இதழ்கள் இளைஞர் முழக்கம்

மறக்க முடியுமா ஜாலியன் வாலாபாக்கை? – எம்.செந்தில்

இந்திய விடுதலை கத்தியின்றி, ரத்தமின்றி தானாய் வரவில்லை. பிரிடிஷ் காலனி ஆட்சியின் நுகத்தடியிலிருந்து அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை விடிவிப்பதற்கு நடைபெற்ற போராட்டக் களத்தில் சந்தித்த சதி வழக்குகள், சிறை கொடுமை, சித்திறவதைகள், ஈவு, இரக்கமற்ற மிருகத்தனமான தாக்குதலில் சிந்திய ரத்தம், விலை மதிக்க முடியாத ஆயிரம் ஆயிரம் மனித உயிர்களை பலிவாங்கிய கொடுமைகளை மறைத்து விடுதலைப் போராட்ட வரலாற்றை திரித்து குல்லாப்போட்டவர்கள் நடத்திய அகிம்சை போராட்ட வழிமுறையில் மட்டுமே விடுதலை பெற்றதாக நமது மக்களின் மூளையில் ஏற்றப்பட்டுள்ளது. விடுலைப் போராட்ட பக்கங்களை திருப்பினால் இளைஞர் குழுக்கள் நடத்திய அர்ப்பணிப்புமிக்க எழுச்சியான போராட்டங்களில் பங்கேற்ற இளைஞர்களின் அளப்பரியா தியாகமும், பிரட்டிஷ் பீரங்கியின் தோட்டாக்கள் துளைத்து சிந்திய குருதியின் வாடை வீசும் பக்கங்களை கொண்டதுதான் விடுதலைப் போராட்ட வரலாறாகும்.
1917 இல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடக்குமுறைகளை மீறி போராட்டக்களம் நோக்கி ஏழுச்சியாக அணிவகுக்கத் துவங்கினர். சுதந்திரப் போராட்ட வீரர்களையும், இயக்கங்களையும் அடக்கி ஒடுக்கிட பழைய சட்டங்கள் போதாது என்ற முடிவுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வந்தது. பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டு புரட்சிகர போராட்டங்களை ஒடுக்க வழிவகைகளை ஆராய்ந்து சொல்லும் குழுவொன்றை செடிஷியஸ் கமிட்டி என்ற பெயரில் பிரிட்டிஷ் நீதிபதி ரௌலட் தலைமையில் அமைக்கப்பட்டு, சர் பாஸில் ஸ்காட் (பம்பாய் நீதிபதி), கணம் திவான் பகதூர், சி.வ.குமரசாமி (சென்னை நீதிபதி), சர். கணம் பிர்வேஷ் சந்திரமிந்தர் (கல்கத்தா நீதிபதி), இவ்வாறு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பஞ்சாப் ஐக்கிய மாகாணம், பர்மா, ஒரிசா, மத்திய, கிழக்கு மாகாணங்கள், பீகார் போன்ற பல மாநிலங்களில் இருந்து பெற்ற ரகசிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் ஒரு பரிந்துரையை வழங்கினார்கள். யுத்தகால சட்டங்கள் தொடர வேண்டும் என கூறியதுடன், போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க தற்காலிகமாக ஒன்று, நிரந்தரமாக ஒன்று என இரண்டு சட்டங்களை பரிந்துரை செய்தது. 1.ரௌலட் சட்டம் 2 யின்படி பல காட்டுமிராண்டித் தனமான பரிந்துரைகள் செய்யப்பட்டன. புரட்சியாளர்கள் என்று சந்தேகப்படுவோரை வாரண்ட்யின்றி கைது செய்யலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் வைக்கலாம். காரணம் கூற தேவையில்லை. அவர் வசிக்க வேண்டிய இடத்தை அரசே நிச்சயித்து அவரது நடமாட்டத்தை அன்றாடம் அவர் போலீசாரிடம் அறிவிக்க வேண்டும், குற்றங்களை நிரூபிக்க சாட்சிகள் இல்லாவிட்டாலும் தண்டனை தரலாம். நீதிமன்றத்தில் விசாரனை ரகசியமாக நடைபெறும். இந்திய சாட்சிச் சட்டம் அதற்கு பொரூந்தாது. விசேஷ நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு அப்பில் கிடையாது. எந்த வீட்டையும் வாரண்ட்யின்றி போலீசார் சோதனையிடலாம். நீதிமன்றத்தில் தங்கள் சார்பில் வாதிட வக்கீல்களை நியமிக்க முடியாது. குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடவும் கூடாது என்று ரௌலட் தலைமையிலான குழு பரிந்துரைகளை அளித்தது.
1919 மார்ச் 18ல் இம்பீரியல் லெஜிலேட்டிவ் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டு மார்ச் 21 முதல் இச்சட்டம் அமுலுக்கு வந்தது. இப்படி ஒரு கொடிய சட்டம் தேவையற்றது. மானம் உள்ள இந்தியர்களால் இவற்றை ஏற்க முடியாது. ஆத்மாவை அடகுவைத்து கொத்தடிமைகளாக இந்திய மக்களை மாற்றிடும் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மகாத்மாகாந்தி, அன்னிபேசண்ட், மோதிலால் நேரு, லாலா லஜபதிராய், விபின் சந்திரபால், சித்ரஞ்சன்தாஸ் ஆகிய தலைவர்களும் வலியுறுத்தினர். நாடு முழுவதும் இந்த சட்டதிற்கு எதிராக சத்தியாகிரகம் நடத்த திட்டமிட்டனர். இந்தியா முழுவதும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தபட வேண்டும் என்ற அறைகூவலில் நாடு முழுவதும் மாபெரும் எழுச்சி ஏற்பட்டு கொதித்துபோய் மக்கள் வீதிக்கு வந்தனர். டெல்லி அமிர்தசரஸ், அகமதாபாத், கல்கத்தா, பம்பாய் நகரங்கள் போர்க்களமாயின பிரிடிஷ் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து காந்தி கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சத்தியபால், டாக்டர் சைபுதீன், கிச்சிலு ஆகியேர் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறை வைக்கப்பட்ட இடம்கூட தெரிவிக்கப்படவில்லை. பஞ்சாபில் கிளர்ச்சி பரவியது. பொதுக்கூட்டத்திற்கு, ஊர்வலத்திற்கு தடை பிறப்பிக்கப்பட்டது. ரானுவ சிப்பாய்கள் துப்பாக்கிகளுடன் வீதியில் வலம் வந்தனர்.
ஏப்ரல் 13 பைசாகி என்ற சீக்கிய புத்தாண்டு தினம். சீக்கியர்களின் திருச்சபையான கல்ஸ்யூ தீவான ஆரம்பிக்கப்பட்ட புனித நாளும் அதுவே. அறுவடை திருநாளும் கூட அன்று. மக்கள் கூட்டம் கூட்டமாக அமிர்தரஸ்க்கு வருவார்கள், அன்றே ரௌலட் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த தேசபக்தர்கள் திட்டமிட்டனர். தகவல் அறிந்த லாகூர் நகர் போலீஸ் கமிஷ்னரான கிட்கின் என்பரையும் ரானுவ பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு ஹரிடயர் என்பவரையும் 150 ரானுவ வீரர்களோடு அமிதசரஸ்க்கு அனுப்பிவைத்தான் கவர்னர் மைக்கேல் ஓ டயர்.
ஹரிடயர் உள்ளுர் போலீசாரிடமிருந்து நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டு தண்ணீர் விநியோகத்தையும், மின்சாரத்தையும் துண்டித்து நகரையே இருளில் ஆழ்த்தினான். மக்கள் தடையைமீறி ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் கூடினர். அந்த மைதானம் நாற்புறமும் சுவரால் சூழப்பட்டது. உள்ளே போகவும், வெளியே வரவும் ஒரே வழிதான். சுமார் 20,000 பேர் உட்காரலாம். அன்றோ 30,000 பேர் நெருக்கியடித்து உட்கார்ந்து தலைவர்கள் உரை கேட்கத் தயாராக இருந்தனர். அங்கே ஹரிடயர் 100 வெள்ளை சிப்பாய்களையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்துக் கொண்டு வந்து நுழைவு வாயிலை அடைத்துக் கொண்டு பீரங்கியை நிறுத்தினான், சுழல்துப்பாக்கியை ஏந்தினான். அப்போது கூட்டத்தில் ஒருவர் ஏகாதிபத்தியத்தை கண்டித்து வீராவேசமாக முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். ஹரிடயர் வெறி கொண்டவனாய் ஃபயர் என்று கத்த குண்டுகள் சீறிபாய்ந்தன. மக்கள் அலறி அடித்து கொண்டு தப்பி ஓடவும் வழியின்றி முட்டிமோதினர். பலர் அங்கேயுள்ள கினற்றில் குதித்தனர். அதிலும் ஏராளமானோர் குதித்ததால் பலபேர் செத்தனர். 90 துப்பாக்கிகள் ஒரே நேரத்தில் குண்டுமாரி பொழிந்தன. 10 நிமிடத்தில் 1650 ரவுண்டுகள் சுடப்பட்டன. இறந்தவர்களின் எண்ணிக்கை 800 க்கும் மேல் படுகாயம் அடைந்தோர் 3000 பேர். பிரிட்டிஷ் அரசோ துப்பாக்கி சூட்டில் 209 பேர்தான் செத்தனர், கினற்றில் விழுந்து செத்தவர் 150 பேர் மட்டுமே ஆக 359 பேர்தான் உயிர் இழந்தனர் என்று பொய் கணக்கு கூறியது. 8 மணிக்குமேல் வீதியில் நடப்போர் சுடப்படுவர், சவுக்கடி பெறுவர், சிறையில் அடைக்கப்படுவர் என உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பஞ்சாப்பில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்க விமானங்கள் மூலம் கூட குண்டுகள் வீசப்பட்டன. அகிம்சை முறையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த ஏதுமறியா போராட்டக்காரர்கள் மீது சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும்வரை சுட்டேன் என கொக்கரித்த ஜெனரல் டயரையும், கவர்னர் டயரையும் பிரிட்டிஷ் அரசு திருப்பி அழைத்து அங்கு அவர்களுக்கு பாராட்டும், பணமுடிப்பும் பரிசாக அளித்தார்கள்.
ஜாலியன்வாலாபாக் சம்பவத்தை தேசமே கண்டித்தது. மாமேதை லெனின் அவர்கள் இச்சம்பவத்தைக் கண்டித்துடன் இந்திய மக்களின் எழுச்சியான போராட்டத்தை பாராட்டியுள்ளார். ஆனால் தமிழகத்தில் நீதிகட்சி ஜாலியன்வாலாபாக் சம்பவத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது.
ஜாலியன்வாலாபாக் ஆயிரம் ஆயிரம் தியாகிகள் கொடுத்த விலை கொஞ்சம் நஞ்சமில்லை. விடுதலைப் போரில் அனைத்து மதத்தினரின் ரத்தமும் வியர்வையும் கலந்த தியாகத்தால் குழைத்த வண்டல் மண்ணில்தான் விடுதலைப் பயிர் செழித்து வளர்ந்தது. விடுதலைப் போர் நமக்கு ஒற்றுமையை கற்றுத்தந்தது, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் விடுதலை இந்தியாவில் 2014 இல் ஆட்சியை கைப்பற்றிய பாசிச ஆர்.எஸ்.எஸ் கூட்டம், அதிகாரம் கையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற உரிமைகளை மறுக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பால் நவரத்தினங்களாக உயர்ந்து நிற்கிற பொதுத்துறை நிறுவனங்களையும், இயற்கை வளங்களையும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்த்து மீண்டும் காலனி ஆட்சியை நிறுவுவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலை போராட்டத்தில் பங்கு கொள்ளாதது மட்டுமல்லாமல் விடுதலை போராட்ட வீரர்களையும் காட்டிகொடுத்த ஆர்எஸ்எஸ் கூட்டம். இந்தியாவின் தேசியக்கொடி காவிக்கொடிதான் மூவர்ண கொடியல்ல என்று அவமாணம் படுத்திய இயக்கம், விடுதலை அடைந்த நாளை துக்கநாளாக அனுசரிப்பது, தேசப்பிதா மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை இனிப்பு வழங்கி கொண்டாடுகிற ரத்த வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் முகத்திரையை கிழித்தெறிய விடுதலை வேள்வியில், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய பீரங்கி குண்டுகளுக்கு இரையாகி ஜாலியன் வாலாபாக் தியாகிகள் தினத்தில் சபதம் ஏற்போம்.
– 9487379665

Related Posts