அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 2

சுதீஷ் மின்னியின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அணிந்துரை எழுதி, பி.ஜெயராஜன் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

 

     உலகெங்கிலும் மனிதக்குரோதங்களின் நச்சு விதைகளை தூவி வளரச் செய்து கொண்டே தான் பாசிசம் உலக அரங்கில் அறிமுகமானது. ஹிட்லரும் முசோலினியும் எல்லாம் சரித்திரத்தின் இருண்ட பக்கங்களாயினர். மத பிரிவினையின் தீய விஷத்தை இவர்களிலிருந்து உள்வாங்கி செயல்படும், பாசிச குணமுள்ள ஒரு இயக்கம் இந்தியாவிலும் உள்ளது. அதன் பெயர் தான் ஆர்.எஸ்.எஸ். அதாவது ஹிட்லரின் சிந்தனைகளும் முசோலினியின் இயக்க நடைமுறைகளும் ஒன்று சேர்ந்தால் ஆர்.எஸ்.எஸ் -சின் உருவம் கிடைக்கும். முசோலினியின் பாசிச இயக்கத்தைத் தழுவியதே ஆர்.எஸ்.எஸ் சி-ன் சாகா பயிற்சிகள். காந்திஜியைக் கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கி கூட, இத்தாலிய ராணுவ அதிகாரியிடமிருந்து தான், நாதுராம் விநாயக் கோட்சே வாங்கியதாக வரலாறு கூறுகிறது. காந்திஜியின் கொலையாளியின் சகிப்பின்மையும், பாசிசத்தின் குரூரத் தன்மையும் இணைந்த ஆர்.எஸ்.எஸ் -சின் செயல்பாடு இந்தியாவில் எத்தனையெத்தனை மனித உயிர்களை இல்லாமலாக்கியது என்பதும் வரலாற்றின் பகுதிகளாகும். கலவரங்கள், படுகொலைகள் சம்பந்தமான எத்தனையோ விசாரணை அறிக்கைகளில் இந்த அமைப்பின் பெயர் கரும்புள்ளிகளாக குறிப்பிடபட்டுள்ளது. மத சிறுபான்மையினரையும், ஜனநாயகவாதிகளையும், கம்யூனிஸ்டுகளையும் அழித்தொழிக்க நடத்திய கொடூரங்களை தடங்கலற்ற பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் மறைத்துவிட முடியும் என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. மூன்று தினங்களில் 3000 பேரை படுகொலை செய்த குஜராத் இன அழிப்பின் பாவக்கறை புரண்ட நரேந்திர மோடி, பிரதமர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு நடத்திக் கொண்டிருக்கும், “பாவக் கறையை நீக்கி புனிதமாக்கும் செயல்” என்பது, இதுவரை நடந்த கொடூர வரலாறுகளின் நிகழ்கால பதிப்பே ஆகும். ஹிட்லரின் ஆத்மகதையில், ஒரு அத்தியாயத்தின் பெயர் “போர் பிரச்சாரம்” என்பதாகும். அக்காலத்தில் சிறந்த ஆட்சியாளர் என்ற பெயரெடுக்க வேண்டுமென்றால் நாட்டின் எல்லையை விரிவடையச் செய்யும் நோக்கத்தில், ஒவ்வொரு ஆட்சியாளர்களும் போர்களை நடத்தி வந்தார்கள். அதற்காக போர்வெறியைப் பரப்பும் விதத்திலுள்ள பிரச்சாரத் திட்டங்களை உருவாக்கினார்கள். ஆனால் இப்போது மதவெறியைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் கிடைத்த ஆட்சியதிகாரத்தை பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் தக்கவைக்க ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. மத்திய அரசு கார்பரேட்டுகளுக்கு ஆதரவான முறையில்  செயல்படுத்தும் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்து, அனைத்து மக்களும் அணிதிரள்வதைத் தடுப்பதற்காக, பிறமத வெறுப்பை பரப்ப தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. ஹிட்லரின் சுய சரிதையில் பிரச்சாரங்களின் பல்வேறு கூறுகளைப்பற்றி சொல்லியிருக்கிறார்.

    “பிரச்சாரம் பற்றிய குறிப்பிடத்தகுந்த வேறொரு கேள்வி இதுவாகும். அது யாரை நோக்கி செய்யப்படவேண்டும்? நிச்சயமாக அது பொதுமக்களை நோக்கியே செய்யப்பட வேண்டும். பிரச்சாரத்தில் பகுத்தறிவுக்கு இடமில்லை. அது மக்களின் உணர்வுகளைத் தான் ஈர்த்தெடுக்க வேண்டுமேயொழிய, அவர்களின் சிந்திக்கும் தன்மையை அல்ல.”

   இவ்வாறு ஆசான் கற்பித்த பிரச்சார உத்திகளையே ஆர்.எஸ்.எஸ்-ம் பின் பற்றுகிறது.  திரும்பத் திரும்ப பொய்களை கூறுவதைப் பற்றி ஹிட்லர் கூறுவதைக் கவனியுங்கள். “மக்கள்த் திரளின் மனதில் ஒரு விஷயத்தை மறையாமல் பொறித்து வைக்கும் வரை திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்” இத்தகைய இயக்கத்தில் பிரச்சாரம் செய்யும் நபராக செயல்பட்ட ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் தான் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

  ஐந்தாவது வயதில், தனது தாய் இடுப்பில் சுமந்து சாகாவுக்கு அழைத்துச் சென்ற கணம் முதல், இனி ஆர்.எஸ்.எஸ் தான் அனைத்தும் என்று கருதிய ஒருவர் சங் பரிவார் உறவைத் துறந்து, சி.பி.ஐ.எம்-மில் இணைவது என்பது அபூர்வமாக மட்டும் நடக்கும் ஒரு சம்பவமாகும். இதுதான் சுதீஷ் மின்னியின் விஷயத்தில் நடந்தது. கூத்துபறம்பில் உள்ள ஆயித்தரை என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர ஆதரவுத்தளத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உண்மைக்குண்மையாக சுதீஷ் இப்புத்தகத்தில் விவரிக்கிறார். ஆர்.எஸ்.எஸ்-சின் முழுநேர ஊழியர்களாக செயல்பட்ட பலரும் பின்னாட்களில் செயல்பாடற்று போயிருக்கிறார்கள். அவர்களில் பலரும் தீவிர செயல்பாட்டிலிருந்து விலகி, குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்வது தான் வழக்கம். ஆனால் அபூர்வமாக நடக்கும் மற்றொரு வகையான மாற்றம் தான் சுதீஷின் வாழ்வில் நிகழ்ந்தது. சங் பரிவார் தத்துவங்களுக்கு எதிர்மறையான தத்துவத்தை முன்னெடுக்கும் கம்யூனிசத்தை நோக்கியே சுதீஷ் ஈர்க்கப்பட்டார்.

   ஏற்கனவே சங் பரிவாரத்தின் பகுதியாக செயல்பட்டு வந்த ஓ.கே.வாசுவும் எ.அசோகனும் பாஜகவிலிருந்து விலகி சி.பி,ஐ.எம்-மில் இணைந்தனர். அவர்கள் மத்தியகுழுவின் அனுமதியுடன் கட்சி உறுப்பினர்களாக இணைக்கப்பட்டார்கள். அவர்கள் பொய்லூரிலும், செறுவாஞ்சேரியிலும் பகுதிக்குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வருகிறார்கள். கண்ணூர் மாவட்டம் சி.பி.ஐ.எம்-ஆர்.எஸ்.எஸ் இடையில் பெரிய அளவில் மோதல்கள் நடந்து வந்த மாவட்டமாகும். இந்த மோதலின் மூலமாக ஏராளமான தோழர்களை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கொலை செய்திருக்கிறார்கள். இத்தகைய மோதல்களின் போது அவர்கள் இருவரும் சங் பரிவாரத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள் ஆவர். அவர்களை என்ன காரணத்தினால் கட்சி ஏற்றுக்கொண்டது என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். அவ்வாறு கேள்வி எழுப்பியவர்களில் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமன்றி எதிராளிகளும் இருந்தார்கள். கட்சி எடுத்த இந்நிலைபாடானது வலதுசாரி ஊடகங்களும் கூட சிறிதும் எதிர்பாராத ஒன்றாகும்.

   சங் பரிவார் உறவைத் துண்டிப்பதற்கு முன்னோடியாக அந்த இயக்கத்தினுள், இந்த தலைவர்கள் உட்பட பலரும் எழுப்பிய பிரதான பிரச்சனைகள் ஒன்றில் கூட, ஆர்.எஸ்.எஸ் தலைமை இன்று வரை எந்த எதிர்வினையும் நடத்தியதில்லை. ஆர்.எஸ்.எஸ்-லிருந்து விலகிய தலைவர்களையும் ஊழியர்களையும் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்றே சங் பரிவார் தலைமை கருதியிருந்தது. இப்பிரச்சனையில் கட்சி எடுத்த நிலைபாடு சரிதான் என்று புரிந்துகொள்ள, கண்ணூர் மாவட்டத்தில் சங் பரிவாரத்திற்குள் நடந்த விவாதங்களுக்கு உள்ளே சென்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.

   பாஜக மாவட்டத் தலைவருக்கு எதிராக மகிளா மோர்ச்சா (மகளிர் அணி) தலைவரின் கணவர், தலைமைக்குக் கொடுத்த எழுத்துபூர்வமான புகார் தான் ஆர்.எஸ்.எஸ்-க்குள் திடீரென்று பிரச்சனை வெடித்ததற்குரிய காரணமாகும்.  பாஜக தலைவரின் கைபேசியிலிருந்து அந்த பெண் தலைவரின் கைபேசிக்கு சென்ற குறுந்தகவல்களின் ஆதாரத்தோடு தான், அந்தப் பெண் தலைவரின் கணவர் விசாரணை கோரினார். விசாரணை நடந்ததென்றாலும், ஆர்.எஸ்.எஸ் தலைமை தலையிட்டதால், இப்புகாரில் தொடர் நடவடிக்கை இல்லாமல் போனது. அதோடு ஆர்.எஸ்.எஸ் தலைமையின் இத்தகைய தவறான தலையீடுகளுக்கு எதிராக, ஒரு பெரிய அணி பாஜகவுக்குள் உருவானது. அதுதான் “நமோ விச்சார் மஞ்ச்”. கட்சிக்குள் தாங்கள் கிளப்பிய விஷயங்களை கட்சி அணிகளுக்கு விளக்கிப்  புரிய வைக்க உருவாக்கப்பட்ட அமைப்புதான் அது. பானூரில் நடந்த, அந்த அமைப்பின் நிகழ்ச்சியின்போது, அதிருப்தி தலைவர்களையும் ஊழியர்களையும், சமூகவிரோதிகள் அடங்கிய கும்பல் ஒன்றை அனுப்பி, தாக்குதல் நடத்த ஆர்.எஸ்.எஸ் தலைமை திட்டமிட்டது. அதாவது புகாரில் குறிப்பிட்ட விஷயங்கள் உண்மையா என்று விசாரித்தறிந்து நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதன் மூலம், இனி யாரும் இது போன்ற புகார்களை எழுப்பக்கூடாது என்ற எச்சரிக்கையைத் தான் ஆர்.எஸ்.எஸ் தலைமை அதிருப்தியாளர்களுக்குக் கொடுத்தது. எதிர்க்கருத்து உள்ளவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும்   விதமாக எதிர்கொள்ளும் முறையைத் தான், நீண்டகாலம் கட்சிக்காக வாழ்க்கையை செலவிட்ட தலைவர்களுக்கு எதிராகவும் பிரயோகித்தது. இத்தகைய பாசிச நடைமுறையைத்தான் எதிர்குரல் எழுப்புவர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். கையாண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்-சின் இத்தகைய நடவடிக்கைகளோடு உள்ள எதிர்ப்பு தான் பெரும்பான்மையான தலைவர்களையும் ஊழியர்களையும் “நமோ விச்சார் மஞ்ச்” என்ற அமைப்பை உதறிவிட்டு, சிபி.ஐ.எம்-மில் இணைவதற்கான காரணமானது. கட்சி இத்தகையவர்களை ஏற்றுக் கொள்வதென்று தீர்மானித்து, அவர்கள் அனைவருக்கும் பானூரில் வைத்து 2014 ஜனவரி 28-ம் தேதி சிறப்பான வரவேற்பும் அளித்தது. இத்தீர்மானம் பற்றி அறிந்தவுடன் ஆர்.எஸ்.எஸ்-சின் உயர்மட்டத் தலைவர்கள் உட்பட பலரும் பாஜகவிலிருந்து விலகியவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர பெரும் முயற்சி செய்தார்கள் என்றாலும் அது தோல்வியிலேயே முடிவுற்றது.

   இந்த நிகழ்வுப்போக்குகளை கட்சி துல்லியமாக மதிப்பிட்டு பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ளவும் செய்தது. சி.பி.ஐ.எம் மார்க்சிய-லெனினியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சியாகும். மார்க்சிசத்திற்கு துல்லியமான உலகப் பார்வை உள்ளது. பொருளாதார, பண்பாட்டு, அரசியல் பார்வையுண்டு.  அதோடு லெனினிசத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கக் கோட்பாட்டைப் பின்பற்றும் கட்சியாகும். அத்துடன் ஜாதி-மத பேதமில்லாது சமூகத்தின் எல்லா துறைகளிலும் உள்ள உழைக்கும் மக்களின் விருப்பங்களையே கட்சி பாதுகாக்கின்றது. இந்த விருப்பங்களை பதுகாக்கச் செயல்படும் விதத்தில், பொருத்தமான இயக்கக் கோட்பாடுகளும் கட்சிக்கு உண்டு. ஜனநாயக மத்தியத்துவம் என்ற என்ற இயக்கக் கோட்பாட்டுக்கு ஏற்பதான், உயர்மட்டத்திலுள்ள தலைவர்கள் முதல் அடிமட்டத்தில் உள்ள கிளை உறுப்பினர் வரை செயல்பட வேண்டும். தனிநபர்களான ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் கட்சியின் ஸ்தாபன கோட்பாடுகளுக்கு இணங்கிச் செயல்பட வேண்டும்.  தனி நபரான கட்சி உறுப்பினரின் செயல்பாட்டையும் வாழ்க்கையையும் பரிசீலனைக்குட்படுத்த வேண்டும். விமர்சனம், சுயவிமர்சனம் ரீதியிலானதாக இத்தகைய பரிசீலனை  இருக்க வேண்டும். இதன் வழியே தான் கட்சி உறுப்பினர்களின் தவறுகளைப் பரிசீலிப்பதும், அவைகளைத் திருத்துவதும் சாத்தியப்படும். ஆனால் சங் பரிவார் அமைப்புகளுக்குள் இத்தகைய நடைமுறைகள் ஏதும் கிடையாது. மேல்மட்டத்தில் சர் சங் சாலக்-ன் கட்டளைகளுக்கு அடிபணிந்து தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செயல்படுகிறது. இது போன்ற கட்டளைக்கு அடிபணியும் முகம் தெரியாத பிரச்சாரகர்கள் தான் எல்லா விஷயங்களையும் தீர்மானிக்கிறார்கள். ஓவ்வொரு பிரதேசத்திலும் பிரச்சாரகர்களின் கட்டளைகளுக்குக் கட்டுபட்டே விஷயங்கள் நடந்து வருகின்றன. ஜனநாயக பூர்வமான விவாதங்களோ, பரிசீலனைகளோ நடப்பதில்லை. இதன் பலனாக கட்டுப்பாடற்ற கும்பலாக ஆர்.எஸ்.எஸ் மாறியிருக்கிறது. அமைப்புக்குள் ஜனநாயகத் தன்மையை ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ்-சின் நடைமுறைக்கு எதிரான போராட்டம் தான் வாசு மாஸ்டர் மற்றும் அசோகன் ஆகியோர் தலைமையில் நடந்தது. சுருக்கமாகச் சொன்னால் ஜனநாயகம் பற்றி ஏதுமறியாமல் தான் ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கேரள மக்கள் அதிகமாக ஜனநாயக மயமாக்கப்பட்டவர்கள் ஆவர். இயல்பாகவே ஜனநாயக மயமாக்கப்பட்ட தன்மைகளால் கிடைக்கும் பலன்களைப் பெற்ற மக்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் செயல்முறைகளுக்கும் இடையில் மிகுந்த வேறுபாடு புலப்படும். இத்தகைய வேறுபாடுகள் கேரளத்தின் சங்க பரிவாரின் எல்லா உறைவிடங்களிலும் தென்படுகின்றன. இதனை பயனுள்ள முறையில் பயன்படுத்தினால், அதுவே சங் பரிவார் தகர்வுக்கு காரணமாக அமையும்.

   இவ்வேறுபாடு தான் கண்ணூர் மாவட்டத்தில் வெளிப்பட்டது. அதில் சி.பி.ஐ.எம் தகுந்த முறையில் தலையிட்டது. கேரளத்தில்  ஆர்.எஸ்.எஸ் தாக்குதல்களுக்கு எதிராக மிகவும் அதிகமான தடுப்புப் போராட்டத்தை நடத்திய மாவட்டம் கண்ணூர் ஆகும். இதன் விளைவாக கம்யூனிஸ்ட் இயக்கம், ஏராளமான தோழர்களின் உயிரைப் பலி கொடுக்கும் நிலை ஏற்பட்டது. ஏராளமான தோழர்கள் உடல் உறுப்புகளை இழக்க நேரிட்டது. ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான இந்தத் தியாகம் நிறைந்த, தடுப்புப் போராட்டங்களின்   விளைவு தான் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் சி.பி.ஐ.எம் -ஐ நோக்கி வருவதன் முக்கிய காரணமாகும். ஆனால் வலதுசாரி ஊடகங்கள் இதை மறைக்க பெருமுயற்சி செய்து வருகின்றன.

   சி.பி.ஐ.எம்- மும் ஆர்.எஸ்.எஸ்- சும் ஒரே மாதிரியானவை தான் என்ற பிரச்சாரத்தை வலதுசாரி ஊடகங்கள் பல வருடங்களாக நடத்தி வருகிறன. சி.பி.ஐ.எம். -மும் பாசிச கோட்பாட்டுடன் செயல்படும் ஆர்.எஸ்.எஸ்- சும் ஒரே மாதிரியானவை அல்ல. ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படும் சி.பி.ஐ.எம் -ன் உறுப்பினராகச் செயல்படும் எந்தவொரு தனிநபரின் பேரிலும் எழுப்பப்படும் புகார்கள் துல்லியமாக பரிசீலிக்கப்படுகின்றன. அத்தகைய பரிசீலனை முறை ஆர்.எஸ்.எஸ் -ல் இல்லை என்பது மட்டுமல்ல முற்றிலும் இரகசியமாகச் செயல்படும் முறையே அதற்கு இருக்கிறது. அது போன்ற கொடூரமான இரகசிய செயல்பாடுகள் நிறைந்த இருண்ட அறைகளில் சுதீஷ் மின்னியின் இப்புத்தகம் ஒளி பாய்ச்சுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ் –ஐ அம்பலப்படுத்துகிறது.

   கண்ணூர் மாவட்டத்தில் சங் பரிவாரத்திற்குள் வெடித்த பூசல்களின் பலனாக ஏராளமான இரகசியங்கள் பகிரங்கமாகியுள்ளன. அதில் ஓன்று தான் என்.டி.எஃப் ஊழியரான ஃபசல் கொலைக்குப் பின்னால் உள்ள உண்மைகள். சிபிஐ விசாரித்த, இந்த வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், சி.பி.ஐ.எம் தலைவர்களும் ஆதரவாளர்களும் ஆவர். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர். காராயி ராஜன், தலசேரி பகுதிக்குழு உறுப்பினர் தோழர். காராயி சந்திரசேகரன் உள்ளிட்ட தோழர்களே குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இருஞ்ஞாலக்குடையைச் சேர்ந்த  ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ஒருவரின் திட்டத்தில் தான்  ஃபசல் கொலை நடந்தது என்று தற்போது ஆதாரங்கள் வெளி வந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுதும் என்.டி.எஃப்- ம்  ஆர்.எஸ்.எஸ்- ம் ஒரே குரலில் சி.பி.ஐ.எம்- ஐ குற்றவாளிக் கூண்டிலேற்ற முயற்சிக்கின்றன. வழிபாட்டுத்தலங்கள் மூலமாக உள் நுழைய ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு நடத்திய சதிகள் நம்மை அதிர்ச்சியடையச் செய்பவையாகும். மலபாரில் உள்ள பெரும்பகுதி மக்களின் ஆராதனை தெய்வம் முத்தப்பன். முத்தப்பனின் மடப்புரைகளில் பிரதானமானது பறஸ்சினிக்கடவு மடப்புரை ஆகும். பிற மாநிலங்களிலிருந்து கூட ஏராளமான பக்தர்கள் இங்கு வருவதுண்டு. இத்தகைய நம்பிக்கையாளர்களுக்கு பிரிவினை உணர்வூட்ட, ஒரு மாற்று மடப்புரையை கட்ட, ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்ட விஷயத்தை சுதீஷ் இங்கே அம்பலப்படுத்துகிறார். அது போலவே அனைத்து மதங்களின் சிறப்பம்சங்களை அறிவதற்காக, சமூக சீர்திருத்த நாயகர், ஸ்ரீ நாராயணகுரு நிறுவிய ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் உள்ள ஒரு சன்னியாசியை தங்கள் வலையில் சிக்க வைக்கவும், அதன் மூலம் அத்வைத ஆசிரமத்தை சங் பரிவாரம் கைப்பற்றுவதற்கும், தான் நடத்திய ஒரு மாதகால இரகசிய செயல்பாடு குறித்தும் சுதீஷ் விளக்குகிறார். வழிபாட்டுத்தலங்ககளை மதவெறி பரப்பும் மையங்களாக மாற்றுவதே சங் பரிவார் செயல் பொருள் என்பதை இது அம்பலப்படுத்துகிறது. சிவகிரியிலும் அதே முறையிலான இரகசிய செயல்பாட்டுக்காக அங்கே தங்கி இருந்ததையும் அவர் கூறுகிறார்.

    சங் பரிவார் ஊழியராக செயல்பாடத் துவங்கிய போது இருந்த கனவுகள் யாவும் நொறுங்கிப் போனதன் காட்சி பிம்பங்கள் புத்தகமெங்கும் பரவிக்கிடக்கிறது. இந்து ஒற்றுமை என்ற பார்வையை முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ், தலித்-பட்டியலின-பட்டியல் ஜாதி பிரிவினர் அனைவரையும் இரண்டாம் தர மக்களாக கருதுகின்ற அனுபவத்தையும் இதில் விவரிக்கிறார். சுதீஷ் கொடுக்கும் விளக்கங்களைப் படிக்கும் போது, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டு உரிமையைக் கூட இல்லாமல் ஆக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் செய்யும் வாதங்கள் யாருக்கும் அதிசயமாகத் தோன்றாது.

  குடும்பத்திலும் சமுதாயத்திலும் நற்குணங்கள் படைத்த ஒருவர் சங் பரிவாரின் பயிற்சிப் பட்டறையில் சேர்ந்து விட்டால் நிர்ணயிக்கப்பட்ட எதிரிகளுக்கு எதிராக எவ்வளவு பைத்தியக்காரதனமான மனநிலையில் கொண்டு சேர்க்கப்படுவார் என்பதும் விளக்கப்படுகிறது. சங் பரிவார் பிரச்சாரம் செய்யும் பிறமத விரோத மனப்பான்மை பெயரளவுக்கே என்பதும், முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுடன் ரூபாய் நோட்டுப் பரிவர்த்தனை மூலம் இரகசிய உடன்பாடுகள் செய்யப் படுவது போன்ற இரகசியங்களையும் சுதீஷ் அம்பலப் படுத்துகிறார். ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் கட்டும் போது மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர் நிதி உதவி அளித்த விவரங்களும் இதில் கூறப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் நடக்கும் அத்துமீறல்களையும், இப்பொழுதும் அங்கு உள்ளூர் ஆதிக்க சக்திகளால் தொடர்ந்து நடத்தப்படும் ஆதிக்கக் கொடுமைகளையும் நம்மால் புரிந்து கொள்ள இயலும். எவ்வாறு சுயம் சேவகர்களில் இருளின், மூடநம்பிக்கைகளின் விதைகள் தூவப்படுகின்றன என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அக்னி ஹோத்ரம் செய்தவர்களின் வீடுகளில் போபால் விஷப்புகை செல்லவில்லை என்று கூச்சமில்லாமல் கூறுகின்ற காரியவாக்-ன் மூட உணர்வூட்டும் வார்த்தைகளை அடிமைகளைப் போன்று கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் மனிதர்களின் காட்சி பிம்பத்தை சுதீஷ் இந்தப் புத்தகத்தின் மூலம் வரைந்து காண்பிக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் கலாச்சாரம், சமூக சேவை போன்ற வெளிப்பூச்சுகளுக்கு உள்ளிருக்கும் எதார்த்தத்தை வாசகர்களுக்கு முன்னே தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.

   ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரின் அனுபவ விவரிப்புகளே இந்த புத்தகமெங்கும் நிறைந்துள்ளது. பண்பாட்டு இயக்கம் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்- ன் கொடூர முகம் இங்கே அம்பலப் படுத்தப்பட்டுள்ளது. தங்கள் நடத்தும் கொலைகளையும், பயங்கர கலவரங்களையும் மறைத்து வைத்து, தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதற்கான வேலைகளில் சங் பரிவார் ஈடுபட்டுள்ளது. பிரச்சாரங்கள் மூலம் தனது கொடூர முகத்தை மறைத்து வைக்க முயல்வதற்கு, பலத்த எதிர்விளைவுகளை ஆர்.எஸ்.எஸ் சந்தித்து வருகிறது. இப்புத்தகத்தை வாசகர்கள் மிகுந்த ஆவலுடன் வரவேற்பார்கள் என்ற உறுதியான எண்ணம் எனக்குள்ளது.

-பி.ஜெயராஜன்

(தமிழில்: K.சதாசிவன்)

Related Posts