இதழ்கள் இளைஞர் முழக்கம்

மாட்டுக்கறி திண்ணச் சொல்கிறது வேதம். திண்பவரை கொல்லச் சொல்வது யார்? ப.பாரதி அண்ணா

மாட்டுக்கறி திண்ணச் சொல்கிறது வேதம்.

திண்பவரை கொல்லச் சொல்வது யார்?

.பாரதி அண்ணா

                மாட்டுக் கறி வைத்திருந்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் உத்திரப்பிரதேசம் தாத்ரியில் செப்டம்பர் 28ல் முகமது அக்லக் என்பவர் அடித்தே படுகொலை செய்யப்பட்ட கொடுமை பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. சமூகத்தின் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளபோதிலும், மாட்டுக்கறியை உண்றால் கொடுரமாய் கொலை செய்யப்படுவதே தேசபக்தி என்று சங்பரிவாரங்கள் முன்னெடுக்கும் அரசியல் தேசத்தின் முரண்மிக்க சூழலை எடுத்துரைக்கிறது.

உடனடியாக, அடுத்தடுத்த சம்பவங்களை இதுபோன்று செய்வதன் மூலம் தங்களின் அரசியல்பொருள் இதுதானேன்று நிருபிக்கும் வேலையிலும் சங்பரிவாரங்கள் இறங்கியுள்ளன. இதே காலத்தில் இமாச்சலப்பிரதேசத்தில் மாடுகளை வியாபாரத்திற்கு எடுத்துச் சென்றதாக நோமன் என்பவர் அடித்து கொல்லப்பட்ட கொடுமை நிகழ்ந்திருக்கிறது. இத்தோடு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இறைச்சிக்காக மாட்டை விற்பனைக்குக் கொண்டு சென்றதாக கூறி சாதிக் என்ற பேருந்து ஓட்டுநர் பணியில் இருக்கும்போதே கொடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அவர் சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் அக்டோபர் 10 அன்று உயிரிழந்துள்ளார்.

இதே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாட்டு கறி விருந்து வைத்ததற்காக அம்மாநில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ரஷீத் என்பவர் சட்டமன்றத்திலேயே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது நாடறிய நடந்தேறியுள்ளது. கர்நாடகத்தில் ஒரு மாட்டுக்கறி விருந்தில் கலந்துகொண்டார் என்பதற்காக ஒரு கர்நாடக பெண் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சேத்தனா தீர்த்தஹள்ளிக்கை பாலியல் வன்புணர்வு செய்து, ஆசிட் வீசிக் கொலை செய்வோம் என்றும் பகிரங்கமாக மிரட்டுகின்றனர். என்ன நடக்கிறது இந்த நாட்டில்?

மாட்டுக்கறியை திண்ணக் கூடாது என வேதம் கூறுவதாக அப்பட்டமான புரட்டை முன்வைக்கின்றனர். வேத காலத்திலேயே பிள்ளையாருக்கு யானை தலை பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததாக கூறிய மோடியின் புரட்டடை விட அபத்தமானது இது. உண்மையில் வேதம் என்னதான் சொல்கிறது.

இரு பிறப்பாளர் எனப்படும் பார்ப்பனர்கள் எந்த எந்த உணவை தவிர்க்க வேண்டும் என மனுதர்மம், அத்தியாயம் 5ல் விதி 19ல் வரையறுக்கும் பட்டியல் இதுதான். வெங்காயம், வெள்ளைப்பூண்டு, பன்றி, சேவல், முயல் ஆகியவையே குறிப்பிடப்படுகிறது. இந்தப்பட்டியலில் மாட்டுக்கறி இடம் பெறவில்லை. தொன்மைக்கால வைதீக யாகச்சடங்கில் தீ மூட்டி, பசுக்களைப் பலியிட்டு நெருப்பில் இட்டு மந்திரம் ஓதி “அவிஸ்” என்ற உணவாக புகிக்கப்பட்டது. மேற்படி யாகங்களில் பலியிடப்படும் பசுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப. மேன்மை அதிகப்படும் என்றும் நம்பியுள்ளனர்.

23 பசுக்கள் பலியிடப்படுவது “வாஜ்பேய யாகம்” என்றும், 99 பசுக்கள் பலியிடப்படுவது ”அசுவமேத யாகம்” என்றும் அழைக்கப்படுமாம்.

மேற்படியாகங்களில் ஓத வேண்டிய வேத சுலோகங்கள் யசூர் வேதத்தில் உள்ளது. அவை பின்வருமாறு,

பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-

“அத்ரிகோ சமீத்வம் ஸூசமீ சமீத்வம்

சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத் “

(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)

இதன் பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்பதாகும்.

பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை குறித்தும் கூறும் மந்திரமாவது:-

“அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேவதத் ப்ராணன் தாதி ஸ்யேன மாஸ்ய வக்ஷ க்ருணுதாத் ப்ரசஸா பாஹூ` சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ கவவேஷாரூஸ்ரேக பர் ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்கா யஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.”

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

இதன் பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக்கொள்க என்பதாகும

“ஸர்வமாயுரேதிய ஏவம் வேத “

இதன் பொருள்: எவனொருவன் இதை இவ்வாறு அறிகின்றானோ (இந்த யாகத்தை நடத்துகிறவன்) அவன் நெடு நாள்கள் உயிரோடிருப்பன்.

“வபாயாமா ஹூ`தாயாம் ஸ்வரக்கோ லொக: ப்ராக்யாயத.”

இதன் பொருள்: கொழுப்பை சேமித்தால் ஸ்வர்க்கலோகம் கிடைக்கும்.

இவ்வித யாகமானது ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் இறந்து போனபின் தேவர்கள் கீழிறங்கி வந்து இந்த யாகவிதியை உபதேசித்தார்கள் என்றும் கீழ்குறித்த மந்திரம் சொல்லுகிறது.

தத் ஸ்வர்க்காஸ்ச லொகானாப்னு வந்தி ப்ராணேஷூ சைவதத் ஸ்வர்க்கேஷூ ப்ராதி திஷ்டம் தோயித ஏதாம் பசோர் விபக்திம் ஸ்ரௌத ரிஷிர் தேவபாகோ விதாஞ்சகார கிரிஜாய பாப்ரவ்யாயா மனு ஷ்ய: ப்ரோவாச (ஜத.. பஞ்சிகா 7 காண்டம் 1)

இதனால் தான் ராமாயணத்தில் கூட நகருக்கு வரும் ராமனை வரவேற்க பாத்வாஜமுனிவர் கன்றுக்குட்டியை பலியிட்டு வரவேற்றதாக காட்சி வருகிறது.

யாகங்கள் மட்டுமல்ல இந்துக்கள் வீடுகளில் மாடு வெட்டி தான் திருமணம் செய்ய வேண்டும் என வேத மந்திரம் கூறுகிறது

“விவேஹ கௌ`ஹீக்குவே கௌ`ஹீ “

மதுவர்கம் எனும் திருமண முந்தய நாள் நிகழ்விலும் திருமண விருந்திலும் கோமாமிசம் (மாட்டுக் கறி) இடம் பெற வேண்டும் என வேதம் கூறுகிறது என அக்னிஹோத்ரி ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது ” என்ற புத்தகத்தில் உறுதியிட்டுக் கூறுகிறார்.

மணிமேகலை காப்பியத்தில் வரும் ஆபுத்திரன் என்கிற சிறுவன் அந்நகரில் அந்தணன் வீட்டில் பலியிடுவதற்காக, கொம்பில் மாலை சூட்டி பசு கட்டி வைக்கப்பட்டிருந்த அவலத்தை விவரிக்கும்

தமிழ் இலக்கிய சான்றையும் சாட்சியாக்க முடியும்.

அப்படியெனில், மாட்டுக்கறியை தடை செய்யச் சொல்லும் கொலை வெறிக் கூட்டம் இந்து மத வேதங்களை தடை செய்யக்கோருவார்களா?.

மாட்டுக்கறி பல்வேறு மக்களுக்கு முக்கிய உணவு. நான் சைவம், எனவே அதை சாப்பிடமாட்டோம் என்று சொல்லும் உரிமை எவரொருவருக்கும் இருக்கிறது என்பதைப்போலவே மாட்டுக்கறி எங்கள் உணவு என்று சொல்லும் உரிமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கத்தானே செய்கிறது. இதை இன்னொருவர் எப்படித் தடுக்கமுடியும்?

விநாயக் தமோதர் சவர்க்கரே மாட்டுக்கறி சாப்பிடுவர் என்று தான் தகவல்கள் கூறுகின்றன. தர்மசாஸ்திரத்திலும் மாட்டுக்கறி உணவுக்கான குறிப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, நேரு மாட்டுக்கறி குறித்து நியமித்த ஏ.கே.சர்கார் குழுவில், இந்துத்துவா தத்துவவாதி எம்.எஸ்.கோல்வால்க்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?

மாட்டுக்கறி என்பது அரசியலைத்தவிர வேறொன்றுமில்லை என்கிறார்.

இப்போது கோல்வால்க்கரை என்ன செய்யப்போகிறீர்கள்?

அதென்ன அசுவமேத யாகம் …?

ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்துவிட்டு…அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்றுவிட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்துவிட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப்போட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்துவிடுவார்கள்.

இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப்பெண்கள் முக்கியமாக ராணி குதிரையின் உறுப்பை கைக ளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குதான். இதைக் கூற சங்கோஜமாகத் (கூச்சமாக) தான் இருக்கிறது என்ன செய்ய. அசுவமேத யாகஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.

“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து

பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”

எனப்போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி வழிபட வேண்டிய முறையைத்தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்தக் கடமை முடிந்ததும்… மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும்வரை எரித்து விடுவார்கள். இதுதான் அஸ்வமேத யாகம்.

மக்களைப்போலவே, ராஜ குடும்பத் தினரும் பிராமணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும் “ஏ…ராஜா… இந்த யாகத்தை நல்லவிதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும் பொருளும் தட்சனை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்குகொண்ட உன் ராணியை யும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச்செல்ல வேண்டும்” என்றார்களாம்.

இதையல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். மனித தர்மம், மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே…? ஏன் இப்படி…? என யாகம் நடத்தும் இடத்துக்கேபோய் கேள்விகள் கேட்டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள், “குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு ஷேமம் கிடைக்கும்” என்று. புத்தர் திரும்பக் கேட்டார்.“ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப்போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே.. எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெற வேண்டாமா? அந்த அக்கினி குண்டத்தில் யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டுமல்லவா?. ப்ராகிருத மொழியில் மக்களிடமும் இதே கேள்வியை புத்தர் பரப்ப… திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்.

நன்றி: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது புத்தகத்திலிருந்து

Related Posts