இதழ்கள் இளைஞர் முழக்கம்

மனோரமா என்னும் சகாப்தம்! – டாக்டர் ஜெ.பாஸ்கரன்

மனோரமா என்னும் சகாப்தம்! – டாக்டர் ஜெ.பாஸ்கரன்

மனோரமா என்னும் கலைப்பயணம் நிறைவடைந்தது ! நடிப்பில் திறமை, உழைப்பு, அன்பு, ஆற்றல்   எல்லாம்கொண்டு பெருமைப் படத்தக்க ஒரு கலைப் பயணம் – மனோரமா என்னும் சகாப்தம் சரித்திரமானது !

‘துக்ளக்’ ஆரம்பித்த புதிதில், மனோரமா பற்றிய ஒருவிமர்சனக் கட்டுரை – அவரது பல பாத்திரங்கள் குறித்து நான் எழுதியது – வெளியாகியது. அதற்கு மிகவும் மகிழ்ந்து, “நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்” என்று பதில் சொல்லியிருந்தார். உண்மையான கலையுள்ளம், முகம் தெரியா ரசிகரிடம் காட்டும் மரியாதை கலந்த நட்பு !

‘கொஞ்சும் குமரி’ யில் கதாநாயகியாக அறிமுகம் –பின்னாளைய வில்லன் நடிகர், ஆர் எஸ் மனோகர் கதாநாயகன்! அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்த போதுவந்தது நகைச்சுவை வேடம். குழப்பத்தில் இருந்த மனோரமாவுக்கு வழி காட்டியது, கவிஞர்   கண்ணதாசன்.   “ கதாநாயகிகள்     வாழ்வு   கலையுலகில் குறைவு. நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களுக்கு ஆயுசு கூடுதல் – திறமை எதில் காண்பித்தால் என்ன ?” என்றாராம். உண்மைதான், மனோரமா என்ற   சாகாவரம்   பெற்ற நடிகை தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்தார் !

எந்தப் பாத்திரத்தையும் ஏற்று, அநாயாசமாய் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடும் மாஜிக்   தெரிந்தவர் மனோரமா ..“பெண் சிவாஜி” என்பதில் எள்ளளவும் பொய்யில்லை! ஜில் ஜில் ரமாமணியின் அப்பாவித்தனத்தை மறக்க முடியுமா? ( ஆமா, ஆமா என் ராஆஆசாஆ – வெத்லாக்கு, ஜோடா ? ஏஏன்ன் ? பாவி சென்மம், ஊர் ஊரா சுத்தி வர்ரேன் – ) மடிசார்   கட்டிய மாமியா (இதெல்லாம் புரியாதுடா, மண்டூ ) மாடர்ன்   டிரெஸ்ஸூடன், டம்பப் பை சகிதமாய் கிளப்புக்குச் செல்லும் சமூக சேவகியாய், தூத்துக்குடி துறைமுக மீன்காரியாய், பூக்காரியாய்   (பொறந்தாலும்   பொம்பளையா … சந்திரபாபுவுடன் டூயட் ), அம்மா, அக்கா, அத்தை, மாமி, ஆங்லோ இந்தியப் பெண், தெலுங்கு பாட்டி, கண்டிப்பான வளர்ப்பு அம்மா – எந்த ரோல் ஆனாலும், கூடு விட்டுக் கூடு பாய்வதுபோல் மாறிவிடும் வித்தை அறிந்தவர்.

எல்லா நகைச்சுவை நடிகர்களுடனும் அவரவர் திறமைக்கேற்ப ஈடு கொடுத்து நடிப்பதில் இவருக்கு இணை இவரேதான் ! நாகேஷூக்கும் இவருக்கும் ஏதோ மனஸ்தாபம் – இனி   அவருடன்   நடிப்பதில்லை என்று முடிவெடுத்து விட்டார்.( கடைசி வரையில் அதைக் கடைபிடித்தார் ). அப்போது ஒரு பத்திரிக்கையில் தன்னுடன் நடித்த நகைச்சுவை நடிகர்களைப் பற்றி – என் எஸ் கே முதல்   கவுண்டமணி வரை – எழுதியிருந்தார். இவர் நாகேஷ்பற்றி குறிப்பிடுவாரா என்று   சந்தேகத்துடன் படித்துக் கொண்டிருக்கும்போது,   கட்டுரையின் கடைசி பாரா என்னை வீழ்த்தியது. “நம்ம   நாகேஷ் மாதிரி நடிக்க, இனிமே இன்னொருத்தர் பிறந்து வந்தாத் தான் முடியும். என்ன நடிப்பு ! ஜெர்ரி லூயிஸ் எல்லாம் நம்ம நாகேஷ்கிட்டெநெருங்க முடியாது” என்று மனதாரப் பாராட்டியிருந்தார். அது அவரது நேர்மைக்கும், கலை ரசனைக்கும் ஓர் உதாரணம்.

எம் ஜி ஆர், சிவாஜி முதல் நேற்றைய புதுமுகம் வரை எல்லோருடனும் நடித்து விட்டார். ஒரு கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு கிடையாது. சிரிப்பு நடிகர் தாமு டிவியில் சொல்லிக் கொண்டிருந்தார்: ” ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர்போல, வசனம், நடிப்பு எல்லாம் தன் சக, ஜூனியர் நடிகர்களுக்கு சொல்லிக் கொடுப்பார் “

சென்னைத் தமிழில், ‘வா வாத்யாரே கூட்டாண்டே,‘வும், பிராமண பாஷையில் ‘   தெரியாதோ நோக்கு, தெரியாதோ ‘வும் தடையில்லாமல் சரளமாகப் பாடுவார்! ரேடியோ நாடகங்களில்   மனோரமா மிகவும் பிரபலம் !காப்புக்கட்டிச் சத்திரம், சுபாஷ் வீடு போன்றவை ஞாயிறுதோறும் – கேட்காத வீடுகள் குறைவு !

மேடை நாடகங்களில் இருந்து வந்தவர் –தானே ஒரு குழுவை நடத்தி, மேடையிலும் முழங்கியவர்.

சின்னத் திரையிலும், சிறப்பான சீரியல்கள் மூலம் சிறந்தநடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர். ஏநுசுளுஹகூஹடுஐகூலு ஐளு கூழநு டீகூழநுசு சூஹஆநு குடீசு ஆஹசூடீசுஹஆஹ ! சில திறமைகள் காலம் கடந்து நிற்கும், – மனோரமா அப்படிநிற்கும் ஓர் அதிசயம் !

98410 57047

Related Posts