பிற

மா.கிருஷ்ணன் – கானகத்தின் முதல் குரல்

30THwild2_jpg_1128911gமாதவையா கிருஷ்ணன் என்ற மா.கிருஷ்ணன் தமிழின் முன்னோடி நாவலாசிரியரான அ.மாதவையாவின் எட்டாவது பிள்ளையாக திருநெல்வேலியில் ஜூன் 30 ஆம் நாள் 1912 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையுடன்  நெருக்கமாக இருந்தால் என்னவோ ஊர்சுற்றும் மனப்பான்மையும் இலக்கிய ஆர்வமும் சிறுவயதிலேயே தொற்றிக்கொண்டது. ஏட்டுக்கல்வியில் பெரிதும் நாட்டமில்லாத அவருக்கு தன்னுடைய மயிலாப்பூர் வீட்டைச் சுற்றியிருந்த புதர்காடுகளில் இருந்த வெளிமான், ஓநாய் மற்றும் பறவைகள் மீதே அதிக ஆர்வமிருந்தது.

பள்ளி மாணவனாக இருந்தபோதே ஒரு கீரிப்பிள்ளையை செல்லப்பிராணியாக வளர்க்க ஆரம்பித்துவிட்டார். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழை  ஒரு பாடமாகக் கொண்டு தாவரவியல் இளங்கலை பட்டம் பெற்றார். தனது குருவும் பேராசிரியருமான பி.எப்.ஃபைசனுடன் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் சுற்றிதிரிந்து கள ஆய்வு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். பல நிலையில்லா வேலைகளுகு்கு பின்னர், கர்நாடகத்தில் உள்ள சண்டூர் சமஸ்தானத்தில் பணியில் சேர்கிறார். ஓய்வு நேரங்களில் துங்கபத்ரை நதிக்கரையில் உள்ள குன்றுகள் சூழ்ந்த காடுகளில் சுற்றித் திரிந்த அனுபவங்களே இவரை கானுயிர் வல்லுநராக உருமாற்றியது. இயற்கையில் எழுத்துக்கள் என்றாலே வேட்டை இலக்கியம் என்று புரையோடியிருந்த அக்கால கட்டத்தில் இயற்கை செல்வங்களை பாதுகாப்பதின் அவசியத்தை தனது அசலான எழுத்துகளில் பதிவு செய்தவர். மெட்ராஸ் மெயில், தி இந்து ஆகிய ஆங்கில பத்திரிக்கைகளிலும் சில்ப ஸ்ரீ, கல்கி, கலைமகள் போன்ற தமிழ் இதழ்கிளலும் தமது பங்களிப்பை அப்போதே நல்கினார். தனது நண்பர் பெரியசாமி தூரனன் வேண்டுகோளுக்கினங்க தமிழ் கலைக்களஞ்சியத்தில் பல்வேறு உயிரினங்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.

மிக எளிய நடையில் காட்டுயிர் பற்றிய சொல்லாடல்களை அங்குள்ள நாட்டுப்புற மக்களின் பட்டறிவோடு பதிவு செய்ததே இவரின் எழுத்துக்களைத் தனித்துக் காட்டியது. காட்டுயிர் சார்ந்த கருதுகோள்களை செவ்விலக்கிய சான்றுகளோடு நகைச்சுவை இழையுடன் தனது கட்டுரைகளில் விளக்கியிருப்பார். ஒவ்வொரு கட்டுரையும் வரையப்படும் கோட்டோவியம் கட்டுரையின் சாராம்சத்தை துல்லியமாக விளக்கும். மா.கிருஷ்ணன் நல்ல ஓவியர் மட்டுமன்றி தேர்ந்த புகைப்படக் கலைஞரும்  கூட, அவருக்கு ஏதுவான புகைப்படக் கருவியை தேர்ந்த நுட்பத்துடன் அவரே வடிவமைத்துப் பயன்படுத்தினார்.

பல்வேறு இதழ்களிலும் கலைகளஞ்சியத்திலும் சிதறிக் கிடந்த அவரது ஆக்கங்களை “மழைக்காலமும் குயிலோசையும்“ மற்றும் பறவைகளும் வேடதாங்கலும்‘ என இருநூல்களாக முறையே சு.தியோடர் பாஸ்கரன் மற்றும் பெருமாள் முருகன் ஆகியோரால் தொகுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் Jungle and Backyard, India’s wildlife nights and Days, My Book of India Wildlife ஆகிய புத்தங்களையும் எழுதியுள்ளார். இவரது புகழ்பெற்ற பத்தியான”My Country note Book’, வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திர குஹாவால்  Nature Spokesman  M. Krishnan and India  Wildlife என்ற தொகுப்பு நூலாகவும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய வேடந்தாங்கல் நீர் பறவைகள் காப்புசாலை மற்றும் முதுமலை ஆகிய சிறு நூல்கள் தமிழின் காட்டுயிர் பாதுகாப்புப் பற்றிய முதல் பதிவுகளாகும்.

என்னதான்  அவர் தமிழில் எழுதியிருந்தாலும் அவரின் தொடர்ச்சியான மற்றும் பிரபலமான பதிவுகள் ஆங்கில ஆக்கங்களில் தான். கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மேன் (statesmen) என்ற மாதமிருமுறை பத்தியை 1950 ஆம் ஆண்டு துவங்கி தான் சாகும்வரை எழுதினார். இவர் எழுதிய கடைசி பத்தி இவர் இறந்தநாளில் வெளியானது. இந்திய பத்திரிக்கை வரலாற்றில் வெளிவந்த நீண்டகால பத்தி என்ற பெருமை இதற்குண்டு.

downloadமா.கிருஷ்ணன் முப்பதாண்டுகளுக்கு மேலாக இந்திய கானுயிர் கழகத்தில் அங்கம் வகித்துள்ளார். மேலும் புலிகள் பாதுகாப்பு திட்டத்திலும் இவரின் பங்களிப்பு இன்றியமையாதது.இன்று புலிகள் காப்பிடமாக உள்ள பந்திப்பூர் மற்றும் ரன்தோம்பர் காப்பிடங்கள் இவரது முயற்சியில்லை என்றால் உருவாகி இருக்க வாய்ப்பில்லை என்பது வெகு சிலர் மட்டுமே அறிந்த உண்மை. மா.கிருஷ்ணன் அறிவியல் நோக்கில் கட்டுரைகள் எழுதியதோடு அவரது அவதானிப்புகள் ஆய்வுலகையும் அதிரச் செய்தது.  யானைகளை பற்றி ஆய்வுமேற்கொள்ளும் ஆய்வறிஞர் இராமன் சுகுமாரன் கூறுகையில் யானைகள் தங்களுக்குள்ளே ஒலி அலைகள் (sound frequency) மூலம் உரையாடிக்கொள்ளும்  என்று 1972 ஆம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டள்ளதாகவும் இதையே 1984 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் யானை மனித செவிகளால் உணரமுடியாத ஒலி அலைகளின் மூலம் உரையாடும் என்று நீருபித்துள்ளனர்.

சுற்றுசூழல் குறித்த புரிதல் இல்லாத காலத்திலேயே அதன் அவசியத்தை உணர்ந்து எழுதிய மா. கிருஷ்ணன் துப்பாக்கி தூக்கி வேட்டையாடாத இயற்கையியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் கரிசனம் தேவையுள்ள இக்காலகட்டத்தில் மா.கிருஷ்ணனின் எழுத்துக்கள் நம் நோக்கங்களுக்கு வலுசேர்க்கும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவின் மாண்பே அதன் இயற்கை பாரம்பரியத்திலும் சூழல் மகத்துவத்திலுமே உள்ளது என்பதை இளம் தலைமுறையினர் உணர வேண்டும் என்றே மா.கிருஷ்ணன் விரும்பினார். இயற்கைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தாத கல்விமுறையில் என்றுமே அவருக்கு வெறுப்பு உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் இயற்கை பாதுகாவலனாக விளங்கிய மா.கிருஷ்ணன்1996 ஆம் ஆண்டு இப்பூவுலகை விட்டு மறைந்தார்.

இந்திய அரசு இவருக்கு 1969 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் இந்திய பாலூட்டிகளை ஆய்வு செய்ய ஜவகர்லால் நேரு ஆய்வு நல்கையும் வழங்கியுள்ளது. இந்த ஆய்வு நல்கைப்பெற்ற முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சுற்றுசூழல் கழகம் (UNEP) தேர்ந்தெடுத்த உலக ஐநூற்றுவர் தொகுப்பிலும் இவர் இடம்பெற்றுள்ளர். இந்திய பசுமை இலக்கியத்திற்கே முன்னோடியான மா.கிருஷ்ணன் என்னும் சூழலியல் தீர்க்கதரிசியை அவர் வாழ்ந்த காலத்தில் அங்கீகரிக்கவில்லை என்பதே உண்மை. சூழல் நெருக்கடிகள் அதிகரித்துள்ள சிக்கலான காலகட்டத்தில், பசுமை போராளிகளாக  பலர் தங்களை முன்னிலைபடுத்தி கத்தி சுத்திகொண்டிருக்கும் இன்றைய சூழலில் மா.கிருஷ்ணன் போன்ற பன்முகத் தன்மை வாய்ந்த  சூழலில் முன்னோடிகளை தூக்கி பிடிக்க  மக்களிடம் கொண்டு செல்ல யாரும் இல்லை என்பது நகை முரண்தான்.

-ப.அருண்குமார்

Related Posts