அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 1

சுதீஷ் மின்னி: ஒர் அறிமுகம்

    கேரளத்தில கண்ணூர் மாவட்டத்திலுள்ள தலசேரி தாலுகா கண்டங்குந்நு கிராமத்தில் ஆயித்தரை என்ற இடத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

  ஆரம்பக் கல்வியை ஆயித்தரை மம்பறம் பள்ளியிலும் தொடர்ந்து பல்வேறு கல்வி நிலையங்கள் மூலம் மேல்படிப்புகளையும், கணிதத்தில் முதுநிலை பட்டத்தையும் பெற்றுள்ளார். திருமணம் ஆகவில்லை. தந்தை: பொனோன் ஸ்ரீதரன், தாய்: மின்னி சுலோச்சனா மூத்த சகோதரர்: மின்னி சந்தோஷ்.

   RSS-ன், ஒருங்கிணைந்த ஆரம்பப் பயிற்சி, முதல்வருட சங்க பயிற்சிப் பிரிவு, இரண்டாம் கட்ட சங்க பயிற்சிப் பிரிவு முதலிய பயிற்சிகளைப் பெற்ற பின் சங்கத்தின் தத்துவப் பிரிவான “சாணக்கியா” வில் சுமார் 7 வருடங்கள் ஊழியராக செயலாற்றினார். நாக்பூரிலிருந்து விஷேச பயிற்சி பெற்றிருக்கிறார். ஆர்.எஸ்எஸ் பரிவாரத்தின் இயக்கங்களில் ஒன்றான “சுதேசி சயின்ஸ் மூவ்மென்ட்” ன் தலைமையில் நடக்கும் வேதகணித பயிற்சியை இரண்டரை வருடத்தில் முடித்தார். அந்த இயக்கத்தின் மாநில வேதகணித பயிற்சியாளராக செயல் பட்டார். ஒரு வருடம், “பால கோகுலம்” அமைப்பின் கண்ணூர் மாவட்டத் தலைவராக செயல்பட்டார்.

  “ஈஸி மேத்ஸ்”(Easy Maths) என்ற தலைப்பில் இந்திய கணித சாஸ்திரத்தை ஆதாரமாகக் கொண்டு ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இப்போது சங் பரிவார் அமைப்புகளிலிருந்து வெளியேறி சி.பி.ஐ.எம்-ல் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

முன்னுரை:

    “நிமிடத்திற்கு நாற்பது தடவை பாரதத்திலுள்ள எல்லா கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் எதிரிகளென்று கூறித் திரிபவர்கள் எவ்வாறு மதசார்பற்றவர்களாக ஆவார்கள்?

    வட இந்தியாவில் ஜாதிய வாதம், மேல்ஜாதி ஆதிக்கம் ஆகியவைகளின்  மூலம் ஒவ்வொரு தலித்தையும் அவர்களது மனைவி மற்றும் மகள்களையும் காமக் கொடூரத்திற்கு இரையாக்கும் போது, நாக்பூரிலுள்ள அரண்மனையிலிருந்து வெடிச்சிரிப்பை வெளிப்படுத்தும் இவர்கள் இந்துமதச் சீர்திருத்தத்தை எப்படி உருவாக்க முடியும்?

    ஒரு வாழ்க்கை அனுபவத்தை எழுதி சமூகத்தின் முன்னால் சமர்ப்பிக்குமளவு, நான் மகத்தான நபரல்ல. யாரும் என்னை உதாரணமாகக் கொள்ளவும் முடியாது. ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் (RSS) என்னும் இயக்கத்தின் நரகச் சுழியில் குழந்தைப் பருவத்தையும், இளமையையும் பாழடித்த ஒரு சாதாரண இளைஞன் தான் நான்.

    ஆகாயத்தில் அதிசயம் நிகழ்த்தி, காவியின் ஒளிப் பிரவாகத்தைத் உருவாக்கும் அஸ்தமன சூரியனின் நிறத்தைக் கண்டு, அக்காட்சியே ஒவ்வொரு இந்துவின் பிறவிப்பயன் என்றும், அந்நிறத்தை இதயத்தில் உள்ளிருத்தி, “ஒவ்வொரு சுயம் சேவகனும் தன்னைத்தானே மாறி அந்நிறத்தை தனது வாழ்கையின் பகுதியாக்க வேண்டும்” என்ற வெற்று வார்த்தைகளைக் கேட்டு, செயல்படப் புறப்பட்டு, நரகத்தீயில் வாழ்க்கையின் நீண்ட 25 வருடங்களை யாகம் செய்த சாதாரண இளைஞன் நான்.

    எனது கனவுகளையெல்லாம் அந்த “பகவ பாதகை” (காவிக்கொடி என்பதற்கு சங் பரிவார் மொழியில் இப்படிக் கூறப்படுகிறது)  முன்பு சமர்ப்பித்த நான், அந்த அரக்கத் தனத்திலிருந்து மீண்டு மனிதாபிமானத்தை நோக்கித் திரும்பும் யாத்திரையை மேற்கொண்டிருக்கிறேன்.

    ஒரு மறுசிந்தனையின் பகுதியாக இருக்கும் எனது இந்த அனுபவங்களின் ஒவ்வொரு பக்கத்தையும் நீங்கள் வாசிக்க வேண்டும். அத்தகைய வலிமிகுந்த அனுபவங்களை அடையும் பொருட்டு, யாருடைய இளமையும் வழிதவறி,  அந்த அனுபவத்தை நோக்கிச் சென்றடையக் கூடாது.

    ஆயிரக்கணக்கான சதியினாலான குழிகள் நிறைந்த அந்த டிராகுலாவின்  பொறியில் சிக்கிவிடக் கூடாது. அவ்வாறு நடக்காமல் தடுப்பதற்கான காவலாளிகளாக நீங்கள் இருக்கவேண்டும்.

    எந்த ஒரு தாயின் சோகம் நிறைந்த பரிதாபக் குரலும் இம்மண்ணில் உரக்க கேட்கக் கூடாது…. சகோதரிகளின் கதறல்கள் கேட்கக்கூடாது. பிஞ்சுக் குழந்தைகள் அனாதைகள் ஆகக் கூடாது. இதுவே இனி எனது லட்சியம்.

    சரியான பாதையைக் கண்டறிந்து போராட உறுதியேற்ற வீரன் நான். இந்த பாதையிலிருந்து திசை மாறிவிட மாட்டேன்.  உலகைத் தலைகீழாக புரட்டிபோடும் வல்லமையுள்ள தத்துவஞானமும் அதன் நல்லாசான்களும் காண்பித்த பாதையினூடே செங்கொடி ஏந்தி ஒரு தோழராக சி.பி.ஐ.எம்-முடன் செயல்படுவேன் என்ற உறுதிமொழியோடு…”

-சுதீஷ் மின்னி

(முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியர்)

தமிழில்: K. சதாசிவன்

Related Posts