இதழ்கள் இளைஞர் முழக்கம்

மருத்துவ நுழைவுத் தேர்வும் மாநில அரசின் உரிமையும் – கே.எஸ்.கனகராஜ்

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மீண்டும் சிக்களுக்குள்ளாகியிருக்கிறது நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தவிட்டது. தேசிய தகுதி மற்றும் பொதுநுழைவுத் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறுவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு அதன்மூலம் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தவிட்டது. நுழைவுத்தேர்வு நடத்துவது மற்றும் மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணியை மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இயிடம் ஒப்படைத்தது. அதன் சிபிஎஸ்இ மே 1 ஒரு தேர்வும் ஜீலை 23ல் மற்றொரு தேர்வு என இரண்டு தேர்வுகள் நடைபெறும் எனவும், அடுத்த ஆண்டிலிருந்து ஒரே தேர்வாக நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. முதற்கட்ட தேர்வு நடந்து முடிந்துள்ள சூழலில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது இந்த ஆண்டு மட்டும் நுழைவுத் தேர்வினை இரத்து செய்யும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை குறித்த குழப்பங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளன.
ஒரு மாத காலத்தில் திடீரென நுழைவுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டம் எத்தகையது? மாநில கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிபிஎஸ்இ நடத்தும் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயார் ஆவது? போன்ற குழப்பங்கள் தற்காளிகமாக தீர்ந்துள்ளன. இதே குழப்பங்கள் அடுத்த ஆண்டு தலைதூக்கும், அதோடு பல்வேறு மாநிலங்ளில், பல்வேறுவிதமான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், மாநில வாரியாக மருத்துவ கல்லூரிகளில் தரமும், மாணவர் சேர்க்கை முறைகளும் மாறுபட்டுள்ள சூழலில் ஓராண்டில் பொது நுழைவுத்தேர்வு என்பது பொருத்தப்பாடானதா? என்ற கேள்வியும் தலை தூக்குகிறது.
2007 ஆம் ஆண்டுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது +2 இறுதியாண்டுத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு என இரண்டுக்கும் தயாராக வேண்டிய நெருக்கடி, அதன் காரணமாக மாணவ மாணவிகளுக்கு உருவான மன அழுத்தம், நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்திய வியாபார சூழல் ஆகியவை நுழைவுத் தேர்வை இரத்த செய்ய வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்தின. அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியதன் காரணமாக நுழைவுத் தேர்வு இரத்து செய்யப்பட்டது தற்போது +2 மதிப்பெண் அடிப்படையிலும் 69 சதவீத இடஒதுக்கீட்டை அடிப்படையாக கொண்டும் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதைக் கொண்டு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொறியியல் மருத்துவ படிப்புகளில் தனியார் கல்லூரிகளுக்கான 65 சதவிகத இடங்கள் அரசு ஒதுக்கீட்டிலும் மீதமுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படுகின்றன.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தின் இந்த நடைமுறை பாதிப்புக்கு உள்ளாகும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக அமுல்படுத்த இயலாது. இதனால் தமிழகத்தின் சமூக நீதி பாதிப்புக்குள்ளாகமல் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடவில்லை.
பறிப்போகும் மாநில உரிமை
தற்போது உள்ள மாணவர் சேர்க்கை நடைமுறையின் படி அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்து கல்லூரிகளில் அந்தந்த மாநில அரசுகள் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. எய்ம்ஸ் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை தனியாக நடந்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் உத்தரிவின் காரணமாக மாநில அரசின் உரிமை பாதிக்கப்படுகின்றது. மாநிலத்தில் உள்ள சமூக,பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை நடத்த இயலாது நிலையை உச்சநீதிமன்றம் உருவாக்குகிறது.
இந்த நடைமுறை அடுத்து பொறியியல், சட்டம் போன்ற இதர தொழிற்படிப்புகளுக்கும் வர வாய்ப்புண்டு. கல்வியை பொதுபட்டியலில்லிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கல்வியாளர் வலியுறுத்தி வரும் வேளையில் உயர்கல்வி மீதான அதிகாரங்களை மத்திய அரசு கையில் மையப்படுத்தும் பணியை இத்தீர்ப்பு செய்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து நடைபெறுகின்றன. உயர்கல்வி மீதான அதிகாரம் முழுவதும் மத்திய அரசின் கைகளில் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் பல வழிகளில் எடுக்கப்படுகின்றன. இது மாநிலத்தின் தன்மைக்கு ஏற்ப மருத்துவ கல்வியை வளர்த்தெடுப்பதில் தடைகளை உருவாக்கும். மேலும் தமிழகத்தின் சிறப்பு இயல்புகளில் ஒன்றான கல்வி, வேலைவாய்ப்புகளில் சமூக நீதி என்ற அம்சமும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்திய மாநிலங்களிலேயே அதிகமான இடஒதுக்கீட்டு விகிதாச்சாதமான 69 சதவீதம் என்பது தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது. அதில் தலித் மக்களில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியர் மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு முறையுள்ளது. கடும் போராட்டத்திற்குபின் வென்றெடுக்கப்பட்ட உள்ஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்த பின்னர்தான் குறிப்பிட தகுந்த அளவிலான அருந்ததிய மாணவர்கள் மருத்துவ படிப்புக்குள் நுழைகின்றனர். இது போன்ற ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தனித்தன்மை நிலவுகின்றது. நாடுமுiழுமைக்கும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கையில் இது பாதிக்கப்படும்.
பெருகி வரும் வியாபாரம், தடுக்குமா நீதிமன்றம்
நாடு முழுவதுமுள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் தகுதியற்ற மாணவர்கள் சேர்க்கப்படுவதால், அதை தடுப்பதற்கே இந்த ஏற்பாடு என சொல்லிப்படுகிறது. தனியார் கைகளில் மருத்துவர் கல்லூரிகள் தந்த போதே, மருத்துவ படிப்பு மிகப்பெரும் வியாபாரமாகவும், தரமற்றதாகவும் ஆக்கப்படும் என இடதுசாரி இளைஞர், மாணவர் அமைப்புகள் எச்சரித்தன. இன்று நாடு முழுவதும் அதுதான் நடந்து வருகின்றன. பணம் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தகுதியாக பல தனியார் மருத்துக் கல்லூரி நிர்ணயித்துள்ளன. போலியாக நுழைவுத்தேர்வுகளை கல்லூரி அளவில் நடத்துவது போல காட்டிவிட்டு பெருமளவில் நன்கொடைகளை வாங்கிக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தும் வழக்கம் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில்கூட தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை எப்படி நிரம்புகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு என்றே இடைத்தரகர்கள் நாடு முழுவதும் இயங்ககி வருகின்றனர். தனியார் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தனிக்கதை.
சென்னையில் திமுக அரசியல் பிரமுகரின் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர இலட்சக்கணக்கில் நனகொடை கேட்டது. ஒரு ஆங்கில நாளிதழின் ரகசிய ஆய்வில் வெளிவந்ததே. கோடிக்கணக்கான பணம் புழங்கும் வர்த்தகமாகும் மருத்து மாணவர் சேர்க்கை மாறியுள்ளது. தகுதியில்லாத மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்வதை தடுக்க வேண்டும். என அக்கறைப்படுகின்ற நீதிமன்றம், கல்வி வியாபாரமாக்கப்பட்டதை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.நீதிமன்றத்தின் வாதப்படி நுழைவுதேர்வின் மூலமாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படலாம். ஆனால் அவர்கள் கல்லூரிகளில் சேரும்போது கேட்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடைகளை எப்படி தடுப்பது? அதற்கு ஏதேனும் வழிவகைகளை தர நீதிமன்றம் தயாராக உள்ளதா?
இந்தியாவில் 1700 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுடே உள்னர். நாடு முழுவதும் 6.50 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். 2020 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 4 லட்சம் மருத்துவர்களை உருவாக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் உள்ளதா? நாடு முழுவதுமுள்ள மருத்துவ கல்லூரிகளில் சுமார் 55 சதவீதம் தனியாருடையவை. இந்தியாவில் 31 சதவீதம் மக்கள்தொகை மட்டுமே உள்ள ஆறு மாநிலங்களில் மொத்த எம்.பி.பி.எஸ் இடங்களில் 58 சதவீதம் இடங்கள் காணப்படுகின்றன. 45 சதவீதம் மக்கள் தொகையுள்ள எட்டு மாநிலங்களுக்கும் சேர்த்து வெறம் 21 சதவீதம் எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே இருக்கும் நிலைமை. இதற்குக் காரணம், மருத்துவக் கவுன்சில், மருத்துக் கல்லூரிகளுக்கு முறையாகவும், திட்டமிட்டு எல்லா மாநிலங்களிலும் அமையும் விதத்திலும் அனுமதி வழங்காததுதான். கடந்த 10 ஆண்டுகளில் அரசின் சார்பாக உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள் மிகக் குறைவு. ஆனால் தனியாருக்கு கட்டற்ற அனுமதி தரப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் பொது சுகாதாரத்திற்கு செலவிடும் தொகையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றது. மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை பார்த்தாலே அது புரியும். நாடு முழுவதும் தனியார் மருத்துமனைகளை நோக்கி மக்களை தள்ளிவிடும் போக்குதான் நடக்குகிறது.
மருத்துவக் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டதை இதனுடன் சேர்த்துதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பொது சுகாதாரத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க அரசை அனைவரின் சார்பாகவும் வலியுறுத்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களை உருவாக்க புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும், கட்டணங்களும் அந்தந்த மாநில அளவில் ஒழுங்குபடுத்தப்பட்டு சமூக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும். இத்தகைய முயற்சிகளே உடனடியாக எடுக்கப்பட வேண்டியது. அதைவிடுத்து தேசிய அளவிலான நுழைவுதேர்வால் எல்லாம் சரியாகும் என்றால் எல்லாம் வியாபாரம் ஆகிப்போன சமூகத்தில் நுழைவுத் தேர்வை மையப்படுத்தியும் வியாபாரம் துவங்கும் காசு உள்ளவர்களே தேசிய அளவிலான நுழைவுதேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களை நாட முடியம். ஆர்வமுள்ள, தகுதியானவர்களுக்கு பணம் இல்லை என்ற காரணத்தால் மருத்துவ படிப்பு மறுக்கப்படும் நிலை தொடரும் அத்தோடு சமூக நீதி பறிக்கப்பட்டு, மாநில அரசின் உரிமையும் பறிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே மத்திய அரசு மருத்துவ கல்வி தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்க உரிய நடவடிக்கைகளை துவங்க வேண்டும்.

Related Posts