இதழ்கள் இளைஞர் முழக்கம்

மாற்றம் என்பது நபர்களை மாற்றுவதல்ல – எஸ்.பாலா

 

வாக்கு என்பது எளிய மனிதனின் கடைசி ஆயுதம். இத்தகைய மதிப்புமிக்க ஆயுதம்தான் நம்முடைய வாழ்க்கையையும், வாய்ப்புகளையும் உருவாக்கிதரும் பணியை இந்தியாவின் முதல் தேர்தல் துவங்கி தற்சமயம் வரை செய்து வருகிறது.

நம்முடைய வாழ்க்கையையும், வாய்ப்புகளையும் தீர்மானிக்கும் இந்த மதிப்புமிகு ஜனநாயக ஆயுதம் வாக்கு சீட்டாகும். இதனை எதற்காக பயன்படுத்தப் போகிறோம்? யாருக்காக பயன்படுத்தப் போகிறோம்? என்ற வினா முன்னுக்கு வந்துள்ளது.

வருகின்ற மே 16 அன்று தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நமக்கு முன் உள்ள கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் வாக்குகளை பயன்படுத்திட வேண்டியுள்ளது. தமிழக தேர்தலில் 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 கோடி பேர் புதிய வாக்காளர்கள். இன்னும் குறிப்பாக 39 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை சரிபாதிபேர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சரிபாதியாக உள்ள இளம் தலைமுறையினரின் விருப்பங்களை, வாய்ப்புகளை உருவாக்கி தர ஆட்சியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. சுதந்திரத்திற்கு பின் நம்பிக்கையோடு இருந்த இளம் தலைமுறையினர் காங்கிரசால் ஏமாற்றப்பட்டனர். இதனால் விரக்தியடைந்த இளைஞர்கள் அதனை வெளியேற்றிட முனைந்தனர். இச்சூழலில் திமுக முன்வைத்த முழக்கங்களும், கோரிக்கைகளும் தங்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக எண்ணினர். இதனால் உந்தப்பட்ட இளம் தலைமுறையினர் தியாகத்தால், தன்னலமற்ற உழைப்பால் வேகத்துடன் பணியாற்றி திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

அதன்பிறகு 50 ஆண்டுகள் திமுகவும், 1972 யில் உருவான அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி நடத்தி வருகிறது. இப்படி ஆட்சி மாறி உள்ளபோதும் தமிழக இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனையிலும், தேவைகளும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதற்கு வேலைவாய்ப்பு அலுவலகமே சாட்சியாக உள்ளது.

இளைஞர்களின் கனவு நனவாகாத நிலையில், மக்களின் வாழ்வாதார பிரச்சனை தீராத சூழலில் மீண்டும் ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்கிறது. இந்த தேர்தலில் நாம் சந்திக்கும் பிரச்சனையும் அதன் தற்போது என்ன நிலை என்பதை பார்போம்.

கல்வி என்பது மனிதனின் ஆற்றலை வளர்ப்பதில் மிக முக்கியமான சாதனமாகும் எல்கேஜி துவங்கி மருத்துவ கல்வி வரை தனியார் சம்பாதிக்கும் மிகப்பெரிய வியாபார சந்தையாகி உள்ளது. கல்வி நிலையங்களில் கட்டணம் வசூலிப்பதில் எந்த தடையும் இல்லை என்பதோடு கூடுதலாக வசூலிக்க அனுமதி கேட்டால் “முறையாக” அனுமதியும் தருகிறது அரசு.

பள்ளிக்கூடம் நடத்தி அடித்த கொள்ளையில் கல்லூரி கட்டி அதில் கிடைத்த தங்கு தடையற்ற லாபத்தில் ஆயிரம் கோடிக்கு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான வாய்ப்புக்களை தந்துள்ளது. அதன்மூலம் தமிழகத்தில் பெருகியுள்ள தனியார் சொத்து மதிப்பை பட்டியல் இட்டு சொல்ல முடியாத அளவு மிகப்பெரியதாகும்.

அரசு அனுமதியுடன் நடத்தப்படும் ஆரம்ப கல்வி நிலையத்தை கட்டுபடுத்த முடியாதவர்கள் மணல், கிரானைட், இயற்கை கனிமவளங்களின் கொள்ளையை தடுத்து நிறுத்தி இருப்பார்களா? மண்ணுக்கு கீழேயும், மேலேயும் உள்ள அனைத்து கனிம வளங்களும் அரசுக்கே சொந்தம் என்கிறது சட்டம். அது என்னவோ தமிழகத்திற்கு பொருந்துமா? பொருந்தாதா? என புரியாத புதிராக உள்ளது.

மலைகள் காணாமல் போவதும், கண்மாய்க்கள் மறைந்து போனதும், ஆறுகள் செத்து போனதுமே தமிழக ஆட்சியாளர்களின் சமீபத்திய சாதனைகளாகும். காடுகள் அழிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்பட்டு, தண்ணீர் என்பது திருடப்பட்டு நம்முடைய வாழ்க்கை மட்டுமல்ல எதிர்கால தலைமுறைகளின் வாழ்க்கையும் சேர்தே திருடி  நாசப்படுத்தியது திமுகவும், அதிமுகவும்தான்.

தாமிரபரணி துவங்கி பாலாறு வரை ஆத்தோரங்களில் தண்ணீர் உறிஞ்ச பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தனர் கடையெழு வள்ளல்களின் வாரிசுகள். தங்களை புனிதர்களாக காட்டிக் கொள்ள பன்னாட்டு நிறுவனங்கள்  லிட்டர் ரூ. 25 க்கு என கொள்ளையடிக்க வைத்துள்ளனர். தவிச்ச வாய்க்கு தரும் தண்ணீரை ரூ. 10 க்கு விற்பனை செய்த பாசமிகு ஆட்சிதான் இது.

தினமும் 20 லிட்டர் பாட்டில் குடிநீர் வீட்டுக்கு வீடு தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இவர்கள். கடந்த ஐந்தாண்டுகளில் தண்ணீரை வியாபார பொருளாக அங்கீகரித்ததுதான் சிறப்பு சாதனையாகும்.

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் டிவி வரிசையில் தமிழகத்தை ஸ்மார்ட் ஆக கொண்டு செல்ல அனைத்து ரேசன் கார்டுகளையும் ஸ்மார்ட் கார்டாக மாற்றுவதாக வாக்குறிதி  தந்தார்கள்.

செய்வீர்களா? செய்வீர்களா? எனக்கேட்ட இவர்கள் செய்தது என்ன? ரேசன் கார்டில் கூடுதல் தாள்களை ஒட்டி, ஒட்டி, ஒட்டி ரேசன்கார்டையே மறைத்ததுதான் இவர்களின் புதிய சாதனை. வெள்ளம் வந்தபோதும் வேதனையை தீர்க்காமல் நிவாரணத்தில் கூட ஸ்டிக்கர் ஒட்டி இதுவரை இல்லாத உலக சாதனை படைத்தது அதிமுக ஆட்சிதான்.

வாக்குறுதிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வழங்கப்படுகின்றன. வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்குகளை அளித்தும் வருகின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தால் அடுத்த தேர்தல் வரும்போது மக்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும். அப்படி வரும்போது மக்கள் உரிய பதிலடி தருவார்கள் என்பது மக்களாட்சியின் சிறப்பு அம்சமாகும். இதுதான் மக்களை மன்னர்களாகவும், ஆட்சியாளர்களை சேவகர்களாகவும் வைத்து உள்ளது.

மக்களை சந்திக்க வர புதிய கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கும் நடைமுறை உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் பால், பஸ், மின்சாரம், பத்திரபதிவு என அனைத்து விலையையும் உயர்த்தி விடுகிறது. இதன் மூலம் பலகோடி மக்களிடம் இருந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி விடுகின்றனர். பின்பு ஏதேனும் பொருளை கொடுத்து முன்னதை மறக்க செய்ய முயற்சிக்கின்றனர்.            பொருளை இலவசமாக தருவதாக சொல்லும் இவர்களால் ஏன் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவத்தை தர முடியவில்லை. ஏழை, எளிய மக்களின் அரசு என்று சொல்லும் இவர்களால் கண்ட பயன் என்ன? ஏழையின் சிரிப்பினில் இறைவனை காண்போம், உங்களுக்காகவே நான் வாழ்கிறேன் என வார்த்தைகளில் ஏதேனும் உண்மை உண்டா?

தமிழகத்தில் வேலை நியமனம் செய்த போக்குவரத்து, சத்துணவு என்பதில் துவங்கி வேலைவாய்ப்பில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளது. பணம் கொடுத்து ஏமாந்து தவிக்கும் பலரே இதற்கு சாட்சி. இதேபோல கடந்த ஆட்சியில் போக்குவரத்து மந்திரியாக இருந்தவர் மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் ரத்ததின் ரத்தமாக இருந்தாலும், திமுகவின் உடன் பிறப்பாக இருந்தாலும் வேலை வேண்டுமெனில் “தர வேண்டியதை தராமல் இரு ஆட்சியிலும் கிடைக்க வேண்டிய எதும் கிடைப்பதில்லை” என்ற புதிய மொழியை தமிழில் படைத்துள்ளனர்.

புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்க, காலிபணியிடங்களை நிரப்புதல், வேளான், பால் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு தருதல் போன்றவை அடுத்த தேர்தல் அறிக்கையிலும் வரலாம்.

மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேறுவது எப்போது? என்பது பொது மக்களின் ஆவலாக உள்ளது. சின்னஞ்சிறிய நகரங்களில் கூட பிரம்மாண்டமாக தனியார் மருத்துவமனைகளை பார்க்க முடிகிறது.

உயிரை பணயம் வைத்து பணத்தை கொள்ளையடிக்கும் உத்தி ஆனது நவீன திருடர்கள்கூட யோசிக்கும் நிலையை உருவாக்கி உள்ளது.

இனிமேல் மக்களின் சொத்துகள் மற்றும் கடன்நிலையை மருத்துவமனை போவதற்குமுன், போய்வந்தபின் என பார்த்தால் அவர்கள் ஏழையாவது அதிகரித்து வருகிறது.

கல்வி, வேலை, மருத்துவம் என தலைப்பு வாரியாக இந்நிலையை நாம் பொருத்தி பார்க்கலாம். பின்வரும் விபரம் நம்மை அதிர்ச்சி அடைய செய்யும் என்பதில் ஐயமில்லை.

மனிதவளம் என்பது அந்த நாட்டில் வாழக்கூடிய மக்களின் ஆரோக்கியம், வாய்ப்புகள், வசதிகள் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. 1971 முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்ட மதுவிலக்கு இன்றளவும் தொடர்கிறது. மதுக்கடையை அரசே நடத்துவதென ஜெயலலிதா அரசால் துவக்கி வைக்கப்பட்டது “இந்த நலத்திட்டம்” (சசிகலா, டி.ஆர்.பாலு, மல்லையா போன்றவர்களுக்கான நலத் திட்ட என வாசிக்க)

பின்பு முதலமைச்சரான கருணாநிதியும், ஜெயலலிதாவால் தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வருகிறது. மதுகடைகளால் தமிழக மக்கள் சந்திக்கும் இழப்புகள் ஏராளம், மனிதவள இழப்பு, ஆரோக்கியம் இழந்து நோய் வாய்ப்படுதல், உயிரிழப்பு, குடும்பங்களின் பொருளாதார இழப்பு, எதிர்கால தலைமுறையின் வாழ்வு இழப்பு என இதில் உள்ள தாக்கத்தினை எளிதாக மதிப்பிட முடியாது.

மக்களை பரிதவிக்க வைத்ததுடன் அதற்கு எதிராக போராடியவர்களை சிறையில் அடைத்ததும் இந்த அரசின் பெருமைகுரிய பணிகளாகும். இப்படியாக இன்னும் பல கொடுமைகளுக்கு மத்தியில் காலம் கடத்துகின்றனர் தமிழக மக்கள்.

வேதனையோடு வாழக்கூடிய மக்களை மதத்தால், சாதியால் பிரித்து வெறியை ஏற்றி மோதவிடகூடிய தரமற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர் சாதிய, மதவெறி சக்திகள். தமிழகத்தில் திருச்செங்கோடு துவங்கி இன்னும் பல இடங்களில் கலவரத்தை உருவாக்கிட முயற்சிக்கின்றது பாஜகவினர். குறிப்பிட்ட இடங்களில் நடக்கும் இம்மாதிரியான வன்முறைகள் சாதாரணமானது அல்ல திட்டமிடப்பட்ட வன்முறையாகும்.

சாதிய சக்திகளின் கூட்டத்தை நடத்தி தமிழகத்தின் முற்போக்கு பாரம்பரியத்தை சிதைக்க அனைத்து முயற்சிகளையும் பாமக செய்து வருகிறது. சாதிய வன்முறை நடத்துவதும், மக்களின் மனங்களை சாதிய உணர்வை வெறியாக வளர்ப்பதும், அதற்கென்றே தனி சட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருவதும் தமிழகம் இதுவரை சந்திக்காத ஒன்று.

சாதிப்பெயரை இனைத்து அழைப்பது அவமானம் என கருதிய மக்கள் மத்தியில் மீண்டும் அதனை தூண்டிவிட முயல்கிறது. இதற்காக தர்மபுரி, மரக்காணம், சேஷசமுத்திரம் என நடத்திய கலவரங்களும், உயிர் பலிகளையும் செய்து வருகிறது.

ஏற்கனவே நீண்டகாலம் ஏமாற்றப்பட்ட மக்களும், இளம் தலைமுறையினரும் மாற்றத்தை விரும்ப துவங்கியுள்ளனர். இம்மாற்றத்தை கொண்டு வரவேண்டிய மிகப்பெரிய பணி தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்வந்துள்ளன.

எனவே 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக+காங்கிரஸ், பாமக, பாஜக ஆகிய கட்சிகளை புறக்கணித்து

  • கல்வி வியாபாரமாக்கல் தடுக்கப்படும்
  • அரசு காலிபணியிடங்கள் முறையாக நிரப்பப்படும்.
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் மாத சம்பளம் ரூபாய் 15000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஊழல், லஞ்சம் இல்லாமல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
  • மாவட்டத்துக்கு ஒரு பன்னோக்கு அரசு மருத்துமனையுடன் கூடிய அரசு மருத்துவ கல்லூரி உருவாக்கப்படும்.
  • சாதிய ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்றப்படும்
  • ஊழல் செய்து சேர்த்து வைத்த பணம் சொத்து பறிமுதல் செய்யப்படும்.
  • மக்கள் நல திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும்.

என்று பல்வேறு மக்கள் நல கோரிக்கைகளை குறைந்தபட்ச செயல்திட்டமாக மக்கள் நலக் கூட்டணி  முன்வைத்துள்ளது. இது தமிழக அரசியலில் மிக முக்கியமான மாற்றமாகும். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மிக பெரிய அணி அமைந்துள்ளது தமிழக அரசியல் சந்தித்திராதது. அதேபோல சாதிய, மதவாத சக்திகள் புறக்கணிக்கப்பட்டதும் குறிப்பிடதக்க நிகழ்வுகளாகும். இந்த சூழ்நிலையில் வாக்குகளை தமிழக இளைஞர்கள் சரிவர பயன்படுத்திட வேண்டியுள்ளது. ஊழல், வெற்று வாக்குறிதிகளை தந்து ஏமாற்றக்கூடிய இயக்கங்களை ஆட்சி அதிகாரத்தில் வரவிடாமல் உண்மையான மாற்றத்தை கொண்டு வருவது அவசியமாகும்.

மாற்றம் என்பது அதிகார மாற்றமாக மட்டுமல்லாமல் கொள்கை மாற்றமாக உருவாகிட 2016 நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை வெற்றிபெற வைப்பது முக்கிய கடமையாகும்.

9443454578

Related Posts