அரசியல் அறிவியல் சமூகம்

மீண்டும் சந்தைக்கு வந்தது மாகி – பாதுகாப்பு? …

“இடியாப்பத்தை மாகி நூடுல்ஸ் கவ்வும்; இடியாப்பம் மறுபடி வெல்லும்”

என்று நம்மவர்கள் எழுதி மை அழிவதற்கு முன்னரே மாகி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு தடை வந்துவிட்டது.

ஆனால் இந்தியாவில் பாதுகாப்பான உணவு பற்றிய விவாதத்தை இப்பிரச்சனை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறது. மீண்டும் என்றால்..?

அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குநர் சுனிதா நாராயனை மறந்திருக்க மாட்டீர்கள். 2003ஆம் ஆண்டில்  அவர் பெப்சி குளிர்பானத்தில் பூச்சிமருந்து கலப்பு பற்றி அறிக்கை வெளியிட்டு மக்களை எச்சரித்தபோது கிளம்பிய சர்ச்சை வெறும் சர்ச்சையாகவே முடிந்துபோனது. சந்தையில் பெப்சி, கோக் பானங்களின் ஆதிக்கம் சற்றும் குறையாமல் நீடித்துவருகிறது.

2015 ஜுலை 10 தேதியிட்ட ஃப்ரண்ட்லைன் இதழ் சுனிதா நாராயனிடம் பாதுகாப்பான உணவு சம்பந்தமாக ஒரு பேட்டி எடுத்து சில விவரங்களை நம்முன் கொணர்ந்திருந்தது. (உணவுப் பாதுகாப்பு என்பது வேறு. அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்வது உணவுப் பாதுகாப்பு. கிடைக்கிற உணவு உட்கொள்ளத் தகுதியானதா எனப் பார்ப்பது பாதுகாப்பான உணவு).நமது ஜீவாதாரப் பிரச்சனை என்பதால் பாதுகாப்பான உணவு பற்றித் தெரிந்துகொள்வது மிகமிக அவசியம்.

நாங்கள் குளிர்பானங்கள் சம்பந்தமாக எடுத்துக் கொண்ட  முயற்சிகளுக்கும் மாகி நூடுல்ஸ் பிரச்சனைக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்கிறது. குளிர்பானங்களில் உள்ள நச்சுக்கள் சம்பந்தமாக எங்களுடைய சோதனைச்சாலைகளிலேயே நாங்கள் ஆய்வு செய்தோம். மாகி சம்பந்தமான  ஆய்வுகளை நாங்கள் செய்யவில்லை. ஆனால் இந்திய அரசின் உணவுத்துறை அதிகாரிகள் மாகி நூடுல்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததை நாங்கள் பாராட்டுகிறோம்.

பாதுகாப்பற்ற உணவு (junk food) மக்கள் உடல்நலனோடு சம்பந்தப்பட்டது என்பதால் அதற்குரிய கவனத்தோடு இப்பிரச்சனையை அணுக வேண்டும். மத்திய அரசின் உணவு அதிகார மையம் பாதுகாப்பான உணவை மக்களுக்கு உத்தரவாதப்படுத்துவதில் தற்போதிருப்பதைவிட மிகவும் உஷாராகவும் தீவிரமாகவும் செயலாற்ற வேண்டும். அந்த மையம் உலகத்தின்  சிறந்த நடைமுறைகளோடு ஒத்த தரத்தையும் விதிமுறைகளையும் இந்தியாவில் உருவாக்கி, அவற்றைக் கண்காணித்து கறாராக அமுல்படுத்த வேண்டும்.

தற்போது உணவு விளம்பரங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த எந்த அரசு அமைப்பும் கிடையாது. குழந்தைகளை இலக்காகக் கொண்ட பல விளம்பரங்களையும் விற்பனை உத்திப் பிரச்சாரங்களையும் இந்தியாவில் நாம் பார்க்க முடிகிறது.

பிரபலங்கள் பங்கேற்று சான்றிதழ் அளிக்கும் இந்த விளம்பரங்களைக் கட்டுப்படுத்த நம் நாட்டில் எந்த ஏற்பாடும் கிடையாது. நன்கு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, கட்டுப்படியாகக் கூடிய விலையில் நீண்ட நாட்களுக்குக் கெடாமலிருக்கும் என்ற  முத்திரையுடன்  நாடு முழுதும் எளிதில் கிடைக்கின்றன.

இதற்கு மாற்று அந்தந்தப் பகுதியில் விளைவிக்கப்பட்ட தானியங்களில் தயாரிக்கப்பட்ட நல்ல உணவு, பாரம்பரியமான உணவு, சரிவிகித உணவு கிடைப்பதை அரசுகள் உத்தரவாதப்படுத்துவதுதான் என்கிறார் சுனிதா நாராயன்.

“பாதுகாப்பான உணவு எல்லா நேரங்களிலும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் நமது கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டியது மிகமிக முக்கியம். விவசாயம், உணவு சம்பந்தமான உள்நாட்டுக் கொள்கைகள், மானியங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதற்கேற்ற விதத்தில் அமைய வேண்டும்.

உணவுப் பொருள் தயாரிப்பு, தரக் கண்காணிப்பு, முடிவுகள் அறிவிப்பு, பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கைகள், தேவையெனில் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளல் போன்ற பல்வேறு அம்சங்களில் ஆரோக்கியமான, வெளிப்படையான அமைப்புகள் இயங்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். உணவு தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பொறுப்பினைச் சுமத்தும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.அதைவிட முக்கியம், அவை காகிதச் சட்டங்களாக நின்றுவிடாமல் அமுல்படுத்தப்படவும் வேண்டும். பாதுகாப்பான உணவு என்பது அதை சந்தைக்குக் கொண்டுவருபவரின் முழுப் பொறுப்பாக ஆக்கப்பட வேண்டும்.

உணவுப் பொருட்களில் நச்சுப் பொருட்கள், விலங்கியல் மருத்துவத்தில் பயன்படும் மருந்துகள், பாதரசம்-ஆர்சனிக் போன்ற விஷத்தன்மையுள்ள உலோகங்கள்..

பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரிலும் குளிர்பானங்களிலும் பூச்சி மருந்துகளின் மிச்சங்கள்.. தேனிலும் கோழிக்கறியிலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள்..

சக்தி கொடுப்பதாகக் கூறப்படும் பானங்களில் அளவுக்கதிகமான காஃபின்…

நன்கு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் எண்ணெய்களிலும் அதிக அளவில் உப்பு, சர்க்கரை, கெட்ட கொழுப்பு…

ஆகியவை கலந்திருக்கின்றன என்பது கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் கிடைத்த அனுபவம்.

உணவுப் பொருட்களைத் தவிர வேறு பொருட்களை எடுத்துக் கொண்டால், அழகு சாதனங்களில் விஷத்தன்மையுள்ள உலோகங்களும் வர்ணக் கலவைகளில் காரீயமும் கலந்திருக்கின்றன. ஆனால் இந்தக் கலப்படங்களைப் பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் மிகக் குறைவாக உள்ளது. எனவே, தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடைபெற வேண்டிய தேவை உள்ளது.

பன்னாட்டு உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ந்த நாடுகளில் கறாரான தரக்கட்டுப்பாட்டினை ஏற்று செயல்படுகின்றன. அங்கெல்லாம் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை உடனடியாக சந்தையிலிருந்து விலக்கிக் கொண்டு நடந்துவிட்ட தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கவும் அவை தயங்குவதில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவை வேறுவிதமாக நடந்துகொள்கின்றன.

பன்னாட்டு கம்பெனிகளிடம் நம் மத்திய மாநில அரசுகள் கைகட்டி சேவகம் செய்வதை அவை புரிந்துகொண்டு மக்களை பகடைக்காய்களாக உருட்டி விளையாடத் தயங்குவதே இல்லை. இயற்கை உணவுகளுக்கு கிராக்கி கூடிவருவதைப் பார்த்த அந்நிறுவனங்கள் அந்த சந்தையைக் கைப்பற்றவும் முனைந்திருக்கின்றன.  அரசு கண்காணித்து  அத்துமீறல்களைத் தடுத்துநிறுத்தும் என்று எதிர்பார்க்க முடியவில்லை. மக்களுடைய விழிப்புணர்வுதான் அரசை நிர்ப்பந்திக்க முடியும்” என விரிவாகப் பேசி முடிக்கிறார் சுனிதா நாராயன்.

பேராசிரியர் கே. ராஜு

Related Posts