகளுக்கும், முதலாளித்துவத்திற்கும், வால் ஸ்ட்ரீடிற்கும் அடியாளாகவே இருந்திருக்கிறேன். மெக்ஸிகோவை உருவாக்கி அதன் மூலம் டேம்பிகோ சேஃப் என்கிற அமெரிக்க எண்ணெய் நிறுவனம் வளர உதவியிருக்கிறேன்; அமெரிக்க தேசிய நகர வங்கி வரி வசூல் செய்யும் இடங்களாக ஹெய்தியையும், கியூபாவையும் மாற்றியிருக்கிறேன்; அரை டஜன் மத்திய அமெரிக்க நாடுகளை அழித்து அதன் மூலம் வால் ஸ்ட்ரீட்டை தழைத்தோங்கச் செய்திருக்கிறேன்; ப்ரவ் சகோதரர்களின் இன்டர்நேஷனல் பேங்கிங் ஹவுசின் வளர்ச்சிக்காக, நிகாரகுவாவை சுத்திகரிப்பு செய்திருக்கிறேன்; அமெரிக்காவின் சர்க்கரைத் தேவைக்காக டொமினிக் குடியரசிற்குள் நுழைந்திருக்கிறேன்; அமெரிக்க வாழைப்பழ நிறுவனங்களுக்காக ஹோண்டுரசை மாற்றியமைத்திருக்கிறேன். ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் சீனாவுக்குள் தடையின்றி நுழையவும் உதவியிருக்கிறேன். நான் மூன்று கண்டங்களில் இயங்கியிருக்கிறேன்.”

முதலாம் உலகப் போரில், வட அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்தது ஹோண்டுரஸ் அரசு. போரினைக் காரணம் காட்டி, தொழிலாளர் ஊதியத்தை குறைத்தும், வரி செலுத்தாமலும், தனது லாபத்தை மட்டும் பெருக்கிக்கொண்டன வாழைப்பழ நிறுவனங்கள். 1917 ஆம் ஆண்டு மட்டும் 2.5 மில்லியன் டாலர் இலாபம் ஈட்டியது ஸ்டாண்டர்ட் ஃப்ரூட் நிறுவனம். இவற்றை எல்லாம் எதிர்த்து 1917 இல் ஸ்டாண்டர்ட் ஃப்ரூட் நிறுவனத்தை எதிர்த்தும், 1920 இல் நாடு முழுவதும் வேலை நிறுத்தங்கள் செய்தனர் தொழிலாளர்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் உரக்க ஒலிக்கிறபோதெல்லாம், வட அமெரிக்காவிலிருந்து போர்க்கப்பல்கள் ஹோண்டுரசிற்கு வருவதும், தொழிலாளர் தலைவர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்குவதும், வாடிக்கையாக நடந்து வந்தன.

கால்பந்துப் போர்:

வருடங்கள் உருண்டோடிய போதிலும் வாழைப்பழ நிறுவனங்களின் ஆதிக்கமும், அவர்களுக்கான வட அமெரிக்காவின் ஆதரவும் இணைந்து, ஹோண்டுரசை ஒரு அடிமை நாடாகவும் ஏழ்மை நாடாகவுமே வைத்திருந்தன. 1969 இல் ஹோண்டுரசின் பக்கத்து நாடான எல்சால்வடாரின் அளவு ஹோண்டுரசை விட 5 மடங்கு சிறிதாக இருப்பினும், மக்கள் தொகையில் இருமடங்காக இருந்தது. அதோடு வறுமையும் ஹோண்டுரசை விட அதிக அளவில் தலைவிரித்தாடியது. எனவே ஏறத்தாழ 3 இலட்சம் எல்சால்வடார் மக்கள் ஹோண்டுரசிற்கு குடிபெயர்ந்தனர். இதில் பலர் உழைத்து சிறு சிறு நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறி விவசாயமும் செய்தனர். இவர்களது வளர்ச்சியை பொறுக்க முடியாமல், பெனாக்  என்கிற முதலாளிகளின் அமைப்பினை உருவாக்கி, ஹோண்டுரஸ் அரசிற்கு அழுத்தம் கொடுத்தனர் வாழைப்பழ முதலாளிகள். அதன் காரணமாக, எல்சால்வடார்  மக்கள் எவரும் ஹோண்டுரஸில் நிலம் சொந்தமாக வைத்திருக்க முடியாது என்றொரு புதுவகையான சட்டத்தினை ஹோண்டுரஸ் அதிபர் ஒஸ்வால்டோ அறிமுகப்படுத்தினார். அச்சட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையில் இருந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டது. 1969இல் உலக கால்பந்து தகுதிப்போட்டியின் முதல் போட்டியில் ஹோண்டுரசும், இரண்டாவது போட்டியில் எல்சால்வடாரும், மூன்றாவதில் எல்சால்வடாரும் வென்றதில் பகை மேகம் இன்னும் சூழ்ந்து இருளாக்கியது. அதனைத் தொடர்ந்து ஹோண்டுரஸின் மீது போர் தொடுத்தது எல்சால்வடார். இப்போருக்கு “கால்பந்துப் போர் ” என்றே பெயரிடப்பட்டது. 100 மணி நேரம் நடந்த போர் என்பதால் “100 மணி நேரப்போர் ” என்றும் அழைக்கப்படுகிறது. போருக்குப் பின்னர் ஹோண்டுரஸில் வாழ்ந்த அனைத்து எல்சால்வடார் மக்களும் விரட்டியடிக்கப்பட்டனர். சில வாழைப்பழ முதலாளிகளின் இலாபத்திற்காக நடந்த இச்சம்பவத்தினால் இரு நாடுகளுமே மேலும் அதிக அளவிலான வறுமைக்குத் தள்ளப்பட்டன.

வாழைப்பழ ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு:

1975 இல், ஹோண்டுரஸ், கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்குவடார், குவாத்தமாலா, நிகராகுவா, பனாமா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து “வாழைப்பழ ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு” ஒன்றை உருவாக்கினர். வட அமெரிக்காவில் விற்கப்படும் வாழைப்பழத்தின் விலையில் ஒவ்வொரு ரூபாய்க்கும், 17 பைசாவிற்கும் குறைவாகத்தான் உற்பத்தி செய்கிற மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளுக்கு கிடைக்கிறது. 83% த்திற்கும் மேலான லாபம் எதுவுமே செய்யாத வட அமெரிக்க பெருநிறுவனங்களுக்குச் செல்கிறது. அந்நிறுவனங்களுக்கு அதிக வரி போடவும், இப்புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு நாடும், சிறிய அளவில் வாழைப்பழ ஏற்றுமதி வரியினை உயர்த்தின. ஹோண்டுரஸ் அரசு ஒரு பெட்டிக்கு 0.25 டாலரிலிருந்து 0.50 டாலராக வரியினை உயர்த்தியது. இதன் மூலம் ஆண்டுக்கு 7.5 மில்லியன் டாலர் அதிகமாக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் வாழைப்பழ நிறுவனங்கள் எதிர்த்தன. வரியுயர்வை அறிவித்த சில நாட்களிலேயே, ஹோண்டுரஸ் அரசு அதனை திரும்பப் பெற்றுவிட்டது. அதற்காக, 1.25 மில்லியன் டாலர் பணத்தினை அப்போதைய ஹோண்டுரசின் அதிபரான ஒஸ்வால்டோவின் சுவிஸ் வங்கிக்கணக்கில் லஞ்சமாக போட்டுவைத்தது யுனைடட் ப்ராண்ட் நிறுவனம். இச்செய்தி வெளியே கசிந்ததும், மற்றுமொரு இராணுவ ஜெனெரல் யுவான் மெல்கர் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தி, புதிய அதிபராக தானே பதவியேற்றுக்கொண்டார்.

(தொடரும்…)

1

Related Posts