அரசியல்

மாதர் அமைப்புகள் எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் . . . . . . . !

கல்வி என்பது தனிமனித வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இன்றோ கல்வி கடை சரக்காக மாறி, யார் வேண்டுமானலும் கல்வி நிலையங்களை துவங்கலாம் என்ற காரணத்தால் பல குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.  உலகமய, தனியார்மயக் கொள்கையால் ஏழை மிகவும் ஏழையாக ஆக்கப்பட்டு அவர்களின் குழந்தைகள், தான் என்ன ஆகப்போகிறோம் என்பதே தெரியாமல் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  ஆயினும் பல தடைகளைத் தாண்டி கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் அரசு கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்காக கடும் இன்னல்களுக்கு மத்தியில்  படித்து மதிப்பெண்களை பெறுகின்றனர். ஆனால் நீட் பொதுத் தேர்வு என்ற பெயரில் ஏழை மாணவர்களின் கனவு திட்டமிட்டு தகர்க்கப்படுக்கின்றன. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை இல்லாத சூழ்நிலையில் பொது தேர்வு என்பது வெறும்  கண் துடைப்பு நாடகமேயாகும். இதற்கு இடதுசாரி மற்றும் முற்போக்கு  அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொதுத் தேர்வு என்ற பெயரில்  மத்திய அரசு தமிழகத்திலும் இதனை திணித்துள்ளது.  2017-18 ம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு 56 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இதற்கான தகுதித்தேர்வு மே 7 ம் தேதி தமிழகம் முழுவதும் 2200 மையங்களில்  தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பத்து மொழிகளில் தேர்வுகள் நடைப்பெற்றது. இதில் 11.35 லட்ச மாணவர்கள் எழுதியுள்ளனர்.தேர்வின் போது வழக்கமாக சோதனை நடைப்பெறும் என்று புத்துணர்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் தேர்வை எதிர்நோக்கி சென்ற மாணவர்களூக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. பரிசோதனை என்கிற பெயரில் மாணவ, மாணவிகளிடம் வரம்பு மீறி தேர்வு மைய அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவிகளிடம் கம்மல், மூக்குத்தி, செயின் ஆகியவற்றை அகற்ற வலியுறுத்தியதோடு துப்பட்டா, முழுக்கைக் சட்டை அணியக்கூடாது எனவும் மாணவர்களை அதனை அரைக்கையாக வெட்டி வர வேண்டுமென அவசியம் இல்லாமல் கட்டாயப்படுத்தப்பட்டனர். சிபிஎஸ்இ கல்வி துறை, மாணவர்களை தீவிரவாதிகள் போன்று மெட்டல் டிடெக்டர் முலம், சோதனை செய்துள்ளது. மேலும் அராஜகத்தின் உச்சமாக சில தேர்வு மையங்களில் மாணவிகளின் உள்ளாடைகள் அகற்ற கூறி வரம்பை மீறி மிகவும் அநாகரிகமாக நடந்துள்ளது.  இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சமடைந்து, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.  ஸ்கேனர் போன்ற எத்தனையோ தொழில் நுட்ப சாதனங்கள் இருந்தும் இது போன்று மாணவர்களை அநாகரீகமாக பரிசோதிக்க அவசியம் என்ன ? என்று பல மகளிர் அமைப்புக்களும் குரல் கொடுக்கும் இவ்வேளையில் இதனை தட்டிக்கேட்க திராணி அற்ற சில அறிவுஜீவிகள் மீம்ஸ்(Memes) என்பதன் முலம் பெண்கள் அமைப்புகளை வசைப் பாடி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பெண் தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியே சொன்னால் உடனே அந்த பெண்ணையோ அல்லது அவள் சார்ந்த அமைப்பையோ பற்றிய தவறான கருத்துகளும், மீம்ஸ்களும் பரப்பப்படுக்கிறது. என்னதான் பெண்கள் திறமைகள் பல பெற்று முன்னேற்றம் அடைந்தாலும் சமுகத்தில் பெண்கள் பற்றிய பார்வை இன்னும் மாறாமல் இருப்பதற்கு இதுவே சான்றாகும்.

    பொதுவாக பெண்கள் குடும்பம் மற்றும் சமூகம் ஆகிய இரு தளத்திலும் போராட வேண்டியுள்ளது. தினந்தோறும் பல்வேறு இடர்பாடுகளை கடந்து தனது அடிப்படை உரிமைகளைக் கூட போராடி பெற வேண்டியுள்ளது. அதிலும் பொதுவாழ்வில் ஈடுப்படும் பெண்களின் வாழ்க்கை சவால்கள் மிகுந்ததாகும். சமீபத்தில் நடந்த பணமதிப்பு நீக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் அநாகரீகமாக நடந்துக் கொண்டது காவல்துறை. இதே போல் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையினை எதிர்த்து போராட்டம் நடத்திய கிராமப் பெண்களை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறைந்து அவர்களை அவமானப்படுத்தியுள்ளது. இது போன்று போராடக் கூடிய பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்  பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவல் துறையே இது போன்ற இழிவான செயல்களில்  ஈடுபடுவது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இப்படிப்பட்ட பெண் அமைப்புகளை குறை கூறுவது என்பது சில மூடர்களுக்கு கைவந்த கலையாகும். பெண்களின் இயக்கங்கள் பல்வேறு தியாகத்தின் விளைவாகவே உதயமானது

    காலம் காலமாக பெண்களின் பிரச்சனைகளை, அல்லது அவர்களின் தேவைகளை செவிமடுத்து கேட்காமல் புறம்தள்ளும் இச்சமுகத்தில் பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்ததில் மாதர் சங்கம் போன்ற அமைப்புகளின் பங்கு அளப்பரியது. 19 ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் வாச்சாத்தி பெண்களை காக்கி உடை அணிந்த வெறி நாய்கள் கிராமத்துக்குள் நுழைந்து அங்கு இருந்த அப்பாவி இளப்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததற்கு எதிராக போராடி அவர்களுக்கு உறுதுணையாக நின்று குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்து அந்த பெண்களுக்கு நியாயம் தேடிக்கொடுத்தது மகளிர் அமைப்பு தான்.

    கடலூரில் பத்மினி என்கிற பெண்ணை அவரது கணவரின் முன்பே காவலர்கள் பாலியல் வன்கொடுமைச் செய்ததை கண்டித்து அவர்களுக்கு நியாயம் வாங்கிக் கொடுத்தது. மதுரை பொதுப்பூர் கிரமத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்ததும் இந்த மகளிர் அமைப்புக்கள்  தான் இது போன்று பல வழக்குகள் உதாரணங்களாகக் கூறலாம். இது மட்டுமல்ல மாலை 6 மணிக்கு மேல் பெண்களை காவல் நிலையங்களில் விசாரணை செய்யக் கூடாது, பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்ட போது அவர்களுக்கான சொத்துரிமை சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்,  பணியிடங்களில் பெண்களுக்கான பாதுக்காப்பு சட்டம், குழந்தை வன்முறைக்கு எதிரான சட்டம் மற்றும் ஆணவக்கொலை தடுப்பு சட்டம் போன்ற பெண்களுக்கான சட்டங்கள் அனைத்தும் இத்தகைய மகளிர் அமைப்புகளின் தொடர் போராட்டங்களின் விளைவாக கிடைக்கப் பெற்றதே. இது போன்ற அமைப்புகளை பொதுவெளியிலும் சமூக வலைத் தளங்களிலும் தவறாக குறை கூறுவது என்பது அவர்களின் பணிகள் மற்றும் தியாகத்தை அவமதிப்பதாகும். இது போன்ற கருத்துக்களால் அவர்களை பொதுவெளியில் சுதத்திரமாக செயல்பட முடியாமல் தடுப்பது  மிகவும் ஆபத்தானதாகும்.

  மாதர் அமைப்புகள் குறித்த சமூகத்தின் பார்வைக்கோளாறு களையப்பட வேண்டும். அதோடு, பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் பெண்கள் தான் போராட வேண்டுமென்று என்ற  கருத்து தவறானதாகும் , சமுகத்தில் ஆணும் பெணும் சமம் எனவே இதில் ஒரு பிரிவினருக்கு ஏற்படும் அநீதியானது சமுக பிரச்சனையாகவே பார்க்க வேண்டுமே தவிர பெண்களின் பிரச்சனை என்று தனித்து பார்ப்பது நிலைமையை தலைக்கீழாக பார்ப்பதாகும்.  சமத்துவம் படைக்க சரிநிகரான பாதையை அமைத்தால் மட்டுமே ஆரோக்கியமான சமூகச் சூழலுக்கு வழி பிறக்கும்.

– வசந்தி பாரதி.

Related Posts