அரசியல்

மார்க்சும் அம்பேத்கரும் சில புரிதல்கள் . . . . . . . . . . . . . !

★ சாதி குறித்தும் குறிப்பாக பசுவை வணங்குவது குறித்தும் “இந்தியாவை பற்றி” என்கிற தனது புத்தகத்தில் மார்க்ஸ் விரிவாகவே பேசி இருக்கிறார்.அதை தோழர் இ.எம்.எஸ் “இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்” என்கிற கட்டுரையில் மிகத் தெளிவாகவே சொல்லி இருக்கிறார்.மேலும் அதில் மார்க்சின் சில தவறுகளையும் சுட்டிக்காட்டி இருப்பதோடு எதனால் அந்த தவறுகள் நேர்ந்தது என்றும் விவரித்து இருக்கிறார்.எனவே இந்திய சாதிகள் பற்றி மார்க்சுக்கு தெரியாது என்பது ஏற்புடையதல்ல!
★ அதே போல் அம்பேத்கர் ‘மூலதனம்’ குறித்து பேசி இருக்க முடியாது என்பதும் தவறான கருத்தே என்று கருதுகிறேன்.தன் 25ஆவது வயதில் கொலம்பியா பல்கலைகழகத்தின்(1916 மே09) மானுடவியல் துறையில் அம்பேத்கர் சமர்பித்த முதல் கட்டுரையும் சமீபத்தில் நூற்றாண்டு கண்ட கட்டுரையுமான “இந்தியாவில் சாதிகள்” குறித்த கட்டுரையில் இந்திய சாதியமைப்பின் பண்பாட்டு மானுடவியலுடன் பொருளாதார காரணிகளையும் இனைத்தே ஆய்வு செய்திருக்கிறார்.இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் முழுக்க முழுக்க மார்க்சிய பார்வையில் அம்பேத்கர் படைத்த முதலும் கடைசியுமான கட்டுரையும் அது தான்.அதன் பிறகு அவரின் ஆசான்களில் ஒருவரான ‘ஜான் டூயி’ போன்றவர்களின் கோட்பாடான Pragmatism என்கிற நடைமுறை பிரச்சனைகளின் மீதான கோட்பாட்டை பின்பற்றி தன்னை  Pragmatist ஆக மாற்றிக்கொண்டதோடு அதன்பிறகான தன் ஆய்வுகளையும் அதன்வாயிலாகவே அனுகவும் முன் வைக்கவும் துவங்கினார்.இது தான் அம்பேத்கர் எந்தவொரு திட்டவட்டமான தத்துவ கோட்பாட்டுக்குள்ளும் தன்னை தகவமைத்து கொள்ளாததற்கான காரணமாகும்.இறுதியில் அதுவும் போதாதென்று உணர்ந்ததன் காரணம் தான் பௌத்தத்தை நோக்கிய அவரின் நகர்வு.அதையும் எடுத்தயெடுப்பிலேயே அவர் செய்துவிடவில்லை என்பது நாம் அறிந்ததே.தொடர்ந்து தன்னையும் சமூகவிடுதலைக்கான தனது பங்களிப்பையும் சுயபரிசீலனை செய்துகொண்டே இருந்தவர் அம்பேத்கர் என்பதை,அவரை வாசித்த எவரொருவரும் மறுத்துவிடமுடியாது.
★ இந்திய ரூபாயின் பிரச்சனைகள்,சாதியமைப்பின் பொருளாதார காரணிகள் பற்றிய பல்வேறு பொருளாதார பிரச்சனைகளை ஆய்வுக்குட்படுத்தியவர்.தொழிலாளர்களின் வர்க்க உணர்வில் சாதியம் போன்ற பல்வேறுபட்ட இந்தியாவின் பிரத்தியேக அரசியல் பொருளாதார சூழல்களை கணக்கில்கொண்டு தான் சாதியமைப்பு முறையை ஆய்வுக்குட்படுத்தி இருக்கிறார் அம்பேத்கர்.எல்லாவற்றுக்கும் மேலாக அம்பேத்கரின் முதல் டாக்ட்ரேட் பொருளாதாரத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
★ இந்திய சூழல் பொருத்து சாதியத்தில் நிலவுடமையின் பொருளாதார காரணிகளை ஆய்வுக்குட்படுத்தியவர் என்கிற வகையில் தன் பணியை மிகசிறப்பாகவே செய்திருக்கிறார் அம்பேத்கர்.அந்தவகையில் அவரது பொருளாதார ஆய்வுகள் இந்திய சூழலுக்கான பிரத்தியேக மூலதன ஆய்வேயாகும்.எனவே மார்க்சை இங்கு பொருத்துவது அவசியமற்றது என்பதைவிட அபத்தமானது என்பது தான் சரியாகும்.
★ மார்க்ஸ் என்கிற ஆளுமையும் அம்பேத்கர் என்கிற ஆளுமையும் பிரத்தியேகமானவர்கள்.அவரவர்களை அவரவர் சூழல் சார்ந்தும் அவர் காலத்தின் சமூக அரசியல் பொருளாதார காரணிகள் பொருத்தும் தான் ஆராயவேண்டுமே தவிர இருவரையும் ஒப்பிட்டு நம் வாசிப்பின் அறிவினால் ஏற்பட்ட புரிதலை அவர்களின் மீது சுமத்துவது சரியாகாது.
★ இன்றைய சூழலுக்கு இருவரையும் உள்வாங்கிக்கொண்டு பயணிக்கவேண்டிய தேவையே இருக்கிறது.இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் இன்றைய வளர்ந்த அல்லது நெருக்கடியான சூழலில் இருவருமே கூட போதவில்லை என்பதுதான் நிஜம்.அவர்களை அடியெற்றி இன்றைய வளர்ச்சிக்குட்பட்டு அவர்களின் ஆய்வுகளையும் கருத்துகளையும் சமகாலசூழலோடு பொருத்திப்பார்த்து அதன் போதாமைகளையும் குறைபாடுகளையும் செழுமைபடுத்தவேண்டிய தேவையே நம்முன் உள்ளது.அதைத்தான் உலகம் முழுவதும் உள்ள மார்க்சிய ஆய்வாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.அம்பேத்கரியர்களும் இந்தியாவில் அதைத்தான் குறைந்த அளவிலேனும் செய்ய முயற்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.அவர்களின் கூற்றுப்படி நம்முன் பழையதின் போதாமையே நிறைந்து இருக்கிறது என்பதை எவ்வித தயக்கமுமற்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
★ பேராசிரியரும் தலித்திய சிந்தனையாளருமான ‘ஆனந்த் டெல்டும்டே’ சொல்வது போல் சமகால இந்திய சூழலின் இந்துத்துவ வளர்ச்சி பொருத்து அம்பேத்கரியத்தையே மறுகட்டமைப்பு செய்யவேண்டும் என்றும்,பௌத்தம் அம்பேத்கரியத்திற்கான நோக்கங்களையே சிதைத்துவிட்டதாகவும் கூறுகிறார்.நமைச்சுற்றி புதுப்புது பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொப்பளித்துக் கொண்டே இருக்கும் நெருக்கடியான சூழலில் பௌத்தத்திற்கு மாறிய அம்பேத்கரியர்கள் ‘விபாசனா’ எனும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் புறச்சூழலின் பாதிப்பில் இருந்து பிற தலித்துகளை காப்பதும் அவர்களை எழுச்சியடைய செய்வதும் யார் என்று கேட்பதோடு விபாசனா ஒடுக்கப்பட்டவர்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கெல்லாம் தீர்வை தந்துவிட முடியுமா என்றும் கேட்கிறார்.
★ ஆக மார்க்சையும் அம்பேத்கரையும் புனிதப்படுத்துவதன் வாயிலாக யாதொரு நன்மையும் அவர்களுக்கும் இல்லை.சமூகத்திற்கும் கிடைக்கப்போவதில்லை.மாறாக மத அடிப்படைவாதிகள் சொல்வதைப்போல் எல்லாவற்றுக்குமான தீர்வு இதில் இருக்கிறது என்கிற போக்கில் ராமாயணத்தைப்போல், மகாபாரதத்தைப்போல்,மநுவைப்போல் அர்த்த சாஸ்திரத்தைப்போல் இன்னும் ஏராளமான இந்துத்துவ குப்பைகளைப்போல் மார்க்சியத்தையும் அம்பேத்கரியத்தையும்(சிலர் அம்பேத்கரியம் என்றெல்லாம் ஒன்று கிடையாது என்றும் சொல்லக்கூடும்.இங்கு அவர்களை பொருட்படுத்தவேண்டியதில்லை) புனிதநூலாக மாற்றத்தான் முயலுகிறோம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.புனிதங்களுக்கு எதிரானவர்களை மீண்டும் அதை நோக்கியே நகர்த்துவது எந்த வகையிலும் சரியானதில்லை.அதற்கு நமக்கு எந்தவகையிலும் உரிமையுமில்லை.மறுவாசிப்பு என்பது தற்கால வளர்ச்சிக்கேற்ப காலாகாலத்திற்கும் அதனை செழுமைபடுத்திக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்பே தவிர அதை அப்படியே அது இருக்கும் நிலையிலேயே முற்றுமுழுவதுமான பேராயுதம் என்று போற்றிப் புகழுவது அல்ல.
★ எதுவொன்றும் புனிதமில்லை.இங்கு புனிதர்களும் பிறப்பதற்கில்லை.காலமாற்றத்திற்கு உட்படாதது பேரபாயமாகும்.அதுவே பாசிச சிந்தனையின் துவக்கப்புள்ளியுமாகும்.எல்லா மத நூல்களையும் வழுவி மத அடிப்படைவாதிகள் அதனைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.மார்க்சியத்தையும் அம்பேத்கரியத்தையும் கூட அப்படியாக்கிவிட வேண்டாம்.
– மதுசுதன் ராஜ்கமல்.

Related Posts