அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 3

எனது ஊர்….. எனது குடும்பம்

     கண்ணூர் மாவட்டம் கூத்துபறம்பு நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள ஆயித்தரை என்பது நான் பிறந்த ஊர். காடும் மலையும் நதியும் இணைந்து வசீகரிக்கும் இயற்கை எழில் நிறைந்த அழகிய பகுதி. ஆழியில் அலைகள் போன்று சமவெளிகளும் குன்றுகளும் கலந்து நிறைந்து நிற்கும் பகுதி என்பதால் தான் ஆழியில் திரை(அலை) என்ற பதம், பின்னர் மருவி ‘ஆயித்தர’ என்று மாறியிருக்கலாம். பின்னர் எப்பொழுதோ பேருந்துகளில் ஆயித்தரை  என்று எழுதிய போது சிலர் அந்த பெயரை ஆதரிக்கும் விதத்தில் “தரையாக” மாற்றிவிட்டார்கள். எங்கள் ஊர் இரண்டு பகுதிகளாகத் தான் அறியப் படுகிறது. நதிக்கு இக்கரை ஒருபகுதியாகவும் அக்கரை மற்றொரு பகுதியாகவும் வழங்கப் படுகிறது.

   நான் வாழும் பகுதி இக்கரையாகும். ஆயித்தரை தெற்கு ஆரம்பப்பள்ளியுடன் சேர்ந்த முத்தப்பன் மடப்புரையும் எனது வீட்டுக்கருகில் ஒரு குலதெய்வக் கோவிலும் இருந்தது.

   எனது குழந்தைப் பருவத்தில் ஓலை வேய்ந்த கூரை வீட்டில் தான் குடியிருந்து வந்தோம். தாத்தா (புதுசேரி இராமன்) முன்பு ஆயித்தரையிலுள்ள பெரிய தம்புரானின் (மேல்ஜாதி நிலவுடமையாளர்) கணக்குப்பிள்ளை, பின்னர் மடப்புரையில் சாமியாடுபவர் ஆனார். தம்புரான் எனது தாய்வழி பாட்டியான மின்னி பாஞ்சாலியின் பெயரில் ஆயித்தரை பகுதியில் பதிவு செய்து கொடுத்த சுமார் 4 ஏக்கர் நிலத்தில் தான் எங்கள் வீடு இருக்கிறது. எனது தந்தையின் பெயர் பொனோன் ஸ்ரீதரன். அவரது சொந்த ஊர் மானந்தேரி என்பதாகும். எனது தாயை மணமுடித்த பிறகு அவர் ஆயித்தரையில் வசிக்க ஆரம்பித்தார். காடுகளில் மரக்கிடங்கு மரங்களை லாரிகளில் ஏற்றும் வேலை செய்து வந்தார். அம்மா மின்னி சுலோச்சனா. நாங்கள் மூன்று குழந்தைகள் இருந்தோம். சிறுவயதிலேயே தங்கையை இழந்துவிட்டோம். எனது மூத்த சகோதரனின் பெயர் மின்னி சந்தோஷ். அக்காலத்தில், மாமா மின்னி வாசுவும் அத்தை கார்த்தியாயினியும் அவர்கள் குழந்தைகளும் அடங்கும் குடும்பமும் எங்கள் வீட்டில் வசித்து வந்தார்கள். பின்னர் எங்கள் வீடருகிலேயே, புது வீடுகட்டி அங்கு வசிக்கத் துவங்கினார்கள். நாங்கள் உயர் நிலைப்பள்ளியில்  படித்துக் கொண்டிருந்த காலத்தில், அப்பா ஒரு நிலத்தை வாங்கிக் கட்டிய சிறிய வீட்டில், நாங்கள் வசிக்கத் துவங்கினோம். எனது அப்பா மானந்தேரியில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையில் செயல்பட்டு வந்தார். ஆயித்தரைக்கு வந்த பிறகு கட்சிச் செயல்பாட்டை நிறுத்தினார். தாத்தா ஆரம்பத்தில் ஜனசங்கம் மற்றும் பின்னாளில் பாஜக-வின் பக்தராவார். அவர் வாஜ்பாய், அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி முதலியவர்களின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

   எனது தாயின் மூத்த சகோதரியை திருமணம் செய்தவர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக் காரர் ஆவார். அவர்களின் மகன் மின்னி சஜீவன், கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்தார். அதனாலேயே நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் மனதளவில் அதிக நெருக்கமின்மையைக் கடைபிடித்து வந்தோம். பேரக்குழந்தைகள் தான் என்ற போதும் தாத்தா அவர்களை திருடர்கள் என்று தான் அழைப்பார். அவ்வளவு தீவிர கம்யூனிச விரோத மனநிலை தாத்தாவுக்கு இருந்தது.

சாகா செயல்பாட்டை நோக்கி

   எனது குழந்தை பருவத்தைப் பற்றிய அதிகமான நினைவுகள் ஏதும் எனக்கு இல்லை. அம்மாவும் தாத்தாவும் எல்லாம் பின்னாட்களில் கூறிய நிகழ்வுகளைப் பற்றி இங்கு நினைவு கூர மட்டுமே என்னால் முடிகிறது. எனது ஊரில் வயல் வெளிகளில் தான் சாகா செயல்பாடு நடந்து வந்தது. அன்று எனது அம்மா என்னைத் தூக்கிக் கொண்டும் எனது அண்ணனின் கையைப் பிடித்தவாறும், 1 கி.மீ. தூரத்திலுள்ள சாகாவுக்கு எங்களை அழைத்துச் செல்வார். சிறு வயதிலேயே எனக்கு காக்கி அரைக்கால் சட்டை அணிவித்து சாகாவுக்கு அனுப்புவதை, அம்மா வழக்கமாகக் கொண்டிருந்தார். எல்லா தினமும் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை சாகா பயிற்சி நடைபெறும். சந்திரன் அண்ணன் தான் முக்கிய சிக்ஷக்(முதன்மை பயிற்றுவிப்பாளர் ). இவையெல்லாம் அம்மா சொல்லித்தெரிந்த விஷயங்களாகும். மூன்றாம் வகுப்பு பருவம் தொட்டு சில விஷயங்கள் என் நினைவிலுள்ளது. எனது தாத்தாவும் அம்மாவும் அப்பாவும் எல்லாம் புராண இதிகாச கதைகளைப்பற்றி நன்கறிந்து வைத்திருந்தார்கள். கிருஷ்ணனின் குழந்தைப்பருவக் குறும்புக் கதைகளை, நிறையக் கூறுவார்கள். வீட்டில் பூம்பாற்ற முத்தஸ்சி, பாலமங்களம் முதலிய குழந்தைகளுக்கான இதழ்களை வாங்குவதுண்டு. பூம்பாற்றையில் வரும் ‘விக்ரம்’ ஒரு திகில் கதாபாத்திரம் ஆகும். அக்காலத்தில் மகாபாரதம் அமர்சித்திரக்கதை வடிவில் வந்து கொண்டிருந்தது. அது முழுவதும் நான் வாசித்திருக்கிறேன்.

   பாலகோகுலம் வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும். அச்சு அண்ணனின் வீட்டில் வைத்து ஞாயிற்றுக்கிழமை பத்து மணி முதல் பதினொன்றரை வரை பாலகோகுலம் வகுப்புகள் நடக்கும். ஜெயன் அண்ணன் தான் எங்கள் பாதுகாவலர். வகுப்பில் சுமார் 30 குழந்தைகள் வரை இருப்பார்கள். “அபிமன்யு” என்பதே எங்கள் பாலகோகுல வகுப்பின் பெயர். ஜெயன் அண்ணனிடம் எங்கள் அனைவருக்கும் மிகுந்த பயம் இருந்தது. வகுப்புக்கு சரியான நேரத்திற்கு வரவேண்டும். விடுப்பு எடுத்தால் விடுப்புக் கடிதம் கொண்டுவர வேண்டும். தாமதமாக வந்தாலும் குறும்புகள் செய்தாலும் அடிக்கவும் திட்டவும் செய்வார். கிருஷ்ணனின் சிலைக்கு மாலை அணிவித்து விளக்கு ஏற்றிய பின்னர்,

கருணா முரளி தாரா….                                  

மனதில் நிறைவாய் கண்ணா…

என்ற பிரார்த்தனைப் பாடலுடன் பாலகோகுலம் வகுப்புகள் ஆரம்பிக்கும். ஒவ்வொருவரும் சிறு நிகழ்சிகள் நடத்த வேண்டும். குட்டிகதைகள், புராணக் கதைகள், முதலியவற்றோடு அல்லாது இந்து என்றால் என்ன? யார் இந்து? என்பனவற்றையும், பகவத்கீதை பற்றியும் எல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள். முடிவாக, “சர்வே வி சிவினா சுபந்து” என்ற மங்கள ஸ்லோகத்தைக் கூறி வகுப்பு நிறைவடையும். வயது முதிர்ந்தவர்களே பாலகோகுலத்தின் பாதுகாவலர்களாக இருப்பார்கள். பாதுகாவலர்கள் தான் பாலகோகுலத்தை வழி நடத்துவார்கள். எங்கள் பாலகோகுலத்தின் உதவி பாதுகாவலராக கங்கா அண்ணன் இருந்தார். அவர் இயல்பில் மிகவும் அமைதியானவராக இருந்தார். ஒவ்வொரு பாலகோகுலத்திலும், இருக்கும் குழந்தைகளில் பிரசித்தி பெற்றவர்களில் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுப்பார்கள். எங்கள் பாலகோகுலத்திற்கு அன்றையதினம் சுரேஷ் தான் தலைவர். கிருஷ்ணர் திருவுருவத்திற்கு மலை அணிவிப்பது ஒவ்வொருவரின் அதிர்ஷ்டம் என்ற  கருத்து உண்டு.  குழந்தைகளிடம் இயல்பாகவே இருக்கும் களங்கமற்ற நம்பிக்கையையும் பக்தியையும் ஆர்வத்தையும் பயன்படுத்தி, துவக்கத்திலேயே மதவெறியையும் இந்துத்துவ தீவிர சிந்தனையையும் பிற மதத்தினரோடு உள்ள வெறுப்பையும் வளர்ப்பதற்கான கொடூரமான குறிக்கோளிலேயே எல்லாம் நடைமுறைப்படுத்தப்படும். புறத்தோற்றத்தில் நல்லது போன்று தோற்றமளிக்கும் இச்செய்கையின் மூலம் குழந்தைகளின் சுதந்திரமான சிந்தனைகளையும், மதசார்பற்ற உணர்வையும் தடுப்பது தான் முக்கிய நோக்கம். கலைநிகழ்ச்சிகளில் எல்லாம் எங்கள் பாலகோகுலம் நிறைய வெற்றிகளை அறுவடை செய்திருக்கிறது. பாலகோகுலங்களின்  பிரச்சாரகரான ஹர்ஷன் அண்ணன், எங்கள் பாலகோகுலத்திற்கு வருகை தந்தார். கண்ணூரில் அன்று மோதல் நிலை இருந்ததால் பிரச்சாரகர்களுக்கு போலிப் பெயர் சூட்டப்படும் நடைமுறை இருந்தது அல்லவா? அதனால் அவரது இந்தப் பெயரும் கூட உண்மையானதல்ல என்றே கருதப்பட வேண்டும். அவர் மாதமொருமுறை வருவார். சிவாஜி, ராணா பிரதாப் போன்றவர்களின் கதைகள் கூறுவார். சிவாஜி, ராணா பிரதாப் போன்றவர்களைப் பற்றி, சங் பரிவார் எப்போதும் பிரச்சாரம் செய்யும், உண்மைக்கு புறம்பான கதைகளையே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். சிவாஜி ஒரு முஸ்லிம் விரோதியாக இருந்தாரென்றும் அவரை முஸ்லிம் மன்னர்கள் தொடர்ச்சியாக தாக்கி வந்ததனால்  தான் அவர் முஸ்லிம் விரோதியானார் என்றும் கூறப்படுபவைகள் எல்லாம் வெகுகாலம் முன்பிருந்தே பரப்பப்பட்டுவந்த கட்டுக்கதைகள் தான் என்பது குழந்தைகளுக்கு தெரியாதல்லவா? இரண்டு மன்னர்களுக்குள் நடந்த மோதல்களை, இந்து-முஸ்லிம் மோதல்களாக சங் பரிவரும் இந்து மகாசபையும் பிற்காலத்தில் பரப்பிய கட்டுக்கதைகளேயாகும். தவுலத் காசா, சித்தி மிஸ்ரா ஆகிய முஸ்லிம்களே சிவாஜியின் படையில் முக்கியத் தளபதிகளாக இருந்தனர். சிவாஜியின் மிகவும் நம்பிக்கைக்குரிய அயல்நாட்டு விவகாரச் செயலாளர் முல்லா ஹைதர் என்ற முஸ்லிம் ஆவார். எப்போதும் சிவாஜியுடன் இருந்து வந்தவரும், ஆக்ராவிலிருந்து அவர் தப்பிக்க உதவியவரும், மிகவும் நம்பிக்கைக்குரிய சேவகருமான,  மதனி மேத்தா என்பவரும் முஸ்லிமே ஆவார். சிவாஜி தினமும் வழிபடுவதற்கு சென்று கொண்டிருந்த  ஜகதீஸ்வரர் கோவிலுக்கு அருகில் உள்ள தனது அரண்மனைக்கு முன்புறமாக, முஸ்லிம் மக்களின் தொழுகைக்காக ஒரு தனி மசூதியை கட்டி எழுப்பினார்.

    இது போன்று வரலாற்று எதார்த்தங்களையும் உண்மைகளையும் மறைத்து வைத்துக்கொண்டு தான் ஆர்.எஸ்.எஸ், அவர்களது தத்துவப் பிரச்சாரத்துக்கு, பயன்படுத்தும் கருவியாக சிவாஜியை மாற்றுகிறார்கள்.  தங்களின் நோக்கத்திற்கு சாதகமாக வரலாற்றைத் திரித்துக் கூறும் சங் பரிவாரின் திறமை, நாம் எண்ணுவதைக் காட்டிலும் பலமடங்கு தூரத்தைக் கடந்து நிற்கும் ஒன்றாகும். மும்பைக் கலவரத்தையும், பாகிஸ்தான் இந்துக்களின் பரிதாப நிலையையும் கதைகளின் மூலம் நமக்குக் கற்றுக் கொடுப்பார்கள். முதியோர்களின் சங்கமம் (சிறு கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சி) நடக்கும் போது இந்துக்கள் எதிர்கொள்ளும் இத்தகைய சவால்களை கதை வடிவில் அரங்கேற்றுவார்கள். இவைகளையெல்லாம் கேட்டு, எனது தாத்தா, முஸ்லிம்கள் எல்லாம் தேசவிரோதிகள், அவர்கள் எதற்காக இங்கிருக்கிறார்கள்? பாகிஸ்தானுக்கு போக வேண்டியது தானே? என்று திட்டிக்கொண்டிருப்பார். எங்கள் ஊரில் மீன் வியாபாரம் செய்ய வரும் முகமது மாப்பிள்ளை என்ற மீன் காரரிடம் தாத்தா தினமும் சண்டையிடுவார். பாலகோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி தான் முக்கிய விழா. கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில் கிருஷ்ண வேடம் தரிக்க அனைத்துக் குழந்தைகளும் ஆசைப்படுவார்கள். நான் இதுவரை கிருஷ்ண வேடமிட்டதில்லை. அதற்கு ஜெயன் அண்ணன் தான் காரணம்.

    தினமும் நடக்கும் சாகா பயிற்சி அனுபவங்களை நான் மனநிறைவோடு ரசித்து வந்தேன். நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது சாகா பயிற்சி அளித்தது சசி அண்ணன் ஆவார். ஊரில் தாசன் அண்ணனைத் தான் எனது முன் மாதிரியாக, மனதில் கொண்டிருந்தேன். தாசன் அண்ணன் அச்சமயம் சாகா காரியவாக் (செயலாளர்) ஆக இருந்தார். எப்போதாவது தான் சாகாவுக்கு வருவார். வந்தால் அவருக்குப் பிரணாமம் செய்யச் சொல்லுவார். சங் பரிவாரத்தின் வணக்கம் சொல்லும் முறை தான் பிரணாமம். எனது வீட்டிலுள்ளவர்களுக்கு, எந்நேரமும் தாசன் அண்ணனைப் பற்றி கூறுவதற்கு ஏதாவது இருந்துகொண்டே இருக்கும். கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஒருமுறை தாசன் அண்ணனை சுற்றி வளைத்துவிட்டார்களாம். திடீரென்று தாசன் அண்ணன் மாயாவியாகி மறைந்துவிட்டதாக அம்மா கூறுவார். தாசன் அண்ணன், விபச்சாரிகளிடம் செல்வதாகவும் போதைக்கடிமையாக திரிவதாகவும் தேசாபிமானியில் செய்தி வந்தது. பிரேமன் அண்ணன் என்ற பிரச்சாரகர் வந்த பிறகு தான் தாசன் பிரணாமம் செய்யத் தகுந்த பொறுப்பிலுள்ளவர் அல்ல என்றும் தாலுக் சங்க சாலக்-ஐ (தலசேரி தான் தாலுகா என்ற போதும் ஆர்.எஸ்.எஸ்-க்கு கூத்துபறம்பும், ஒரு தாலுகா தான்) பிரணாமம் செய்தால் போதும் என்றும் கூறினார். சாகாவிலுள்ள விளையாட்டுகளை பள்ளியிலுள்ள மற்ற மாணவர்களையும் விளையாட வைக்க வேண்டுமென்று, சாகாவுக்கு வரும் காரிய கர்த்தாக்கள் நிர்பந்தித்து வந்தார்கள்.

   ஒருமுறை நான் சாகாவில் உள்ள விளையாட்டுகளை ஐந்தாம் வகுப்பில் உள்ள எனது நண்பர்களுக்கு சொல்லிக்கொடுத்தேன். பிற்காலத்தில், அவர்களை சாகாவுக்கு கொண்டுவர அது உதவியது. வேறொரு முறை, மாணவர்களை நிர்பந்தித்து விளையாடச் சொல்லியபோது, இது சாகாவில் விளையாடும் விளையாட்டு என்றும், இதை விளையாடக் கூடாது என்று அப்பா சொல்லியிருக்கிறார் என்றும் கூறிய நிஷாத் என்ற மாணவனை தாக்க முயற்சி செய்தேன். ஆசிரியையிடம் கூறிய போது, உமா என்ற ஆசிரியை(அக்காலத்தில் சாகா பயிற்சி அளித்து வந்த தேவனின் தாயார்), வற்புறுத்தி யாரையும் விளையாட வைக்க வேண்டாமென்று அறிவுறுத்தினார்.

   சாகாவின் பயிற்சி வரிசைக்கிரமங்கள் ஒரு மணிநேர கால அளவுக்குள் அடங்கும். அதில், வெவ்வேறு விதமான உடற்பயிற்சிகள் 20 நிமிடங்கள் (வியாம் யோக் என்பது சங் பரிவார் மொழி) நடக்கும். இதில் 13 சூரிய நமஸ்காரங்களும் உட்படும்.

“த்யோய ஸத ஸவித்ய

 மண்டல மத்யவர்த்தி                                             

 நாராயண ஸரிஜாசன ஸந்நிவிஷம்

 கேயூரவான் மகரகுண்டலவான் கிரீடம்

 ஹாரி ஹிர்ண்ணமய பவ்த்ர்த சங்க சக்ர” 

 

     என்னும் சூரியனின் தியான மந்திரத்துடன் துவங்கி “ஓம் ரமேய நம:” முதலான 13 சூரிய நமஸ்காரங்களைக் கூறி, 13-வது மந்திரமான “ஓம் ஸ்ரீ ஸவிதுசூரிய நாராயணாய நம:“ என்பதைக் கூறி  முடித்து,

“ஆதித்யஸ்வ நமஸ்கார

எகுர்வந்திய தினே தினே                                         

ஆயுர் ப்ரஜ்ஜாபலம் வீர்யம்

தேஜஸ் தேஷாம் சச்சாயதே”

 

என்ற மங்கள ஸ்லோகம் சொல்லப்பட்டு, சூரியநமஸ்காரம் முடிவடையும். பல காலங்களுக்கு முன்பு இந்த மங்கள ஸ்லோகம்,

“அகலே மிர்த்யு ஹரணம்                                      

சர்வ வியாபி விநாசம் 

சூரியபாதோத கம் தீர்த்தம்                                       

ஜடரே தார யாம்யகம்” 

 

என்று தான் இருந்தது. அடுத்து, 5 நிமிடங்கள் “நியுத்த” கற்றுக் கொடுப்பார்கள். கையாலும் காலாலும் எதிரியை வீழ்த்துகின்ற, முதல் இந்தியத் தாக்குதல் முறை தான் “நியுத்த”. மேல்ஜாதிகாரர்களின் தாக்குதல் முறைகளில் ஒன்றே “நியுத்த” என்று, ஒருமுறை வட இந்தியாவில் உள்ள பிரச்சாரகர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன். அடுத்த 5 நிமிடங்கள் “சமதபத சஞ்சலம்” (வெவ்வேறு உத்தரவுகளும் அணிவகுப்புக்கான பயிற்சிகளும்) செய்ய வைப்பார்கள்.

 

உத்தரவு                                ஆங்கிலப் பொருள்               

தக்ஷ                                   Attention

ஆரம                                   Stand-at-ease

உபவிச                                 Sitting

உத்திஸ்ட்ட                             Stand up

தக்ஷின வ்ர்த்                           Right Side View

வாம வ்ர்த்                              Left Side View

அர்த்த வ்ர்த்                            Opposite Side View

இது போன்று ஏராளமான உத்தரவுகளை கற்றுக் கொடுப்பார்கள். பின்னர். விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிப்பார்கள். 15 நிமிடங்கள் வீதம் கபடி, கோகோ போன்ற சில விளையாட்டுகள் இடம்பெறும். கபடியில் “வீர மிர்த்யு” என்னும் ஆட்டம் உண்டு. தனது கோட்டைத் தாண்டி முஸ்லிம் தீவிரவாத மையம் உள்ளதாக நினைத்துக் கொண்டு, மூச்சை அடக்கி வைத்து ஒவ்வொருவரையும் தொட வேண்டும். பிடியில் அகப்பட்டால் இறந்ததற்கு ஈடாக கருதப்பட்டு வெளியேற்றப் படுவார்கள். இதுவே இந்த ஆட்டத்தின் தனித்துவம். பின்னர் இந்த ஆட்டம், கம்யூனிஸ்ட் கிராமம், கிறிஸ்தவக் கிராமம் ஆகியவற்றினுள் நுழைந்து செல்வதாக நினைத்து ஆடப்படும். அதன் பிறகு வட்ட வடிவத்தில் அமர்ந்து(இதற்கு சங் பரிவார் மொழியில் மண்டல என்று கூறப்படுகிறது) முஸ்லிம், கிறிஸ்தவ, கம்யூனிச செல்வாக்குள்ள இடங்களைப் பற்றியும் அவை நாட்டுக்குள் விதைக்கும் எதிர்மறை விளைவுகள் குறித்தும் சொல்லிக்கொடுப்பார்கள். நமது நாட்டைத் தாயாக கருத வேண்டுமென்றும், அந்தத் தாயின் பெயர் இந்து ராஷ்ட்ரம், என்பது போன்ற வெறியுணர்வை உருவாக்கத் தேவையான கதைகள் பாடல்கள் முதலியவை கற்றுக் கொடுக்கப்படும். இவை ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டே இருக்கும்.

    எதிரிகளான முஸ்லிம், கிறிஸ்தவ, கம்யூனிஸ்டுகள் ஆகியவர்களை முற்றாக இந்நாட்டிலிருந்து துடைத்தெறியத் தேவையான வக்கிரம், ஒவ்வொரு சுயம் சேவகனின் மனதிலும் இந்த சாகா பயிற்சித் திட்டத்தின் மூலம் உருவாகும். ஆயித்தரை மம்பறம் உயர்நிலைப் பள்ளியில் தான், நான் ஆறாம் வகுப்பு பயின்றேன். அந்த பள்ளியில் என்னுடன் பயின்ற பிற மதத்தைச் சார்ந்தவர்களோடு பேசுவதற்குக் கூட எனக்கு வெறுப்பும் அருவருப்புமாக இருந்தது என்பது உண்மை. அந்த வகுப்பில் ஃபைசல் என்ற அமைதியான குணமுள்ள மாணவனை, “நீ பாகிஸ்தான் உளவாளி தானே” என்று கேட்டு சாப்பிடப் பயன்படுத்தும் உலோகத் தட்டினால் தலையில் அடித்ததை நான் இன்றும் நினைவு கூர்கிறேன்.  அதன்பிறகு, சமீபத்தில் தான் அவனைச் சந்தித்து என்னால் பேச முடிந்தது.

    சேர்ந்து பாடும் சங்கப் பாடல்களில் (சங் பரிவார் மொழியில் “கண கீதம்”) இந்து ராஷ்ட்ரம் நனவானதாக நினைத்துப் பாடப் பாடும் பாடல்கள் தான் அதிகமும் இருக்கும்.

“ஹிந்துராஷ்ட்ர ஜைத்ர ரதம்

அருணவர்ண த்வஜஸஹிதம்

தேஜஸ்ஸா ஸமுஜ்வலிதம்

ஆகதம் ஸ்ஸுவாகதம்”

போன்ற பாடல்களை நல்ல ராகத்தில் பாடி முடிக்கும் போது கேட்பவர்களுக்கு பரவசம் பிறக்கும். தொடர்ந்து த்வஜம்(காவிக்கொடி) உயரச் செய்து சாகா பயிற்சிகள் ஆரம்பிக்கும். இந்தக் கொடிக்கு இரண்டு இதழ்கள் இருக்கும். பெரிய இதழ் ஆன்மீகத்தையும்  சிறிய இதழ் பௌதீக வாழ்கையையும் குறிக்கின்றன. முதலில் பிராணாம்(கையை நெஞ்சோடு சேர்த்து வைத்துச் சொல்லும் வணக்கம்) செய்வார்கள். பின்னர் பிரார்த்தனை நடக்கும் பிரார்த்தனை வரிகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாகும்.

“நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே

த்வயா ஹிந்து பூமே சுகம் வர்த்திதோஹம் 

மகாமங்கலே புண்ய பூமே த்வதர் தே

பதத்வே ஷகாயோ நமஸ்தே நமஸ்தே”                                                                             

(பொருள்: எப்பொழுதும் அன்பின் வடிவான தாய் நாடே நான் உன்னை வணங்குகிறேன். ஏ…இந்து பூமியே என்னை பூரண சுகத்துடன் வளர்க்கிறாய். மகாமங்கலமான புண்ணிய பூமியே உனக்காக நான் எனது மனதையும் உடலையும் சமர்ப்பிக்கிறேன்.) இவ்வாறு பிரார்த்தனை துவங்கும். அடுத்ததாக கொடியைத் தாழ்த்தி “விகிர” (விரிவடைந்து செல் என்பதன் சங்க பரிவார் மொழி) என்று சொல்லி விரிந்து செல்லுவார்கள். கம்யூனிஸ்ட் சிந்தாந்த வாதிகளான ஏ.கே.ஜி, கிருஷ்ண பிள்ளை போன்றவர்களைப் பற்றி ஒருமுறை சாகாவுக்கு வந்திருந்த நம்பூதிரி ஒருவர், ‘அவர்கள் இந்து சமுதாயத்தை பூஜைகளின் மூலம் மேன்மையுறச் செய்யும் நம்பூதிரிகளுக்கு எதிரானவர்கள்’ என்று கூறினார். கடவுள் பாம்பின் வடிவில் சென்று கிருஷ்ண பிள்ளையைக் கொன்றுவிட்டதாகவும் சொல்லிக் கொடுத்தார்.

    இதுபோன்ற கட்டுக்கதைகளாலும், மூடநம்பிக்கைகளாலும் இளம் மனங்களினுள்ளே இயல்பான முறையிலன்றி வித்தியாசமான முறையில் நுழைவதில் அவர்கள் எப்போதும் அதிக கவனம் செலுத்தி வந்தனர்.

   ஆர்.எஸ்.எஸ்-சில் 4 முக்கிய பயிற்சிகள் உள்ளன. அதில் முதலாவது “பிராதமிக் சங்க சிக்ஷ வர்க்” (ITC-Intructor Training Course).அதன் 7 தின பயிற்சிகள் கோட்டயம் ராஜாஸ் உயர் நிலைப் பள்ளியில் நடந்தது. பயிற்சிகள் எப்போதும் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது தான் பயிற்சிகள் நடக்கும். 7 தினங்களும் அங்கே தங்க வேண்டும். அதிகாலை 4 மணிக்கு விழித்தெழ வேண்டும். காலைக்கடன்கள் முடித்து, 5.35 -க்கு மைதானத்தில் மனதை ஒருமுகப்படுத்தும் துதி சொல்ல வைப்பார்கள்.

“ஓம் நம: சச்சிதனந்தா                              

 ரூபாய பரமாத்மனே                              

 ஜ்யோதிர்மைய ஸ்வரூபாய    

 விஸ்வ மாங்கல்ய மூர்த்தாயே”

 என்று துவங்கும் ஸ்லோக பதத்தில், இந்து மதத்திலுள்ள எல்லா  ஆராதனைக்குரியவர்களையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காந்திஜியைப் பற்றியும் இந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருமுறை ஒரு சுயம் சேவகன், காந்திஜி நமக்கு எதிரனவரல்லவா என்று வினவிய போது, அவருக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டது. “ஏகாத்மன ஸ்தோத்திரம் “சுஜனேப்ய ப்ரதிதினம்” என்ற பதத்தோடு தான் முடிவடையும். அதன் பொருள் மக்கள் எல்லோருக்கும் (சுஜனன்- அனைத்து மக்களும்), அதோடு கொஞ்சம் தீயவர்களுக்கும் ப்ராணாமம் என்பதாகும். அதில் காந்திஜி என்ன அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார் என்று புரியவில்லையா?”

     பின்னர் மிகக் கடினமான பயிற்சிகள் நடக்கும். அதில் சாகா பயிற்சியில் பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சி முறைகளும் தண்டாயுத பயிற்சியும் உட்படும். உரைகளும் வாதங்களும் கூட முஸ்லிம், கிறிஸ்தவ, கம்யூனிஸ்ட் எதிர்ப்புகளைத் திணிக்கும் முறையிலேயே இருக்கும். மாலை நேரத்தில், பச்சை நிற உடைகள்(முஸ்லிம்கள் என்று கற்பனை செய்து கொண்டு) அணிந்து அத்துமீறி நுழைபவர்களை தண்டாவினால் நிர்மூலமாக்கும் விளையாட்டுகளைச் சொல்லிக் கொடுப்பார்கள். இவையெல்லாம் மனோதத்துவ ரீதியாக ஒரு நபரை எவ்வாறு மதத் தீவிரவாதியாக மாற்றுமென்று இந்த பயிற்சிகள் தெளிவாக்குகின்றன. ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கம்யூனிஸ்ட், கிறிஸ்தவ, முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளை உட்படுத்தியிருப்பர்கள். ஒரு சாகா எவ்வாறு நடத்தப்பட வேண்டுமென்பதை பயிற்றுவிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். ஆறாவது தின பயிற்சியின் முடிவில், ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் ஹெட்கேவர், பாரத் மாதா, குருஜி (கோல்வால்கர்) ஆகியவர்களின் படத்தை வைத்து கீழே சிறிய அகல் விளக்கை ஏற்றி வைப்பார்கள். மற்ற எல்லா விளக்குகளும் அணைக்கப்படும். படத்திலுள்ள மூன்று உருவங்கள் மட்டும் தெரியும்படி, அசரீரி போன்று நல்ல ராகத்தில்,

‘என்றென்றும் உனது ஏக சேவகனாக நான் மோட்சமின்று வந்தது

நான் உனது முன்னில் நீ எங்கள் முன்னில்

நீ முன்னே இருந்தால் என்னால் முடியாததேது   

மாமலையும் மரணமும் நட்பாகிப் போகுமே

ஆழக்கடல் சிறுகேணியாகுமே

நெருப்பு நிலவாய் மாறுமே’

என்ற பாடலைப் பாடும் போது, அதில் அனைவரும் இரண்டறக் கலந்திருப்போம். அதனைத் தொடர்ந்து இனிமையான வசீகரிக்கும் மொழிநடையில் பேசுவார்கள். அந்த மெல்லிய ஒளியின் ஊடாகத் தெரியும் படத்திலுள்ள உருவங்கள் மீது அளவிடமுடியாத ஈர்ப்பு ஏற்படும்.

    பிரியமான சுயம் சேவகர்களே, நமது பாரத மாதாவை தகர்க்க கபட மதசார்பின்மை பேசுபவர்களாகிய கம்யூனிஸ்டுகளும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் நடத்தும் முயற்சிகளை உயிரைக் கொடுத்தேனும் தடுக்க முயல்வோம், என்னும் வார்த்தைகைளில் அனைவரும் தங்கள் மனதைப் பறி கொடுப்பார்கள். பயிற்சி வகுப்புகள் முடிந்த பிறகு ஒவ்வொருவரும் மூடத்தனமான மதபோதை உணர்வில் சொக்கிப் போன நிலையை எட்டியிருப்பார்கள்.  அவ்வளவு ஆணித்தரமான முறையில், பலவருட ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்த திட்டங்களை, பயிற்சிகள் வழியாக இங்கே நடைமுறைப்படுத்துவார்கள். அந்த பயிற்சி வகுப்புகள் முடிந்தவுடன் சாகா முக்கிய பயிற்றுவிப்பாளர் பொறுப்பு (முக்ய சிக்ஷக் என்பது சங் பரிவார் மொழி) எனக்கு வழங்கப் பட்டது.   சுமார் 30 பேர்கள் அடங்கும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அடங்கிய சாகாவுக்கு பயிற்றுவிப்பாளராக ஆன போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். முகாமில் பயிற்சி பெற்ற விஷயங்களை சாகாவில் சொல்லித்தர வேண்டியது எனது பணியாகும். பாடத் திட்டங்களில் பலவும் கோல்வால்கரின் “Bunch of Thougts” மற்றும் “We Our Nationhood Defined” முதலிய புத்தகங்களில் உள்ள சிந்தனைகளைத் தழுவியதாகும்.  “Bunch of Thougts”  புத்தகத்தைத் திறக்கும் போது, காற்றும் ஒளியும் நுழைவதற்கு அஞ்சுகின்ற ஒரு குகைக்குள் மாட்டிக்கொண்ட உணர்வு ஒரு சராசரி மனிதனிடம் உருவாகும். அங்கே பகை மற்றும் வெறுப்புணர்வு என்ற நச்சுப்பாம்புகள் படமெடுத்து ஆடுவதைக் காண முடியும். இந்திய பாசிசவாதிகளின், மக்கள் விரோத, வேற்றுமத விரோத நிலையையும், ஜாதி உணர்வையும் புரிந்துகொள்ள, அவர்களை விமர்சிப்பவர்கள் கூறுவதைத் தான் கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ் -சின் அடிப்படைத் தத்துவ நூலான “Bunch of Thougts”-ஐ மேலோட்டமாக ஒருமுறை படித்தாலே போதும். மாதவ சதாசிவ கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு பரம் பூஜனீய குருஜி ஆவார். “இந்துத்துவம் ஆபத்தில் உள்ளது” என்ற முழக்கத்தை எந்நேரமும் முழக்கிக் கொண்டு சாதாரண இந்து மத நம்பிக்கையாளர்கள் மனதில் பிரிவினை வெறியை பற்றியெரியச் செய்வதென்பது, மக்கள் கூட்டத்தை திரட்டுவதற்கு செய்யப்படும் பிரச்சார தந்திரத்தின் ஒரு பகுதியே ஆகும். மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமுள்ள இந்துக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து அவர்களை வேட்டையாடுகிறார்கள் என்றும் பரப்பப்படும் பொய்கள் தான் சங் பரிவார் பிரச்சாரத்தின் ஆணிவேர்.

   ஜனநாயகப் படுத்துதலை உலகெங்கிலும் தடுப்பதும் மனிதநேயத்திற்கு எதிரான கொடூரமான தாக்குதல் நடத்துவதுமான செயல்களை முன்னெடுத்த பாசிசத்திற்கு அடித்தளமாக விளங்கிய “இன சுத்திகரிப்பு” தத்துவம் தான், சனாதன இந்துத்துவம் மற்றும் சங் பரிவார் ஆகியவற்றின் ஆற்றலின் ஊற்றுக்கண் ஆகும். ஜெர்மனியில் நாஜி ஆட்சி காலத்தில் ஹிட்லர் நடைமுறைப்படுத்திய யூதர்கள் மீதான தாக்குதல்களையும், யூத எதிர்ப்பு முழக்கங்களையும் சிந்தனை ரீதியாக ஆதரித்தது கோல்வால்கரே ஆவார்.

         பாசிசம் ஆட்சியதிகாரத்தில் ஏறிய, ஜெர்மனியிலும் இத்தாலியிலும் பிரபலமடைந்த, சிந்தனைகளையும் திட்டங்களையும் இந்திய சூழ்நிலைக்கு பொருந்தும் விதத்தில் கோல்வால்கர் பிரயோகப்படுத்தினார்.

-சுதீஷ் மின்னி

(தமிழில்: K.சதாசிவன்)

 

Related Posts