அரசியல்

மற்றுமொரு அவமானம்:உள்நாட்டு அகதி முகாம்கள்!

(உத்தரப் பிரதேசத்தில் – திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட கலவரங்களின் பின்னணியில் மிகப்பெரும் உள்நாட்டு அகதி முகாம்கள் உருவாகியிருக்கின்றன. இந்த சூழல் நமக்கு இரண்டு எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. மதவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் – இந்தியாவின் பின்தங்கிய சமூகங்கள் எத்தகைய பிரிவினை ரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது முதல் எச்சரிக்கை. ‘மதச்சார்பின்மை’ என்ற முழக்கத்தின் முழுமையான பொருளை உள்வாங்காத, ‘சமாஜ்வாதி’ உள்ளிட்டவை அதிகாரத்தில் இருக்கும்போது. அவர்கள் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களின் சந்தர்ப்பவாத மனநிலையை மதவெறியர்கள் எப்படியெல்லாம் சாய்த்துக் கொள்வார்கள் என்பது எச்சரிக்கை. 21 ஆம் நூற்றாண்டில், நாம் வாழும் இதே இந்தியாவில், சக இந்தியர்கள் அகதிகளாக்கப்பட்டிருக்கும் வேதனை குறித்த நேரடி கள ஆய்வை வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறோம்)

ஆபத்தான வன்முறை அரசியலின் சமீபத்திய உதாரணமாக மாறியிருக்கிறது உத்திர பிரதேசம். உள்நாட்டு அகதி முகாம்களில் சுமார் 40 ஆயிரம் முஸ்லிம்கள் இருக்கலாம் என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

தி டிரிப்யூன் நாளேட்டின் செய்தியாளர்கள் முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மலக்பூர் என்னும் பகுதியில் தங்கியுள்ள முகாம்களுக்குச் சென்று அவர்களைப் பேட்டி கண்டார்கள். முகாமின் நுழைவாயிலில் ஒரு பெரிய பதாகை தொங்க விடப்பட்டிருந்தது. அதில், “இந்திய இளைஞர் காங்கிரஸ்” என்று எழுதப்பட்டிருந்தது. விசாரித்ததில் சமீபத்தில் ராகுல் காந்தி வந்தபோது அந்த பதாகையும் அங்கு வந்ததாக சொன்னார்கள். இருந்தாலும், அவரின் வருகையை யாரும் பொருட்படுத்தவில்லை. உ.பி.முதல்வர் இதுவரை வந்து தங்களை சந்திக்கவில்லை என்று கூறினார்கள்.

“எங்கள் கண் முன்னாலேயே எங்கள் குழந்தைகள் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். எங்கள் பெண்கள் வன்புணர்வுக் கொடுமைகளுக்கு ஆளானார்கள், பெரியவர்கள் கண்டம் துண்டமாக வெட்டி எறியப்பட்டார்கள், இவற்றையெல்லாம் எப்படி எங்களால் மறக்க முடியும்?”

மதவெறியர்களின் வெறியாட்டங்களுக்கு ஆளான ஒன்பது கிராமங்களில் லாக் என்னும் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான வாசிமா இவ்வாறு கூறினார்.

கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். அதில் ஒரு சதவீதம் கூட எங்களுக்கு இதுவரை வந்து சேரவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

தி டிரிப்யூன் பத்திரிகையாளர் குழு மலக்பூர் நிவாரண முகாமில் தங்கியிருந்தோரை சந்தித்தபோது, முகாம்களில் தங்கியிருப்போர் பாஜகவினர் அல்லது காங்கிரஸ் கட்சிச் சேர்ந்தவர்கள் என்று முலாயம்சிங் யாதவ் கூறியிருந்தார். மதவெறியர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் இருக்கும் நிலையில், ஆட்சியாளர்களின் கூற்றுகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருப்பதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தார்கள்.

அந்த சமயத்தில் லாக் கிராமத்தைச் சேர்ந்த அக்தார் என்னும் இளம் கட்டிடத் தொழிலாளர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். மூன்று மாதங்களுக்கு முன் நடைபெற்ற கலவரத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மத வெறியர்களால் கொல்லப்பட்ட பின் அவர் மட்டுமே எஞ்சியிருந்தார். இப்போது அவரும் இறந்துவிட்டார்.

அக்தாரின் நண்பன் மஸ்ட்கீம் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “மதவெறியர்கள் அக்தாரின் தந்தையைக் கொன்றார்கள், அவரது அண்ணனைக் கொன்றார்கள், அவரது அண்ணியையும் அவர்களுடைய குழந்தையையும் கொன்றார்கள். நேற்று அக்தார் கொல்லப்பட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டோம். எங்கள் ஆட்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் எப்படி நாங்கள் திரும்பிச் செல்ல முடியும்? எங்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லை” என்றார்.

மஸ்ட்கீம் மேலும் கூறுகையில், தான் ஒருதடவை கிராமத்திற்கு செல்ல முயற்சித்ததாகவும், ஆயினும் அங்கிருந்த ஆதிக்க சாதியினர் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதால் தான் திரும்பவும் ஓடி வந்துவிட்டதாகவும் கூறினார்.

எனவே, நிவாரண முகாம்களில் இருப்போர் கிட்டத்தட்ட அதனையே தங்கள் நிரந்தர இல்லமாகக் கருதத் தொடங்கிவிட்டார்கள். சமீபத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கடுங்குளிரின் காரணமாக தங்கள் 33 குழந்தைகள் குளிரில் விரைத்து இறந்துள்ளன. இதனால், தற்போது அவர்கள் நிரந்தர சுவர்களை எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் தங்கள் அற்ப வாழ்வாதாரங்களுக்காக தாங்கள் குடியிருக்கும் இடத்தைச் சுற்றிலும் காய்கறித் தோட்டங்களைப் போட்டிருக்கிறார்கள். மாமிசம் விற்பவர்கள் சைக்கிளில் வந்து விற்பனை செய்துவிட்டுத் திரும்புகிறார்கள்.

இருக்கின்ற நிலைமைகளைப் பரிசீலிக்கும் போது நிவாரண முகாம்களில் இருப்போர் இனி மீண்டும் தங்கள் கிராமங்களுக்கு செல்வதாகத் தெரியவில்லை. “ஆதிக்க சாதியினர் அதிகம் உள்ள கிராமங்களில் முஸ்லீம்களை பொறுக்கி எடுத்துதாக்குகிறார்கள். மிக எளிதாக கொலை செய்துவிடுகிறார்கள். முஸ்லீம்கள் அதிகம் உள்ள கிராமங்களை அவர்கள் தொடுவதில்லை. எனவே நாங்கள் முஸ்லீம்கள் அதிகம் உள்ள கிராமங்களுக்கே திரும்பிச் செல்ல விரும்புகிறோம். நாங்கள் மீண்டும் எங்கள் பழைய கிராமங்களுக்குத் திரும்ப மாட்டோம். எங்களுக்கு ஆதிக்கசாதியினரிடமும் நம்பிக்கை இல்லை, இந்த அரசாங்கத்திடமும் நம்பிக்கை இல்லை” என்று 35 வயதுள்ள நதீம் கான்கூறுகிறார். லோம் கிராமத்தில் இருந்த இவரது வீடு சாதி வெறியர்களால் முழுமையாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது.

மாநில அரசாங்கமோ அவர்களை மீண்டும் கிராமங்களுக்கு செல்ல நிர்ப்பந்தித்து வருகிறது. எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று அது திரும்பத் திரும்பக் கூறிவருகிறது. ஆயினும் முகாம்களில் இருப்போர் அரசின் வேண்டுகோளைக் கேட்கத் தயாராக இல்லை.

ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மும்தாஜ், “நாங்கள் இங்கேயே செத்தாலும் சாவோமே ஒழிய, அவர்களால் கொல்லப்படுவதற்காக மீண்டும் எங்கள் கிராமங்களுக்குச் செல்ல மாட்டோம். எங்களுக்கு அரசாங்கம் அளிக்கும் 5 லட்சம் ரூபாயும் தேவையில்லை. நாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான இடமே எங்களுக்குத் தேவை” என்கிறார்.

அந்த முகாம்களில் எந்த வசதியும் கிடையாது. தரையில்தான் அனைவரும் தூங்குகிறார்கள். அதனால்தான் குழந்தைகள் குளிர் தாங்கமுடியாமல் இறந்துகொண்டிருக்கின்றன. ஆயினும் இவர்களுக்கு எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு உதவிகளை முகாம் மேலாளர் ஹாஜி தில்ஷாத் செய்து வருகிறார். மலக்பூர் நிவாரண முகாம் 50 ஏக்கர் வன நிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த மரங்களை அகற்றி முகாம்களை அமைக்க பல நாட்கள் ஆயின. கரும்புக் கொல்லைகளில் பயந்து பதுங்கிக் கொண்டிருந்தவர்களை தைரியமூட்டி இங்கே கொண்டுவரவே பல நாட்கள் ஆயின. ஆரம்பத்தில் அவர்கள் திறந்த வெளியில் தரையில்தான் படுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் அவர்களுக்கு முகாம்கள் அமைத்துத் தரப்பட்டிருக்கின்றன என்று தில்ஷாத் கூறினார். இதேபோன்று மாநிலம் முழுதும் 33 முகாம்கள் இருக்கின்றன.

(நன்றி: ச.வீரமணி)

Related Posts