புதிய ஆசிரியன்

அந்த மாணவி எங்கே சென்றாள்..?

ம. மணிமாறன்

தான் அறியாதவற்றின் மீதான வியப்பும் ஈர்ப்பும் எப்பொழுதும் மனிதர்களுக்கு குறைவதேயில்லை. நிஜத்தை விட கற்பனைக்கே ஆற்றல் அதிகம். கற்பனை எல்லையற்றது. தாங்கள் உருவாக்கிய கற்பனையின் தோற்றம் கலைகிறபோது மனிதர்கள் கலங்கிப் போகிறார்கள். தங்களுக்குள் சமாதானமாகாமல் புதிய புதிய தர்க்கங்களையும் வியாக்கியானங்களையும் உருவாக்குகிறார்கள். கொதித்துக் கிடக்கும் தன்னுடைய மனதைச் சமாதானம் செய்திடும் எளிய முயற்சிதான் இது.

நம்முடைய கல்வி முறையின் உச்சபட்ச அதிகார மையங்களாக தேர்வுகளே இருந்து வருகின்றன. தேர்வு ஒன்றே கற்றலை அளந்திடும் ஒற்றைக் கருவியாக இன்றளவிலும் நீடித்திருக்கிறது. ஒற்றைத் தன்மை எப்பொழுதும் தன்னகத்தே அதிகாரம் குவித்துக் கொள்ளும். அப்படித்தான் ஒட்டு மொத்தக் கல்வி அமைப்பும் தேர்வு என்கிற ஒற்றை நிறுவனத்திற்கு கட்டுப்பட்டுக் கிடக்கிறது. கல்வி முறையின் இறுதி லட்சியம் மாணவர்கள் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது மட்டுமே என்கிற ஒற்றைப் புள்ளியில்  சுருங்கிப் போய் விட்டது.

மதிப்பெண்களைத் துரத்திடும் மாய ஓட்டத்தில் ஆசிரியர், மாணவர், கல்வித்துறை வல்லுநர்கள் என யாவரும் சுற்றிச் சுழல்கிறார்கள். நம்முடைய ஆசிரிய சமூகத்திடம் ஒரு புள்ளி விவரம் சேகரிக்க வேண்டி யுள்ளது.

அன்றாடப் பணிகளில் அவர்களை எரிச்சல் அடையச் செய்யும் பணி எதுவென கேட்டுப் பார்த்தால், சரிபாதிக்கும் மேலானவர்கள் சொல்கிற பதிலாக இருக்கப் போவது தேர்வு மேற்பார்வை, விடைத்தாள் திருத்தும் பணி என்பதாகத்தான் இருக்கும். தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி என்பது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு திருப்பித் தருகிற இம்போசிசன் என்பதான அயற்சி எல்லோருக்கும் ஏற்பட்டு விடுகிறது. தேர்வுக்கூட மேற்பார்வையில் குற்றவாளிகளைத் தேடியலைகிற ஒருவிதமான சிக்கலான உளவியலை ஆசிரியர்கள் அடைந்து விடுகிறார்கள்.

தேர்வுக்கூட அறையொன்றில் நிகழ்ந்திட்ட விரும்பத்தகாத சம்பவமே இந்தக் கட்டுரைக்கு காரணமாகியிருக்கிறது. அரசுத் தேர்விற்கு முந்தைய திருப்புதல் தேர்வு அது.

மாடல் தேர்வாக நடத்தப்பட வேண்டும் என கல்வித்துறை மட்டுமல்ல அரசின் பிற துறைகளும் களமிறக்கப்பட்டன. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தேர்வு அறைகளுக்குள் நுழைவில் இருந்து ஒவ்வொரு நொடியும் ராணுவ ஒழுங்குடன் வடிவமைக்கப்பட்டதால் அனைவருக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது. மாணவ-மாணவியரின் இயல்பான நடவடிக்கைகள் குழம்பிப் போயின. கண்காணிப்பாளர் உள்ளே நுழைந்தவுடன் எல்லோருக்குமான கடும் எச்சரிக்கைகளை பிரயோகிக்கிறார். மாணவ-மாணவியர் ஏதோ ஒரு யுத்தகளத்திற்குள் தடுமாறுகின்றனர். தேர்வு அதன் இயல்பில் நடந்து கொண்டேயிருக்கிறது. அப்போது தான் பிட் பேப்பர்களை வெளியே எடுத்து எழுதிட முயற்சித்த ஒரு மாணவி திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.

கையும் களவுமாக பிடிபட்டதாக எண்ணிய ஆசிரியர் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றிட முயற்சித்தார். அடுத்த நொடியில் அந்த மாணவி விறுவிறுவென ஸ்கூல் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போய் விட்டாள். தடுமாறிப் போய் விட்டார் அந்த ஆசிரியர். அதன்பிறகு நடந்த குழப்பமும் முடிவும் ஒரு பாப்புலர் சினிமாவின் கடைசிக்கட்ட காட்சியைப் போல அமைந்து விட்டது. ஊரே திரண்டு பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டது. அவரவர்கள் அவரவர் மன நிலையில் விதவிதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பதட்டத்தில் வார்த்தைகள் தடுமாறின.. தடித்தன. பரீட்சை இன்னைக்கு வரும்.. நாளைக்குப் போகும், பிள்ளை இல்லைன்னு ஆயிருச்சுன்னா யாரு தருவா.. எப்பா இந்த வாத்தியாங்களே இப்படித்தானப்பா, அவிங்க புள்ள மாதிரி பார்க்கணும்ல.. நாலு புத்திமதிய சொல்லிட்டு எழுத விட்டுருக்கலாம்ல… கூட்டத்தில் வார்த்தைகள் வெப்பமாக உருகி வழிந்து கொண்டிருந்தன. ஆசிரியரை இந்தக் கூட்டத்தின் மத்தியில் இருந்து காப்பாற்றுவதே முதல் வேலையாயிற்று. தலைமையாசிரியர் அறையை நெருங்கிய கூட்டம், முதல்ல அந்த வாத்தியாரக் காட்டுங்க.. சில விபரம் கேட்கணும்.. பிள்ளைக்கு மட்டும் ஏதாவது நடந்திச்சு, அப்புறம் நாங்கள்லாம் மனுஷனா இருக்கமாட்டோம்… எனக் கூச்சலிட்டனர்.

இப்படியான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்கள் கொலைக் குற்றவாளியைப்போல தலைமறைவாகி விடுவதும் ஏண்டா இந்த உத்தியோகத்திற்கு வந்தோம் என பதட்டமாகி வெட்கித் தலைகுனிவதுமான மனநிலையும் தனித்து விவாதிக்க வேண்டியதாகும். நேரம் கூடக்கூட பதட்டம் அதிகமாகியது. ஊரின் கிணறுகளையெல்லாம் தேடிச் சென்றது ஒரு கூட்டம். தற்கொலை மனநிலைக்கு கல்விச் சூழலும் தேர்வு முறைகளும் சில மாணவர்களைத் துரத்திவிடுவது நாம் அறியாதது அல்ல. தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில் முதல் இடங்களைப் பெற்ற மாணவ-மாணவியரின் புகைப்படங்களையும் தேர்ச்சி சதவீதத்தையும் மதிப்பெண்களையும் வரும் கல்வி ஆண்டிற்கான வருவாயைப் பெற்றுத் தரப்போகிற விளம்பர உத்தியாக்கிவிடுகின்றன தனியார் பள்ளிகள். விளம்பரவெளிச்சத்தின் விளிம்பில், தோல்வி தந்த ஏமாற்றத்தை காணச் சகிக்காத மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரச் சம்பவங்களும் நடந்துவிடு கின்றன.

கல்வித்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரையிலும் இது ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சினையாகி விடக்கூடாது, அவ்வளவுதான். கூடியிருந்த கூட்டத்திடம் சம்பந்தப்பட்ட டீச்சரை சஸ்பெண்ட் பண்ணியாச்சு… என்ன ஏதுன்னு விசாரிப்போம். போலீஸ் டிபார்ட்மெண்டிட்டயும் சொல்லியிருக்கு.. தேர்வுக்கூட அறையில் ஏற்கப்பட்ட ஒழுங்குகளை நடை முறைப்படுத்திய ஆசிரியர் குற்றவாளியைப்போல தலை கவிழ்ந்து அமர்ந் திருந்தார். லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சார விசாரணைக்கு கூட்டிட்டுப் போவோம்.. என்று தன் பங்கிற்கு திரியைக் கிள்ளிப் போட்டார் இன்ஸ்பெக்டர்.

ஒரு விதமான அச்சமும் பதட்டமும் கூடிக்கிடந்த பள்ளி நிலத்திற்குள் மின்னலென மாலை 4 மணிக்கு அந்த மாணவி நுழைந்தாள். நுழைந்தவள் கதறி அழத்துவங்கினாள். இப்படி இனிமேல் செய்ய மாட்டேன் என்று ஓங்கி கதறி அழத் துவங்கினாள். பெற்றோர்கள் தேக்கி வைத்திருந்த கண்ணீரைக் கொட்டித் தீர்த் தனர். இவள் இந்நேரம் வரை எங்கே சென்றாள். என்பதைக் குறித்து எவரும் பேசவில்லை. ஒருவிதமான நீண்ட அமைதியைக் கலைத்தனர் ஆசிரியர்கள்.

இனிமேலு இந்தப் பொண்ண எப்படி நாங்க ஸ்கூல்ல வச்சிருக்க முடியும்? இப்ப திரும்பி வந்தவ நாளைக்கு வேறு ஏதாவது  செஞ்சிட்டா என்ன செய்யிறது. இந்த மாணவிய வேற ஸ்கூலுக்கு மாத்திருங்க – என்றனர். கல்வித்துறை அதிகாரிகளும் காவல்துறையும் பெற்றோரும் ஊர்க் கூட்டமும் நெருக்கியதால் நிலைகுலைந்திருந்த அந்த ஆசிரியர் இப் போதுதான் பேசினார். அப்படியெல்லாம் அவசரப்பட்டு எதுவும் செஞ்சிர வேண்டாம். பார்த்துக்கிரலாம். அந்த பொண்ணு நல்லா படிச்சு நல்ல ஆளா வருவா. அவளுக்கான சந்தர்ப்பத்தைக் கட்டாயம் கொடுப்போம் என்ற அவருடைய கைகளைப் பெற்றோர்கள் பற்றிக் கொண்டனர்.

அழுது கொண்டிருந்த மாணவியும் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தாள். வார்த்தைகள் அற்று நின்று கொண்டிருந்த மௌனமான நேரத்தைய மனநிலையைக் கண்டறிந்தால் நிச்சயம் யாருக்குள்ளும் வழக்கமான தேர்வுமுறைகளின் பலவீனங்களும் குழப்பங்களும் ஓடிக் கொண்டிருப்பதை உணர முடியும். என்ன செய்து இப்பெருங்குறையைப் களைவது என்பதை ஒட்டுமொத்த சமூகமும் விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டியுள்ளது.

(maran.sula65@gmail.com  9443620183)

Related Posts