சினிமா மாற்று‍ சினிமா

மாவீரன் கிட்டு…

தேசிய கீதம் முழங்க ஆரம்பித்தது மாவீரன் கிட்டு படம். தேச பக்தியோடு எழுந்து நின்ற பார்வையாளர்கள், அரங்கிலிருந்து வெளியேறும் போது.. கனத்த அமைதியோடு சென்றனர்.

உண்மையில் நாம் ஒரு தேசமாக இருக்கிறோமா?

தேசிய கீத வரிகளுக்கிடையில் வன்மமாக புன்னகைத்து நிற்பது சாதிய கீதங்களல்லவா! 

போன்ற உணர்வுகளை கிட்டு பார்வையாளர்கள் மனதில் எழுப்பியிருக்கிறான் என்று தயக்கமின்றி புரிந்துக் கொள்ள முடிந்தது.

1987ம் ஆண்டு , பழனி அருகே கொங்கு மற்றும் தென்னகத்து சூழல் நிரம்பிய களத்தில் நடக்கிறது கதை.

காலங்காலமாக தன்னிடம் அடிமையாக கிடந்த  சமூகத்து இளைஞன் மாநிலத்தில் முதல் மாணவனாக வெற்றி பெறுவதை, கலெக்டர் ஆக வேண்டும் என்று முயற்சிப்பதை, அவனால் இன்னும் பல தலித்துகள் கல்வியில் ஆர்வம் பெறுவதை, அவர்களது கல்விக்கான வெளியை நவீன சமூகம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை, கல்விக்கு அவர்களை ஊக்குவிக்கும் தலைவர்கள் உருவாகியிருப்பதை, தலித் பிணத்தை பொதுத் தெரு வழியாக எடுத்துச் செல்வதை ஜீரணிக்க முடியாத சாதி சீழ் பிடித்த ஆண்டை மூளைகள்,  அரும்பி வரும் அவர்களது எழுச்சியை நசுக்கியெறிய சூழச்சிகள் செய்வதும், அந்த சூழ்ச்சியை எப்படி முறியடித்து, சக மனிதனாக வாழ வேண்டும் என்கிற தங்களது அடிப்படை கோரிக்கைகளை எப்படி அம்மக்கள் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதே கதை.

மெல்லிய இசையுடன், பசுமை நிறைந்த தமிழக கிராமியக் காட்சிகளை நாம் 50 வருடங்களாக பார்த்து வருகிறோம். சின்னக் கவுண்டர்களும், பெரிய கவுண்டர்களும், தேவர் வீட்டு மகள்களும், சுந்தர பாண்டியன்களும் எனப் பல சிறந்த மனிதர்களை இந்த கிராமியச் சூழலில் காட்டி வருகிறது தமிழ் சினிமா. ஆனால், அந்த சிறந்த மனிதர்களுக்குள் அமர்ந்திருக்கும் சாதியப் பாம்பு, கிராமியப் பசுமைகளுக்கிடையில் ஊர்ந்து பல்லிளித்துக் கொண்டிருப்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் சுசீந்தரன்.

ஆம், தமிழக கிராமங்களின் அழகுகளினூடாக, காலங்காலமாகவே ஒரு அழுகுரல் கேட்டுக் கொண்டிருப்பதை இது வரை பதிவு செய்யாமல் அல்லது அதனை நியாப்படுத்தி எவ்வளவு அயோக்கியத்தனமாக கடந்து சென்றிருக்கிறது தமிழ் சினிமா? என்ற கேள்வி படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் எழுவது தான் இயக்குனரின் வெற்றி.

அதாவது, தமிழ் சினிமாவின் கேமரா பார்க்க மறந்த அல்லது மறுத்த தமிழ் கிராமங்களின் நிஜ முகத்தை, கிராமத்து கெளரவ சொரூபிகளின் நிஜ மனதை அப்படியே அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குனர் சுசீந்தரன்.

காதலர்களை பிரித்து பெற்ற மகளை கொல்லச் சொல்லும் சாதி, சாதி காப்பு நிலையங்களாக விளங்கும் காவல் நிலையங்கள், நவீன அரசின் சீருடைக்குள் ஒளிந்திருக்கும் ஆண்டைகளின் கூலிப்படை, தலித்துகளின் உழைப்பை கொளுத்தும் சாதி,  சாதிய சுவர்களை மின்காந்த அலைகளென இலகுவாக கடந்து மலரும் காதல்கள் என பசுமை கிராமத்தின் சாதிய வாழ்வியலை பூச்சு இன்றி பதிவு செய்துள்ளார் இயக்குனர்.

முதல் பத்து நிமிடங்களிலேயே சாதியத்தின் உண்மை முகத்தை பதிவு செய்யும் படம் என்பதை பதிவு செய்யும் இயக்குனர், அந்த வீரியம் இறுதி வரை குறையாமல் நகர்த்துகிறார்.

உயர் சாதி திவ்யா, தலித் விஷ்ணுவிடம் கல்லூரி வகுப்பறைக்குள் வைத்து காதலைச் சொல்லி அதனை ஆண்டைகள் தெரிந்துக் கொள்வதில் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது கதை. அதனையொட்டி முற்போக்காளரான திவ்யாவின் அப்பாவைக் கொன்று பழியை விஷ்ணு மீது போட்டு, அவனது கலெக்டர் கனவை சிதைக்க முயல்வதில் திரைக்கதையில் விழுகிறது வலுவான முடிச்சு. ஆண்டைகளும் காவல்துறையும் இணைந்து செய்யும் இந்தச் சூழ்ச்சியை  விஷ்ணுவும், அப்பகுதி தலித் சமூகத்தின் தலைவனாக விளங்கும் பார்த்திபனும் எப்படி எதிர் கொண்டு முறியடித்து வெல்கிறார்கள் என்ற தீர்வை நோக்கி வெகு சுவாரஸ்யமாக நகர்கிறது திரைக்கதை.

இந்த தீர்வை நோக்கி செல்லும் திரைக்கதையில்… அடுத்தடுத்த  திருப்பங்கள் ஏற்படுகிறது, சூழ்ச்சி, சூழ்ச்சி முறியடிப்பு, துரோகங்கள், தியாகங்கள் என நகரும் இரண்டாம் பாதி.. இதயத்தை கனக்க வைத்து நிறைவடைகிறது. ஒடுக்கப்பட்ட சமூகம் தனது அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் அழகிய காதல் கதையும் இழையோடுகிறது. சில ஷாட்டுகளில் சுசீந்திரனின் திரைமொழி தேர்ச்சி தென்படுகிறது. யுகபாரதியின் வசனங்கள் பிரச்சாரமாக இல்லாமல் ஆழமாக தைக்கிறது. பார்த்திபனின் உடல்மொழி ஒரு போராளித் தலைவனின் ஆளுமையை திரையில் அட்டகாசமாக கொண்டு வருகிறது. திவ்யாவின் கண்கள் காதல் சுமக்கும் பட்டாம்பூச்சி, விஷ்ணு இயக்குனரின் நாயகன். அனைத்து கதாபாத்திரத் தேர்வும் நிறைவாக நடந்திருக்கிறது.

பிரதான கதாபாத்திரங்களைத் தவிர பிற கதபாத்திரங்கள் மனதில் பதிய மறுப்பது, மெளனமின்றி இரைந்துக் கொண்டே இருக்கும் இசை போன்ற சில குறைகளை பெரிதாக பொருட்படுத்த மனம் வரவில்லை.

தமிழ் வணிக சினிமா களத்தில்… தமிழக கிராமங்களின் உண்மையான சாதி முகத்தை இந்தளவிற்கு விமர்சனப்பூர்வமாக அம்பலபடுத்திய படம் எதுவும் இல்லை எனக்குத் தெரிந்து.

இந்தியா இரண்டு தேசங்களாக இருக்கிறது ஊருக்குள்ளே ஒன்று, ஊருக்கு வெளியே சேரியில் ஒன்று. ஊர் தேசம், சேரி தேசம் மீது வன்மமான போரைத் தொடுத்துக் கொண்டே அவர்களை தேசிய கீதம் பாட அழைக்கிறது.

எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க…

நாங்க எரியும் போது….

எவன் மசுர புடுங்கப் போனிங்க..?

என்ற இன்குலாப் அய்யாவின் வரிகளை ஒரு கணமேனும் சிந்திக்கத் தூண்டினால்… அது  ‘மாவீரன் கிட்டு’வின்  மாபெரும் வெற்றியே.

– அருண் பகத்.

Related Posts